"ஹலோ தலைவரே, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, நாடாளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு சந்திச்சதின் பின்னணி தெரியுமா?''”
"மத்திய பா.ஜ.க. அரசோடு, தி.மு.க. நடத்திய அதிகாரப்பூர்வமான முதல் சந்திப்பாச்சே.''”
"உண்மைதாங்க தலைவரே, கடலில் காணாமல் போன மீனவர்களை மீட்கும் கோரிக்கையுடன், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, டி.ஆர்.பாலு சில நாட்களுக்கு முன் சந்திச்சார். இது அரசியல்ரீதியான முக்கியத்துவம் பெற்றதற்கு காரணம், தி.மு.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மோடிக்கு ஏற்பட்ட மனக்குழப்பம் தானாம். ஏற்கனவே மேற்கு வங்கத்தில் மம்தா, முரட்டுக்காளை மாதிரி, மத்திய அரசுக்கு டார்ச்சர் கொடுத்துவரும் நிலையில், மு.க.ஸ்டாலின் மூலம் இன்னொரு சூறாவளியான்னு அவர் சஞ்சலத்தில் ஆழ்ந்திருக்கார்.''”
"ஆமாம்பா, தி.மு.க. ஆட்சி அமைந்ததுமே, நீட் தேர்வை ஏற்கமாட்டோம்னும், புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த மாட்டோம்னும் அமைச்சர்கள் பொன்முடியும் அன்பில் மகேஷும் டெல்லி அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக குரல் கொடுத்தாங்களே?''”
"ஆமாங்க தலைவரே,. அதோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பிலும் தமிழக அரசின் சார்பிலும் வெளியாகும் அறிக்கைகளில், மத்திய அரசு என்பதற்குப் பதில் ஒன்றிய அரசுன்னுதான் குறிப்பிடப்படுது. இதை கூட்டாட்சி தத்துவத்திற்கான வெளிப்பாடா டெல்லி கவனித்து வந்தது. இந்த நிலையில்தான் டி.ஆர். பாலு, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்திச்சி, மத்திய அரசுக்கு தமிழக அரசு முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்கும். அதேபோல் மத்திய அரசும், மாநில உரிமைகளை நசுக்காமல், உணர்வுக்கு மதிப்பு கொடுத்து, ஒத்துழைப்பையும் கொடுக்க ணும்னு சொல்லியிருக்கார். இதை ஏற்றுக்கொண்டு மத்திய அரசு, தமிழக அரசுக்கு வெள்ளைக் கொடியை அசைச்சிருக்கு.''”
"ஆளுந்தரப்பு செய்திகள் சரி.. அ.தி.மு.க.வுக்குள் இன்னும் உட்கட்சி தகிப்பு தணியலை போலிருக்கே?''”
"உண்மைதாங்க தலைவரே, அ.தி.மு.க.வில் எடப்பாடிக்கும் ஓ.பி.எஸ்.சுக்கும் இடையிலான பவர் யுத்தம் இன்னும் முடிவுக்கு வரலை. இந்த நிலையில் மாஜி மந்திரியான சி.வி.சண்முகம், சமீபத்தில், வட மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க. எம்.ல்.ஏ.க்கள் சிலருடன் சென்று ஓ.பி.எஸ்.சை சந்திச்சிருக்கார். இந்த சந்திப்பு, ஓ.பி.எஸ்.சின் சகோதரர் மறைவுக்கு துக்கம் விசாரிக்கத்தான்னு சொல்லப்பட்டாலும், அந்த சந்திப்பில், எடப்பாடிக்கு எதிரான வியூகங்கள் பலவும் வகுக்கப்பட்டிருக்கு. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டதன் பேரில், தேர்தலில் தன்னைத் திட்டம் போட்டு, எடப்பாடி தோற்கடிச்சிட்டாருன்னு ஓ.பி.எஸ்.சிடம் குமுறியிருக்கார் சண்முகம்.''”
"அதுக்கு ஓ.பி.எஸ்.சின் ரியாக்ஷன் என்னவாம்?''”
