திருச்சி என்றாலே மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில், சமயபுரம் என்று பக்திக்கு பேர் போன ஊராக இருந் தாலும், தற்போது கடத்தலுக்கு மிகவும் பாதுகாப்பான ஊராக மாறியிருப்பதாகக் கூறப் படுகிறது. திருச்சி சர்வதேச விமான நிலையம், கடத்தல் தொழிலுக்கு மிகவும் பாதுகாப்பான விமான நிலையம் என்று பெயரெடுத்திருக்கிறது. இந்த விமான நிலையத்தில், கடந்த ஜனவரி முதல் தற்போது வரை சுமார் 30 கிலோ தங்கம்வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் 24 கேரட் தங்கம் மிகவும் சுத்தமானதாகவும், இந்தியத் தங்கத்தின் விலையைவிடப் பல்லாயிரம் ரூபாய் குறைவாகவும் உள்ளது. 1 கிராம் தங்கத்தின் விலையை எடுத்துக்கொண்டால், தமிழ்நாட்டிலுள்ள விலையைவிட 600 ரூபாய்வரை குறைவாக உள்ளது. எனவே தமிழ்நாட்டிலுள்ள பெரிய முதலாளிகள், சிங்கப்பூரிலிருந்து அதிகளவு தங்கத்தை கள்ளத்தனமாக இறக்குமதி செய்து, பல கோடி லாபம் பார்க்கிறார்கள். சிங்கப்பூரிலிருந்து மட்டுமல்லாமல், துபாய், சார்ஜா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் விலை மலிவான தங்கம் தமிழ்நாட்டுக்குள் கடத்திவரப்படுகிறது.
முன்பெல்லாம் இந்த கடத்தல் தொழிலில் குருவி என்று சொல்லப்படக்கூடியவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். தற்போது, கூலி வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்று சொற்ப சேமிப்புடன் திரும்பும் பல தொழிலாளர்களுக்கு இது ஒரு நல்வாய்ப்பாக அமைவதால், அவர் களையே இத்தொழிலுக்குப் பயன்படுத்துகிறார்கள். இப்படி கடத்தலில் ஈடுபடுபவர்களைப் பிடிக்கும் போது, தங்கத்தைக் கொடுத்து அனுப்புபவரோ, தமிழ்நாட்டில் அந்தத் தங்கத்தை வாங்குபவரோ இதுவரை கைதானது இல்லை.
அதிலும், குறிப்பிட்ட சில சுங்கத்துறை அதிகாரிகள் பணியிலிருக்கும் நேரம்பார்த்து, பெரிய மதிப்பிலான தங்கத்தை வெளிநாடுகளிலிருந்து கடத்திவருபவர்களின் விமானம் வரும்படி பார்த்துக் கொள்கிறார்கள். இப்படிக் கடத்தப்படும் தங்கத் தைப் பிடிக்காமலிருப்பதற்காக உரிய கமிஷனும் தரப்படுகிறது. எனவே தங்களுக்குரிய நபர்களை விட்டுவிட்டு மற்றவர்களிடமுள்ள நகைகளைச் சோதனையிட்டு, அவர்களையும் தப்பிக்கவைக்கும், சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடும் அதிகாரிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை திருச்சி சர்வதேச விமான நிலையம் வழியாகக் கடத்திவரப்பட்ட தங்கத்தின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் 1
2021, ஜனவரி 28-ம் தேதி துபாயிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வெண்மணி கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 33) என்பவரைச் சோதனை செய்தபோது, அவரது உடலில் 799 கிராம் தங்கத்தை மறைத்து வைத் திருந்தது தெரியவந்தது. அவரிடம் ரூ.39,99,974 மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது. அதையடுத்து அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டதில், ரூ.40 லட்சம் மதிப்புள்ள கடத்தல் நகையுடன் பயணி ஒருவர் சிக்கினார்.
சம்பவம் 2
கடந்த பிப்ரவரி 15-ம் தேதி, திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் காரைக்காலைச் சேர்ந்த மாலினி (வயது 38) என்ற பெண்ணிட மிருந்து ரூ.55 லட்சம் மதிப்பிலான 1,100 கிராம் தங்கத்தையும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கலீல் ரகுமான் (வயது 42) என்ற பயணியிடம் ரூ.41 லட்சம் மதிப்பிலான 850 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் அதே ஊரைச் சேர்ந்த ரகுமான் (38) என்ற பயணியிடம் ரூ.47 லட்சம் மதிப்பிலான 980 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பேஸ்ட் வடிவில் சுமார் 3.5 கிலோ தங்கத்தை அவர்கள் கடத்தியது தெரியவந்தது. அதிலிருந்து 2,930 கிராம் தங்கத்தைப் பிரித்தெடுத்து பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு, சுமார் ரூ.1 கோடியே 43 லட்சமாகும்.
