திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் 30, வேலூர் மாவட்டத்தில் 10, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18, திருப்பத்தூர் மாவட்டத்தில் 15 என 73 கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 10 அரசு கலைக்கல்லூரிகள் அடக்கம். கடந்த மாதம் புதியதாக தொடங்கப்பட்ட இரண்டு அரசு கலைக்கல்லூரிகளோடு சேர்த்து 75 கல்லூரிகள் இதன் நிர்வாகத்தின் கீழ் உள்ளன. இதில் சில அரசு கலைக்கல்லூரிகளில் கடந்த 5, 6 ஆண்டுகளாகவே பட்டமளிப்பு விழா நடத்தவில்லை எனக் குமுறுகிறார்கள் அக்கல்லூரிகளைச் சேர்ந்த பட்டம் வாங்காத பட்டதாரிகள்.
திருவண்ணாமலை, கலைஞர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் ஒருவர் நம்மிடம், ""கடந்த 2018-2019ல் படித்துமுடித்து வெளியேறினேன். அதன்பின் பி.ஜி.யும் முடித்து விட்டேன், இப்போதுவரை யாருக்கும் பட்டம் வழங்கவில்லை. இப்படி கடந்த 7 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தவில்லை. ஏன்னு துறைத்தலைவரிடம் கேட்டால் முதல்வரிடம் கேட்கச் சொல்கிறார்கள். கல்லூரி முதல்வரை பார்க்கவே முடிவதில்லை'' என்றார்.
மற்ற கல்லூரிகளில் எப்படி இருக்கிறதென்று அறிய, செய்யார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் ஒருவரிடம் கேட்டபோது, ""2018-2019ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் பட்டமளிக்கப்பட்டதாக நினைவு. அதன்பின் பட்டமளிப்பு விழா நடத்தவில்லை'' என்றார். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியிலுள்ள அரசு கலைக்கல்லூரி ஊழியரிடம் கேட்டபோது, ""கொரோனாவுக்கு பின்னர் ஒருமுறை பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது. அதன்பின் கடந்த 3 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தவில்லை'' என்றார். சோளிங்கர் அரசு கலைக்கல்லூரி 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை மூன்று பேட்ஜ் முடிந்தும் பட்டமளிப்பு விழா நடத்தவில்லை.
இதுகுறித்து கல்லூரி பேராசிரியர் ஒருவரிடம் பேசியபோது, ""ஒவ்வொரு கல்வி ஆண்டு முடிந்து, தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் பல்கலைக் கழகங்களின் வேந்தரான ஆளுநருக்கும், உயர் கல்வித்துறை அமைச்சருக்கும் தகவல் தெரிவிக்கப் படும். அவர்கள் பல்கலைக்கழகத்துக்கு வந்து பட்ட மளிப்பார்கள். அதன்பின் கல்லூரிகள் பட்டமளிப்பு விழாவை நடத்துவார்கள். அரசு கல்லூரி முதல்வர், பட்டமளிப்பு விழாவுக்கு அமைச்சர், துணைவேந்தர், பதிவாளர், தேர்வுக்கட்டுப்பாட்டாளர், அரசின் மிக முக்கிய பிரமுகர் என யாராவது ஒருவரை அழைத்துவந்து நடத்துவார். இதற்காக மாணவர் களிடம் பணம் வாங்கி அதன்மூலமாக நடத்தப் படுகிறது. கொரோனாவை காரணம் காட்டி பட்டமளிப்பு விழாவை ரத்து செய்தார்கள். அதன் பின் பல அரசு கல்லூரிகளில் விழா நடத்தவே யில்லை. இதன்மூலம் ஆயிரக்கணக்கான பட்டதாரி கள் பட்டங்கள் வாங்காமல் இருக்கிறார்கள். பல்கலைக்கழகங்களிலிருந்து சான்றிதழை பிரிண்ட் செய்து கல்லூரிக்கு அனுப்பவேண்டியது தேர்வு கட்டுப்பாட்டாளர் தான். பல்கலைக்கழகத்தில் நடந்த நிர்வாக சிக்கலால் சான்றிதழ்களை தருவதில் தாமதமானது'' என்றார்.
வேலூரைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் ஒருவர், ""பட்ட சான்றிதழ் மட்டுமில்லை, ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ்களையும் பல்கலைக்கழகம் கல்லூரிகளுக்கு அனுப்புவதில்லை. ஒவ்வொரு மாணவனும் நேரடியாக பல்கலைக்கழகத்துக்கு சென்று கடிதம் எழுதித்தந்து வாங்கிவருகின்றனர். சான்றிதழ்களில் மாணவனின் பெயரிலும் தவறு செய்துவிடுகிறார்கள். ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை திருத்துமுன் அந்த மாணவன் முதுகலையே முடித் திருப்பான். அதன்பின் சான்றிதழ்களை திருத்த வருவார்கள். பல்கலைக்கழக நிர்வாகம் செய்யும் தவறை திருத்த மாணவர்கள் குறைந்தபட்சம் 3 ஆயிரம் ரூபாய் செலவு செய்யவேண்டியிருக்கிறது. படித்து முடித்து, மத்திய, மாநில அரசு, தனியார் வேலைக்கு விண்ணப்பிப்பவர் கள், பட்டதாரி சான்றிதழ் இல்லாமல் பெரிய சிரமத் துக்கு ஆளாகிறார்கள்'' என்றார்.
இதுகுறித்து திருவள்ளு வர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆறுமுகத் திடம் கேட்டபோது, ""கல்லூரிகளில் நடக்கவேண் டிய பட்டமளிப்பு விழாவுக்கும், பல்கலைக்கழகத்துக் கும் சம்பந்தமில்லை. அவர்கள் ஏன் நடத்தவில்லை என்பதை அவர்களிடம்தான் கேட்கவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் சான்றிதழ்கள் தயாரானதும் கல்லூரிகளுக்கு மெசேஜ் அனுப்பி, வந்து வாங்கிக்கொள்ளச் சொல்கிறோம். வந்து வாங்கிச்செல்ல வேண்டியது அவர்களது கடமை. அதேபோல் சான்றிதழ்களில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வருவதற்கு கல்லூரி நிர்வாகமே முழுப்பொறுப்பு. நாங்கள் ஆண்டுக்கு ஒரு லட்சம் சான்றிதழ்களை தயார் செய்கிறோம். அவர்கள் சரிபார்த்து சரி யெனச் சொன்னபின்பே பிரிண்ட் எடுக்கப்படுகிறது. அவர்கள் சரியாக கவனித்து தவறைத் திருத்தியிருந் தால் மாணவர்களுக்கு அலைச்சல் வராது'' என்றார்.
திருவண்ணாமலை கல்லூரியில் முதல்வராக இருந்த கிருஷ்ணன், கணேசன் ஆகியோர் சாதிரீதியாக செயல்பட்டு கோஷ்டி உருவாக்கிய தோடு, அட்மிஷனுக்கு புரோக்கர்களை வைத்து பணம் வாங்கி சிக்கலில் மாட்டி, அதிலிருந்து தப்பிக்க வழிதேடிக்கொண்டிருந்ததால் மாணவர் களைப் பற்றி கவலைப்படவில்லை. அதேபோல் அரசு கல்லூரிகளின் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் தங்களது குடும்பத்தினர் பெயரில் தனியார் கல்லூரிகளில் பார்ட்னராக சேர்ந்து நடத்துகிறார்கள். அதனால் அரசு கல்லூரிகள் மோசம் என்ற பிம்பத்தை உருவாக்கவும் பட்டமளிப்பு விழா நடத்தாமல் விடுகிறார்கள். மாணவர்கள் மீது அக்கறையில்லாத கல்லூரி முதல்வர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக பட்டமளிப்பு விழா நடத்தி ஆயிரக்கணக்கான பட்டதாரிகளின் எதிர்காலத்தை காப்பாற்றவேண்டும்.
-து.ராஜா
படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்