kalaingar-last-minute

ய்வே அறியாத அந்த சூரியன் நிரந்தர ஓய்வுகொண்டு மறைந்துவிட்டது. காவேரி பாசனப் பகுதியான திருக்குவளையில் கண்விழித்து 95 வயதில் காவேரி மருத்துவமனையில் கண் மூடிவிட்டது கலைஞர் எனும் தமிழ்ச் சூரியன்.

ஜூலை 27-ந் தேதி நள்ளிரவு கடந்து காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலைஞ ருக்கு 11 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜூலை 29-ல் இதயத்துடிப்பு குறைந்து மீண்டெழுந்த கலைஞருக்கு, ஆகஸ்ட் 3-ந் தேதி மஞ்சள் காமாலையின் அறிகுறி தெரிய ஆரம்பித்தது. அவருக்கு ரத்தஅழுத்தம், சர்க்கரை, கொழுப்பு எல்லாமே எப்போதும் இயல்பாக இருக்கும். அதுபோல உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளும் சீராக இருக்கும். அந்த நிலை மாறி, கல்லீரல் பாதிப்பும் மஞ்சள்காமாலையும் தென்படவே பதற்றம் அதிகமானது.

kalaingar-last-minute

Advertisment

காவேரி மருத்துவமனைக்கு வந்தார் கல்லீரல் சிகிச்சை நிபுணரான டாக்டர் முகமது ரேலா. "மஞ்சள் காமாலைக்கான புது மருந்துகளைக் கொடுக்கலாம்' என ஆலோசனை சொன்னார். ஆனால் "புது மருந்துகளை ஏற்கும் நிலையில் கலைஞரின் உடல்நிலை இல்லை, எனவே வழக்கமான மருந்துகளையே கொடுப்போம்' என காவேரி மருத்துவமனையின் டாக்டர்கள் டீம் முடிவு செய்தது.

சிகிச்சைகள் தொடர்ந்தபடி இருந்த நிலை யில், கலைஞரின் ரத்த தட்டணுக்களின் (Platlets) அளவு குறையத் தொடங்கியிருப்பதைக் கண்டறிந் தனர். அதன் அளவு குறைந்தால், நோய் எதிர்ப்பு சக்தியின் அளவும் குறையும். அதனால் கலைஞரின் ரத்தவகை கொடையாகப் பெறப்பட்டு ஏற்றப்பட்டது. ஆனாலும் வயது முதிர்வால் அதுவும் பெரியஅளவில் பலன் தரவில்லை.

க. 04-ஆம் தேதி கலைஞரின் உடல்நிலை சீராகாத நிலையிலும் வி.ஐ.பி.களின் வருகை தொடர்ந்தபடியே இருந்தது. தொண்டர்கள் வாசலில் காத்திருந்தனர். அவர் களின் வாழ்த்து முழக்கம் தார்மீக சிகிச்சையாக அமைந்தது. பொள்ளாச்சி நகர தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் திருமலை ராஜா, காவேரி மருத்துவமனை முன்பு நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார். இதேபோல் கலைஞருக்காக மருத்துவமனை முன்பு மொட்டை போட்ட திருவிடைமருதூரைச் சேர்ந்த தி.மு.க. தொண்டர் வீரமணி, "எழுந்து வா’ தலைவா!' போன்ற வாசகங்களுடன் சட்டையை அணிந்து அங்கும் இங்கும் சோகத் துடன் அலைந்து கொண்டிருந்தார்.

kalaingar-last-minute05-ஆம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகையை யொட்டி, முதல்நாள் இரவே காவேரி மருத்துவமனையில் பாது காப்பை பலப்படுத்தியது போலீஸ். மருத்துவ மனைக்கு வந்த ஜனாதி பதியுடன் கவர்னர் பன் வாரிலால், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோ ரும் வந்தனர். தரைத் தளத்துக்கு வந்து ஜனாதிபதியை வரவேற்று அழைத்துச் சென்றார் ஸ்டாலின். மாஸ்க் இல்லாமல் வெகுநேரம் பார்ப்பது ரிஸ்க் என்பதால், ஐ.சி.யூ. வார்டுக்குள் கலைஞரைப் பார்த்த சில நொடிகளிலேயே வெளியேவந்து சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர் அரவிந்தன் செல்வராஜ், கலைஞரின் தனி மருத்துவர் கோபால் ஆகியோரிடம் விவரம் கேட்டறிந்துவிட்டு, புறப்பட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.

