காதலைத் தொடர மறுத்த சிறுமியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த காதலனின் ஆவேச வெறி, தூத்துக்குடி மாவட்டத்தின் எட்டயபுரம் ஏரியாவை அதிரவைத்திருக்கிறது.

எட்டயபுரம் பக்கமாக உள்ள இளம்புவனம் கிராமத் தின் அய்யனார்- காளீஸ்வரி தம்பதிக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள். தனது கணவர் அய்யனாருடன் ஏற்பட்ட மன வேற்றுமை காரணமாக கடந்த 15 வரு டத்திற்கு முன்பே பிரிந்து பரமக்குடிக்குத் தன் பிள்ளைகளுடன் சென்ற காளீஸ்வரி, அங்கே வசித்தபடி கூலி வேலை செய்துவருகிறார்.

ss

10-ஆம் வகுப்புவரை படித்த 17 வயதான காளீஸ் வரியின் மகளான சிறுமி சுந்தரியும், (சிறுமியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது) பக்கத்து வீட்டைச் சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞரும் சிறுவயதிலிருந்தே நண்பர்களாகப் பழகிவந்திருக்கிறார்கள். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே இவர்களுடைய நட்பு காதலாக மாறியிருக்கிறது.

இளைஞர் சந்தோஷ் லாரிகளில் சரக்குகளை ஏற்றி இறக்குகிற தொழிலிலிருப்பவராம். அதோடு போதைப் பழக்கமும் இருந்திருக்கிறதாம். சந்தோஷுடனான மகளின் காதல் தாய் காளீஸ்வரிக்குத் தெரியவர பதறியவர், சந்தோஷின் குணாதிசயங்கள், போதை பழக்கங்கள் உள்ளிட்டவைகளை சுந்தரியிடம் எடுத்துச்சொன்னவர், “"வேண்டாம், நமக்குச் சரிப்படாது விட்டுடு'’என்று கண்டித்திருக்கிறாராம். மகளும் அதனைப் புரிந்துகொண்டிருக்கிறார்.

Advertisment

இதையடுத்தே சிறுமி சுந்தரி, "சந்தோ ஷிடம், “நம்ம காதல் விஷயம் வீட்டிற்குத் தெரிஞ்சு பிரச்சினையாயிருக்கு. அதனால நாம ரெண்டு பேரும் பேசவேண்டாம். பழகவேண்டாம். நண்பர்களாகவே பிரிஞ் சிடுவோம்'” என்று சொல்லியிருக்கிறார். அதை ஏற்காத சந்தோஷ் தொடர்ந்து சிறுமியிடம் தன்னைக் காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு செய்திருக்கிறார்.

இதனால் மிரண்ட சிறுமியின் தாயார் 2.08.24 அன்று சந்தோஷ் மீது பரமக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். தன்னை சந்தோஷ் போனில் மிரட்டி அவதூறாகப் பேசுவதாக புகாரில் கூறியிருக்கிறார். இந்தப் புகாரை விசாரித்த பரமக்குடி போலீசார், இரு தரப்பினரையும் விசாரித்து பின் சந்தோஷை கடுமையாக எச்சரித்து அனுப்பியிருக்கிறார்கள். அதன்பிறகும் சந்தோஷினால் தனக்கும் மகளுக்கும் பிரச்சினை வந்ததால் அதனைத் தவிர்க்கவும், மகளைப் பாதுகாக்கவும் அவளை தன் தாயார் இருக்கிற தூத்துக்குடி மாவட்டத் தின் எட்டயபுரம் அருகிலுள்ள இளம்புவனம் கிராம வீட்டிற்குக் கொண்டுவந்து விட்டிருக்கிறார் காளீஸ்வரி.

சிறுமி சுந்தரி தன் பாட்டி வீட்டிலிருந்த நிலையில், அவளைப் பார்க்க முடியாமல் தவித்த சந்தோஷ், நண்பன் முத்தையாவுடன் கடந்த மார்ச் 23-ஆம் தேதியன்று மதியம் இளம்புவனம் கிராமத்தில் தன் பாட்டி வீட்டில் சிறுமி சுந்தரி தனியாக இருந்த போது வந்திருக் கிறான்.

Advertisment

அதுசமயம் சிறுமியிடம் சந்தோஷ், தன்னைக் காதலிக்க வேண்டும், தொடர்ந்து தன்னி டம் பேசவேண்டுமென்று வற்புறுத்தியிருக் கிறான். அதற்கு சுந்தரி எதிர்ப்புத் தெரிவித்து மறுத்தவளைத் தொந்தரவு செய்ததுடன் தொடர்ந்து டார்ச்சர் கொடுக்கவே பயத்தில் மிரண்டுபோன சிறுமி, "வெளிய போறீங்களா,… இல்லையா...''’என்று கத்தியவர் திடீரென்று வீட்டிலிருந்த மண்ணெண்ணையைத் தூக்கி வந்து, “"இப்ப வெளிய போவலாட்ட மண்ணெண்ணய ஊத்திக்கிட்டு பத்த வைச்சுக்குவேன்''’என்று கத்த, அதைப் பிடுங்கிய சந்தோஷ் அவள் மீது மண்ணெண்ணையை ஊற்றித் தீவைத்துவிட்டுத் தப்பியோடி யிருக்கிறார். சிறுமியின் உடலில் பற்றி எரிந்த தீயால் படுகாயத்துடன் உயிருக்குப் போராடியவாறு சிறுமி அலற, சத்தம் கேட்டுப் பதறிப் போன அருகிலுள்ளவர்கள் உள்ளே சென்று தீயை அணைத்து, சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியிருக் கிறார்கள். எட்டயபுரம் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்திருக்கிறார்கள். சம்பவ இடம் வந்து விசாரணை நடத்திய போலீசார், அங்கு இரண்டு வாலிபர்கள் வந்துசென்றதை அறிய வந்திருக்கிறார்கள்.

மருத்துவமனையில் 60 சதம் தீக்காயம் பட்டு தீவிர சிகிச்சையிலிருந்த சிறுமியிடம் போலீசார் விசாரித்ததில், சந்தோஷும் அவரது நண்பரான முத்தையாவும் சேர்ந்து தன் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துவிட்டுத் தப்பியோடியதையும், வீட்டில் நடந்ததையும் வாக்குமூலமாகக் கொடுத்திருக்கிறார். இதையடுத்து எட்டயபுரம் போலீசார் பரமக்குடியைச் சேர்ந்த சந்தோஷ், அவரது நண்பர் முத்தையா இருவரையும் கைதுசெய்து ரிமாண்ட் செய்திருக்கிறார்கள். நடந்தது குறித்து மேல்விசாரணை நடத்திவருவதாக எட்டயபுரம் போலீசார் கூறுகிறார்கள். இதற்கிடையே சிகிச்சை பலனின்றி 29ந் தேதி சிறுமி மரணமடைந்தார்.

ஒரு காலகட்டத்தில் சாதியத்தின் இறுக்கத்தைத் தகர்த்ததில் காதல் முக்கிய இடம் வகித்தது. அதேசமயம் சமீபத்திய காதல்கள், பல்வேறு விபரீதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

-ப.இராம்குமார்