கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் கருப்பசாமி. இவரது மனைவி ஜெயா. கடந்த 2018 நவம்பர் 27ஆம் தேதி ஜெயா மண் ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஜெயாவின் புடவையில் தீப்பற்றி அவரது இடுப்புக்குக் கீழே இரண்டு கால்களிலும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

இளையரசனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் முதலுதவி சிகிச்சையளித்து பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துவந்தனர் அவரது குடும்பத்தினர்.

ss

சம்பவத்தன்று கோவில் பட்டி அரசு தலைமை மருத் துவமனையில் தீக்காய தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியிலிருந்த அரசு மருத்துவர் பிரபாகர், கருப்பசாமியிடம் வந்து எந்த ஊர்? என்ன வேலை செய்கிறீர்கள்? என்பதை முதலில் விசாரித்தார். பின்னர், “"கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைப் பிரிவுக்கு சிறப்பு மருத்துவர் நான். நான் ஒரு பத்து நாட்கள் விடுமுறை எடுக்கப்போவதால் உங்கள் மனைவிக்கு சிகிச்சையளிக்க வேறு மருத்துவர்கள் இங்கு இல்லை. கோவில்பட்டி பைபாஸ் தோனுகால் விலக்கில் ஜெய் மருத்துவமனை உள்ளது. அங்கே மாற்றுங்கள்’எனத் தெரிவித்தார்.

இங்கேயே வைத்து சிகிச்சையளியுங்கள் என்றேன். இதனால் கோபமடைந்த டாக்டர் பிரபாகர், மருத்துவ மனையில் சேர்த்த 2018, நவம்பர் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்களாக எனது மனைவிக்கு எந்தவித சிகிச்சையும் அளிக்கவில்லை. மற்ற அரசு டாக்டர்களையும், நர்சுகளையும் மனைவிக்கு சிகிச்சையளிக்க விடவில்லை.

2018 நவம்பர் 29-ஆம் தேதி இரவு கருப்பசாமி இல்லாத சமயத்தில், டாக்டர் பிரபாகரனுக்கு புரோக்கராக செயல்பட்டு வரும் சிலர் அங்குவந்து, வலியால் துடித்துக்கொண்டிருந்த ஜெயாவிடமும், உடனிருந்த மனைவியின் தாய்மாமா காளியப்பனிடமும் "இப்படியே இருந்தால் செத்துவிடுவார். டாக்டர் பிரபாகரனை மீறி யாரும் இங்கு சிகிச்சையளிக்க வரமாட்டார்கள். எனவே அவர் தனியாக நடத்திவரும் ஜெய் மருத்துவமனையில் சேர்த்தால் காப் பாற்றிவிடுவார். 2 லட்சம் மட்டுமே செல வாகும்' எனப் பேசி, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யாம லேயே ஜெய் ஹாஸ்பிடலுக்குக் கொண்டு சென்றுவிட்டனர்.

"ஜெய் ஹாஸ்பிடலில், அரசு தலைமை மருத்துவமனையில் தீக்காயம் 30% எனத் தெரிவித்ததை பின்னர் பணம் பறிக்கும் ஆசையில் 60% ஆக மாற்றியெழுதியும், எங்களைப் பயமுறுத்தியும் பணம் பறிக்கும் நாடகங்களை அரங்கேற்றினார். முதல் மூன்று நாட்கள் ஐ.சி.யூ.விலும், அடுத்த 37 நாட்கள் சாதாரண அறையிலும் வைத்து என் மனைவி ஜெயாவை மருத்துவக் கைதியாக்கி, 40 நாட்களாக பார்க்க அனுமதிக்கவே இல்லை. 40 நாட்களில் மெடிசன், ஆபரேஷன் தியேட்டர், அட்வான்ஸ் என ரூபாய் 11,14,031 -ஐ பெற்றுக்கொண்டனர்'' என்றார் கருப்பசாமி.

ஒருகட்டத்தில் மீண்டும் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கொண்டுவந்து மீண்டும் சேர்த்தார் கருப்ப சாமி.

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை. தூத்துக்குடி அல்லது திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுவிடுங்கள் என டாக்டர் பிரபாகர் நிர்பந்தப்படுத்தினார். பதினோரு லட்சம் பணத்தை ஜெய் ஹாஸ்பிடலில் கட்டி விட்டதால், வேறு பண வசதி இல்லை. எங்கு செல்வது எனப் புரியாமல் தயவுசெய்து இங்கேயே அவருக்கு சிகிச்சை செய்து காப்பாற்றுங்கள் எனக் கெஞ்சினார். இந்நிலையில் ஜெயா 2019, ஜனவரி 26ஆம் தேதியில் உயிரிழந்துவிட்டார்.

இதுதொடர்பாக புகாரளிக்கப்பட்ட நிலையில் வழக்குப்பதிவு செய்த மாநில மனித உரிமை ஆணையம், உரிய விசாரணை நடத்தி விரிவான அறிக்கை தர மருத்துவ நலப்பணிகள் இயக்குநருக்கு கடிதம் அனுப்பியது. அதன்படி மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் சுவாதி ரத்னாவதி, இணை இயக்குனர் குருநாதன் ஆகியோர் விசாரணை செய்து விசாரணை அறிக்கையை மனித உரிமை ஆணையத்துக்கு அளித்தனர்.

இதனடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் மே 19-ஆம் தேதி பிறப் பித்துள்ள உத்தரவில், "மருத்துவர்களும் பணியாளர்களும் கடமைதவறி செயல் பட்டுள்ளார்கள். குறிப்பாக, டாக்டர் பிரபாகர் பல்வேறு விதிகளைமீறிச் செயல்பட்டுள்ளதும், கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தீக்காயப் பிரிவு தரமின்றிச் செயல்பட்டதும் உண்மை. கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் மூத்த அறுவை சிகிச்சை மருத்துவர் ஸ்ரீ வெங்கடேஷ்வர் , டாக்டர் பிரபாகர், நர்சுகள் குமரேஸ்வரி, குருலட்சுமி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளது.

உயிரிழந்த ஜெயாவின் கணவர் ராணுவ வீரர் கருப்பசாமிக்கு நான்கு வாரங்களுக்குள் தமிழ்நாடு அரசு இழப்பீடாக ரூ. 50 லட்சம் வழங்கவேண்டும். டாக்டர் பிரபாகரை தமிழ்நாடு அரசு உடனடியாக பணிநீக்கம் செய்து கிரிமினல் வழக்குப் பதிவு செய்யவேண்டும். மீண்டும் அவரை அரசு பணியாற்ற அனுமதிக்கக்கூடாது. இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளுக்கு எதிராக ஜெய் மருத்துவமனையில் பணிபுரியும் போலி டாக்டர்கள் குறித்து தமிழக அரசு விசாரித்து, குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும்'’எனத் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவரின் பணத்தாசையால் தீக்காயமடைந்த பெண்ணின் உயிர் பறிபோயிருப்பது பரிதாபம்!

-மூர்த்தி