கொரோனா தொற்று நோயுடன் பாதிக்கப்பட்ட நோயாளிகளை பாதுகாக்க அரசு டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் ஒரு பக்கம் யுத்தம் செய்துகொண்டிருக்க… இன்னொரு பக்கம் பி.பி., ஷுகர், கேன்சர் போன்ற "தொற்றா' நோய்களுக்கு சிகிச்சை கிடைக்காமல் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுமோ என்ற அச்சம் நிலவ ஆரம்பித்திருக்கிறது.

சென்னை திருவெல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவருக்கு நாய் கடித்துவிட்டதால் அரசு ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்கிறார். ஆனால், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால் நாய்க்கடி ஊசி போடமுடியாது என்று அனுப்பிவிடுகிறார்கள். ஊரடங்கு சூழலில் அங்கிருந்து கஷ்டப்பட்டு இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்து ஊசிபோட்டுக்கொண்டு சென்றிருக்கிறார்.

தமிழக தலைமை மருத்துவமனையான அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நோயாளிகளை தினமும் வந்து பார்த்து சென்ற டாக்டர்கள் இப்போது இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறைதான் பார்க்கிறார்கள். பல, செவிலியர்கள் கொரோனா வார்டுகளுக்கு மாற்றப்பட்டதால் மருந்து-மாத்திரைகளை ரெகுலராக வழங்குவதிலும் சிக்கல்.

gvt

Advertisment

கேன்சர் பாதிக்கப்பட்ட தனது மனைவியை ‘கீமோ’ சிகிச்சைக் கொடுக்க தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு 120 கிலோமீட்டர் தூரம் சைக்கிளிலேயே அழைத்துவந்திருக்கிறார் கூலித் தொழிலாளி. இப்படி, பல நோயாளிகள் அலைகழிக்கப்படும் சூழல் உருவாகியிருக்கிறது. ஒருவேளை, இப்படியே தொடர்ந்தால் கொரோனா தாக்கி இழப்பவர்களைப்போலவே டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையால் இறக்கும் நோயாளிகளின் பட்டியலும் வர ஆரம்பித்துவிடுமோ என்ற கவலையுடன் விசாரிக்க ஆரம்பித்தோம்…

அரசு பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் சாமிநாதனிடம் நாம் கேட்டபோது, ""அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளில் நோயாளிகள் குவிந்துகொண்டே இருப்பதால் இன்னும் ஒருமாதம் கழித்தோ இரண்டுமாதம் கழித்தோ அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம் என்கிற அவசிய அறுவை சிகிச்சைகளைத்தான் தள்ளி வைத்திருக்கிறார்களே தவிர அவசர அறுவை சிகிச்சைகளை தள்ளிவைக்காமல் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் அரசு மருத்துவர்கள். அதேபோல், வழக்கமாக பி.பி., ஷுகர், உள்ளிட்ட பல்வேறு நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத் திரைகளை இரண்டுமாதத்திற்கு கொடுத்திருப்ப தோடு கணக்கு எடுக்கச் செல்பவர்கள் மூலம் வீட்டிற்கே கொண்டுசென்று நோயாளிகளிடம் கொடுக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறது அரசு. ஊரடங்கால் விபத்துகள் குறைந்து எலும்பு முறிவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்திருக்கின்றன. டயாலிசிஸ் மற்றும் கேன்சர் நோயாளிகளுக்கான வழக்கமான சிகிச்சைகள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்'' என்கிறார் அவர்.