இந்த நிலையில்தான் கலைஞருக்கு மஞ்சள்காமாலை என்கிற தகவல் தொண்டர்களிடம் பரவி, கலக்கமடைய வைத்தது. 06-ஆம் தேதி மதியம் 1 மணிக்கு மருத்துவமனைக்கு தயாளு அம்மாள் அழைத்து வரப்பட்டார். கலைஞர் பயன்படுத்தும் காரில், உடல்நலன் குன்றியிருக்கும் தயாளுஅம்மாள் வந்ததும் கலைஞரின் உடல்நிலை குறித்த கவலை மேலும் அதிகமானது. ""காவேரியில் கலைஞர் அனுமதிக்கப்பட்ட பிறகு, இதுவரை அவரை தயாளு அம்மாள் பார்க்கவேயில்லை என்பதால்தான் அழைத்து வந்தோம்'' என்றனர் குடும்பத்தார். தனது கணவரைப் பார்த்த தயாளு அம்மாள், ""பாவம்... பாவமா இருக்கு''’எனச் சொல்லியிருக்கிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்தே மரணத்தை எதிர்த்து இடைவிடாமல் போராடி, மெடிக்கல் மிராக்கிள் ஏற்படுத்திய கலைஞர், ஆகஸ்ட் 4-க்குப் பிறகு மெல்ல மெல்ல தன் வலிமையை இழந்து, பின்னடைவை சந்திப்ப தைக் கண்ட டாக்டர்கள் சோர்வடைந்தனர். கல்லீரல் தொடங்கி அவரது உடலின் முக்கிய உறுப்புகள் செயலிழந்துகொண்டே இருந்த நிலையில், 06-ஆம் தேதி மாலையில் கலைஞ ரின் பல்ஸ்ரேட் 95 என்ற அளவில் இருந்தது, டாக் டர்களுக்கும் குடும்பத்தின ருக்கும் நம்பிக்கையை அளித்தது.

அன்று மாலை 6:30-க்கு வெளியான காவேரி மருத் துவமனையின் அறிக்கை யில், ‘"கலைஞரின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முக்கிய உடல் உறுப்புகளின் இயக் கத்தை பராமரிப்பது சவாலாக உள்ளது. டாக் டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அடுத்த 24 மணி நேரத்தில் கலைஞரின் உடல்நிலை இந்த சிகிச்சைகளுக்கு எப்படி ஒத்துழைக்கிறது என்பதைப் பொறுத்தே அடுத்த கட்டத்தை முடிவு செய்ய முடியும்'’என்றது அந்த அறிக்கை. இந்தத் தகவல் வெளியாகி உலகத் தமிழர்களிடையே கவலை ரேகையை படரச் செய்தன. தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் காவேரிக்கு வர ஆரம்பித்தனர். டெல்லியில் இருந்த தி.மு.க. எம்.பி.க்கள் இரவு 9 மணி விமானத்தில் சென்னை திரும்பினர். வி.ஐ.பி.களின் வருகை அதிகரிக்க, அதைவிட அதிகமாகத் தொண்டர் கள் குவிந்து, தங்கள் தலைவருக்காக கதறினர். ""எழுந்து வா தலைவா... அறிவாலயம் போகலாம் வா.... வாழ்க வாழ்க வாழ்கவே தலைவர் கலைஞர் வாழ்கவே'' என இடைவிடாத முழக்கங்கள் ஓங்கி ஒலித்தன. பெண்கள், இளை ஞர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் குவிந் திருந்து வாழ்த்தொலியும் கண்ணீருமாக அந்த இரவைக் கழித்தனர். ஆழ்வார்பேட்டையிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் போக்கு வரத்து இயங்க முடியாத அளவில், தொண்டர் களும் பொதுமக்களும் காவேரி மருத்துவமனை நோக்கி வந்தபடியே இருந்தனர். நேரம் செல்லச் செல்ல தொண்டர்களின் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் கூடியதால், சென்னை மாநகரமே ஸ்தம்பிக்கும் நிலை உருவானது. மருத் துவ மனைக்குள் இருந்தபடியே நிலை மையை அறிந்த ஸ்டாலின், துரைமுரு கன் உள்ளிட்டோர் இரவு 9:45-க்கு நடத் திய ஆலோசனையில்… கூட்டம் கலைந்து செல்ல வேண்டு மாயின், நாம் ஒவ் வொருவராக வீட்டுக்கு கிளம்புவதுதான் சரியாக இருக்கும்' என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி முதலில் துரைமுருகனும் அதன்பின் வரிசையாக ஆ.ராசா, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள் ஆகியோர் புறப்பட்டனர். இரவு 10:15-க்கு ஸ்டாலினும் அதன்பின் கனிமொழியும் தமிழரசும் புறப்பட்டனர்.

