சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் தொற்றுநோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் மரணங்களும் கூடிக்கொண்டே யிருக்கிறது.
கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் 20 உள்நோயாளிகள் வார்டுகள், 2 வெளிநோயாளிகள் வார்டுகள் என மொத்தம் 22 வார்டுகள் உள்ளன. 900 லிருந்து 1000 பேர் சிகிச்சைபெற்றுவருகிறார்கள். முதலில், 8 வது வார்டில் இருந்த குணசேகரன், ராம கிருஷ்ண ரெட்டி ஆகிய இரண்டு மனநோயாளிகளை கடந்த 2019 நவம்பர் 5-ந் தேதி இரத்த அழுத்தம் குறைவாக இருக்கிறது என்று 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறார்கள். அவர்கள், இறந்துவிட்டார்கள். இதுதான் ஆரம்பம். என்ன காரணத்தினால் மரணம் என்பதையே காப்பக நிர்வாகம் மறைத்துவிட்டது. அதற்குப்பிறகு, கடந்த நவம்பர் 18-ந் தேதி திங்கட்கிழமை மான், பரத், ஜெயப்பிரகாஷ், கலைச்செல்வன் உள்ளிட்ட மனநோயாளிகள் வாந்தி, பேதி, மயக்கம் என ஒரேமாதிரியான பிரச்சனைகளால் அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களையெல்லாம், சென்னை தண்டையார்ப்பேட்டையிலுள்ள அரசு தொற்றுநோய் மருத்துவமனையில் சேர்த்து உயிரைக்காப்பாற்றாமல் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சீக்ரெட்டாக சேர்த்து சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால், மான், ஜெயகாந்தி உள்ளிட்ட மனநோயாளிகள் மரணமடைந்துவிட்டார்கள். அடுத்தடுத்து, நோயாளிகள் மரணத்தின் வாசலில் நின்றுகொண்டிருக்கிறார்கள். மனநோயாளிகள் மரணம் குறித்து உறவினர்கள் யாருக்கும் தகவல் தெரியாததாலும் சிலருக்கு உறவினர்கள் யாரும் இல்லாததாலும் இப்படி அலட்சியமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது சுகாதாரத்துறை.
மனநலக் காப்பகத்திலிருந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத் துவமனையில் அட்மிட் ஆன நோயாளிகள் எப்படி இருக்கிறார்கள்? என்ன மாதிரியான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிய உறவினர்போல் உள்ளே நுழைந்து விசாரித்தோம்.
ஐ.சி.யூ. எனப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவு 212-வது வார்டில் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார் பரத். நாம், பரத்தின் உறவினர் என்று நினைத்துக்கொண்ட பி.ஜி. டாக்டர்கள், ‘""வாந்தி மயக்கத்தால பாதிக்கப்பட்டவரைக் கொண்டு வந்து சேர்த்திருக்காங்க. இப்போ, பரிசோதனைபண்ணிப் பார்த்ததுல கிட்னியும் ஃபெயிலியர் ஆகிடுச்சு. பொழைக் கிறது கஷ்டம்தான்''’ என்றார்கள்.
அடுத்து, ஐ.சி.யூ. எனப்படும் பல்துறை தீவிர கண்காணிப்புப்பிரிவு 225-வது வார்டிலிருந்த ஜெயப் பிரகாஷைப் பார்க்கச்சென்றோம். ""மனநலம் பாதிக்கப் பட்டவர்கள்கூட ஓரளவுக்கு பேசுவார்கள். ஆனால், இவர் மனநலம் குன்றியவர் என்பதால் என்ன பேசுவது என்றே தெரியாமல் பரிதாபமாக படுத்துக் கிடக்கிறார். வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டு சேர்க்கப்பட்டார்'' என்றார்கள் அருகிலுள்ள நோயாளிகளின் அட்டெண்டர்கள். நிறைய நோயாளிகள் இங்கு சேர்க்கப்படுவதாக கூறினார்கள். அதற்குப்பிறகு, 113-வது ஃபீவர் வார்டில் இருந்த கலைச்செல்வனைப் பார்க்கச் சென்றோம்.