gg

Advertisment

பெயர் விரும்பாத அரசு மருத்துவர் ஒருவரோ, ""ஊரடங்கு உத்தரவால் பேருந்து, ஷேர் ஆட்டோக்களைப்பிடித்து அரசு மருத்துவமனை களுக்கு வரும் ஏழை, எளிய நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அருகில், இருக்கும் தனியார் க்ளினிக்குகள், மருத்துவமனைகளுக்கு செல்லலாம் என்றால் பெரும்பாலான தனியார் டாக்டர்களே கொரோனா தொற்றிவிடும் என்று பயந்துகொண்டு மருத்துமனைகளை மூடிவிட்டார்கள். அரசின் கட்டுப்பாடுகளை மீறினால் சீல் வைக்கப்படும என்ற அச்சமும் இருக் கிறது. இதனால், அரசு மருத்துவமனைகளுக்கும் செல்லமுடியாமல் தனியார் மருத்துவமனைகளுக்கும் செல்லமுடியா மல் தவித்து வருகிறார்கள் ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்க மக்கள். ஆனால், அரசு மருத்துவமனைகளில் கொரோனா மற்றும் கொரோனா அல்லாத நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்துக்கொண்டு அர்ப்பணிப்போடு பணிபுரிகிறார்கள் மருத்துவர்கள்.

எப்போதுமே, அவசர காலக்கட்டங்களில் கைவிட்டுவிடுவது தனியார் மருத்துமனைகளின் வழக்கம். அதனால்தான், பிரதமர் மோடியை தலைவராகக் கொண்ட நிதி ஆயோக்கின் பரிந் துரைப்படி அரசு மருத்துவமனைகளை தனியா ரோடு இணைக்கும் திட்டத்துக்கு எதிராக அரசு மருத்துவர்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் எங்களது உரிமைகளுக்காக போராடு வோமே தவிர நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டு செல்லமாட்டோம்.

மருத்துவர்களின் உரிமைகளுக்கான போராடிய காலக்கட்டத்தில்கூட அவசர சிகிச் சைகளை செய்துகொண்டேதான் போராட்டம் நடத்தினோம். அப்படி நடத்தியபோது, 120 மருத்துவர்கள் 500 கிலோமீட்டரிலிருந்து 600 கிலோமீட்டர்கள் தொலைவில் ட்ரான்ஸ்ஃபர் என்கிற பெயரில் தூக்கியடிக்கப்பட்டு பழிவாங்கப் பட்டிருக்கிறார்கள். நீதிமன்றமே டாக்டர்களின் பணிமாறுதலை திரும்பப்பெற வேண்டும் என தீர்ப்பளித்தபிறகும்கூட தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை.

தற்போது அரசு மருத்துவர்கள் கொரோனா சிகிச்சை அளித்ததாலேயே பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகிக்கொண்டிருந்தாலும் அஞ்சி ஓடவில்லை. அதனால்தான், அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு மருத் துவமனைகளை அதிகப்படுத்தி பொது சுகாதாரத்தை வலுப்படுத்தவேண்டும் என்று தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறோம்.

தற்போது, மாத்திரைகளை மொத்த மாக கொடுத்துவிட்டாலும் வழக்கமாக மருத்துவமனைகளில் செய்யப்படும் பரிசோதனைகள் செய்யப்படாமலேயே இருப் பார்கள். அதனால், நோயின் தன்மை எந்தளவுக்கு இருக்கிறது என்று தெரியாது.

அரசின் பொது சுகா தாரத்தை, இன்னும் வலுப்படுத்தினால் கொரோனா போன்ற ஊரடங்கு சூழல்களில் அருகிலுள்ள சுகாதார மையங்களிலேயே தங்களது நோய்க்கான பரிசோதனை களை செய்துகொள்ளமுடியும். தற்போதைய, இக்கட்டான சூழலில் தனியார் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதை நிறுத்தக்கூடாது என்று அரசாங்கம் கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்கவேண்டும். அதேநேரத்தில், அவர் களுக்கான பாதுகாப்பு நெறிமுறைகளை வகுத்து கொடுக்கவேண்டும். அரசு மருத்துவமனை காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும். அப்போது தான், கொரோனா போன்ற கொடூர சூழல்களில் ஏழை எளிய மக்களின் உயிரைக்காப்பாற்ற முடியும்'' என்கிறார்.

கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்றுவது எவ்வளவு முக்கியமோ அதேபோல் மற்ற நோய்களிலிருந்தும் நோயாளிகளை காப்பாற்றுவதும் முக்கியம். அனைத்தும் உயிர்தான்.

-மனோசௌந்தர்