kalaingar-last-minute

Advertisment

இரவு 10:50-க்கு டிராக்கியோஸ்டமி ஸ்பெஷ லிஸ்டான டாக்டர் மோகன்காமேஸ்வரன் வந்து கலைஞரின் உடல்நிலையை பரிசோதித்தார். வழக்க மான மருந்துகளின் செயல்பாடு குறைந்து வந்த நிலையில், புது ஆன்டிபயாடிக்கை பரிந்துரைக்க, கலைஞருக்கு அது கொடுக்கப்பட்டது. முந்தைய இரண்டு நாட்களைவிட அன்றிரவு புது மருந்தால் கலைஞரின் உடல்நிலையில் சிறிதளவு முன்னேற்றம் தெரிந்தது. பல்ஸ் ரேட் சீராக இருந்தது. அதே நேரத் தில், இரவு 10:30-க்கு மாநகர காவல்துறையின் உயர் அதிகாரிகளுடன் பாது காப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசித்தார் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வ நாதன். இரவு 11:20-க்கு கனிமொழி, பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் மீண்டும் காவேரி மருத்துவ மனைக்கு வந்தனர். வாசலில் குவிந்திருந்த தொண் டர்கள் பதற்றமாயினர். தலைவரின் நிலை என்ன எனத் துடித்தவர்கள், காவேரி வெளியிடப் போகும் அடுத்த அறிக்கைக்காக இரவு முழுவதும் மருத்துவமனை வாசலிலேயே காத்துக்கிடந்தனர்.

சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பதினோறாம் நாள் (ஆக.07) காலையிலும் கலையாமல் நம்பிக் கையுடன் காத்திருந்தது கலைஞரின் உடன்பிறப்பு கள் கூட்டம். “""எழுந்து வா தலைவா!''’’ முழக்கம் இடைவிடாது ஒலித்துக்கொண்டே இருந்தது. காலையில் டாக்டர்களின் மேற்பார்வையில், காவேரியின் செவிலியர்களும் அட்டெண்டர்களும் கலைஞரை பக்கவாட்டில் படுக்க வைத்து உடலை சுத்தம்செய்து, பவுடர் போட்டனர். அப்போது இதயத்துடிப்பு சீராக இருந்தது. ரத்த அழுத்தமும் நல்ல முறையில் இருந்தது. இந்த நிலை நீடிக்குமா என்ற சந்தேகமும் இருந்தது. காரணம், அவரது உடலுறுப்புகளின் செயல்பாட்டுத் தன்மை குறைந்துகொண்டே வந்ததுதான்.

காலை 11 மணியளவில், கலைஞரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமானது. ரத்த அழுத்தம் மாறுபட்டது. இதயத்துடிப்பு குறையத் தொடங்கியது. தொண்டர்களின் கதறல் அதிகரித்தது. உள்ளே என்ன நிலவரம் என்பதை அவர்கள் உணர்ந்துவிட்டனர். மருத்துவமனை யிலிருந்து அறிவிப்பை எதிர்பார்த்தனர். உடனடியாக எதுவும் வராததால், பலவித யூகச் செய்திகள் அடிபடத் தொடங்கின.

