பரிமலையில் ஐயப்பன் கோவில் கருவறையின் முன்பகுதியிலிருந்த தங்கமுலாம் பூசப்பட்ட துவார பாலகர்கள் சிற்பங்களிலிருந்து தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட உன்னிகிருஷ்ணன் போற்றிக்கு மட்டுமல்ல, வேறு பலருக்கும் இதில் தொடர்பிருப்பதாக ஒரு தரப்பு கொளுத்திப் போட... விவகாரம் கொளுந்துவிட்டு எரிகிறது.

Advertisment

சபரிமலை ஐயப்பன் கோவில் கருவறை தங்கமுலாம் பூசப்பட்ட 7 கட்டளை பாளிகளுடன், மூலையில் ஒரு பாளியும், முன் இரண்டு பக்கத்தில் 4 பாளிகளும்,  இவற்றின் மேல்பகுதியில் சிவரூபம், பிரபரூபம், வியாழிரூபம் கொண்ட செம்புத் தகட்டின்மீது தங்க முலாமுடன் இரண்டு துவாரபாலகர்கள் சிற்பங்கள் உள்ளன. 42 கிலோ எடையுள்ள இந்த துவாரபாலகர்கள் சிலையை வைப்பதற்கான இரண்டு பீடங்களை உபயமாக கொடுத்த உன்னிகிருஷ்ணன் போற்றி அந்த சிலைகளையும், கதவு பாளிகளையும் புனரமைப்பதற்காக கொண்டுசென்று, திரும்ப கொண்டுவரும்போது அதில் 409 கிராம் (51 பவுன்) தங்கம் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

Advertisment

இதையடுத்து கேரள உயர்நீதிமன்றம், ஏ.டி.ஜி.பி. வெங்கடேஷ் தலைமையில் எஸ்.பி. சுனில்குமார் உள்ளிட்ட விஜிலென்ஸ் டீம் ஒன்று அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. விசாரணையின் அடிப்படையில் கடந்த 18-ஆம் தேதி பீடம் உபயதாரர் உன்னிகிருஷ்ணன் போற்றி, சபரிமலை கோவில் நிர்வாக ஆணையர் முராரிபாபு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்ததோடு... தேவசம் போர்டு முன்னாள், இந்நாள் அதிகாரிகள் 8 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

கோவில் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த மற்ற இரண்டு துவாரபாலகர் சிலைகளை உன்னி கிருஷ்ணன் போற்றியின் சகோதரி மினி அந்தர்ஜனம் வீட்டிலிருந்து விஜிலென்ஸ் அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.            

Advertisment

இதுகுறித்து சபரிமலை சன்னிதான பாதுகாப்பு பணியிலிருந்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “திருவனந்தபுரம் கிளிமானூரைச் சேர்ந்த  உன்னிகிருஷ்ணன் போற்றி, பெங்களூரு ராமபுரம் ஐயப்பன் கோவிலில் அர்ச்சகராக இருந்த நிலையில், அடிக்கடி சபரிமலைக்கு இருமுடி கட்டி வருவார். அப்போது சபரிமலையிலுள்ள மேல்சாந்திகளிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு அப்பம், அரவணை செய்யும் பாத்திரங்களைக் கழுவுவதற்கு உதவியாளராக வந்த உன்னிகிருஷ்ணன் போற்றி, ஒரு கட்டத்தில் சபரிமலை நிர்வாகத்தில் அதிகார சக்தியாக வலம்வந்தார். 

