மயிலாடுதுறை நகரத்தின் மையப் பகுதியில் இயங்கிவருகிறது அரசு பெரியார் தலைமை மருத்துவமனை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1880-ல் வெஸ்டர் ஹாஸ்பிடலாகத் தொடங்கப்பட்டு, பிறகு 1928-ல் நகராட்சி மருத்துவமனையாக தரமுயர்ந்து, 1990 முதல் அரசு பெரியார் பொது மருத்துவமனை எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டு இயங்கிவருகிறது. தற்போது மாவட்டத்திலுள்ள 200-க்கும் அதிகமான கிராமங்களின் பிரதான தலைமை மருத்துவமனையாக செயல்பட்டுவருகிறது.
தினசரி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும் 500-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் இந்த மருத்துவமனையை நம்பியே சிகிச்சை பெற்றுவருகின்றனர். கடந்த ஒருசில ஆண்டுகளுக்கு முன்புவரை வருடத் திற்கு 3,700 அறுவை சிகிச்சைகள் நடை பெற்று வருவதாகவும், இந்த மருத்துவமனை தமிழக அளவில் சிறந்த மருத்துவமனைகளுள் ஐந்தாவது இடத்தைப் பிடித்ததாகவும் கூறும் ஊழியர்கள், சமீபகாலமாக ஊழியர்கள், மருத்துவர்களின் பற்றாக்குறை, அலட்சியத்தால் இந்த மருத்துவமனை படுமோசமான நிலைக்கு போய்விட்டதாக கவலைப்படுகிறார்கள்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியே இந்த மருத்துவமனையின் அவலநிலைகளைக் கண்டித்து பெரும் போராட்டம் நடத்தச்சொன் னார். வாரம் இரண்டு போராட்டங்கள் என்கிற அளவிற்குப் போய்விட்டது. இறப்புகளின் எண் ணிக்கை அதிகரிப்பதும், அதற்கு பொறுப்பற்ற பதிலும்தான் பொதுமக்களையும் சமூக ஆர்வலர் களையும் வீதிக்கு வந்து போராடவைத்திருக்கிறது.
சமீபத்தில் மரத்துறை என்கிற கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் பிரசவத்திற்காக வந்தார். வலி அதிகமானதால் அந்தப் பெண்ணின் உறவினர்கள் அறுவை சிகிச்சை செய்தாவது குழந்தையையும், தாயையும் காப்பாற்றுங்க என காலில் விழுந்து மன்றாடியுள்ளனர். "மருத்துவர்கள் இல்லை, சுகப்பிரசவம் நடந்திடும் வலியைப் பொறுத்துக்கோங்க' என காத்திருக்கவைத்து அந்த குழந்தை இறந்துபோக, ஆத்திரமான உறவினர்களும் பொதுமக்களும் சாலைக்கு வந்து போராடினர். அதே போல சாதாரண சளி பிரச்சனை என வந்த பெண் ஒருவருக்கு இரண்டுநாள் வைத்தியம் பார்த்துவிட்டு இனி இங்க பார்க்கமுடியாது என திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்ப, அங்கு சிகிச்சை துவங்கும் முன்பே பரிதாபமாக இறந்துபோனார். மணல்மேடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் வயலில் ஏதோ கடித்துவிட்டதாக வந்தவ ருக்கு விஷக்கடி வைத்தியம் பார்க்காமல் திருவா ரூருக்கு அனுப்ப, அவரும் பரிதாபமாக இறந்து போனார். இப்படி இவர்களால் அலைக்கழிக்கப் பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.
