சுற்றுச்சூழல் விதிகளைச் சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால், சிவகாசியில் கடந்த 43 நாட்களாக 1070 பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்து நிற் கிறார்கள் அத்தொழிலாளர்கள், பட்டாசு ஆலைக ளைத் திறப்பதற்கு மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கடந்த 21-ஆம் தேதி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காத் திருப்பு போராட்டம் நடத்தினர். மனு அளிக்கும் அந்தப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள வந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தோழர் நல்லகண்ணுவை சந்தித்தோம். 26.12.18 தோழர் நல்லகண்ணுவின் பிறந்தநாள். 94-ஆவது பிறந்தநாள் வாழ்த்து களையும் வணக்கங்களையும் கூறினோம். நக்கீரனுக்கு அவர் அளித்த பேட்டி இதோ-
நக்கீரன்: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம், விருதுநகரில் சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்கள் போராட்டம் என, தமிழகத்தில் போராட்டங்கள் தொடர்கின்றனவே? சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து போராடிவரும் உங்களை 93 வயதிலும் போராட்டக் களத்தில் காண முடிகிறது. போராட்டங்களால் என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது?
நல்லகண்ணு: மாற்றம் இருந்துக்கிட்டே தான் இருக்கு. போராட்டம் என்பதும் தொடர்ந்துக்கிட்டே இருக்கு. போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதால் சில நன்மைகள் கிடைக்கும். முன்னேற்றம் என்பது படிப்படியாக நடக்கும். வரலாறு என்பது சர்க்கிள் அல்ல. ஸ்பைரல் மாதிரி. சுற்றி சுற்றி வரும். அதுதான் போராட்டம். மாற்றம் என்பதே மாறாதது. மாற்றத்தை நோக்கி போராடித்தான் ஆகணும். போராடுவதால்தான் மாற்றம் நடக்கும். சிலபேரு அப்படியே இருக்கணும்னு நினைப்பாங்க. சமுதாயத்தில் உள்ள பல தவறுகளை எதிர்த்து போராடும்போது, அந்தப் போராட்ட வளர்ச்சி வளர்ந்துக்கிட்டே இருக்கும். அதுதான் சாதனை. மாற்றம் இல்லையென்றால் வளர்ச்சி கிடையாது. வளர்ச்சியை எதிர்த்தும் போராடுவார்கள். அப்போது, புது வளர்ச்சி வரும். புது வளர்ச்சிக்கும் சில எதிர்ப்பு வரும். அதையும் மீறி வந்தால்தானே, சமுதாய முன்னேற்றத்தைக் காண முடியும்.
என்னுடைய அனுபவத்துல சுதந்திரம் கிடைக்கிறதுக்கு முன்னால, வாக்குரிமையே கிடையாது. எல்லாருக்கும் வாக்குரிமை கிடையாது. சொத்து உள்ளவங்களுக்கும், நல்லா படிச்சவங் களுக்கும், பி.ஏ. படிச்சவங்களுக்கும்தான் வாக் குரிமை. இப்ப சாதாரண மக்களுக்கும் வாக்குரிமை உண்டு. அப்ப பெண்களை மதிக்கவே மாட்டாங்க. இப்ப பெண்களுக்கும் வாக்குரிமை உண்டு. அவங்க நினைச்ச ஆளைத் தேர்ந்தெடுக்க முடியுது. இந்த வாக்குரிமை என்பது ஜனநாயக வளர்ச்சி. அந்தக்காலத்தில் இந்த உரிமை இல்லை. இவை எல்லாமே போராட்டங்களால் கிடைத்தவையே.
நக்கீரன்: ஜனநாயக அரசியல் மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறதா? தேர்தல் களத்தில் மற்ற இயக்கங்கள் மேலே வந்துவிட்டன. இடதுசாரிகளின் தியாகங்களை இன்றைய இளைஞர்கள் புரிந்துகொள்ள வில்லையே? எத்தனை போராட்டம் நடத்தினாலும், கார்ப்பரேட் நிறுவனங்கள்தானே வெற்றி பெறுகின்றன?
நல்லகண்ணு: கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ந்து வெற்றிபெறுவது சில சூழ்நிலைகளைப் பொறுத்தது. ஒருகாலத்துல ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடினோம். ஒரு கொள்கைப் பிடிப்பு இருந்தால்தான் அரசியலாகும். அரசியல் என்றால் கொள்கை இருக்கணும். கொள்கை இல்லாமல் அரசியல் இருக்கக்கூடாது. சமுதாயத்தில் உள்ள வாழ்க்கையை முறைப்படுத்துவதுதான் அரசியல். தொழிலாளர்களுக்கான உரிமையைப் பெறுவது, உரிமைக்காக சண்டை போடுவது, வசதியைப் பெறுவது, அந்த வசதியைப் பயன்படுத்தி, அவங்கவங்க வாழ்க்கையை அமைத்துக்கொள்வது, இதுதான் வாழ்க்கை. ஒவ்வொரு கட்டம் கட்டமா போராடித்தான் ஆகணும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியவங்கள்ல அதிகமானவங்க கம்யூனிஸ்டுதான். தூக்கு மேடையில் செத்தவங்களும் கம்யூனிஸ்டுகள்தான்.
நிலப்போராட்டம், தெலங்கானா போராட்டம், தொழிலாளர் உரிமைக்கான போராட்டம், சுதந்திரத்துக்குப் பிறகு நடந்த போராட்டங்கள்ல, பெரியார் சொன்ன சமத்துவம், ஜாதி ஒழிப்பு, பிராமண ஆதிக் கத்தை எதிர்த்தது, மடங்களை எதிர்த்ததுன்னு, இது எல்லாத்துலயும் கம்யூனிஸ்டுங்க போராடி ருக்காங்க. போராடி போராடித்தான் வென் றாங்க. சமரசம் இல்லாம போராடிருக்காங்க.
நக்கீரன்: நேற்றைய போராட்டங் களுக்கும் இன்றைய போராட்டங்களுக்கும் உள்ள வேறுபாடு?
நல்லகண்ணு :இங்கே ஜாதிக் கொடு மைகள் நடக்கு. மதம் மாறினால் கொலை செய்றதும் இருக்கு. பெரியாரால ஜாதி எதிர்ப்புணர்வு, ஆதிக்க எதிர்ப்பு உணர்வு, பிராமணிய கொடுமை, கோயில்ல தீண்டாமை... இதையெல்லாம் எதிர்த்து நேற்று போராடிய தால்தான் பெரியார் இன்னும் நிற்கிறாரு. இப்ப பி.ஜே.பி.ய எதிர்த்து சண்டை போடுறோம். பொதுஎதிரியை அழிக்கிறதுக்கு எல்லாரும் சேரணும்னு சொல்லுறோம். கருத்து வித்தியாசம் கூட இருக்கலாம். பொதுஎதிரியை வீழ்த் தலைன்னா.. சமூகச் சீரழிவு வரும். பழமை வாதத்தின் கையில் நாடு போயிரும்.
-சந்திப்பு: சி.என்.இராமகிருஷ்ணன்