கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஆரிப் முகம்மதுகான் கேரள கவர்னராக நியமிக்கப்பட்டார்.இந்த நிலையில் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டிசம்பர் 31-ல் கேரள அரசு காங்கிரஸ் ஆதரவுடன் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து நிகழ்வொன்றில் கலந்துகொண்ட கவர்னர், “"குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்தது எனக்குத் தெரியாது. இது சம்பந்தமாக என்னிடம் ஆலோசிக்கவில்லை'“ என சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்டார்.
இதையடுத்து கோழிக்கோடு கல்லூரியில் நடந்த வரலாற்று ஆய்வு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்ற கவர்னருக்கு எதிராக எஸ்.எப்.ஐ. மாணவர்கள் கறுப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பைக் காட்டினார்கள்.
இந்நிலையில் கேரள அரசு சட்ட சபையில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் 15-ஆம் தேதி உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. "என்னுடைய அனுமதியில்லாமல் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்பு அல்ல' என தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார் கவர்னர்.
மலப்புரத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் பினராய் விஜயன், “சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதும் கவர்னரிடம் ஆலோசித்து செய்யவேண்டிய கட்டாயம் இல்லை. "கவர்னர் கட்சி சார்பற்ற முறையில் நடப்பதற்கான நிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார்.
இதற்குப் பதிலடியாக கேரள தலைமைச் செயலாளருக்கு கவர்னர் 19-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள் ளார்.உள்ளாட்சித் தேர்த லுக்காக, 2015 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வார்டு வரையறுக்கப்பட்ட புதிய பட்டியலுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்க மறுத்தார்.
வரும் ஜனவரி 30-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரில் கவர்னர் உரையில் அரசுக்கு எதிராக சில கருத்துக்களை பேச வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.ஆனால் இதற்கெல்லாம் அசராமல் குடிஉரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதில் தீவிரமாக இருக்கிறார் பினராய் விஜயன்.
யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி, டில்லி போன்று பா.ஜ.க. ஆளாத மாநிலங்களிலும் ஆளுநர்கள் அரசுக்கு எதிராக குரல் உயர்த்துவது இந்திய அரசியலில் புதிய அதிகார யுத்தத்துக்கு வழிவகுக்குமென ஜனநாயக ஆதரவாளர்கள் கவலைதெரி விக்கின்றனர்.
-மணிகண்டன்