சம்பவம் 3
மார்ச் 13-ம் தேதி, துபாயிலிருந்து திருச்சி வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சோதனையிட்டபோது, 14 பயணிகளைச் சந்தேகப்பட்டு விசாரணை நடத்தியதில், அவர்களில் இருவர் தவிர மற்றவர்கள், தங்கள் உடலில் தங்கத்தை மறைத்துக் கடத்தி வந்தது தெரிந்தது. அவர்களிடமிருந்து 9 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சம்பவம் 4
ஏப்ரல் 25-ம் தேதி, சிங்கப்பூரிலிருந்து வந்த பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள ஏழு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சம்பவம் 5
ஏப்ரல் 28-ம் தேதி, மன்னார்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர், அவரது இடுப்பில் கட்டிங் பிளேயர் ரப்பருக்குள் மறைத்துக் கடத்திவந்த ரூ.11 லட்சம் மதிப்பிலான 230 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சம்பவம் 6
ஜூன் 22-ம் தேதி சார்ஜாவிலிருந்து திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளிடம் நடத்திய சோதனையில் 5 பயணிகளை மட்டும் முழுமையாக பரிசோதனை செய்ததில் ஒருவர் பெல்ட்டிலும், மற்றொருவர் செல்போன் கவர், இன்னொருவர் கட்டிங் ப்ளேடு என வெவ்வேறு வழிகளில் ஐந்து பேர் தங்கத்தைக் கடத்தி வந்தது கண்டுபிடிக் கப்பட்டது. அவர்களிடமிருந்து 4 கிலோ 435 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விமான நிலை யத்தில், ஆண்கள் பயன்படுத்தும் கழி வறையில் கேட்பாரற்றுக் கிடந்த 1.796 கிலோ கிராம் தங்கமும் கைப் பற்றப்பட்டது.
சம்பவம் 7
ஜூன் 23-ம் தேதி, சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த நம்பிராஜன், பழனிச்சாமி, ஆறுமுகம், நாகராஜன், சிவசுப்பிரமணியன் ஆகிய 5 பேரிடம் இருந்து 5.170 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த ஐந்து நாட்களில் மட்டும் திருச்சி விமான நிலையத்தில் மொத்தம் 11.401 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.2 கோடியே 48 லட்சத்து 88 ஆயிரத்து 380 ரூபாய் என மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை கண்காணிப் பாளராக பணிபுரிந்து வந்த ஜெயப்பிரகாஷ், திருச்சியில் உள்ள சுங்கத்துறை தலைமை இடத்திற்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். மேலும், திருச்சி விமான நிலையத்தில் பணியாற்றும் சுங்கத்துறை ஆய்வாளர்கள் 3 பேரை, சுங்கத்துறை இணை ஆணையர் நேரில் அழைத்து கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் சுங்கத் துறையினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தங்கக் கடத்தலில் பெரும்பாலான பயணிகள் சிக்கியதற்கு மிக முக்கியமான காரணம், கடத்தல் தொழிலில் எவ்வித அனுபவமுமில்லாத அப்பாவிக் கூலித் தொழிலாளர்களைப் பயன்படுத்தியதாகும். தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு, குடும்பத்தின் தேவையைப் பூர்த்தி செய்யவும், உடன்பிறந்தவர்களின் வாழ்க்கைக்காகவும், மனைவி, குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதற்காகவுமாக பல்வேறு கனவுகளுடன் கூலித் தொழிலாளர்களாக பலரும் செல்கிறார்கள். அதிலும், இராமநாதபுரம், பரமக்குடி, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் இருந்து, போதிய வாழ்வாதார வசதிகள் இல்லாமல், அதிக வருமானம் ஈட்டுவதற்காகப் பலர் இதுபோன்று வெளிநாடுகளுக்கு செல்லும்போது, அவர்களை அந்த நாட்டில் உள்ள கடத்தல் கும்பல்கள் கண்காணித்து, அவர்களின் தேவையை அறிந்து வைத்துக்கொண்டு, அவர்கள் மீண்டும் தாயகத் திற்குத் திரும்பும் சமயங்களில், கையில் ஏதாவது ஒரு பொட்டலத்தைக் கொடுத்து தமிழகத்தில் சேர்த்துவிடுங்கள் என்று கூறுகிறார்கள். இப்படி பொட்டலங்களை வாங்கும் பலருக்கு, அவர்கள் கொடுத்தனுப்பும் பொட்டலங்களில் என்ன இருக்கிறது என்பது கூட தெரியாது. தாயகத்தில் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த பிறகு சோதனையில் சிக்கும்போதுதான் சட்ட விரோதமாகக் கொண்டு வந்ததையே அவர்கள் அறிவார்கள். பலர் பணத் திற்கு ஆசைப்பட்டு அதைக் கொண்டுவரும்போது பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார்கள்.
இத்தகைய கடத் தல்கள் அனைத்திற்கும், பணத்தை எதிர்பார்க்கும் அதிகாரிகளும் ஒரு பக்கம் காரணமாகிறார்கள். அவர்களே கமிஷனுக்காகக் கடத்தலைக் கண்டும்காணாதிருக்கிறார்கள். இத்தகைய கடத்தலால் இந்தியப் பொருளா தாரத்தில் பெரிய அளவில் இழப்பு ஏற்படுகிறது. மற்றொரு பக்கம், இத்தகைய தொடர் கடத்தல், நாளை பெரிய அளவிலான கடத்தல்களுக்கு வழிவகுக்கும். மலைக்கோட்டை மாநகர் மாஃபியா நகராக மாறுவதற்கு முன் இந்தக் கடத்தல்களில் ஈடுபடுபவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அதற்குக் காரணமாக இருக்கும் பெரிய முதலாளிகளையும் கண்டறிந்து அவர்களைக் கைது செய்வது அவசியம். இல்லாதபட்சத்தில், கடத்தல் குறித்த புரிதலே இல்லாத கூலித் தொழிலாளர்கள்தான் இடையில் மாட்டிக் கொண்டு சிக்கலை எதிர்கொள்வார்கள்.