கொரோனா ஊரடங்கு நெருக்கடிகளுக்கு மத்தியில், முன்னெப்போதை விடவும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித் திருக்கின்றன. அடுத்தடுத்த இந்தக் கொடூர சம்பவங்களால் தமிழகம் அதிர்ந்து கிடக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகேயிருக்கிறது நொடியூர் கிராமம். இங்கு தண்ணீர் எடுக்கச்சென்ற 13 வயது சிறுமி, கழுத்தெலும்பு உடைக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டாள். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் சேர்த்தும் பிழைக்கவில்லை. இதை விசாரித்த போலீசார், செல்வம் பெருக வேண்டும்’ என்பதற்காக தந்தையே மகளை நரபலி கொடுத்ததாக விசாரணையை முடித்து வைத்தனர். நரபலிக்கான எந்தவித தடயமும் இல்லாதபோதும், அவசரகதி யில் இந்த வழக்கு முடிக்கப் பட்டது குறித்து கேள்விகள் எழுகின்றன.
இந்தத் துயரத்தின் ஈரம் காய்வதற்குள்ளாகவே, அதே புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருக்கும் ஏம்பல் கிராமத்தில் நடந்திருக்கிறது அந்தக் கொடூரம். கடந்த 30ந்தேதி மாலையிலிருந்து தனது ஏழுவயது மகளைக் காணவில்லை என்று புகார் கொடுத்தார், அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி நாகூரான். மறுநாள் காலை அவரது வீட்டிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் இருக்கும் ஊரணியில், காட்டாமணக்கு செடிகளுக்கு மத்தியில் கொடிகள் சுற்றிய நிலையில் உடல் முழுவதும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டது குழந்தை.
இந்தக் கொடூரக் கொலையைச் செய்தது யார் என்ற விசாரணையில் போலீசார் இறங்கினர். அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களிடம் விசாரித்த போது, சிறுமியின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ராஜா, குழந்தையை காட்டுப்பக்கம் கூட்டிச் சென்றதாக சொன்னார்கள். மோப்பநாயும் ராஜாவின் வீட்டு வாசலிலேயே படுத்தது. இதையடுத்து, ராஜாவைப் பிடித்து முறைப்படி விசாரித்ததில், வக்கிரத்துடன் கொலை செய்ததை ஒப்புக்கொண்ட ராஜா, கொலைசெய்த விதத்தையும் விவரித்திருக்கிறான்.
""காளி கோயிலுக்குப் பூ கொடுக்கப் போனேன். குடிபோதையில் இருந்த எனக்கு, அந்தக் குழந்தை விளையாடிட்டு இருக்கிறதைப் பார்த்த தும் சபலம் ஏற்பட்டது. கையில் இருந்த பூவில் கொஞ்சத்தை அந்தக் குழந்தையிடம் கொடுத்து யாருமில்லாத இடத்திற்கு கூட்டிச்சென்றேன். கீழே தள்ளி விட்டு வன்புணர்வு செய்ய முயன்றேன். குழந்தை அலறியது. "அண்ணா... வலிக்குது வேண்டா'முன்னு கதறியது. போதையில் இருந்ததால் எனக்கு எதுவும் ஓடலை. குழந்தை உடம்பில் பல இடங் கள்லேயும் கடிச்சேன். ஆனா லும் முரண்டு பிடிச்சது. இதுக்கும் மேல, இப்படியே விட்டுட்டா யாருக்காச்சும் தெரிஞ் சிடுமோன்னு பயந்து, பக்கத்துல கிடந்த வேலிக்கருவை மரத்தின் கட்டையான வேரை எடுத்து, குழந்தையின் முகத்திலும் வயித்திலும் தாக்கினேன். கீழே மோதச் செய்தேன். மூச்சு அடங்கிப்போச்சு.
