40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் அரியலூர் அரசு சிமெண்ட் ஆலையை முறைகேடு, ஊழலால் நஷ்ட கணக்கு காட்டி, தனியாருக்கு தாரை வார்க்கத் துடிக்கிறார்கள் அதிகாரிகள் என்று கொதித்தெழும் தொழிலாளர்கள், ஆலையை மீட்டெடுக்க போராட்டம் நடத்தவும் முன்வந்திருக்கிறார்கள்.

cc

மூன்று மாதத்தில் மூடுவிழா

அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை 1979-ல் இருந்து இயங்கி வருகிறது. 29-1-2016-ல் 850 கோடியில் ஆலையின் விரிவாக்கப் பணிகள் துவங்கப்பட்டன. இதன்மூலம் அரசுக்குத் தேவையான சிமெண்ட் உற்பத்தியை விரிவாக்கம் செய்ய முடிவெடுத்து மாதம் 12 லட்சம் டன் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு கடந்த 1-11-2019 அன்று விரிவாக்க பணிகள் முடிக்கப்பட்டது என சொல்லி முதல்வர் எடப்பாடி காணொலி காட்சி மூலம் ஆலையை துவக்கி வைத்தார்.

Advertisment

திறப்புவிழா கண்டு மூன்று மாதங்கள் முடிந்தும்கூட ஆலையில் இருந்து ஒரு மூட்டை சிமெண்ட் கூட உற்பத்தியாகி வெளியே வரவில்லை. விரிவாக்கப் பணிகள் இன்னும் முழுமையாக முடியாமல் இருப்பதுதான் அதற்குக் காரணம். கமிஷனுக்கு ஆசைப்பட்டு தரமற்ற தளவாடங்கள் வாங்கப்பட்டதால் ஆலை சரிவர இயங்கவில்லை. திறப்பு விழா கண்ட மூன்று மாதங்களிலேயே மூடுவிழாவுக்கு தயாராகிவிட்டது அதிர்ச்சி யளிக்கிறது.

சமீபத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செம்மலை தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏக்கள் மஸ்தான் பிச்சாண்டி உள்ளிட்ட குழுவினர் புது ஆலையின் அரவைத் திறனை பார்வையிட சென்றார்கள். ஆலையை இயக்கிக் காட்டுங்கள் என்று குழுவினர் சொல்ல, இயக்க முடியாத ஆலையை எப்படி இயக்குவது என்று அதிகாரிகள் திருதிருவென்று விழித்திருக்கிறார்கள். இதனால், குழுவினர் அதிருப்தியோடு வெளியே வந்துள்ளனர்.

சொகுசு கார், சொகுசு பங்களா

Advertisment

புது ஆலையில் மட்டுமல்ல ஏற்கனவே செயல்படும் ஒட்டு மொத்த ஆலையும் நஷ்டத்தில் இயங்குகிறது எனக்கூறி தனியா ருக்கு தாரைவார்க்கும் பணியை அதிகாரிகளே செய்துவரு கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் எட்டுக்கும் மேற்பட்ட தனியார் சிமெண்ட் ஆலைகள் லாபகர மாக செயல்படுகின்றன. ராம்கோ, சங்கர் போன்ற ஆலைகள் லாபம் சம்பாதித்து ஒன்றுக்கு இரண்டாக இப்பகுதியில் சிமெண்ட் ஆலைகள் துவக்கி லாபம் ccபார்க்கும்போது, அரசுக்கு சொந்தமான ஆலை மட்டும் ஏன் நஷ்டத்தில் போகிறது?

இதுகுறித்து நம்மிடம் பேசிய டான்செம் தொழிற்சாலை ஊழியர்கள், ""கல்வித்துறையில் இருந்து மாறி தமிழ்நாடு சிமெண்ட் நிறுவன மேலாண்மை இயக்குநராக 8-3-2017-ல் உள்ளே வந்தார் சபீதா ஐ.ஏ.எஸ். அவர் வந்தபிறகு, வாடகைக்கு இயங்கிய அலுவலகத்தை 14 லட்சம் செலவு செய்து அழகு படுத்தினார். அவர் சென்றுவர 30 லட்சத்தில் சொகுசு கார். அதுமட்டுமா? அப்போது இருந்த அதிகாரிகளை ஓரம் கட்டிவிட்டு, தனக்கு வேண்டிய வர்களான சீமாஸ்கேரியா, ரவிச் சந்திரன், முரளிதரன், நரேஸ் குமார், ஜாபர் அலி ஆகியோரை முக்கிய பொறுப்புகளுக்கு நிய மனம் செய்தார்''’’என்கிறார்கள்.

மேலும், ஓய்வுபெற்ற கிருஷ்ணமூர்த்தியை (75 வயது) டெக்னிக்கல் பிரிவு இயக்குனர் பணிக்கு நியமனம் செய்தார். இது போன்று நான்கு ஓய்வு பெற்றவர் களுக்கு பணி வழங்கியதோடு அல்லாமல், அவர்களுக்கு மாதம் 75 ஆயிரம் சம்பளம், வீடு, கார் என அரசுப் பணத்தை வாரி இறைத்தார்'' என்கிறார்கள்.