அப்படியொரு சம்பவம்தான் மாவட்ட மருத்துவமனையையே ஸ்தம்பிக்கவைத்துள்ளது. மயிலாடுதுறை அருகே எலந்தங்குடி பரகத் தெருவைச் சேர்ந்த முஹம்மது காசிம் என்பவரது மகன் முபின்அலி. 14 வயதான அந்த சிறுவன் மே 31-ஆம் தேதி மாலை வீட்டுக்கருகில் விளையாடி யிருக்கிறான், அப்போது ஏதோ பூச்சி காலில் கடித்துள்ளது. அதை வீட்டிலுள்ளவர்களிடம் சொல்லியபடியே மயங்கி விழுந்துள்ளான். பதறிப்போன பெற்றோர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவந்தனர். அங்குள்ள மருத்துவர்கள் முறையாக சிகிச்சையளிக்காமல் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் ஜூன் 1-ஆம் தேதி மாலை சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மாணவனின் உடலை சோதித்த திருவாரூர் மருத்துவர்கள், மயிலாடுதுறை அரசு மருத்துவனையிலேயே விஷக்கடிக்கான முறையாக சிகிச்சையளிக்காமல் காலதாமதப் படுத்தியதால் உயிரிழந்துள்ளான் என கைவிரித் துள்ளனர். ஆத்திரமடைந்த பெற்றோர்களும், உறவினர்களும் மயிலாடுதுறை அரசு மருத்துவ மனை நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக எஸ்.டி. பி.ஐ., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் திரண்டுவந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில், "மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் நியமிக்கவேண்டும், முறையான சிகிச்சையளிக்காத டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், சி.டி., எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் ரத்தப் பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் அளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்'’என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங் களை எழுப்பினர்.
போராட்டத்தில் இருந்த சமூக ஆர்வலரும், ஊராட்சிமன்றத் தலைவருமான தமிழ்த்தென்றல் கூறுகையில், “"இந்த மருத்துவமனை இந்த மாவட் டத்திலுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் வாழும் விளிம்புநிலை மக்களின் உயிர்நாடி. இதனை விரிவுபடுத்தி, மேம்படுத்தவேண்டும் என்று நாங்கள் ஒவ்வொரு அரசிடமும் கோரிக்கை வைக்கிறோம், அதிகாரிகளிடம் முறையிடுகிறோம், ஆனால் அவர்கள் எழைகளுக் கானது என்பதால் அலட்சியமாகக் கடந்துவிடு கின்றனர். இந்த பெரியார் மருத்துவமனையில் சுமார் 1.5 கோடி செலவில் சி.டி. ஸ்கேன் வசதி உருவாக்கப்பட்டது. சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலிஸிஸ் கருவி, காசநோயால் பாதிக்கப் பட்டோருக்கு நவீன காசநோய் கண்டறியும் கருவி என மருத்துவ உபகரணங்களை ஆளும் அரசு கொண்டுவருகிறது. அதற்கான கட்டடங்களும் அடுக்கடுக்காக கட்டிவைத்துள்ளனர்... என்ன பயன்? போதிய மருத்துவர்களோ, செவிலியர் களோ, ஊழியர்களோ இல்லாமல் கட்டடமாக தரமுயர்ந்து நிற்கிறது. சாதாரண காய்ச்சலுக்குக் கூட முதற்கட்ட சிகிச்சை யளிக்காமல் திருவாரூர் மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பிவிடும் நிலைதான் இங்கு தொடர்கிறது. கட்டடங்கள் வளர்ந்திருக் கிறதே தவிர மருத்துவத் தரம் உயரவில்லை''’ என்கிறார்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட தலைவர் மோகன்குமார், “"இந்த மாவட்டம் விவசாயத்தை நம்பியிருக்கும் விவசாயப் பெருங்குடி மக்கள் வசிக்கின்ற பகுதி. தினசரி கூலி வேலை களுக்கு சென்று அன்றாடம் வயிற்றுப்பிழைப்பு நடத்துகின்ற சாமானிய மக்கள் அதிகம். இங்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர்கள் இல்லை. 45 டாக்டர்கள் இருக்கவேண்டிய இடத்தில் வெறும் 6 பேர் மட்டுமே இருப்பதாகக் கூறுகிறார்கள். அவசர சிகிச்சைப் பிரிவில் ஒருவர்கூட இருப்பதில்லை. செவிலியர்கள் பற்றாக்குறை, ஊழியர்கள் பற்றாக்குறை, ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் துப்புரவு ஊழியர்கள் மட்டுமே மருத்துவர்களைப்போல சிகிச்சையளிக்கும் இடங்கள் வரை செயல்படுகின்றனர். சமீப காலத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகம், அதனை மூடி மறைத்து விடுகின்றனர்.
