இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுவோம் அல்லது தனித்துப் போட்டியிடுவோம் என சூளுரைத்திருந்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே அவரது சுருதி குறைந்து போனது. கடலூரில் நடந்த உயர் மட்ட நிர்வாகிகளின் கூட்டத்தில்கூட தனித்துப் போட்டியிடுவது குறித்து அழுத்தமாக எதையும் அண்ணாமலை சொல்லவில்லை.
இந்த நிலையில், அ.தி.மு.க.வை வீழ்த்தும் வகையில் தனித்து போட்டியிட க்ரீன் சிக்னலை அண்ணா மலைக்கு பா.ஜ.க. மேலிடம் கொடுத் துள்ளதால் இடைத்தேர்தலில் குதிக்கும் முடிவை பா.ஜ.க. எடுத்துள்ளது என்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் மனம் திறந்த பா.ஜ.க.வின் மேலிட தொடர்பாளர்கள், "கடலூரில் நடந்த தமிழக பாஜகவின் மாநில நிர்வாகிகள் அடங்கிய உயர்மட்ட குழு கூட்டத்தில் அண்ணாமலை, கேசவவிநாயகம், பொன். ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், கே.பி.ராமலிங்கம், ஹெச்.ராஜா, கரு.நாகராஜன், ஏ.பி.முருகானந்தம் உள்பட 40 பேர் கலந்து கொண்டனர். அதில் இடைத்தேர்தலை எதிர்கொள்வது குறித்து சீரியசாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய 99 சதவீதத்தினர், "அ.தி.மு.க. கூட்டணி எனில் நாம் போட்டியிடலாம். தனித்து போட்டிங்கிறது விஷப்பரீட்சை' என்கிற ரீதியில் சொன்னார்கள். இதில் ஒரு படி மேலே சென்ற கே.பி.ராமலிங்கம், "பூத் கமிட்டி அமைப்பதிலேயே நமக்கு சிக்கல் இருக்கிறது. பல பூத்துகளுக்கு நம்மிடம் ஆளே இல்லை. தனித்துப் போட்டியிடணுமாங்கிறதை யோசியுங்கள்' எனச் சொன்னார்.
இதே சிந்தனைதான் அண்ணாமலைக்கும் இருந்தது. இதனை உணர்ந்து அப்போது குறுக்கிட்ட கேசவ விநாயகம், "தேர்தலில் ஜெயிப்பது முக்கியம்தான். அதற்காக தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிற மனநிலை நல்லதில்லை. வெற்றி தோல்வி சகஜமானது. ஒரு தேசிய கட்சி அதுவும் தேசத்தை ஆளும் கட்சி, இடைத்தேர்தலிலிருந்து விலகி நிற்பது எதிர்மறை விமர்சனங்களையே தரும்.
அ.தி.மு.க.வில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி, இந்த தேர்தலோடு பா.ஜ.க.வை ஒழிக்கும் முயற்சியில் இருக்கிறார். அதை அவருக்கு நாம் செய்யவேண்டும். அ.தி.மு.க.வை வீழ்த்த நமக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சீரியசாக வேலை பார்த்தால் இதை செய்துவிட முடியும். அதனால் தேர்தலை தனித்து சந்தித்து அ.தி.மு.க. எடப்பாடி பழனிச்சாமிக்கு பாடம் புகட்ட வேண்டும் என கடுமையாக வாதிட்டார். அதன்பிறகு கேசவ விநாயகத்தின் கருத்தை ஆமோதிக்கும் வகையில், "தேர்தலில் போட்டியிடலாம்' என மற்றவர்களும் தங்களின் குரலை மாற்றிக் கொண்டனர்.
இதனையடுத்து, "தனியார் ஏஜென்சி மூலம் தொகுதியில் ஒரு சர்வே எடுக்கச் சொல்லியிருக் கிறேன். அதன் ரிசல்ட் வரட்டும். அதனை மேலிடத்தில் சொல்லுவோம். மேலிடத்திலிருந்து கிடைக்கும் பதிலைப் பொறுத்து முடிவு செய்து கொள்ளலாம்' என இறுதியாக சொல்லி உயர் மட்டக் கூட்டத்தை முடித்தார் அண்ணாமலை.
இந்த நிலையில், சமீபத்தில் சர்வே ரிசல்ட் அண்ணாமலையிடம் கொடுக்கப்பட்டது. அதில், எடப்பாடி தரப்புக்கு இணையான ஆதரவு பா.ஜ.க.வுக்கு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், 34 வார்டுகள் வாரியாக சில பல புள்ளிவிபரங்களும் சர்வேயில் சுட்டிக்காட்டப் பட்டிருக்கின்றன. இதனை பா.ஜ.க.வின் தேசிய தலைமைக்கு அனுப்பிவைத்தார் அண்ணாமலை.