கொடிகட்டி பறந்த ஊழல்

ஆலை விரிவாக்கம் செய்ய 850 கோடியை அரசு, கடன் வாங்கிக் கொடுத்துள்ளது. இதற்காக மாதந்தோறும் அரசு வட்டி செலுத்தி வருகிறது. அப்படியிருந்தும் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு விருந்து கொடுத் தோம், அதுவும் மது விருந்து... இதற்கான செலவு 12,419 ரூபாய் என பில் எழுதி பணத்தில் விளையாடியிருக்கிறார்கள். சபீதா ஐ.ஏ.எஸ். ஓய்வு பெற்ற பிறகு, தனக்கு வரவேண்டிய ஈட்டிய விருப்புத் தொகை 23,25,375 ரூபாயை சீமாஸ்கேரியா உதவி யுடன் ஒரே இரவில் சிமெண்ட் நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து ஆன்லைன் மூலம் இயக்குனர் அனுமதி இல்லாமல் சபீதாவின் வங்கிக் கணக்கிற்கு பணப்பரிமாற்றம் செய்துள்ளனர். இது சம்பந்தமாக மத்திய அரசின் தணிக்கைத்துறை கண்டுபிடித்து கண்டனம் தெரிவித்ததோடு நிறுவனத்திடம் விளக்கம் கேட்டிருக்கிறது.

போலியான நேர்முகத்தேர்வு

""ஆலையில் பணிபுரிந்து ஓய்வுபெற்று சென்றவர்களுக்கான பணப்பலன் ஓய்வூதியம் கிடைக்க வில்லை. ஆலைக்கு நிலம் கொடுத்தவர்கள், பணியில் இருந்தபோது இறந்து போனவர்களின் வீட்டுப் பிள்ளைகள் என பலருக்கும் பணி தராமல், பணம் பெற்றுக்கொண்டு போலியான நேர்முகத் தேர்வு நடத்தி மோசடிசெய்து பணம் தருபவர்களுக்கு பணிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், உயர் பதவிகளுக்கு தனியார் ஆலையில் இருந்து நேரடியாக ஆள் எடுத்துள்ள னர். இண்டர்வியூ என்று பெயருக்கு நடத்திவிட்டு, அரசுத்துறையில் இல்லாத விதிமுறையை புகுத்தி உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. செட்டிநாடு சிமெண்ட் ஆலையில் பணி செய்த முரளிதரன் மேலாண்மை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரவிச்சந்திரன் டிஜிம், அருள்ஜோதி, எஜமான் என பலரையும் முறை கேடாக பணி நியமனம் செய்துள்ளனர்''’என்று கொந்தளிக்கிறார்கள் தொழிலாளர்கள்.

cc

""வேலைக்கு ஆட்கள் வேண்டும் என விளம்பரம் மட்டும் செய்வார்கள். விற்பனை மேலாளர் பதவிக்கு 7 முதல் 15 வருடம் அனுபவம் இருக்கவேண்டும். கில்லர், பர்னர் வேலைக்கு டிப்ளமோவில் கெமிக்கல் படித்தவர்கள் அதிலும் 5 ஆண்டுகள் அனுபவம் இருக்கவேண்டும். ஆபரேட்டர் பணிக்கு பி.இ. கெமிக்கல் படிப்பும், 5 வருட அனுபவமும் வேண்டும் என எல்லா வேலைகளுக்கும் இப்படி அனுபவம் கேட்பார்கள். அப்படிபட்டவர்கள் விண்ணப்பித்து நேரடி தேர்வுக்கு வந்தாலும் கூட அவர்களை தேர்வு செய்யமாட்டார்கள். ஆளும் கட்சி மந்திரி, எம்.எல்.ஏ., இங்கு வேலைசெய்யும் உயர் அதிகாரிகள், தங்களுக்கு வேண்டியவர்கள் எந்தத் தகுதியும் இல்லாதவர்களை சிபாரிசு செய்து, அப்படிப்பட்டவர்களை வேலைக்கு எடுத்துள்ள னர். முறையான, நேர்மையான விசாரணை நடத்தினால் இது வெட்டவெளிச்சமாகும். பல உயர்அதிகாரிகள் மாட்டிக்கொள்வார்கள்'' என்கிறார் அரியலூர் தி.மு.க. அவைத்தலைவர் மதிவாணன்.

