தங்க நகை வியாபாரத்தில் கேரள மாடல் நகைகள் புகழ்பெற்றவை. தங்க நகை வியாபாரத்திலும் கேரளாவுக்கு வலுவான ஒரு பிடி உண்டு. ஒரு பொருளுக்கு சந்தையும் வியாபாரமும் அதிகமிருந்தால் சட்டத்துக்கு உட்பட்டும் மீறியும் அந்தப் பொருளின் வணிகமும் கடத்தலும் நடப்பது இயல்புதான்.
கடத்தலுக்கெனவே தயாரிக்கப்படும் சூட்கேஸில், செருப்பில், தலைவலி தைலக் குப்பியில் என ஆயிரக் கணக்கான வழிகளைக் கடத்தல்காரர்கள் கண்டுபிடிப்பார்கள். அப்படியொரு புதுமையான வழியைக் கடத்தல்காரர்கள் கண்டுபிடித்து, பல மாதங்களாக நகை கடத்திக்கொண்டிருக்க, சுங்கத்துறையினர் அதையும் கண்டுபிடித்து கையும் களவுமாக கைதுசெய்திருக்கின்றனர். ஆனால், அதில் அரசுத்துறையில் பெரிய பதவிகளில் உள்ளவர்கள் பெயர்கள் அடிபடுவதுதான் திகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இம்மாதத்தின் முதல் வாரத்தில் அரபுநாட்டின் முக்கியமான தங்கக் கடத்தல் புள்ளி ஒருவர்மூலம், கேரளாவிலுள்ள அரபுத் தூதரகத்துக்கு வரும் பார்சல்களில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து சுங்கத் துறை உஷாரானது. பொதுவாக இத்தகைய தூதரகத்துக்கு வரும் பார்சல்கள் சோதனையிடப்படுவதில்லை.
எனவே வெளியுறவுத் துறை மேலதிகாரிகளுக்கும், அரபு ஐக்கிய அமீரகத்துக்கும் தகவல் தரப்பட்டு குறிப்பிட்ட சில பார்சல்களைச் சோதனையிடுவதற்கு அனுமதி பெறப்பட்டது. அதேநேரம் அந்த பார்சலை இங்கே யார் எதிர்பார்த்திருக்கிறார்கள் என்கிற புலன் விசாரணையும் முடுக்கிவிடப்பட்டது. கடந்த ஜூலை 5-ஆம் தேதி அவர்கள் எதிர்பார்த்த அந்த பார்சலும் வந்து சேர்ந்தது. கேரளாவிலுள்ள அரபு தூதரக அதிகாரிகளுக்கான உணவுப் பார்சல் என்ற பெயரில் பார்சல் இருந்தது.
சுங்கத் துறை அதிகாரிகள் எதிர்பார்த்த தகவல்கள் சேகரமானதையடுத்து அந்த பார்சல் கைப்பற்றப்பட்டு அரபு தூதரக அதிகாரிகள் முன்பே உணவுப் பொருள் பார்சல் பிரிக்கப்பட்டது. அதில் ரூ 13.5 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த அரபு அதிகாரிகள் இதில் சாட்சியங்களாக பதிவுசெய்யப்பட்டனர். ஐக்கிய அரபு அரசு, இந்தக் கடத்தலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லையென மறுப்புத் தெரிவித்துள்ளது. இதில் சம்பந்தமுடையவர்கள் என சந்தேகப் பட்ட கேரள தகவல்தொடர்புத் துறையைச் சேர்ந்த மக்கள் தொடர்பு அதிகாரி சரித்குமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையை அடுத்து, அதே துறையில் செயலாக்க மேலாளராகப் பணியாற்றிவந்த ஸ்வப்னா சுரேஷை கைதுசெய்ய விரைந்தபோது அவர் தலைமறை வாகியிருந்தார்.
இந்த ஸ்வப்னா சுரேஷுக்கு நெருக்கமானவர் என்ற அடிப்படையில்தான், முதல்வரின் முதன்மைச் செயலாளரான சிவகுமார் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்?
கேரளாவின் நெய் யாற்றங்கரைப் பகுதியின் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஸ்வப்னா. அபு தாபியில் பணிபுரிந்துவிட்டு கேரளா திரும்பிய ஸ்வப்னா, தொடக்கத்தில் சிறிய அளவில் ட்ராவல் ஏஜென்சி தொடங்கி நடத்திவந்தார். விரைவிலேயே அவரது வளர்ச்சியும் அந்தஸ்தும் வேகமாக உயரத் தொடங்கியது.
ஸ்வப்னா சுரேஷ்மீது ஏற்கெனவே பல குற்றச் சாட்டுகள் உண்டு. ஏர் இந்தியாவில் இவர் பணியாற்றியபோது அங்கு பணியாற்றிய உயரதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். ஆனால் பின்பு அது பொய்ப் புகார் எனத் தெரியவந்தது.
பின்பு ஸ்வப்னா சுரேஷ் நகர்ந்த இடம்தான் ஐக்கிய அரபு அமீரக நாட்டு தூதரகம். இங்கு நிர்வாகச் செயலாளராகப் பணியாற்றினார். இங்கும் சில குற்றச்சாட்டுகள் காரணமாக ஸ்வப்னா பதவி யில் தொடரமுடியவில்லை. மூன்றாவதாக ஸ்வப்னா வந்த இடம்தான் தகவல் தொழில்நுட்பத் துறை. இங்கு இவர் மேலாளர் பதவிக்கு வந்ததில், சிவக்குமாரின் சிபாரிசுக்கு முக்கிய இடம் உண்டு எனச் சொல்லப்படுகிறது. சிவக்குமார் மட்டுமின்றி கேரள அரசின் பல முக்கியப் பிரமுகர்களுடன் தொடர்பில் இருந்துவருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.
ஸ்வப்னா தலைமறைவானாலும் சுங்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தி முடித்திருக்கின்றனர். ஏற்கெனவே குற்றச்சாட்டு களுள்ள ஸ்வப்னாவை தகவல்தொழில்நுட்பத் துறையில் பணியில் அமர்த்தியது யார்… விமான நிலையத்தில் தங்கம் சிக்கியது தெரிந்ததும் தலைமைச் செயலகத்தில் இருந்து அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசியது யார் என காங்கிரசின் ரமேஷ் சென்னிதாலா கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
விஷயம் பூதாகரமானதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்துக்கும் முதல்வர் அலுவலகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என மறுத்துள்ள தோடு சிவசங்கரை முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, மீர்முகமதை முதன்மைச் செயலாளராக நியமித்துள்ளார் கேரள முதல்வர் பினரயி விஜயன்.
கொரோனா பரவலை வெற்றிகரமாகச் சமாளித்து தங்கமான முதல்வர் என்று பெற்ற பெயரை, தங்கக் கடத்தல் விவகாரம் உரசிப்பார்க்கத் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் சரிதா நாயரின் சோலார் பேனல் விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸும் பா.ஜ.க.வும் வரிந்து கட்டிக்கொண்டு அரசின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்.
காங்கிரஸுக்கு சரிதா நாயர் தலைவலியானதுபோல, கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு ஸ்வப்னா சுரேஷ் தலைவலியாக உருவெடுப்பார் என்கிறார் கேரள பா.ஜ.க. தலைவர் சுரேந்திரன். முதல்வர் பினரயி விஜயனோ, கடத்தல் தொடர்பான சுங்கத்துறையும் வெளியுறவுத்துறையும் பா.ஜ.க.வின் மத்திய அரசுக்குரியது. எங்கள் கைகளில் கறையில்லை என்கிறார்.
-க.சுப்பிரமணியன்