iyappankovil1

இந்த நிலையில் உன்னிகிருஷ் ணன் போற்றி, தனது உபயமாக தங்கம் பூசிய துவாரபாலகர் பீடத்தையும், அந்த சிலைகள் மற்றும் கட்டளை (கதவு) பாளிகளையும் பராமரிப்பு செய்து தருவதாகக் கூறி 2019 ஜூலை 20ஆம் தேதி சென்னைக்கு கொண்டு சென்று, செப்டம்பர் 11-ஆம் தேதி திரும்ப கொண்டுவந்தார். இது உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப் பட்டிருக்கும் சபரிமலை சிறப்பு அதிகாரிக்குத் தெரியாது என்கிறார்கள். அதன்பிறகு 2025 செப்டம்பர் 7ஆம் தேதி மீண்டும் அந்த சிலைகளையும், கதவு, பாளிகளையும்  பராமரிப்பு பணிக்காக சென்னைக்குக் கொண்டு போனார். திரும்ப கொண்டு வரும்போது சிலையைத் தாங்கும் பீடம் இல்லை. அதுபோல் சிலைகளின் எடை 4 கிலோ குறைவாக இருப்பதையும் தேவசம் அதிகாரி அஞ்சலிதாஸ் கண்டுபிடித்தார். மேலும் கருவறைக் கட்டளை பாளி,  துவாரபாலகர் சிற்பங்கள் சேர்த்து 989 கிராம் (123 பவுன்) இருந்ததில், தற்போது 394 கிராம் (49 பவுன்)தான் இருக்கிறது. மீதி எல்லாவற்றையும் உன்னிகிருஷ்ணன் போற்றி, முராரிபாபு கும்பல் கொள்ளையடித்துவிட்டது.

அரவணை அப்பம் பாத்திரங்கள் கழுவவந்த உன்னிகிருஷ்ணன் போற்றிக்கு இப்போது 35 கோடிக்கு சொத்து இருக்கிறது. இதையெல்லாம் விசாரித்து அந்த கும்பல்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்''’ என்றார் ஆவேசத்துடன்.

விசாரணை அதிகாரிகளைச் சேர்ந்த சோர்ஸ் ஒருவரிடம்  பேசியபோது, "2019 மற்றும் 2025 செப்டம்பரில் சென்னையிலிருக்கும் ஸ்மார்ட் கிரியேஷன் என்ற நிறுவனத்தில் சிலைகளையும் கதவு பாளிகளையும் பராமரிப்புப் பணிக்காகக் கொடுத்ததில்,              அந்த நிறுவனத்துடன் சேர்ந்து அதிலிருந்த தங்கத்தை உன்னிகிருஷ்ணன் கொள்ளையடித்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதில் 2019-ல் முராரிபாபு சபரிமலை நிர்வாக அதிகாரியாக இருக்கும்போது, அவர் உன்னிகிருஷ்ணனுக்கு உடந்தையாக இருந்திருக்கிறார். துவாரபாலகர் பீடத்தை, தான் உபயம் செய்ததாக கூறும் உன்னிகிருஷ்ணன், சபரிமலைக்கு வரும் வி.ஐ.பி.க்களிடம் வசூல் செய்துதான் பீடத்தை வைத்திருக்கிறார். இந்தநிலையில் ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் உரிமையாளர் பங்கஜ்பண்டாரியை வரவழைத்து விஜிலென்ஸ் எஸ்.பி. சுனில்குமார் விசாரித்ததில் இன்னும் பல அதிர்ச்சியான தகவல்கள் வந்தன. இந்த முறை பராமரிப்புக்கு கொண்டுவந்த சிலைகள், பாளிகளுக்கு கூலியாக 109 கிராம் தங்கம் போக மீதி 394 கிராம் தங்கத்தை உருக்கி தங்கக் கட்டியாக உன்னிகிருஷ்ணனிடம்  கொடுக்கப்பட்டதாம். 

அதேபோல் தங்கமுலாம் பூசப்பட்ட செம்புத் தகட்டை துண்டு துண்டாக வெட்டி அதை வீட்டு பூஜையறைகள், நிறுவனங்களில் வைப்பதற்கு கோடீஸ்வரர்களுக்கு கொடுத்து பல கோடிகளை சம்பாதித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த பிரபல நகைக்கடை, துணிக்கடை அதிபர்களுக்கும் கொடுத்துள்ளார்.  மேலும் கோவில் கொடிமரத்தில் இருந்த தங்கத்திலான 28 ஆல் இலைகளில் தற்போது 13 இலைகள்தான் இருக்கிறது. இதையெல்லாம் தீவிரமாக விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறோம்''’என்றார்.