"சண்முகத்தின் குற்றச்சாட்டுகளைக் கேட்ட ஓ.பி.எஸ், எடப்பாடி நம்பிக்கையானவரில்லை. அதனால்தான் ஜெ. இருந்தவரை, அவரை இருக்கும் இடம் தெரியாமல் வச்சிருந்தார். இனி அவரைக் கட்சிக்குள் ஆளுமை செய்யவிட மாட்டேன்னு அழுத்தமாகச் சொல்லியிருக்கார். அப்ப சண்முகம், எடப்பாடி முதல்வராக இருந்த போது, அவருக்கு எதிராக நம்ம கட்சிக் காரங்க குற்றச்சாட்டை வச்சப்பல்லாம், அவர்களை நான்தான் சமாதானப்படுத் தினேன். அவருக்கு சாதகமா நின்னு உங்ககிட்ட வாதாடி இருக்கேன். அப்படிப் பட்ட எனக்கே அவர் பள்ளம் பறிச்சிட் டார்ன்னு சொல்ல, ஓ.பி.எஸ்.சோ,. உங்கள் பலம் என்னன்னு எனக்குத் தெரியும். நேரம் வரும்போது பார்த்துக்கலாம்ன்னு சண்முகத்துக்கு ஆறுதல் சொல்லியிருக்கார். இந்த விவகாரம் எடப்பாடி காதுக்குப் போக, எவ்வளவுதான் நல்லது செஞ்சாலும் சிலரின் வாலை நிமிர்த்த முடியாதுன்னு எரிச்சலடைஞ்சாராம்.''”
"சி.பி.ஐ.யின் புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டிருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, சி.பி.ஐ.யின் இயக்கு நராக இருந்த சுக்லா, பிப்ரவரியிலேயே ஓய்வு பெற்று விட்டார். இந்த நிலையில் புதிய இயக்குநரை தேர்வு செய்யும் குழு, அண்மையில் பிரதமர் இல்லத்தில் கூடியது. அப்போது மோடி தரப்பு, உத்தரப்பிரதேச டி.ஜி.பி. அவஸ்தி, மத்திய உள்துறை இணைச் செயலர் கௌமுதி, பீஹாரைச் சேர்ந்த சீனியர் ஐ.பி.எஸ். அதிகாரி ராஜேஷ் சந்திரா ஆகிய மூவரை முன்னிறுத்தியது. உடனே, காங்கிரஸைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன், இவர்கள் மீதான புகார் களைச் சுட்டிக்காட்ட, அவர்கள் புறக்கணிக்கப் பட்டனர். இதைத் தொடர்ந்து மேலும் 2 அதிகாரி களின் பெயர்களை மோடி தரப்பும், 3 அதிகாரிகளை காங்கிரஸ் தரப்பும் முன் வைத்தது. மோடி லிஸ்டில் இருந்த சுபோத்குமார் ஜெய்ஸ்வாலுக்கு தலைமை நீதிபதியின் ஆதரவும் இருந்ததால், அவர் மெஜாரிட்டி அடிப்படையில் தேர்வு செய்யப் பட்டிருக்கார். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவர், பல்வேறு டேஞ்சரஸ் வழக்குகளைத் துப்பறிந்த அனுபவசாலியாம்.''”
"சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக ஒருவழியா செல்வப்பெருந்தகை தேர்ந்தெடுக்கப் பட்டிருக்காரே?''”
"உண்மைதாங்க தலைவரே, தமிழக சட்ட மன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு, அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களான விஜயதாரணி, பிரின்ஸ், ராஜேஷ்குமார், செல்வப்பெருந்தகை, முனிரத்னம் ஆகிய 5 பேர் முண்டியடிச்சாங்க. பிறகு முனிரத்னம் ஆர்வம் காட்டலை. மற்றவர் களில் செல்வபெருந்தகையை தவிர மற்ற மூவரும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதில் ஒருவரை நியமித்தால் மற்ற இருவர் சுணக்கம் காட்டலாம்ங்கிற நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி.எஸ்.டி. பிரிவின் தலைவ ராக உள்ள ராஜூ, தனது நண்பரான செல்வப் பெருந்தகையின் பெயரை ராகுலிடம் பரிந்து ரைக்க, அவரது யோசனையை ராகுல் ஏற்றுக் கொண்டாராம். பா.ஜ.கவில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த முருகன் மாநிலத்தலைவரா இருப்பதற்கு ஈடு கொடுக்கும் வகையில் காங்கிரஸ் செயல் பட்டிருக்குன்னு சொல்றாங்க.''”
"செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் தடுப்பூசி நிறுவனத்தை மீண்டும் செயல்பட வைக்கணும்னு மாநில அரசை அன்புமணி வலியுறுத்தியிருக்காரே?''”
