"ஹலோ தலைவரே, தமிழகத்துக்கு புதிய கவர்னரை நியமிக்கும் விவகாரத்தில் டெல்லி குழப்பத்தில் இருக்குதாம்.''

"இப்ப இருக்கிற கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் பதவிக் காலம் நிறைவடையுதா?''

"ஆமாங்க தலைவரே, அதனால்தான் புதிய கவர்னரை விரைவில் நியமிக்கணும்னு மோடி நினைக்கிறார். அதுவும் தி.முக. அரசுக்கு கடிவாளம் போடும் வகையில் ஒன்றிய அமைச்சரவையில் சீனியர்களாக இருந்த ரவிசங்கர்பிரசாத், பிரகாஷ் ஜவ்டேகர் ஆகிய இருவரில் ஒருவரைத் தேர்வு செய்யவும் அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். தலைமையோ, அவர்களை மாநில நிர்வாகத்துக்கு அனுப்பவேண்டாம்ன்னு சொல்லிவிட்டதாம். காரணம். சீனியர்களான இருவரையும் மோடி, அமித்ஷா இடத்துக்குக் கொண்டு வர நினைக்குதாம்.''

"தமிழ்நாட்டுக்கு கவர்னரை தேடுறாரு மோடி. பா.ஜ.க.வின் அடுத்த தலைமையை தேடுது ஆர்.எஸ்.எஸ்.''

Advertisment

modi

"தலைவரே, நீட் தேர்வு குறித்துக் கருத்தறிய அமைக்கப்பட்ட நீதிபதி ராஜன் ஆணையம், 33 நாட்கள் இதுகுறித்த விசாரணையை நடத்திய நிலையில், தனது 165 பக்க அறிக்கையை 14-ந் தேதி, முதல்வர் ஸ்டாலினிடம் சமர்பிச்சிருக்கு. ஆணையத்திற்கு தடையில்லை என உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்த மறுநாள் தன்னோட அறிக்கையை முதல்வ ரிடம் சமர்ப்பிச்சிது. அது சம்பந்தமா நம்ம நக்கீரனில் கட்டுரை வந்திருக்கு. என்கிட்ட உள்ள தகவலைச் சொல்றேன். பொது மக்களிடமிருந்து 86 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருத்துக்கள் வந்ததாகவும், அதில் பெரும்பாலும் நீட் தேர்வு வேண்டாம் என்றுதான் சொல்லப் பட்டிருக்குன்னும் ரிப்போர்ட்டின் முடிவை மீடியாக்களிடம் உணர்த்தி னார் ராஜன். அரசுப் பள்ளி மாணவர் களுக்கான 7.5 இடஒதுக்கீடு உள்பட பல கேள்விகள் இருக்குது. இந்த அறிக்கையின் அடிப்படையில், இந்த ஆண்டில் முடியவில்லை என்றாலும் அடுத்த ஆண்டில் நிச்சயம் நீட் இருக்காதுன்னு மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் சொல்றாங்க.''

"கோட்டையில் ஒவ்வொரு துறையின் ஆய்வுக் கூட்டங்களும் பரபரப்பா நடக்குதே?''’

Advertisment

"ஆமாங்க தலைவரே, தி.மு.க. அரசின் முதல் பட்ஜெட் கூட்டம் ஜூலையில் நடக்கும்ன்னு எதிர்பார்ப்புகள் நிலவிய நிலையில், துறை ரீதியிலான ஆய்வுக் கூட்டங்களை முதல்வர் ஸ்டாலின் நடத்திக்கிட்டு இருக்கார். அதேபோல் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் பட்ஜெட் தயாரிப்பு வேலையில் தீவிரமா இறங்கியிருக்கிறார். இருந்தாலும், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டின்படி, வரும் அக்டோபர் வரை 6 மாதங்களுக்கான செலவினங்களுக்கு அப்பவே ஒப்புதலைப் பெற்றுவிட்டனர். அதனால் பட்ஜெட் தாக்கல் செய்ய அதுவரை அவகாசம் இருக்கு. இருந்தபோதும், ஆகஸ்ட் 15-ல் கோட்டையில் கொடியேற்றிவிட்டு பட்ஜெட்டை ஸ்டாலின் அரசு தாக்கல் பண்ணும்ன்னு நிதித்துறை வட்டாரங்கள் சொல்லுது.''

