தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் சிந்தாந்த ரீதியாக முட்டல் மோதல்கள் நீறுபூத்த நெருப்பாக இருந்து வரும் நிலையில், நடப்பு ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடரை தனது உரையுடன் தொடங்கிய கவர்னர், அதனை முழுமையாக வாசிக்காமல் புறக்கணித்திருப்பது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. கவர்னரின் இந்த செயலால் அவருக்கு எதிரான கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
தமிழக அரசு தயாரித்துத்தரும் உரையை ஆளுநர் அப்படியே வாசிப்பதுதான் சட்டமன்ற மரபு. ஆனால், கடந்த ஆண்டு தி.மு.க. அரசு தயாரித்துத்தந்த உரையை அப்படியே வாசிக்காமல், அதில் சில கருத்துக்களை தவிர்த்தும் சில கருத்துகளை சேர்த்தும் வாசித்தார் ரவி.
இதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் ஆட் சேபனை தெரிவித்த நிலையில், சபையை விட்டு பாதியிலேயே வெளியேறினார் கவர்னர் ரவி. இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.
இதனையடுத்து முதல்வருக்கும் கவர்னருக்கு மான மோதல்கள் தொடர்ச்சியாக வெடித்தபடி இருந்தன. இப்படிப்பட்ட சூழலில்தான், நடப்பு நிதியாண்டுக்கான முதல் கூட்டத் தொடரில் "தி.மு.க. அரசு எழுதித் தரும் தனது உரையை முழுமையாக கவர்னர் வாசிப்பாரா? கடந்தாண்டு போல சர்ச்சைகளை உருவாக்குவாரா?' என்றெல்லாம் கேள்விகள் எழுந்திருந்தன.
இந்த பரபரப்புகளுக்கு மத்தியில்தான், 12-ந்தேதி காலையில் சபை கூடியது. வழக்கம்போல சட்டமன்றத்திற்கு வந்த கவர்னர் ரவிக்கு, மரியாதையும் சிவப்புக்கம்பள வரவேற்பும் அரசு தரப்பில் தரப்பட்டது.
கூட்டம் தொடங்கியதும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இதனையடுத்து, தனது உரையை வாசித்த கவர்னர் ரவி, "இந்தக் கூட்டத்தொடரின் தொடக்க உரையை இந்த அவையில் நிகழ்த்துவதை கவுரவமாக எடுத்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து இந்த அரசின் நோக்கங்களை காலத்தை வென்ற திருவள்ளுவரின் குறள் ஒன்றை குறிப்பிடுகிறேன். பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து, அதாவது, மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு.
உண்மையின் அடிப்படையிலும், தார்மீக அடிப்படையிலும் இந்த உரையுடன் நான் உடன்படவில்லை. எனவே, இந்த அவையில் மக்களுக்கு நன்மை பயக்கும் விவாதங்கள் நடக்க வேண்டும். வாழ்க தமிழ்நாடு; வாழ்க பாரதம்'' என்று சொல்லிவிட்டு தி.மு.க. அரசு தயாரித்திருந்த உரையை முழுமையாக வாசிக்காமல் தனது இருக்கையில் அமர்ந்தார் கவர்னர் ரவி.
சபையின் தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாலேயே உரையை புறக் கணித்திருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டினார். இந்த சம்பவம் சட்டமன்றத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
ஆர்.என்.ரவி புறக்கணித்த முழு உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். இதனை உன்னிப்பாக கவனித்தபடி இருந்தார் ஆளுநர். அவர் புறக்கணித்த உரை சட்டசபையில் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சட்டசபையில் ஆளுநருக்கு எதிராக அவை முன்னவர் துரைமுருகனால் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஆளுநர் பேசிய சில வார்த்தைகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, அதனைக் கேட்டு ரசிக்காமல், தேசிய கீதம் இசைப்பதற்கு.முன்பே வெளியேறினார் கவர்னர் ரவி.
கவர்னரின் இந்த செயல்பாடுகள் குறித்து ராஜ்பவன் வட்டாரங்களில் விசாரித்தபோது, "சபையில் அவர் வாசிக்க வேண்டிய உரையை கடந்த வாரம் ராஜ்பவனுக்கு அனுப்பி வைத்தது தமிழக அரசு. அதேசமயம் திடீரென டெல்லிக்கு கவர்னர் கிளம்பிச் சென்றார். தன்னுடன் இந்த உரையையும் எடுத்துச் சென்றார். டெல்லி சென்ற அவர் அமித்ஷாவை சந்தித்தார். அந்த சந்திப்பில், தமிழகம் குறித்து சிலபல விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. கடைசியில், உரை குறித்து அமித்ஷாவிடம் கவர்னர் பேச, உரையில் உடன்பாடில்லைன்னா வாசிக்காதீர்கள்; ஸ்பீக்கர் (சபாநாயகர்) வாசித்துக் கொள் ளட்டும் என அமித்ஷா சொல்லியிருக்கிறார். அதைத்தான் சபையில் செய்திருக்கிறார் கவர்னர்'' என்கிறார்கள்.
தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் தி.மு.க. தோழமைக் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் நாம் பேசிய போது, "தேசிய கீதம் இசைக்கப்படவில்லைன்னு உப்புச் சப்பில்லாத காரணத்தைச் சொல்லி உரையை வாசிக்காமல் புறக்கணித்தார் கவர்னர். அதுதாம் உண்மையான காரணம்னா... தேசிய கீதம் பாடப்படும் வரை சபையில் அவர் இருந்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு முன்பாகவே ஏன் எழுந்து சென்றார்?, ஆக, டெல்லி சொன்னதை இங்கு நிறைவேற்றியிருக்கிறார். பொதுவாக, கவர்னர் வைத்த குற்றச்சாட்டு காழ்ப்புணர்ச்சி யானது. தேசிய கீதம் எப்போதுமே இறுதியில் தான் இசைக்கப்படும். அதுதான் மரபு. அதன் படிதான் சட்டமன்றம் நடந்து வருகிறது. ஆனால், டெல்லியின் உத்தரவுப்படி அரசியல் செய்து கொண்டிருக்கிறார் ஆளுநர். சபையில் இவர் நடந்துகொண்ட விதத்தால் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அவமதித்திருக்கிறார். இதனை தேர்தல் களம் ஆளுநரின் எஜமானர்களுக்குப் புரிய வைக்கும்'' என்கிறார்கள் அழுத்தமாக!
-இளையர்