"அதே தடுப்பூசி விஷயத்தில் அவரை மையமா வச்சி ஒரு சர்ச்சை கிளம்பியிருக்கு. கொரோனா வேக்சின் பற்றாக்குறை நாடு முழுதும் நிலவுது. இதுக்கு முன்னாள் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த அன்புமணியும் ஒரு காரணம்ன்னு டெல்லி முழுக்க டாக் அடிபடுது. அவர் அமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் இருந்த ஒரு நிறுவனம் உட்பட, தடுப்பூசி தயாரிக்கும் 3 நிறுவனங்களில் தடுப்பூசி தயாரிக் கக் கூடாதுன்னு உத்தரவிட்டிருந்தாராம். அத னால் அந்த நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தியை நிறுத்தி விட்டனவாம். அந்த நிறுவனங்கள் செயல்பட்டிருந்தால் இந்த கொரோனா நெருக்கடி காலத்தில், அவை நமக்குக் கைகொடுத்திருக்கும்னு சொல்லப் படுது. இந்த விவகாரம், இப்போது அன்புமணியின் பெயரை ரிப்பேர் ஆக்கிவருகிறது.''”
"புதுசா பொறுப்பேற்றுக்கிட்ட அமைச்சர்கள், கிரீன்வேஸ் சாலை இல்லங்களில் பால் காய்ச்ச ரெடியா யிட்டாங்க போலிருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, சென்னை கிரீன்வேஸ் சாலையில் அரசு சார்பில் கட்டப்பட்டிருக்கும் பங்களாக்கள், அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு ஒதுக்கப்படுவது வழக்கம். இப்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருப்பதால், அங்கு தங்கியிருந்த பெரும் பாலான அ.தி.மு.க. அமைச்சர்கள், அவர்களின் வீடுகளைக் காலி பண்ணிட்டாங்க. மாஜி முதல்வர் எடப்பாடி மட்டும், தான் வசித்த வீட்டிலேயே தொடர்ந்து வசிக்க விரும்புவதாகச் சொல்லி, அனுமதி வாங்கிக் கிட்டார். முதல்வரான ஸ்டாலினும் துரைமுருகனும், தங்கள் சொந்த இல்லமே போதும்னு சொல்லிட்டாங்களாம். அதனால், புதிய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட மற்ற பங்களாக்கள், அவர்களின் விருப்பப்படி, சற்றே மாற்றி அமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் ஒரு வாரத்தில் அரசு பங்களாக்களில் தி.மு.க அமைச்சர்கள் பால் காய்ச்ச இருக்காங்களாம்.''”
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந் துக்க விரும்பறேன். பருப்பு டெண்டரில் 100 கோடி ரூபாய் அளவுக்கு ஊழலை அரங்கேற்ற நினைத்த கிறிஸ்டிஃபுட் நிறுவனத்துக்கு, கொடுக்க இருந்த கொள்முதல் டெண்டரை, அறப்போர் இயக்கத்தின் சுட்டிக்காட்டலால் தமிழக அரசு ரத்து செய்துவிட்டது பற்றி போனமுறையே நாம் பேசிக்கிட்டோம். இந்த கிறிஸ்டி நிறுவனம், கடந்த கால ஜெ’ மற்றும் எடப்பாடி ஆட்சிக் காலத்தில் இருந்தே, சத்துணவுப் பொருட்களையும், மதிய உணவுத் திட்டத்துக்கான முட்டைகளையும், சப்ளை செய்து, அவற்றிலும் மெஹா முறைகேடு களை செய்து வருது. அதனால், இனி கொள் முதல் செய்யும் பொருட்களை மாநில அளவில் ஒட்டுமொத்தமா செய்வதற்கு பதில், மாவட்ட அளவில் கொள்முதல் செய்து, பல நிறுவனங்களுக்கும் வாய்ப்பு வழங்க முடிவெடுத்திருக்கு தி.மு.க.அரசு. இதையறிந்த கிறிஸ்டிஃபுட், அரசின் ஒட்டுமொத்த கொள்முதல் டெண்டருக்கும் நீதிமன்றத்தில் இடை காலத்தடை வாங்கியதோடு, மாவட்ட அளவில் தங்களுக்குப் போட்டியாக வரவிருக்கும், சின்னச் சின்ன நிறுவனங் களையும் அணுகி, மாநில அளவிலான டெண்டரை அரசு பின்பற்றவேண்டும் என்று, தன் பலப்பிரயோகத்தைக் காட்டி, கடிதம் எழுதி வாங்கிக்கிட்டு இருக்குதாம். சட்டரீதியாக ஊழல் செய்ய முனையும் கிறிஸ்டி ஃபுட் நிறுவனத்தைப் பார்த்து அதிகாரிகள் தரப்பே மிரண்டுபோய் நிக்கிது''’