""இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும், தீமையானதற்கு அஞ்சேன்'' -ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான துப்பாக்கிச்சூட்டில் பலியான மாணவி ஸ்னோலின் உடல் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுவதற்கு முன் வாசிக்கப்பட்ட பைபிள் வசனம் இது.
சாதாரண மாணவியாய் இருந்து தூத்துக்குடி மக்களின் சொந்தமாய் மாறிப்போனது ஸ்னோலினின் உயிர்த்தியாகம்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் உடல்கள் நீதிமன்ற உத்தரவின்படி 7 பேரின் உடல்கள் மட்டும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நீதிபதிகள் முன்னிலையில் மறுபோஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டது. 31 ஆம் தேதி முதல் உடல்களை ஒப்படைக்கும் பணி தொடங்கியது.
மாசிலாமணிபுரத்தைச் சேர்ந்த சண்முகம், இருவப்பபுரத்தைச் சேர்ந்த செல்வசேகர், கால்டுவெல் காலனியைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோரது உடல்களைத் தொடர்ந்து கந்தையா, காளியப்பன் மற்றும் தமிழரசனின் உடல்களும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மினிசகாயபுரத்தை சேர்ந்த மாணவி ஸ்னோலின் உடலைப் பெறுவதில்தான் பிரச்சனையே எழுந்தது.
பேச்சுவார்த்தையில் ஸ்னோலின் பெற்றோரின் கோரிக்கை மீது ஆவன செய்வதாக உறுதி அளிக்கப்பட்டது. அதையடுத்து, ""ஸ்னோலினின் உடலை ஜார்ஜ் ரோடுவரை போலீஸார் கொண்டுவந்து ஒப்படைக்கலாம். எங்கள் பகுதிக்குள் நுழையவே கூடாது''’என்ற நிபந்தனையின் பேரில் உடலைப் பெற்றுக் கொண்டனர்.
பெருந்திரளாக கூட்டம் கூடியிருந்தது. தேவதை போல் அலங்கரிக்கப்பட்ட ஸ்னோலின் உடலுக்கு அனைத்துத் தரப்பினரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், லயன்ஸ் டவுன் ஆர்.சி. கல்லறைத் தோட்டத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
வழக்கத்திற்கு மாறாக கல்லறைத் தோட்டத்திற்கு பெண்கள் வந்திருந்தனர். சவப்பெட்டியில் ஸ்னோலினுக்கு பிடித்தமான டெடிபியர் பொம்மைகளும், வளையல்களும் வைத்து அடக்கம் செய்யப்பட்டது.
""எங்களுக்கெலாம் செல்லப் பிள்ளை யாருன்னா எங்க பாப்பா ஸ்னோலின்தான். அவளுக்கு செல்லப்பிள்ளை கரடி பொம்மைகள்தான், அவள் உயிர் போனது வருத்தம் என்றாலும், இப்போ, தூத்துக்குடி முழுவதற்கும் செல்லப் பிள்ளையாகிவிட்டாள்'' என்கிறார் ஸ்னோலினின் அண்ணன் காட்வின்.
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மெரினா பிரபுவோ, "" ஸ்னோலின் தியாகம் அளப்பரியது.! ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். தூய தூத்துக்குடி வேண்டும்''’என்றார்.
உயிரைக் கொடுத்து ஸ்டெர்லைட்டை தற்காலிகமாக மூடிய ஸ்னோலின் உள்ளிட்டவர்களின் தியாகம் போற்றப்படும் வேளையில், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நேரடியாக சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளார்.
-நாகேந்திரன்