""தலைவருக்கு அண்ணா சமாதி அருகே இடம் கேட்குறாங்களாம். ஆனா கோர்ட்டில் கேஸ் இருப்பதால அரசாங்கம் யோசிக்குதாம். ஆஸ் பத்திரிக்குள்ளே அழகிரி கோபமா இருக்காராம். கட்சிப் பதவிகளையும் சொத்துகளையும் பகிர்ந்துக்கிறதப் பத்தி பேச்சுவார்த்தை நடந்துக் கிட்டிருக்காம். எப்ப அறிவிக்கிறதுன்னு நேரம் காலம் குறிச்சி வாங்கியிருக்காங்களாம்''’’ என்பது போன்ற பேச்சுகளும் கிளம்ப ஆரம்பித்தன.

kalaingar-last-minute

காவேரி மருத்துவ மனை கெடு விதித்திருந்த 24 மணி நேரத்தில் 15 மணி நேரம் கடந்திருந்தது. கலைஞரின் உடல்நிலையில் முன்னேற்றமில்லை என்பது தொண்டர்களுக்குத் தெரிய வர, கூட்டம் அதிகரித்த படியே இருந்தது. ஸ்டாலின், துரைமுருகன், ராசாத்தி அம்மாள், கனிமொழி, ஆ.ராசா ஆகி யோர் வரிசையாக காவேரிக்கு வந்திருந்தனர். அர சியல் கட்சித் தலைவர்களின் வருகையும் தொடர்ந் தது. மு.க.ஸ்டாலின் அங்கிருந்த குடும்பத்தினரிட மும் கட்சி நிர்வாகிகளிடமும் தீவிரமாக ஆலோ சனை நடத்தினார். உண்மை நிலை அறிந்திருந்தும், ஒரு மாபெரும் சகாப்தத்தின் நிறைவுக் கட்டத்தை எவர் மனதும் ஏற்காததால் எல்லோரது முகமும் இறுகியிருந்தது. கலைஞரின் இதயத்துடிப்பு குறைந்து கொண்டே வந்தது.

மாலை 4:30 மணிக்கு வெளியிடப்பட்ட மருத்துவமனையின் 7-வது அறிக்கையில், "கடந்த சிலமணி நேரங்களாக கலைஞரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. தீவிர சிகிச்சை அளித்த நிலையிலும் அவரது முக்கிய உறுப்புகள் செயல்பட மறுக்கின்றன. கலைஞர் மிகவும் கவலைக் கிடமாக இருக்கிறார்'’என தெரிவிக்கப்பட்டிருந் ததைப் பார்த்த தொண்டர்கள் கதறி அழுதனர்.

நிலைமையைப் புரிந்துகொண்ட பல தொண்டர்கள் காவேரியிலிருந்து கோபாலபுரம் நோக்கி செல்ல ஆரம்பித்தனர். மருத்துவமனை வாசலில் நின்ற பெண்கள் தங்கள் குடும்பத்து இழப்பினைப்போல கதறித் துடித்தனர். தமிழையே சுவாசித்து, தமிழனின் முன்னேற்றத்திற்காகவே அயராமல் உழைத்து ஒரு கோடி உடன்பிறப்பு களையும் ஒட்டுமொத்த தமிழினத்தையும் கட்டிப் போட்ட மகத்தான தலைவரான கலைஞரின் கடைசி மூச்சு 7-8-2018 மாலை 6.10 மணிக்கு வெளிப்பட்டு அடங்கியது. சிறிது நேரத்தில், காவேரி மருத்துவமனை இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க, தமிழ்நாட்டை துக்க இருள் சூழ்ந்தது.

கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடல், அங்கு குடும்பத்தின ரின் அஞ்சலிக்குப் பிறகு, சி.ஐ.டி. காலனி எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர், தொண்டர்களும் பொதுமக்களும் இறுதி வணக்கம் செலுத்த ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டது. மக்கள் வெள்ளத்திலும் கண்ணீர் வெள்ளத்திலும் மிதந்தது அவரது உடல்.