அதன்பிறகு, உடம்பைத் தூக்கிப் போய் ஊரணியில் கிடத்தி, கொடிகளை அள்ளிப்போட்டு மூடிவைச்சிட்டு வந்துட்டேன். எல்லோரும் தேடிட்டு இருந்தாங்க. நான் அமைதியா இருந்துக்கிட்டேன்'' என்று அந்த அரக்கன் சொல்லி முடிக்கையில், போலீசாரே அதிர்ந்து போயிருந்தார்கள்.
இந்தச் சம்பவம் காட்டுத் தீயாக பரவ, இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட குற்றவாளிகள் சம்மந்தப் பட்டிருக்க வேண்டும். அவர் களையும் கைது செய்யவேண்டும். இதில் ஈடுபட்ட அனைவருக்கும் உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். 24 மணிநேரத்திற்குப் பிறகே இரங்கல் செய்தியை வெளியிட்ட முதல்வர் பழனிசாமி, ரூ.5 லட்சம் நிவாரணமாக அறிவித்தார்.
குழந்தையை பறிகொடுத்த சோகத்தில், பெற்றோர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர் களுக்கு மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியின் உத்தரவுப்படி, மனநல மருத்துவர்கள் குழு மனநல ஆலோசனை வழங்கி வருகிறது. அதற்குள், அடுத்த துயரமும் தமிழகக் குழந்தைகளின் சோக வரலாற்றில் பதிவாகி இருக்கிறது.
திருச்சி சோமரசம் பேட்டை அருகே உள்ளது அதவத்தூர்பாளையம். இந்தப் பகுதியில், கழிப்பிடம் செல்வ தாகக் கிளம்பிச் சென்ற 14 வயது சிறுமி கங்காதேவி, வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தேடிச் சென்றுள்ளனர். அப்போது, அங்கிருக்கும் மர அறுவை மில்லுக்குப் பின்புறம், பாதி எரிந்த நிலையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டாள். சடலத்தின் அருகே மண்ணெண்ணெய் கேன், தீப்பெட்டி போன்றவைகள் கிடந்தன. உடனடியாக அங்குவந்த சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் சிபி சக்கரவர்த்தி, விசாரணையைத் தொடங்கினார். சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்த காவல்துறை உயரதிகôரிகளும் அங்கு விரைந்து, விசா ரணையைத் துரிதப்படுத்தினார்கள்.
குழந்தைகளின் மீதான தொடர் தாக்குதல்கள், பாலியல் வன்புணர்வு குற்றங்களால் தமிழகம் அதிர்ந்து போயுள்ள நிலையில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கி இருக்கிறது.
இந்நிலையில், இறந்து போன சிறுமியின் பெற்றோர் பேசுகிற மனநிலையில் இல்லாததால், அவருடைய சித்தப்பா செந்திலிடம் பேசினோம். ""நாங்க நாலுபேர் அண்ணன் தம்பி. எனக்கு நேர் மூத்த வர்தான் பெரிய சாமி; கங்காதேவியின் தந்தை. ஹார்ட்வேர் கடை வைத்திருக்கிறார். அன்னைக்கி அண் ணனும், அண்ணியும் வேலைக்குப் போயிட்டாங்க. கடையில கணக்குப் பார்த்துட்டு இருந்த கங்காதேவியிடம் சாப்பிட வீட்டிற்குப் போகச் சொன்னோம். பாத்ரூம் போறதா சொல்லிட்டுப் போனவ, எரிஞ்சுபோய் பிணமாத்தான் வந்திருக்கா'' என்றார் விம்மிய குரலில்.
அந்தப்பகுதி மக்களிடம் கேட்டபோது, ""இயற்கை உபாதைக்காக அந்தப்பக்கம்தான் செல்வோம். மதிய நேரங்களில் வெளியூர் ஆட்கள் சிலரால், பெண் பிள்ளைகளுக்கு தொந்தரவு இருப்பதாக புகார்கள் அவ்வப்போது எழும். இதுபோக, இங்கிருக்கும் மில்லில் பணிபுரியும் வடமாநில இளைஞர் கள், பெண்களை எட்டிப்பார்ப்பது தொடர்பாகவும் உரிமை யாளரிடம் புகார் சொன்னோம். சி.சி. டி.வி. வீடியோவை வைத்து நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னார். ஆனால், இந்த சிறுமி மரண விவகாரத்தில்கூட எந்த வீடியோவும் பதிவாக வில்லை'' என்கிறார்கள்.