கேட்பாரற்றுக் கிடக்கும் 100 கோடி சுண்ணாம்புக்கல்

ஆலை விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர், ""தமிழ்நாடு அரசு நிறுவனமான டான்சம் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த சாத்தூர், விருதுநகர், ஆலங்குளத்தில் கல்நார் தகடுகள் உற்பத்தி செய்யப்பட்டன. அந்த ஆலைகள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன. விருத்தாசலத்தில் இயங்கிய கற்குழாய் தொழிற்சாலையும் மூடப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. ஆலங்குளம் சிமெண்ட் ஆலையில் மட்டும் அரியலூர் ஆலையில் இருந்து கிளிங்கர் பெறப்பட்டு அதை அரைத்து சிமெண்ட் தயாரித்து பெயரளவில் செயல்படுகிறது. தனியார் சிமெண்ட் ஆலைகள் லாபமோ லாபம் பார்க்கும் போது அரசு ஆலை மட்டும் நஷ்டம் அடைய சபீதா போன்ற அதிகாரிகளின் முறைகேடுகள்தான் காரணம். இந்த ஆலையில் பணி செய்யும் நிரந்தர ஊழியர்கள் 81 பேர். இவர்களை கண்காணிக்கும் அதிகாரிகள் எண்ணிக்கையோ 180 பேர். இந்த ஆலைக்கு சிமெண்ட் தயாரிக்கும் மூலப்பொருளான சுண்ணாம்புக்கல் எடுக்க சுமார் 1000 ஏக்கர் நிலத்தை விவசாயிகளிடமிருந்து 1975-லேயே விலைக்கு வாங்கிப் போட்டுள்ளனர். அதிலே கல் எடுக்காமல் 100 கோடி ரூபாய் செலவு செய்து வெளிநாட்டிலிருந்து சுண்ணாம்புக்கல் இறக்குமதி செய்தார்கள் அதிகாரிகள். அந் தக் கல்லும் கேட்பாரற்று அப்படியே கிடக்கிறது''’’ என்று ஆதங்கப்படுகிறார்.

அடுக்கடுக்கான ஆதாரங்கள்

சிவசங்கர் மேலும் நம்மிடம் பேசியபோது, ""800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருக்கவேண்டும். ஆனால் ஆலை நஷ்டக்கணக்கு காட்டுவதால் நேரடியாக பணி நியமனம் செய்யாமல் புறவாசல் வழியாக சிலரை நியமிக்கிறார்கள். சபீதா முதல் இப்போதுள்ள மேலாண்மை இயக்குநர் முரளிதரன் வரை அனைவரும் ஊழலில் ஊறிக்கிடக்கிறார்கள். இப்படி ஊழல் செய்ததற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. எனவே இந்த ஆலையை மேன்மைப்படுத்தி தொழிலாளர்களை வாழவைக்க வேண்டுமானால் சி.பி.ஐ. மூலம் விசாரணை செய்து ஊழல் பேர்வழிகளை வெளியேற்ற வேண்டும். அதை இந்த எடப்பாடி அரசு செய்யுமா? அரசு தயக்கம் காட்டினால், போராட்டம் நடத்தவும், சி.பி.ஐ. விசாரணை கேட்டு வழக்குத் தொடுக்கவும் தயாராகி வருகிறோம்'' என்கிறார் உறுதியாக.

cc

அவதூறு பரப்புகிறார்கள்

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சபீதாவிடம் பேசியபோது, ""நான் அங்கு மேலாண்மை இயக்குனராக பொறுப்பேற்ற பிறகுதான், கணக்குகளை முடித்து வங்கியில் கடன் வாங்கி, அரசாங்கத்திடம் நிதி பெற்று திட்டத்தை நிறைவு செய்தோம். இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை அரசுதான் முடிவு செய்தது. ஒப்பந்தம் இறுதி செய்து இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகுதான், நான் அங்கு பொறுப்பேற்றேன். யாரையும் தனிப்பட்ட முறையில் பணி நியமனம் செய்ததில்லை. வாரியத்தில் நான் தலைவர் கிடையாது. செயலாளர்தான் தலைவர். எல்லா பணி நியமனங்களுமே விதிமுறைகளைப் பின்பற்றி குழு அமைத்துதான் நடக்கின்றன. அதனால், முறைகேடுகள் நடக்க வாய்ப்பே கிடையாது. ஈட்டிய விடுப்புத் தொகையாக குறிப்பிடப்படும் 23 லட்ச ரூபாயை எனக்கு வழங்கும் உத்தரவை அரசுதான் பிறப்பித்தது. அந்த உத்தரவின் அடிப்படையில் டான்செம் வழங்கியது. அரசிடம் அந்தத் தொகையை டான்செம் வாங்கிக்கொண்டது. அதுதான் சட்ட விதிமுறை. அப்படியெல்லாம் அரசாங்கப் பணத்தைக் கையாடல் செய்ய முடியாது. சர்வீஸில் கண்டிப்புடனும், நேர்மையுடனும் இருந்தால் இப்படியெல்லாம் அவதூறு களைப் பரப்பத்தான் செய்வார்கள்''’என்று தன்மீது சுமத்தப் பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்தார்.

முறைகேடுகள், ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்பதற்காக அரசு சிமெண்ட் ஆலை டிஜிம் முரளிதரனை தொடர்புகொண்டபோது, ""முக்கிய பணியில் உள்ளேன்... பிறகு சொல்கிறேன்''’என்று சொல்லிவிட்டு நழுவினார்.

-எஸ்.பி.சேகர்