ரண்டரைக் கோடி ரூபாய், 3 ஏக்கர் நிலம், தொழிற்கூடம் என 20 கோடி ரூபாய் மதிப்பிலான மக்கள் சொத்தும் பணமும் ஓரிரு தனிப்பட்ட குடும்ப நலனுக்காக தாரைவார்க்கப்பட்டுள்ளதாக குமுறுகின்றனர் விருத்தாசலம் பீங்கான் உற்பத்தியாளர்கள்.

gg

கடலூர் மாவட்டம் விருத்தாசலம், நெய்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் "வெள்ளைக் களிமண்' அதிக அளவில் கிடைப்பதால், அதனைக் கொண்டு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் 1965-ஆம் ஆண்டு விருத்தாசலத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் பீங்கான் தொழிற்பேட்டை தொடங்கப் பட்டது. இப்பகுதியில் தமிழ் நாடு அரசு பீங்கான் உற்பத்தி நிறுவன நிர்வாகத்தின்கீழ் கற்குழாய் தொழிற்சாலை, பீங்கான் கலைப்பொருட்கள் உற்பத்திக் கூடம், பீங்கான் மூலப்பொருட்கள் விற்பனை நிலையம், பீங்கான் பொருட்களைச் சூடேற்றும் கில்லன் (சுரங்கச் சூளை) உள்ளிட்ட பிரிவுகளும் தொடங்கப்பட்டன. மேலும், 56 ஏக்கரில் 63 செராமிக் தொழிற் கூடங்களும் உள்ளன.

Advertisment

gg

இத்தொழிற்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் டீ கப், வாட்டர் பில்டர், மின்சாரத்துறைக்கு தேவையான பியூஸ்கேரியர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசைத் தொழிலாக பீங்கான் பொருட்களைத் தயாரித்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் அனைத்து பீங்கான் பொருட்களும் கலைநயத்துடன் தரமாக இருப்பதால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான் போன்ற பிற மாநிலங் களிலும், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு. இதனால் மறைமுகமாகவும், நேரிடையாகவும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற் பட்டோருக்கு வாழ் வாதாரமாக இந்த தொழிற்பேட்டை விளங்குகிறது.

அதேசமயம், பீங்கான் தொழிற் பேட்டையில் இயங்கி வந்த அரசின் தொடர் சுரங்கச் சூளை (கில்லன்) கடந்த சில ஆண்டுகளாக இயங்காததால் இங்குள்ள சிறு தொழிற்கூடத்தினர் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் ஒவ்வொரு தேர்தலின்போதும் அரசியல் கட்சிகள் அரசு கில்லனை மீண்டும் இயங்கச்செய்து தொழிற்பேட்டை யை மேம்படுத்துவோம் என வாக்குறுதி கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

Advertisment

ff

இந்த நிலையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினருமான சி.வெ. கணேசன் முயற்சியால் கில்லனை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின், "விருத்தாசலம் பீங்கான் தொழிற்பேட்டையை சீரமைத்து, தொடர் சுரங்கச் சூளை நிறுவுவதற் காக ரூ 2.50 கோடி ஆதாயமற்ற அமைப்புக்கு வழங்கப்படும்'' என அறிவித்தார்.

இதனால் விருத்தாசலம் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி சில காலம்கூட நீடிக்கவில்லை. அரசு கொடுத்தது பீங்கான் தொழில்புரியும் அனைத்து மக்களுக்குமானது அல்ல, ஒருசில பணக்கார தொழிலதிபர்களுக்குத் தான் என அதிர்ச்சியில் உறைந்துள்ள னர். கணேஷ் செராமிக் சங்கர், வெ.அரவிந்த், வெ.அசோக், பிரகாஷ், கோபால், சௌந்தர் எனும் ஒரு சிலர் நிர்வகித்து வரும் ‘விருத்தாசலம் செராமிக் உற்பத்தியாளர்கள் சேவை குழுமம் எனும் எனும் தனியார் அமைப்புக்கு இந்த தொகையும், சொத்துகளும் வழங்கப்பட் டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து மக்கள் அதிகாரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (எம்.எல்.) உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் எதிர்ப்புச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதுடன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசனிடத்திலும், கடலூர் மாவட்ட ஆட்சியருக்கும் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மற்றொருபுறம், ‘தொழிற் பேட்டையில் நிகழும் முறைகேடுகள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி’ ம.தி.மு.க., மார்க்சிஸ்ட், வி.சி.க. சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செராமிக் உற்பத்தியாளர் சங்க பொருளாளர் அசோக்குமார் இதுகுறித்து கூறுகையில், “"காமராஜர் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த தொழிற்பேட்டை கடந்த 20 ஆண்டுகாலமாக மூலப்பொருட்கள் கிடைக்காததாலும், நிர்வாகக் குளறுபடிகளாலும் சரிவர இயங்கவில்லை. தொடர் சுரங்கச் சூளைப் பணி நிறுத்தப்பட்டதால் உற்பத்தி செய்யப்படும் பீங்கான் பொருட்களை சுடுபணி செய்யமுடியாமல் சிறு குறு உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஒருசில தனி நபர்களைக் கொண்ட ஒரு அமைப்புக்கு பழைய தொடர் சுரங்கச் சூளைப் பராமரிப்புப் பணிக்காக 2.5 கோடி ரூபாய் மானியத்துடன் கூடிய நிதி, 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தொழிற்கூடம் மற்றும் 3 ஏக்கர் நிலங்கள் என 20 ffகோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை குறைந்த தரை வாடகைக்கு (ஆண்டுக்கு ரூ.5000) தமிழக அரசு (சிட்கோ) கொடுத்துள்ளது. தற்போது தொழிற்பேட்டையில் 63 சிறு, குறு பீங்கான் உற்பத்தி நிறுவனங்கள் இயங்குகிற சூழலில் சில குடும்பத்தைச் சேர்ந்த 5, 6 தனி நபர்களுக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. தனி நபர் ஆதாயம் அடையும் இதனை மாற்றி, அனைத்து தொழில் முனைவோரும் பலனடையும் வகையில் பயன்படுத்த வேண்டும்'' என்றார்.