இதற்கிடையே, கட்சியின் அமைப்புச் செயலாளரான கேசவவிநாயகத்திடமும், கொங்கு மண்டல கோட்டப் பொறுப்பாளரான கே.பி.ராமலிங்கத்திடமும் தனித்தனியாக விவாதித்துள்ளார் அமித்ஷா.
அப்போது, "தேசியக்கட்சியான காங்கிரஸ் போட்டியிடும்போது, தேசியக்கட்சியான பா.ஜ.க. போட்டியிடாமல் ஒதுங்க நினைப்பது நமது பலகீனமாகவே கணிக்கப்படுகிறது. காங்கிரசில் போட்டியிடும் இளங்கோவன் ஜெயிக்க முடியாதவர் அல்ல. அவரது வெற்றிக்காக தி.மு.க. களமிறங்கினாலும், தொகுதியில் தி.மு.க.வுக்கு எதிராக இருக்கும் பல விசயங்களை நாம் சாதகமாக்கிக்கொள்ள வேண்டும். அதனால் போட்டியிட அனுமதியுங்கள்' என யோசனை சொல்லியிருக்கிறார் கேசவவிநாயகம்.
அதேபோல, "தேர்தல் களத்தில் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு பணத்தை செலவு செய்யவும், வாக்காளர்களை கூடுதல் விலைக்கு பர்ச்சேஸ் செய்யவும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது. அதனை மத்திய அரசு தடுத்து நிறுத்தினாலே போதும், ப.ôஜ.க. எதிர்பார்ப்பது நடக்கும். அதனால் தேர்தலை சந்தித்துப் பார்க்க லாம்' என கே.பி.ராமலிங்கமும் தெரிவித்திருக் கிறார்.
இந்தநிலையில், 4.5 சதவீத ஆதரவுதான் பா.ஜ.க.வுக்கு தொகுதியில் இருப்பதாக தனக்குக் கிடைத்திருக்கும் ரிப்போர்ட் குறித்து சில கேள்விகளை அமித்ஷா எழுப்பியபோது, "சர்வே எடுத்தவர்களின் நிலைப்பாட்டிலிருந்து அத்தகைய முடிவுகள் கிடைத்திருக்கலாம். ஆனால், அ.தி. மு.க.வை வீழ்த்தும் வகையிலான ஆதரவு நமக்கு இருக்கிறது. தி.மு.க. கூட்டணி ஜெயித்தாலும் குறைந்த மார்ஜினில்தான் ஜெயிக்க முடியும். இரண்டாவது இடம் பா.ஜ.க.வுக்கு கிடைக்கும்' எனச் சொல்லியிருக்கிறார்கள்.
இதையெல்லாம் சீர் தூக்கிப் பார்த்த அமித்ஷா, "பா.ஜ.க. போட்டியிட தற்போது க்ரீன் சிக்னலை அண்ணாமலைக்கு கொடுத்திருக்கிறார். ஆக, தனித்துப் போட்டியிடுகிறது பா.ஜ.க. செவ்வாய்க்கிழமை அல்லது அதன்பிறகு வேட் பாளரை அறிவிக்கவிருக்கிறார் அண்ணாமலை” என்று விவரித்தார்கள்'' பா.ஜ.க. மேலிட தொடர்பாளர்கள்.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு செம ஸ்பீடில் சென்று கொண்டி ருக்கிறது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலை மையில் முன்னாள் அமைச் சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் உள்ளடக்கிய 117 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து முடுக்கிவிட்டுள்ளார் எடப் பாடி பழனிச்சாமி.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் நாம் பேசியபோது, ’"தி.மு.க.-காங் கிரஸ் கூட்டணியை எங்களால் வீழ்த்த முடியும். பொதுத்தேர்தலின் போது தி.மு.க. கொடுத்த வாக் குறுதிகளால்தான் இங்கு காங்கிரஸ் ஜெயித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், தேர்தல் வாக் குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தொகுதி மக்களிடம் அந்த கோபம் இருக்கிறது. இதையெல்லாம் சொல்லித்தான் நாங்கள் வாக்கு சேகரிப்போம். அதனால், காங்கிரசை எளிதாக ஜெயித்துவிடுவோம். அதற்கான தேர்தல் வியூகங்கள் எங்களுக்குத் தெரியும்''’என்கிறார்.