இந்த வழக்குத் தொடர்பாக கொலையாளிகளைப் பிடிக்க ஏ.டி.எஸ்.பி. மணிவண்ணன் தலைமையில் 3 டி.எஸ்.பி., 7 ஆய்வாளர்கள் தலைமையில் 11 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், கங்காதேவியின் செல்போன் நம்பரை ஆராய்ந்ததில், கடைசியாக செந்தில் என்கிற 22 வயது இளைஞருடன் பேசியிருப்பதும், கடந்த இரண்டு மாதத்தில் நூற்றுக்கும் அதிகமான முறை பேசியிருப்பதும் தெரியவந்தது.
கங்காதேவியின் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளியிருக்கும் பங்காளி முறை கொண்டவர்தான் இந்த செந்தில். அதாவது, கங்கா தேவிக்கு அண்ணன் முறை வரும். அவரைப் பிடித்து விசாரித்தபோது, “""எனக்கும் கங்காதேவிக்கும் பழக்கம் இருந்தது உண்மைதான். அதன் சாட்சியாக எங்கள் இருவரின் பெயரின் முதல் வார்த்தையை நெஞ்சில் பச்சை குத்தியிருக்கிறேன். இதோ நாங்கள் இருவரும் சேர்ந்திருக்கும் படங்கள்'' என்று போலீசாரிடம் காட்டியிருக்கிறார் செந்தில். தொடர்ந்து, ""எங்களுடைய பழக்கம் வீட்டுக்குத் தெரிந்து, உறவுமுறை சரியில்லை என்று கண்டித்தார்கள். ஆனாலும், நாங்கள் பேச்சை விடவில்லை. இதற்கிடையில், அவள் வினோத் என்பவனோடு பேசுவதை அறிந்து நான் ஆத்திரப்பட்டேன். அவள் வீட்டுக்குச் சென்று அடிக்கவும் செய்தேன். உங்க அப்பா, அம்மா பேச்சைக் கேள் என்றேன். ஆனால், கொலையெல்லாம் செய்யவில்லை'' என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறான்.
அன்றைய தினம் கையில் பையுடன் அந்த வழியே கங்காதேவி சென்றதை ஊர்மக்கள் சிலரும் பார்த்திருக்கிறார்கள். எரிந்த நிலையில் இருந்தாலும், பின்னந்தலையில் காயமிருப்பதால் சந்தேகம் வலுக்கிறது. கங்காதேவியை செந்தில் கொலை செய்தாரா? அல்லது தற்கொலை முயற்சியின்போது தடுக்க முயற்சித்து தள்ளிவிட்டதில், தலையில் காயமேற்பட்டதா? இல்லை தலையில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்ததை மறைக்க தீயிட்டுக் கொளுத்தியிருக்க வாய்ப்பிருக்கிறதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
-இரா.பகத்சிங், ஜெ.டி.ஆர்.
___________
அலட்சிய அதிகாரிகள்!
மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு, குழந்தை திருமண தடுப்பு அலுவலர், குழந்தைகள் நலக்குழு, குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு, குழந்தைகள் உதவி எண் 1098, இளம் சிறார் நீதி வாரியம், நன்னடத்தை அலுவலர் ஆகிய இந்த அதிகாரிகள்தான், குழந்தைகள் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணக் கூடியவர்கள். ஆனால், சோமரசம்பேட்டையில் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், தகவல் தெரிந்தும் இந்த அதிகாரிகள் யாரும் நேரில் சென்று பார்வையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மீட்கப்பட்ட சடலத்தில் மேற்கொள்ளப் பட்ட முதற்கட்ட ஆய்வில், சிறுமி வன்புணர்வுக்கு ஆளாகவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.