போய் வருகிறேன் உடன்பிறப்பே

என விடைபெற்றார் கலைஞர்.

வாழ்வு நிறைவடைந்தாலும்... வரலாறாய் தொடர்கிறார் கலைஞர்.

-ஜீவாபாரதி, ஈ.பா.பரமேஷ்வரன்

படங்கள்: எஸ்.பி.சுந்தர், ஸ்டாலின், அசோக், குமரேஷ

_____________________________________________

மெரினாவில் இடமில்லையா? கொந்தளித்த தி.மு.க.!

மெரினா கடற்கரையில் அண்ணாவை அடக்கம் செய்து நினைவிடம் எழுப்பியவர் கலைஞர். எம்.ஜி.ஆர், ஜெ. ஆகியோர் முதல்வர் பதவியில் இருந்தபோதே மரணமடைந்ததால் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், "5 முறை முதல்வராக இருந்த கலைஞருக்கு அண்ணா சதுக்கத்தில் இடம் ஒதுக்கவேண்டும்' என தி.மு.க. தரப்பில் எடப்பாடி அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு, நேரிலும் வலியுறுத்தப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க. செயல்தலைவரு மான மு.க.ஸ்டாலினும் கடிதம் அளித்திருந்தார்.

merinaகலைஞர் உடல்நலன் குன்றிய திலிருந்தே, அண்ணா சமாதியில் பொக்லைன் வேலை செய்கிறது என்றும் ராஜாஜி ஹால் சுத்தம் செய்யப்படுகிறது எனவும் தகவல்கள் வந்தன. அண்ணா சமாதியில் இடம் ஒதுக்க பொ.ப.து மற்றும் செய்தித் துறையின் (நினைவகங்கள்) பிரிவின் அனுமதி தேவை. அந்தத் தரப்பினர் அனுமதிக்கத் தயார் என்றும் கோப்பு கள்கூட ரெடியாகி வருகின்றன எனவும் ஆகஸ்ட் 6 இரவில் தெரி விக்கப்பட்டது. அன்றிரவில் எடப்பாடி வீட்டுக்கு துரைமுருகன் சென்றபோது, எடப்பாடி தூங்கப் போய்விட்டதாக சொல்லப்பட்டிருக்கிறது. மறுநாள் காலையில் எடப்பாடியிடம் துரைமுரு கன் பேசியிருக்கிறார். அதேநாளில், மெரினாவில் நினைவிடங்கள் கட்ட தடைவிதிக்கக் கோரி காந்திமதி என்பவர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், கலைஞருக்கு அண்ணா சதுக்கத்தில் இடம் ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பு அதிகமானது.

"அண்ணா தி.மு.க. ஆட்சியில் அண்ணா சமாதியில் தி.மு.க. தலைவருக்கு இடம் கொடுப்பது அரசியல்ரீதியாக நமக்கு வாக்குகளை சிதைத்துவிடும். ஜெயலலிதாம்மா இருந்தால் கலைஞர் விஷயத்தில் எப்படி செயல்படுவாரோ அப்படியே நடப்பதுதான் அரசியல் லாபம் தரும்'’ என்பது எடப்பாடியின் நிலைப்பாடு. இது தொடர்பாக அ.தி.மு.க. சீனியர்களும் வலியுறுத்தியுள்ளனர். அப்போது, "முன்னாள் முதல்வர் என்ற முறையில் காமராஜர் மரணத்தின் போது என்ன நடைமுறை கடைப் பிடிக்கப்பட்டதோ அதுபோலவே கிண்டி பகுதியில் இடம் தரலாம்' என விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 7-ந் தேதி மதியம் 2 மணிவாக்கில், க்ரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடியின் வீட்டுக்கு மு.க.ஸ்டாலினுடன் அழகிரி, கனிமொழி, முரசொலி செல்வம், டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி ஆகியோர் சென்றனர். அதற்கு முன்பாக, காலை யில் தனியார் ஓட்டலில் எடப்பாடியும் மத்திய அமைச்சர் நிதின்கட்கரியும் சந்தித்தபோது, அண்ணா சமாதி இடம் குறித்து மத்திய அமைச்சர் பேசியிருக்கிறார். எனினும் எடப் பாடியோ, ஸ்டாலின் உள்ளிட்டோரிடம் "அங்கே இடம் ஒதுக்கினால் சட்ட சிக்கல் வருமே என்ன செய்வீர்கள்?' என நெகட்டிவ்வாகப் பேசி தவிர்க்க... தி.மு.க. தரப்பு அதிருப்தியுடன் மருத்துவமனைக்குத் திரும்பியது. தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பு கூடியது.

தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனையும் அழைத்து எடப்பாடி ஆலோசனை நடத்தினார். தி.மு.க. தரப்பிலோ அரசின் முடிவை எதிர்பார்த்திருந்தனர். கலைஞரின் மரணச் செய்தி அறிவிக்கப்பட்ட நிலையில், மெரினாவில் இடம் ஒதுக்க சட்டச் சிக்கல்கள் உள்ளதால், கிண்டியில் காமராஜர் நினைவிடம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்குவதாக தலைமைச் செயலாளர் அறிவித்தார். இது தி.மு.க.வினரிடம் மட்டுமின்றி, பொதுமக்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால் அ.தி.மு.க. தரப்பிலோ, ""டெல்லி கொடுக்கும் நெருக்கடியால் எங்கள் மீது பழி விழுகிறது'' என்கிறார்கள்.

ஜெயலலிதாவை மெரினாவில் புதைக்கும்போது வராத சட்ட சிக்கல் முதுபெரும் தலைவரான கலைஞ ருக்கு மட்டும் வருமா என்ற கேள்வி கள் எழுந்தன. இதனிடையே, எடப் பாடியை சந்திக்க ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்ளிட்டோர் ஒன்றாகச் சென்றது தி.மு.க. நிர்வாகிகளை நெகிழ வைத்தது. டி.ஆர்.பாலு போன்ற சீனியர்கள், "நம்மால் முடிக்க முடியாமல் போனதால்தானே கலைஞ ரின் பிள்ளைகளை இப்படி அலைய வைக்க நேர்ந்தது'’’ என வருந்தினர். ஸ்டாலினிடம் பாலு, "நாங்கள் எடப்பாடி வீட்டுக்குப் போகிறோம். நீங்க இருங்க' என்றபோது, "அது சரியல்ல, நானும் வருகிறேன்' என ஸ்டாலின் உணர்வுப்பூர்வமாக உடன் சென்றார்.

அண்ணா சமாதியில் கலைஞ ருக்கு இறுதி மரியாதை என்ற முயற்சியை 7-ந் தேதி நள்ளிரவு கடந்தும் தி.மு.க. தொடர்ந்தது. இந்த உரிமைப் போராட்டத்தினிடையே சீனியர்கள் சிலர், அடையாளம் தெரியாமல் புதைக்கப்பட்ட சேகுவேரா உடலை பின்னர் எப்படி மீட்டு மரி யாதையுடன் நல்லடக்கம் செய்தார் களோ அதுபோல தி.மு.க. ஆட்சி அமையும்போது கலைஞரின் உடல் வைக்கப்பட்ட பெட்டியை அண்ணா சதுக்கத்தில் மறு அடக்கம் செய்து, நினைவிடம் எழுப்பலாம் என்ற ஆலோசனையையும் தந்தனர்.

இந்தியாவின் மூத்த தலைவரின் மறைவில், அரசியல் காழ்ப் புணர்வால் அ.தி.மு.க. செய்த சமாதி அரசியல், பொதுமக்களிடம் கோபத்தை உண்டாக்கி சாபத்தைக் கொடுத்த நிலையில்... உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ், நீதிபதி சுந்தர் ஆகியோர் முன்பு இரவு 8:45-க்கு மனு தாக்கல் செய்தது தி.மு.க. இரவு 11:20 மணிக்கு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனர் நீதிபதிகள். இரவு முழுவதும் காரசார விவாதம் நடந்த நிலையில்... 8-ஆம் தேதி காலை 8:00 மணிக்கு அரசுத் தரப்பு மனுத்தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

-கீரன், இரா.இளையசெல்வன்