பீங்கான் தொழில் முனைவோரான குணசேகரன் கூறும்போது, "சிட்கோவின் தலைவராக இருந்த ஜெயலட்சுமி, நிதிச் செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் தமிழக அரசுக்கு தவறான தகவல்களை அளித்து அவர்களின் உறவினர்களுக்கு அரசு அளித்த உதவிகளை தாரைவார்த்துள்ளனர். பலதரப்பட்ட மக்கள் இந்தத் தொழிலை நம்பியுள்ள நிலையில், இரு ஆதிக்க சமூகங்களைச் சேர்ந்த 2 தனி நபர்களுக்காக மக்களின் வரிப்பணத்தையும், சொத்துகளையும் தாரைவார்த்துள்ளது சிட்கோ நிர்வாகம்.

மற்ற தொழில்முனைவோரை கலந்தாலோசிக்காமல் சிட்கோவும், தமிழக அரசும் இந்த முடிவை எடுத்துள்ளன. இந்த அனுமதி கிடைத்தவுடன் பல ஆண்டுகளாக இருந்த மரங்களை அவர்கள் வெட்டி விற்றுவிட்டனர். மற்ற தொழில் முனைவோரைக் கொண்டு கமிட்டி அமைக்காமல், இரண்டு தனி நபர்களால் வழிநடத்தப்படும், அவர்களின் உறவினர் களைக் கொண்ட குழுவால் மற்ற தொழில் முனைவோர் களுக்கு எந்தப் பயனும் இல்லை. சுடுபணி செய்வதற்குக்கூட அதிக கட்டணம் வசூலிப்பார்கள். மக்கள் வரிப்பணமும், பொது சொத்தும் கொடுக்கப்பட்டதன் நோக்கம், இந்த தொழில் மேம்பட வேண்டும், இதனை நம்பியுள்ளவர்கள் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்பதே.

அவர்கள் சூளையை சில காலம் இயக்கிவிட்டு நட்டம் ஏற்பட்டது எனக் கூறி பணத்தையும், இடத்தையும் ஏப்பம் விடக்கூடிய ஆபத்தும் உள்ளது. எனவே தமிழக அரசு இதில் உடனடியாக தலையிட்டு அனைத்துத் தொழில்முனை வோரும், இதை நம்பியுள்ள தொழிலாளர்களும் பயன்படும் வகையில் மாற்றவேண்டும். இல்லையெனில் இங்குள்ள அனைத்துத் தொழில் முனைவோரையும், தொழிலாளர்களை யும் ஒன்றிணைத்து தொடர் போராட்டங்கள் நடத்த நேரிடும்''’என்றார்.

குற்றச்சாட்டுகள் குறித்து பீங்கான் உற்பத்தியாளர்கள் சேவை மைய இயக்குனர்களில் ஒருவரான வெ.அரவிந்தோ, “"சிட்கோ விதிகளின்படி ஆதாயமற்ற அமைப்புக்கு வழங்கப்படும் விதிமுறைகளின்படி பல தரப்பினரைக் கொண்ட எங்கள் அமைப்புக்கு இந்த நிதி உதவியும், தொழிற்கூடங்களும் வழங்கப்பட்டுள்ளது. சிட்கோ 2 பங்கு நிதி கொடுக்கும், நாங்கள் 1 பங்கு நிதியைக் கொடுப்போம். எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் உள்நோக்கம் கொண்டவை. இந்த கில்லன் வந்தால் அவர்களின் கில்லன் தொழில் பாதிக்கக்கூடும் என்பதால் அவதூறு பரப்புகின்றனர். சிட்கோ விதிமுறைகளின்படி அனைவருக்கும் பையரிங் சேவை செய்து கொடுப்போம்''’என்றார்.

இதுகுறித்து தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசனிடம் கேட்டதற்கு, "இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையையும், வாழ்வாதாரத்தையும் கருத்தில்கொண்டே தமிழக அரசு நிதியுதவி அளித்திருக்கிறது. இந்த நிதியும் மேம்பாட்டுத் திட்டங்களும் இந்தத் தொழிலிலுள்ள அனைவருக்கும் பலனளிக்கும் வகையிலேயே இருக்கும். இதுசம்பந்தமாக முதல்வரிடம் பேசி நல்ல தீர்வினை ஏற்படுத்துவேன்''” என்றார்.