"நீலகிரியில் மருத்துவக் கல்லூரி அமைய முயற்சி யெடுத்த ஆ.ராசா எம்.பி.க்கு நன்றி' என தி.மு.க.வினர் ஊட்டி முழுக்க போஸ்டர்கள் அடித்து ஒட்ட, அதே போஸ்டர்களைச் சுற்றி வெள்ளை பேப்பரில், "பச்சைப் பொய்... பச்சைப் பொய்...' என பதிலுக்கு போஸ்டர் ஒட்டி யுத்தத்தைத் துவக்கியிருக் கின்றனர் அ.தி.மு.க.வினர்.

""இங்கே மருத்துவக் கல்லூரியமைக்க எடப்பாடி அவர் களால்தான் முடியும். அதுவும் மூடப்பட்டிருக்கும் ஹிந்துஸ்தான் பிலிம் போட்டோ தொழிற் சாலையில் இந்த கல்லூரியை அமைய விடமாட்டோம். இந்த கல்லூரி அமைக்க குன்னூரில் இடம் பார்த்துக் கொண்டிருக் கிறோம். அங்கேதான் அமையும்'' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர் சிரித்தபடி. மருத்துவக் கல்லூரி அமைய பெரும் முயற்சியெடுத்த ராசாவுக்கு பாராட்டு விழா நடத்த நீலகிரி அனைத்துக் கட்சிகளும் ஆர்வப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

nn

சி.பி.ஐ.யின் மாநில செயற்குழு உறுப்பினரான பெள்ளி நம்மிடம் பேசும்போது, ""சார், நீலகிரி மக்கள் மருத்துவக் கல்லூரி ஒன்று வேண்டுமென்று பல ஆண்டுகளாய் கேட்டுக்கிட்டு இருந்தாங்க. நீலகிரியிலுள்ள மாணவர்கள் மருத்துவம் படிக்க வேண்டுமென்றால் கேரளாவுக்கோ, கோவைக்கோதான் போகவேண்டும். இதனை மாற்ற ஆ.ராசாதான் கடும் முயற்சியெடுத்தார். மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனை தொடர்ந்து சந்தித்து மலை முகட்டிலிருக்கும் நீலகிரிக்கு ஒரு மருத்துவக் கல்லூரி வேண்டுமென கேட்டுக்கொண்டே யிருந்தார். அந்த மருத்துவக் கல்லூரியை அமைக்க ஊட்டியில் மூடிக் கிடக்கும் மத்திய அரசின் ஹிந்துஸ்தான் போட்டோ தொழிற்சாலை அமைந்திருக்கும் நிலம் சரியாக இருக்குமென எடுத்துரைத்தார். அதன்பின்னரே மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்த நல்ல விஷயத்தை கட்சி பேதமின்றிக் கொண்டாடுவதை விட்டுவிட்டு, பாரபட்சமாக பேசுவது சரியல்ல'' என்கிறார்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கோஷி பேபி, ""அரசியல்ரீதியா நான் பேசலை. இந்த நீலகிரி மக்களில் ஒருவனாகத்தான் பேசறேன். கடந்த ஐந்து வருடங்கள் நீலகிரியின் அ.தி.மு.க. எம்.பி.யாக இருந்த கோபால கிருஷ்ணன், இந்த மருத் துவக் கல்லூரி அமைக்கும் காரி யத்தை பண்ணியிருக்கவேண்டியதுதானே? இந்த மருத்துவக் கல்லூரி அமைக்க பெரும் முயற்சி எடுத்து அதில் ராசா வெற்றியும் பெற்றிருக்கிறார். இதற்கு எதிராகப் பேசுவது வெறும் ஈகோ என்பதைத் தவிர வேறில்லை'' என்கிறார் கோபமாய்.

நீலகிரியின் மைய இடமான ஊட்டியில் மருத்துவக் கல்லூரி அமைவதே எல்லோருக்கும் வசதியாய் இருக்கும். ஆனால் ஈகோ பிரச்சனையில் ஊட்டி வேண் டாம்... குன்னூர், மேட்டுப்பாளையம் என அப்படியே கீழிறக்கி வேறு மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரியைக் கொண்டு போய் விடுவார்களோ அரசியல்வாதிகள்? எனும் அச்சம் மலை மக்களிடம் எழுந்துள்ளது.

-அருள்குமார்