தேர்தல் நேரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகளில் முக்கியமாக இடம்பெறுவது இலவசங்கள்தான். என்ன மாதிரியான புதிய இலவசங்களை தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் அறிவிக்கப்போகின்றன என்கிற எதிர்பார்ப்பு வாக்காளர்களிடமும் அதிகரித்தே இருந்ததால் மக்கள் மீது பொழியும் பரிசு மழையாக இருக்கின்றன தேர்தல் அறிக்கைகள்.

free

நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களை கபளீகரம் செய்வதற்காக, வருடத்துக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள், வாஷிங்மெசின், எலெக்ட்ரிக் ஸ்டவ், மாணவர் களுக்கு 2ஜி டேட்டாவரை இலவசமாக கொடுக்க முன்வந்திருக்கிறது ஆளும் கட்சியான எடப்பாடி அரசு.

தேர்தல் நேரத்தில் கொடுக்கப்படும் இத்தகைய இலவசங்கள் வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் லஞ்சம் என்பதாக சுட்டிக்காட்டி, கடந்த காலங்களில் கீழமைக் கோர்ட்டில் துவங்கி உச்சநீதிமன்றம் வரை பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. அதில் பல வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தி உத்தர விட்டது உச்சநீதிமன்றம்.

Advertisment

இந்த நிலையில், உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை, தமிழக அரசியல் கட்சிகள் வெளியிட்டுள்ள தற்போதைய தங்களின் தேர்தல் அறிக்கைகளில் மீறியுள்ளன என்று தமிழகத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹூவிடம் புகார் தெரிவித்திருக்கிறார் தேர்தல் ஒருங்கிணைப்புக்கான அமைப்பைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம்.

அவரிடம் நாம் பேசியபோது,’""ஒவ்வொரு தேர்தலின் போதும் சாத்தியமில்லாத இலவசங் களையும் வாக்குறுதிகளையும் தங்களின் தேர்தல் அறிக்கைகளில் அரசியல் கட்சிகள் அள்ளி வீசுவது தேர்தல் ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்குகிறது. ஒரு பொதுநல வழக்கில், தேர்தல் அறிக்கைகள் என்பது தேர்தல் நடைமுறையுடன் நேரடியாகத் தொடர்புடையவை. அதனால் அதனை தேர்தல் ஆணையம் ஒழுங்குபடுத்துவதுடன், தேர்தல் அறிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தர விட்டது.

அதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட தேர்தல் ஆணையம், தேர்தல் வாக்குறுதி கள் நியாயமானவைகளாக இருப்பதுடன் அவைகளை நிறைவேற்ற தேவையான நிதி ஆதாரங்களை பெறுவதற்கான வழிமுறைகளையும் தேர்தல் அறிக்கையில் தெளிவுபடுத்தி கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் நம்பகத்தன்மையை அரசியல் கட்சிகள் உறுதி செய்யவேண்டும்'' என அறிவுறுத்தியுள்ளது கடந்த தேர்தலின்போது.

Advertisment

free

2016 சட்டமன்றத் தேர்தலின்போது, தேர்தலில் அ.தி.மு.க. வும், தி.மு.க.வும் கொடுத்த தேர்தல் அறிக்கைகளில், தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டதாக தேர்தல் ஆணையத்துக்கு நாங்கள் புகார் தெரிவித்தோம். அதன்படி இரு கட்சிகளின் தலைமைக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது இந்திய தேர்தல் ஆணையம்.

தி.மு.க.வின் அப்போதைய தலைவர் கலைஞரும், அ.தி. மு.க.வின் அப்போதைய பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் ஆணையத்தின் நோட்டீஸுக்கு பதிலளித்திருந்தனர். "பதிலில் குறிப்பிட்டிருந்த வழிவகைகளை தேர்தல் அறிக்கைகளிலும் தெரிவிக்க வேண்டும்' என்று கலைஞருக்கு உத்தரவிட்டது.

அதேபோல, ஜெயலலிதா வுக்கு எழுதிய கடிதத்தில், "உங்கள் கட்சியின் தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரங்களை குறிப்பிட வில்லை. தேர்தல் அறிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறி முறைகளை இனிவரும் காலங் களில் பின்பற்ற வேண்டும்' என்று அறிவுறுத்தியது தேர்தல் ஆணையம்.

ஆனால், அதுபற்றி கவலைப்படாமல் இந்தத் தேர்தலில் வழக்கம்போல வாக்குறுதிகளையும் இலவசங் களையும் அ.தி.மு.க.வும் தி.மு.க. வும் அள்ளி வீசியிருக்கின்றன. ஆனால், அவைகளை நிறை வேற்றுவதற்கான நிதி ஆதாரங் களை தேர்தல் அறிக்கைகளில் தெரிவிக்கவில்லை. இது நடத்தை விதிகளுக்கு எதிரானது.

தற்போதைய சூழலில், சுமார் 6 லட்சம் கோடி கடனில் தமிழக அரசு மூழ்கியிருக்கும் நிலையில் எந்த நிதி ஆதாரங்களைக் கொண்டு வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள்? ஸ்விஸ் பேங்கில் கொள்ளையடிப்பார்களா? அறிவிக்கப்பட்ட இலவச வாக்குறுதிகளுக்கான நிதி ஆதாரங்களை தங்கள் தேர்தல் அறிக்கைகளில் தெரிவிக்காத அரசியல் கட்சிகளிடம், தேர்தல் அறிக்கையிலிருந்து இலவச வாக்குறுதிகளை அகற்றச் சொல்வதுடன், புதிய தேர்தல் அறிக்கையை வெளியிட வேண்டும் என அக்கட்சிகளை வலியுறுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டுப்படாத கட்சிகளை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவைகளாக அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளோம்'' என்கிறார் மிக அழுத்தமாக.

இதுகுறித்து கருத்தறிய தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது தொடர்பு எல்லைக்கு வெளியி லேயே இருந்தது அவரது மொபைல் ஃபோன்.

தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் அறிக்கையில் மீறியிருக்கும் அரசியல்கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறும் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வழக்கு தொடர முடியுமா? என ஆலோசித்து வருகின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள் சிலர்.