இந்தநிலையில், தேர்தல் பணிக்குழுவினரிடம் எடப்பாடி பழனிச்சாமி நடத்திய ஆலோசனையில், பல விசயங்கள் விவாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக தி.மு.க.வின் தேர்தல் வியூகம் பற்றி ஆலோசித்துள்ளனர்.
இதுகுறித்து கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ.க்கள் சிலரிடம் பேசியபோது, "தேர்தல் வியூகங்கள் வகுப்பதில் கெட்டிக்காரர் செங் கோட்டையன். அவரது தலைமையில் தேர்தல் பணிக்குழுவை எடப்பாடி அமைத்ததே பெரிய ராஜதந்திரம்தான். ஆலோசனைக் குழு கூட்டத்தில் பேசிய எடப்பாடி, தேர்தலை எதிர்கொள்ளும் பொதுவான அறிவுரைகளையே வழங்கினார். ஆனால், அதன்பிறகு செங்கோட்டையன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பலரிடமும் ரகசியமாக ஆலோசனை நடத்தினார்.
அதில், தேர்தல் காலத்தில் தி.மு.க. எப்படி திட்டம் வகுக்கும் என்பது குறித்துத்தான் விரிவாக விவாதித்துள்ளார் எடப்பாடி. குறிப்பாக, தி.மு.க.வின் மூவ்களை அறிந்துகொள்ள ஒரு டீமும், மக்களை நேரில் அணுகி வாக்குகளை சேகரிக்க ஒரு டீமும், தி.மு.க. கூட்டணிக்கு எந்த வாக்குகளெல்லாம் பலமாக இருக்கிறதோ அதை நம் பக்கம் திருப்புவதற்கு ஒரு டீமும், வாக் காளர்களுக்கு பணம் கொடுப்பதை ஸ்மெல் செய்யக்கூடிய ஒரு டீமும் என 4 டீம்கள் பிரத்யேகமாக இருக்கவேண்டும்.
அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில்பாலாஜி ஆகியோரின் மூவ்களை தெரிந்து கொண் டாலே அதற்கேற்ப நம்முடைய மூவ்களை திட்டமிடலாம். மூவ்களை அறிந்து கொள்ளும் டீம் மிக ரகசிய மாக இயங்க வேண்டும். அந்த டீமுக்கு கிடைக்கும் தகவல்கள் அக்மார்க் உண்மையாக இருப்பது அவசியம்
பிரத்யேகமாக இருக்கும் இந்த டீம்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் கவனித்தாலே போதும். மற்ற டீம்களோடு கலக்கக்கூடாது. அனைத்து டீம் களையும் செங்கோட்டையன் கவனிக்க வேண்டும். அவரிடம் தினமும் நான் பேசிக்கொள்கிறேன்'' என முன்னாள் அமைச்சர்களுக்கு ஆலோசனை கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
அதன்படி, தி.மு.க.-காங்கிரசுக்கு தொகுதியில் ஆதரவாக இருக்கும் சிறுபான்மையினரின் வாக்கு களை அ.தி.மு.க. பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள கே.பி.முனுசாமி, முஸ்லிம் சமூக முக்கியஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக் கிறார். இரட்டை இலை சின்னத்தை பெற டெல்லி யில் சில பல லாபிகளை செய்து வருகிறார் எடப்பாடி. அதில் சாதகமான நிலை உருவானாலே போதும்… எடப்பாடியின் ஆட்டம் ஏகத்துக்கும் சூடு பிடிக்கும். "தொகுதியில் செங்குந்த முதலியாரின் வாக்குகள் அதிகமாக இருப்பதால், அச்சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக இறக்கலாமா?' என்றும் செங்கோட்டையனிடம் விவாதித்துள்ளார் எடப்பாடி‘’ என்று ரகசியங்களை பகிர்ந்து கொண்டார்கள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்.
இந்தநிலையில், எடப்பாடிக்கு போட்டியாக 118 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழுவை அமைத்துள்ள ஓ.பி.எஸ்., "பா.ஜ.க. களமிறங்குவதால் அதனை ஆதரிப்பது; அமைக்கப்பட்ட பணிக் குழுவை பா.ஜ.க.வுக்காக தேர்தல் வேலை செய்ய வலியுறுத்துவது' என்கிற முடிவை எடுத்துள்ளதாக அவரது தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இரட்டை இலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி தாக்கல் சய்த மனுவுக்குப் பதிலளிக்க, தேர்தல் ஆணை யத்துக்கு 30-ந் தேதி உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.