மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா தொடங்கிய நிலையில்...
21 வயதில் மகாத்மா காந்தியின் உதவியாளராக சேர்ந்து, 1948 ஆம் ஆண்டு நாதுராம் கோட்சேவால் சுடப்பட்டு காந்தி சரிந்தபோது அவரைத் தாங்கிப் பிடித்தவர் கல்யாணம். 99 வயது பெரியவரான அவர் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நக்கீரனுக்காக அளித்த பேட்டி…
""1931, 1936, 1942, 1944-ம் ஆண்டுகளில் காந்தியைக் கொல்ல நடைபெற்ற முயற்சிகளை முறியடித்து பிரிட்டிஷார் காந்தியை காப்பாற்றினார்கள். விடுதலை பெற்று ஐந்தரை மாதங்களில் காந்தியை பறிகொடுத்துவிட்டோம். இப்போதும் பிரிட்டிஷ் ஆட்சி இருந்திருந்தால் நல்லது என்பதே எனது கருத்து. அவன் கொள்ளையடித்துச் சென்றானே தவிர, நிர்வாகத்தில் லஞ்சம் -ஊழலுக்கு இடமில்லாமல் வைத்திருந்தான். விடுதலைக்குப் பிறகுதான் ஊழல் தொடங்கியது. இந்தியர்கள் மறந்தாலும், இன்றுவரை வெள்ளையர்கள்தான் காந்தியை கடவுளைப்போல மதிக்கிறார்கள்.
விடுதலைக்குப் பிறகு ஒருவேளை நேதாஜி தலைமையில் ஆட்சி, அதிகாரம் அமைந்திருந்தால் இந்த அவலங்களுக்கு இடமிருந்திருக்காது. ஒரு ஐந்து ஆண்டுகள் அவருடைய தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடந்திருந்தால் நட்டின் தலையெழுத்தே மாறியிருக்கும். இந்திய ராணுவத்தின் தளபதி கரியப்பாவும் இதே கருத்தைத்தான் கொண்டிருந்தார். காந்தி சுடப்பட்டபோது இந்தியாவே சுக்கலாய் உடைந்து நொறுங்கியதைப் போல இருந்தது. நான்தான் அவரை முதலில் தாங்கிப் பிடித்தேன். "ஹே ராம்'’என்றெல்லாம் அவர் கூறவில்லை. அது கற்பனை. பின்னாளில் "காந்தியை ஏன் சுட்டாய்?' என்று நீதிமன்றத்தில் கோட்சேவை கேட்டேன். "கடவுள் சொன்னார் சுட்டேன்' என்றான். காந்தி அனைத்து மதத்தினரையும் சாதியினரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்றார். ஒரே மதம் ஒரே மொழி என விரும்பியவர்கள், காந்தி தங்களுக்கு இடையூறாக இருப்பார் என்று கொன்றுவிட்டார்கள்.
இந்தியாவுக்கு கோட்சேக்களும் வேண்டாம், காந்தியின் பெயரை சொல்பவர்களும் வேண்டாம்; இருவருமே நாட்டைச் சுரண்டி தாங்கள் மட்டும் கொழுத்துள்ளனர். ஏழைகள் 50% பேர் அப்படியேதான் இருக்கிறார்கள். சுதேசி கொள்கை தற்போது விதேசி கொள்கையாக மாறிவிட்டது. ஏன் நாட்டையே விதேசிகளிடம் கொடுத்துவிட்டால் என்ன? கடவுள் ஏன் எனது ஆயுளை அதிகரித்தான் என்று கவலைப்படும் அளவுக்கே என்னுடைய மனநிலை இருக்கிறது'' என்று தனது உள்ளக்குமுறலைக் கொட்டினார் கல்யாணம்.
-அண்ணல்