கிட்டத்தட்ட இந்த மருத்துவமனை போஸ்ட் ஆபீஸ் செய்யும் வேலை யைத்தான் செய்கிறது. இங்கே நோய்வாய்ப்பட்டு வரு பவர்களை, விசாரிக்காமல், முதற்கட்ட பரிசோதனைகூட செய்யாமல் அவசர அவசரமாக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரெபர் செய்வதுதான் இவர்களின் வாடிக்கை. இங்கே வேலைபார்க்கும் மருத்துவர்கள் பெரும் பான்மையாக வெளியில் மருத்துவமனைகள் வைத்திருப்பதால், அவர்களின் சிந்தனை முழுக்க முழுக்க அவர்களின் மருத்துவமனைமீதே இருக்கிறது. கர்ப்பிணிப் பெண்களை ஒரு குறிப்பிட்ட தனியார் ஸ்கேன் சென்டரில்தான் ஸ்கேன் செய்து வரவேண்டும் என்கிற விதியே இருக்கிறது. அறுவைச் சிகிச்சைக்கான மருந்து மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் இங்கு கிடைக்கும் என மருத்துவமனைக்கு எதிரேயுள்ள மருந்துக் கடையில் போர்டு வைத்திருக்கும் அளவிற்கு இந்த மருத்துவமனையின் அவலம் கூடிக்கொண்டே இருக்கிறது. இதனை தமிழக முதல்வர் முழுக்கவனம் செலுத்தி மருத்துவர்களை நியமித்து விளிம்புநிலை மக்களின் உயிரைக் காத்திடவேண்டும்''’என்கிறார்.
சமூக செயற்பாட்டாளர் ஒருவர் கூறுகையில், “"மயிலாடுதுறை புதிய மாவட்டமாக ஆனது அரசியல்வாதிகளுக்கும், எம்.எல்.ஏ., எம்.பி. நகர்மன்ற தலைவருக்கும்தான் கொண்டாட்டம். மாவட்ட ஆட்சியர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும் அதனை படம்பிடித்து வெளியிடு வதும்தான் வேலையாக வைத்திருக்கிறாரே தவிர மருத்துவனையின் அவலங்களை கண்டு கொள்ளவில்லை. மாவட்ட எஸ்.பி. போலீஸ் படைகளோடு வலம்வருகிறாரே தவிர மருத்துவ மனைகள், பள்ளிகள் உள்ள சாலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்பு, டிராபிக் பிரச்சனைகளைக் கண்டுகொள்வதில்லை.
கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ள பகுதிகள் ஒவ்வொரு நிமிடமும் கூட்ட நெரிசலில் சிக்கித்தவிக்கிறது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளரோ, ஆட்சியரோ, எம்.எல்.ஏ.க்களோ பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அப்படியிருக்க… ஏழைகள் பயன்பெறும் மருத்துவமனையை எப்படி கண்டுக்குவாங்க?''’என்கிறார் வேதனையோடு.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டோம், “"மருத்துவமனை யில் தனிக் கவனம் செலுத்தி வருகிறோம். கடந்த காலங் களைப் பற்றி தெரியல, இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது. மக்களின் நியாய மான கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்''’என்று துண்டித்துக் கொண்டார்.
மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமாரோ, "மயிலாடுதுறை மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை அதிகம். அதனால் தினம் தினம் பிரச்சனை வருகிறது என்பதும் உண்மை. மருத்துவர்கள் போஸ்டிங் போட்டதும், ஆர்டர் காப்பியோட டிரான்ஸ்பருக்காக வந்துடுறாங்க. சமீபத்தில் 16 டாக்டர்களுக்கு இங்கு ஆர்டர் கொடுத்தாங்க. ஒருத்தர்கூட வந்து ஜாய்ண்ட் பண்ணல, இங்கு வந்து தங்க போதிய வசதியில்ல. அதனால் யாரும் இங்க வரத் தயங்குறாங்க, கவுன்சில்ல நடவடிக்கை எடுத்தால்தான் உண்டு''’என்கிறார் வேதனையோடு.
மருத்துவம் சேவையாக இருந்த காலம்போய், தொழிலா மாறிடுச்சி!