கவர்னர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால், பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்து 150 பக்கங்கள் கொண்ட கனமான கோப்புகளை தந்துவிட்டு வந்திருக்கிறார். தவிர, பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணியசாமி, தம்மிடம் கொடுத்த ஆதாரங்களை வைத்து தயாரிக்கப்பட்ட கோப்பு ஒன்றையும் தனியாகத் தந்துள்ளார் கவர்னர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட முக்கிய அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு தொடர்வதில் உறுதியாக இருக்கிறார் சுப்பிரமணியசாமி. இதற்கான அனுமதியை கவர்னரிடம் பெறுவதற்காக அவரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார் சாமி. "மே மாதம் 25-க்குப் பிறகு ஒருநாள் சந்திக்கலாம்' என பதில் அனுப்பியிருந்தார் பன்வாரிலால். (இதனை ராங்-கால் பகுதியில் பதிவு செய்திருக்கிறோம்).
அதன்படி, ஜூன் 1-ந்தேதி சென்னை -ராஜ்பவனில் கவர்னரை சந்திக்க சாமிக்கு நேரம் கிடைத்தது. 45 நிமிடம் சந்திப்பு நடந்தது. இதுகுறித்து ராஜ்பவன் மற்றும் சுப்பிரமணியசாமி வட்டாரங்களில் விசாரித்தபோது, ""சசிகலாவின் ஆதரவாளராக மாறிவிட்ட சாமி, இந்த ஆட்சியை கவிழ்த்தே தீருவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு எடப்பாடி உள்பட முக்கிய அமைச்சர்களின் ஊழல்களை சேகரித்திருக்கிறார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.கள் அவருக்கு ஒத்துழைத்தனர். ஆட்சியில் கோலோச்சும் உயரதிகாரிகளின் உதவியுடன் ஆதாரங்களைத் திரட்டி சாமியிடம் ஒப்படைத்தனர்.
அதனை பிரதமர் மோடியிடம் ஒப்படைத்து, ’முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது வழக்குத் தொடர்வதற்கு தனக்கு அனுமதி தர, கவர்னரை வலியுறுத்தவேண்டும்’ என சாமி கோரிக்கை வைத்திருந்தார். அதற்கு, "நேரம் வரும்போது பார்க்கலாம்'’என சொல்லியிருந்தார் பிரதமர். இந்த நிலையில்தான், 1-ந் தேதி நடந்த கவர்னர் புரோகித்-சு.சாமி சந்திப்பில், கூடுதல் ஆதாரங்களுடன் உள்துறை,பொதுப்பணி, நெடுஞ்சாலை, தொழில், உள்ளாட்சி, உயர்கல்வி உள்ளிட்ட 6 முக்கிய துறைகளின் ஊழல்கள் மற்றும் கமிஷன் நடைமுறைகளை விவரித்திருக்கிறார் சாமி. பலவற்றை கிராஸ் செக் பண்ணியிருக்கிறார் கவர்னர். இதனையடுத்து, "கவர்னர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள டெல்லி செல்கிறேன். அப்போது பிரதமரிடமும் உள்துறை அமைச்சரிடமும் விவாதித்துவிட்டு உங்களுக்கு தகவல் சொல்கிறேன்' என சாமிக்கு பதில் தந்திருக்கிறார் கவர்னர்''‘என சுட்டிக்காட்டுகிறார்கள்.
""சென்னையிலிருந்து டெல்லிக்கு கவர்னர் கிளம்புவதற்கு முதல்நாள் (2-ந்தேதி) மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் கவர்னரும் அரைமணி நேரம் தொலைபேசியில் விவாதித்துள்ளனர். இதுகுறித்து தனது செக்ரட்டரி ராஜகோபாலிடம் ஆலோசித்த கவர்னர், கோப்புகளை தயாரிப்பதில் கவனம் செலுத்தினார்.
தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு மட்டுமல்லாது உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்தும் ஏற்கனவே கவர்னர் அனுப்பி வைத்த ரிப்போர்ட்டுகள் பற்றி சில கேள்விகளைக் கேட்டதுடன் அதற்குரிய விரிவான ரிப்போர்ட்டும் எடுத்து வருமாறு உத்தரவிட்டிருக்கிறார் ராஜ்நாத்சிங். அதனடிப்படையில் புதிதாக ஒரு ரிப்போர்ட் தயாரிக்கப்பட்டது'' என்கிறது ராஜ்பவன் வட்டாரம்.
மாநிலங்களின் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விவகாரங்கள் அலசப்பட்ட கவர்னர்கள் மாநாட்டைத் தொடர்ந்து பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கையும் சந்தித்த கவர்னர், ராஜ்நாத்சிங்கின் அட்வைஸ்படி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். ஜனாதிபதி மாளிகையிலேயே இந்த சந்திப்புகள் நடந்திருக்கின்றன.
இந்த சந்திப்புகள் குறித்து உளவுத்துறையினரிடம் கேட்டபோது, ""கவர்னர்களின் மாநாடு சம்பிரதாயமாக நடத்தப்பட்டாலும் தென்னிந்திய மாநிலங்களின் கவர்னர்களிடம் தனிப்பட்ட முறையில் பல விசயங்களை மோடியும் ராஜ்நாத்சிங்கும் ஆலோசித்துள்ளனர். தமிழக கவர்னரிடம், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கும் உள்நாட்டு பாதுகாப்பும் தோல்வியடைந்திருக்கிறது. கடந்த 6 மாதங்களில் சட்டவிரோதச் செயல்பாடுகள் தமிழகத்தில் அதிகரித்திருக்கிறது என உளவுத்துறை கொடுத்த அறிக்கையை வைத்து இருவரும் சில கேள்விகளைக் கேட்க, 150 பக்கங்கள் கொண்ட 5 கோப்புகளை தந்திருக்கிறார் கவர்னர். மத்திய உளவுத்துறையின் ரிப்போர்ட்டை ஏற்கும் தொனியிலேயே கவர்னரின் ரிப்போர்ட்டும் இருந்துள்ளது.
சட்டம்-ஒழுங்கு, உள்நாட்டு பாதுகாப்பு, ஊழல்கள், சட்டவிரோத பரிவர்த்தனைகள், நிர்வாகச் சீர்குலைவுகள் என 5 தலைப்புகளில் ரிப்போர்ட் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும், சுப்பிரமணிசாமி தந்த ஊழல் ஆதாரங்களை வைத்து வழக்குத் தொடர அனுமதி தரலாமா? என கேட்கும் ஃபைல் ஒன்றையும் பிரதமரிடம் கவர்னர் தந்திருக்கிறார். "இன்னும் 4 மாதத்தில் தமிழகத்துக்கு விமோசனம் கிடைக்கும். சுப்பிரமணியசாமிக்கு அனுமதி தருவதுபற்றி ராஜ்நாத்சிங் உங்களிடம் ஆலோசிப்பார்'’ என கவர்னரிடம் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.
நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷனின் அறிக்கையையும் மோடியிடம் தந்த கவர்னர், "என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய் என்பதை இந்த அறிக்கை விவரித்திருக்கிறது' என்றிருக்கிறார். தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து, ராஜ்நாத்சிங், தம்மிடம் வாங்கிய ராஜினாமா கடிதத்திற்கு அர்த்தமில்லை என்பதை எடுத்துச்சொல்லவே அதனை தெளிவுபடுத்தினாராம். அத்துடன் உள்நாட்டு பாதுகாப்பிலும் கடலோர எல்லைப் பாதுகாப்பிலும் தமிழகம் தோல்வியடைந்திருப்பதை அஜீத்தோவலை சந்தித்தபோதும் கூறியிருக்கிறார் கவர்னர் பன்வாரிலால்''’என்று விவரித்தனர். கவர்னரின் டெல்லி பயணத்தில் நடந்தவற்றை அறிந்துகொள்ளும் முயற்சியில் தீவிரமாக உள்ளது எடப்பாடி அரசு.
-இரா.இளையசெல்வன்