"ராகுல்காந்தியை பிரசாந்த் கிஷோர் சந்திச்சிருக்கிறாரே?''

"அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதோடு, 2024-ல் நாடாளுமன்றத் தேர்தலும் வரப்போகுது. இதைக் கணக்கில் வச்சிதான், ராகுல்காந்தியுடனான பிரசாந்த் கிஷோரின் சந்திப்பு நடந்திருக்கு. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, மோடிக்கு இணையான பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்னிறுத்த முடியலை. அவரும் உடன்படலை. மோடியே மீண்டும் பிரதமராக, காங்கிரஸ் இன்னொரு படுதோல்வியை சந்தித்தது. அதனால் 2024-ல் மோடிக்கு எதிராக வலிமையான வேட்பாளரை நிறுத்தி, நாட்டின் தலை யெழுத்தை மாற்றியாகணும்னு காங்கிரஸ் திட்டமிடுது. அதற்காகத்தான் இந்த சந்திப்பு நடந்திருக்கு. இதில் வியூகப் பணிகளுக்கு ஆகும் பட்ஜெட் குறித்து பிரசாந்திடம் ராகுல் விவாதித்தாராம். கிஷோர் சொன்ன பட்ஜெட் அதிகம்ன்னு ஃபீல் பண்ணும் ராகுல், அடுத்தடுத்த சந்திப்புகளில் இரு தரப்பின் எண்ணங்களும் மேட்ச் ஆகும்ன்னு நினைக்கிறாராம்.''

"அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர்கள் ஊடக விவாதங்களில் பங்கேற்கக் கூடாதுன்னு அந்த கட்சியின் தலைமை கடிவாளம் போட்டிருக்கே?''

"அதுக்குக் காரணம் தி.மு.க. தான். இப்ப தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பட்ஜெட்டுக்கு முன்பாகவே, அ.தி.மு.க. அரசுக் காலத்தில் அரங்கேறிய கோல்மால்கள் குறித்து வெள்ளை அறிக்கையைத் தாக்கல் பண்ணும் முயற்சியில் தீவிரமாக இருக்கார். வெள்ளை யறிக்கை தாக்கல் செய்யப்பட்டால், தாங்கள் ஊடக விவாதங்களில் கடுமையான விமர்சனத் துக்கு ஆளாக நேரும்னு எடப்பாடி பழனிசாமி உள்பட முன்னாள் அமைச்சர்கள் பலரும் யோசிக்குறாங்க. வெள்ளை அறிக்கை விவாதப் பொருளாக மாறும்போது தங்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கலாம் என்பதால்தான், ஊடக விவாதத்தின் பக்கமே அவர்களைப் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களாம்.''

rang

"கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்த வேளாண்மைத்துறை ஊழல் குறித்த விவகாரங்கள் இப்போது தீவிர விசாரணையில் இருக்குதே?''

"உண்மைதாங்க தலைவரே, அதே சமயம் வேளாண்மைத் துறையில் நடந்த மோசடிகளுக்கு, அதன் இயக்குநராக இருந்த தட்சிணாமூர்த்தி ஐ..ஏ.எஸ்.சை மட்டுமே குறி வைத்துக் காய்கள் நகர்த்தப்படுதுன்னு ஐ.ஏ.எஸ். தரப்பு ஆதங்கப் படுது. ஊழல்கள் நடந்த காலகட்டத்தில் அதன் முதன்மைச் செயலாளராக இருந்தவர் ககன்தீப்சிங் பேடி ஐ.ஏ.எஸ்.! துறைரீதியான விவரங்களை மிகத் தெளிவாக அறிந்திருக்கும் அவருக்குத் தெரியாமலோ, அவரது அனுமதி இல்லாமலோ எந்த ஒரு திட்டமும் அமலாகியிருக்காதுன்னு சொல்றாங்க. முதன்மைச் செயலாளரான ககன் தீப்சிங் பேடியின் உத்தரவில்லாமல் தட்சிணா மூர்த்தி நடந்திருக்க முடியாதுன்னும் சொல்றாங்க.''

"விசாரணை முழுமையாக நடந்தால் உண்மைகள் வெளிவந்துதானே ஆகணும்?''