உள்ளே சென்று நாம் விசாரித்தபோது, “""இவர் மனநலக் காப்பகத்தில் இருந்த வார்டுல ஏதோ இன்ஃபெக்ஷன் ஆகியிருக்கு. வாந்தி, மயக்கம்னுதான் கொண்டுவந்து சேர்த்திருக்காங்க. அதுக்கான ட்ரீட்மெண்ட் பண்ணிக்கிட்டிருக்காங்க. ஜுரத்துக்கான மாத்திரை களும் கொடுக்கப்பட்டிருக்கு. இதேமாதிரி, நிறைய பேரைக் கொண்டுவந்து இங்க வெவ்வேறு வார்டுகள்ல வெச்சிருக்காங்க. இவங்க அம்மா மணலியில இருக்காங்க. ஆனா, வந்து பார்க்கவே இல்ல'' என்றார்கள். இதேபோல், 125-வது வார்டிலும் மனநலக் காப்பகத்திலிருந்து ஒருவர் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். அவரது பெயரைக்கூட அவரால் சொல்ல முடியவில்லை. இப்படி, தொடர்ந்து நோயாளிகள் அட்மிட் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறார் களே... என்ன மாதிரியான தொற்றுநோயால் பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள் என்று பொது மருத்துவப் பிரிவின் துறைத்தலைவர் டாக்டர் ரகுநந்தனிடம் கேட்டபோது, “""இது வழக்கமானதுதான். எந்த தொற்று நோயும் இல்லை'' என்று மறுத்தார்.
இதுகுறித்து, பொது மருத்துவப் பிரிவின் மருத்துவர்களிடம் நாம் விசாரித்தபோது, ""அரசு மனநலக் காப்பகத்தில் நோயாளிகள் குடித்த தண்ணீர் மூலம் கிருமித் தொற்று ஏற்பட்டிருக்கலாம். அட்மிட் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இதை வழக்கமான பிரச் சினையாக எடுத்துக்கொள்ள முடியாது. நீர்ச்சத்து, பி.பி. குறைந்து அட்மிட் செய்யப்படுகிறார்கள். மேலும், உடம்பிலுள்ள யூரியா கிரியாட்டினின் எனப்படும் உப்புச்சத்து அளவு கூடுதலாக இருக்கிறது. இரத்தத்தில் கிருமிகள் கலந்து செப்டிக் ஷாக் ஏற்பட்டு உறுப்புகள் செயலிழந்து இறந்து போகிறார்கள்'' என்று சொல்லி ஷாக் கொடுக்கிறார்கள்.
இதுகுறித்து, அரசு கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தில் நாம் விசாரித்த போது, “""வாந்தி, மயக்கத்தால் பாதிக் கப்பட்ட பல நோயாளிகளை இங்கேயே வைத்து பரிசோதனை செய்துகொண்டி ருக்கிறார்கள். அதற்கான, முழுமையான சிகிச்சை வசதி இங்கு கிடையாது. பிரச்சினையை அமுக்கப் பார்க்கிறார்கள்.
இதன்மூலம் நோயாளிகளின் உயிரிழப்புதான் அதிகரிக்கும். நோயாளிக ளுக்கு சிகிச்சை அளிப்பதில் ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கவனிப்பைவிட மனநலக் காப்பகத்தின் "கேர்'’என்பது மிகவும் கூடுதலாக இருக்க வேண்டும். குழந்தைகள் போல தங்களுக்கு இருக்கும் பிரச்சினையை மன நோயாளி களால் வெளியில் சொல்ல முடியாது. மருத்துவர்களே பரிசோதித்து கண்டு பிடித்தால் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். தற்போது, காப்பகத்திலுள்ள இரண்டு நோயாளிகளுக்கு டெங்கு பாஸிட்டிவ் என்பதும் தெரிய வந்துள் ளது.
உறவினர்கள் இல் லாத நோயாளிகளுக்கு அரசு மனநலக்காப்பக நிர்வாகம் மிகவும் கூடு தல் கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்கவேண் டும். ஆனால், கேட்பதற்கு ஆள் இல்லை என்பதால் தொற்றுநோயால் பாதிக் கப்பட்டிருக்கும் நோயாளி களை தொற்றுநோய் மருத்துவனையில் சேர்த்து சிகிச்சை அளிக்காமல், மற்ற நோயாளிகளுக்கும் பரவவிடாமல் தடுக்கும் பணியை செய்யவேண்டிய மனநலக் காப்பக இயக்குநர் டாக்டர் பூர்ணசந்திரிகா வும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா உள் ளிட்ட அதிகாரிகளும் மறைத்துக்கொண்டிருக் கிறார்கள்.
பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமிக்கு உத்தரவிட்டு அவர் தலைமை யிலான குழுவினர் என்ன காரணத்துக்காக தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்று ஆராய்ந்து அதை சரி செய்திருக்க வேண்டும். ஆனால், இதைக்கூட இவர்கள் செய்யவில்லை. காரணம், நோயாளிகள் மிக அதிகமாக தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட 5-வது வார்டின் இன்சார்ஜ் டாக்டர் லாவண்யா என்பவர் முதல்வருக்கு வேண்டப்பட்டவர் என்று தன்னைச் சொல்லிக் கொள்கிறார்.
இதன்மூலம், அந்த டாக்டருக்கும் பிரச்சனை வரக்கூடாது. காப்பகத்துக்கு பொறுப்பு இயக்குநராக இருக்கும் பூர்ண சந்திரிகா இயக்குநராகப்போகும் சூழலில் இப்படியொரு சர்ச்சை வெடித்தால் பதவி கிடைக்காது என்பதாலும் இதை வெளியில் தெரியாமல் மறைத்துக்கொண்டிருக்கிறார்கள்'' என்று குற்றஞ்சாட்டுகிறவர்கள்...
இதற்கு பின்னணி காரணமாக இருக்கும் நிர்வாக சீர்கேடுகளையும் சுட்டிக் காட்டுகிறார்கள். “""பொதுப்பணித்துறை ஊழியர்கள் காப்பகத் திலுள்ள மரங்களை வெட்டாமல் அலட்சிய மாக இருந்ததால் சில நாட்களுக்கு முன்பு கங்கு என்ற பெண் மனநோயாளி மீது மரம் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். உற வினர்கள் இல்லாததால் மனநோயாளி களை பாதுகாக்கும் வார்டர்கள் 227 பேர் இருக்கவேண்டிய காப்பகத்தில் 113 பேர்தான் இருக்கிறார்கள்.
இதனால், நோயாளிகள் சுத்தமானதைச் சாப்பிடுகிறார்களா என்பதை கண்காணிக்கும் "பவ்ல் வார்டர்' என்ற போஸ்டிங்கையே நீக்கிவிட்டார்கள். துப்புரவுப் பணியாளர்களும் குறைவாகத்தான் இருக்கிறார்கள்.
ஆண்கள் வார்டுகளுக்கு துப்புரவுப் பணியாளர்களே இல்லை. இதனால், நோயாளிகள் சாப்பிட்டுவிட்டு அப்படியே கொட்டிவிடும் உணவுகள் இருக்கும் இடங்களுக்கு எலிகள் வருவதால் அதன்மூலமும் இன்பெக்ஷன் ஆகிறது. 23 மருத்துவர்கள் இருந்த இடத்தில் எம்.சி.ஐ. ரூல்ஸை காரணம் காட்டி 5 மருத்துவர்களை வெளியேற்றிவிட்டார்கள். இதனால், நோயாளிக்கு கிடைக்கவேண்டிய ‘மருத்துவ கேர்’ கிடைப்ப தில்லை. இங்கிருக்கும் ஹெல்த் இன்ஸ்பெக்டரும் கண்டுகொள்வதில்லை'' என்கிறார்கள் குற்றச்சாட்டாக.
நோயாளிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அரசு கீழ்ப்பாக்கம் மனநலக்காப்பக பொறுப்பு இயக்குநர் டாக்டர் பூர்ணசந்திரிகா மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ஐ.ஏ.எஸ். ஆகியோரிடம் நாம் கேட்டபோது, “""இது, வழக்கமான சிகிச்சைதான். ஆல்ரெடி அவர்களுக்கு இருக்கும் உடல்நலப்பாதிப்புகளால் சிகிச்சை பலனின்றி இறக்கிறார்கள். தொற்றுநோய் அல்ல'' என்று மறுத்தார்கள்.
கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போதே நாம் முதலில் போய் பார்த்த பரத் என்னும் நோயாளியின் மரணச் செய்தியும் நம் காதுக்கு வந்தது. திருஞானசம்பந்தம் என்ற மனநோயாளியும் அதே அறிகுறியுடன் அட்மிட்டாகியுள்ளார்.
மேலும், காப்பகத்திலேயே கடந்த 24-ந் தேதி சாந்தி என்ற நோயாளியும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துபோயிருக்கிறார். இப்படி, அதிர்ச்சிகரமான மரணச் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.
-மனோசௌந்தர்