"முந்தைய ஆட்சியில், உயர்கல்வித் துறை அமைச்சரைச் சுற்றியும் புரோக்கர்கள் சூழ்ந் திருப்பாங்க. அந்த நடைமுறையை இப்போதைய துறை அமைச்சரான பொன்முடியும், துறையின் செயலாளர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்.சும் துடைச்செறிஞ்சிட்டாங்கன்னு சொல்லும் அவர் கள், துறைச் செயலாளர் கார்த்திகேயன், உயர் கல்வியை மேம்படுத்தவும் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்கவும் உங்களிடம் இருக்கும் யோசனைகளை என்னிடமோ அமைச்சரிடமோ தயங்காமல் சொல்லுங்கள். என்னை நேரம் காலம் பார்க்காமல் அணுகலாம்னு சொல்லி வருகிறார் என்று புன்னகைக்கிறார்கள்.''

"அ.தி.மு.க.வில் இருக்கும் மேலும் சில முக்கிய தலைகள், தி,.மு.க.வில் சேரலாம்ன்னு சொல்லப்படுதே?''

rr

"ஆமாங்க தலைவரே, அது மாதிரியான செய்திகள்தான் இப்ப அதிகமாகச் சிறகடிக்கிது. அ.தி.மு.க. மாஜிக்களான பழனியப்பன், தோப்பு வெங்கடாசலம் மற்றும் விஜிலா சத்தியானந்த் உள்ளிட்ட பலரும் தி.மு.க.வில் ஐக்கியமாகி இருக்கும் நிலையில், அ.தி.மு.க.வில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எதிர்பார்த்த மாஜி சபாநாயகர் தனபாலும், மன வருத்தத்தில் இருக்கிறார். அவரும், தினகரனின் வலது கையாக இருக்கும் மாணிக்க ராஜாவும், இப்போது செந்தில்பாலாஜி மூலம் தி.மு.க.வில் சேர ரூட் போட்டுக் கிட்டு இருக்காங்களாம். அதேபோல், ஏற்கனவே ஐக்கியமான பழனியப்பன், தோப்பு உள்ளிட்டவர்கள், தங்கள் பகுதியில் இணைப்பு மாநாடுகளை நடத்தி, தங்கள் பகுதி அ.தி.மு.க.வினரை தி.மு.க.வுக்குக் கொண்டுவர, ஸ்டாலினிடம் தேதி கேட்டிருக்கிறார்களாம்.''’

ra

"முதல்வர் ஸ்டாலினின் துணைவியார் துர்கா ஸ்டாலின், கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். இரண்டு நாட்களுக்கு முன் காஞ்சிபுரம் சென்ற அவரை, சிலர் சங்கரமடத்தில் இருக்கும் விஜயேந்திர ரையும், அவர் தம்பி ரகுவையும் சந்திக்க வைத்திருக்கிறார்கள். இதை சங்கரமடத் தரப்பே பெருமிதத்தோடு டமாரம் அடிச்சிக்கிட்டு இருக்கு.''

"ஆட்சிக்கு தி.மு.க வரும்போதெல்லாம் சங்கரமடம் இப்படி டமாரம் அடிக்கிறது வழக்கம்தானே?''

"சத்தம் வெளியே தெரியாமல் சங்கதிகளை முடிக்கிற சில பேரு இருக்காங்கன்னு எழிலகம் கட்டடத்திலிருந்து குரல் கேட்டது. என்னன்னு விசாரிச்சதை நான் சொல்றேன். அரசு துறையின் இயக்குனரகங்கள் பலவும் அமைந்துள்ள எழிலகம் வளாகத்தில் அரசு மருத்துவமனை ஒன்றும் இருக்குது. காஞ்சிபுரத்தில் சங்கரராமன் கொலை நடந்ததே அந்தக் கோவிலின் சாமி பெயர் கொண்ட ஒரு டாக்டர் அங்கே வேலை பார்க்கும் பெண்களை சீண்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறாராம். குறிப்பாக இளம் பெண் டாக்டர்கள்- நர்ஸ்களை குறி வைக்கிறாராம். அவருடைய சீண்டலுக்கு இணங்காதவர்களை ஓரங்கட்டி, ட்யூட்டி முடிந்ததும் வெளியே போகச் சொல்லிவிட்டு, இணக்கமான வர்களுடன் கொட்டமடிக்கிறாராம். மாதம் மும்மாரி பொழியும் பெயர்கொண்ட ஒரு பெண் ஊழியரும் டாக்டரும் எழிலகத்தையே கிளுகிளு அகமாக மாற்றி விட்டதாகப் புகார்கள் பறக்கின்றன.''