"ஹாய் சென்னையன்ஸ்! அங்கே இருக்கின்ற மிச்சம்மீதியான பிஸ்கட், பிரட், பாலை இந்தப்பக்கம் திருப்பிவிடுங்கப்பா'' -இப்படிக்கு தென்மாவட்ட மக்கள், என்பது போலான மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுக்கப்படுகின்றது. அந்தளவிற்கு வரலாறு காணாத பேய்மழை திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட மக்களை அவஸ்தைப்படுத்தி வருகிறது.
சனிக்கிழமை தொடங்கி திங்கட்கிழமை வரை தென்மாவட்டங்களில் அதிகளவு மழைபொழிய இருக்கின்றது என தனியார் வானிலை ஆய்வாளர் அறிக்கையொன்றை வெள்ளிக்கிழமை வாக்கில் கொளுத்திப்போட்டி ருக்கின்றார். "நம்மூருக்கு மழை வர்றது பெரிசு இதில் அதிகளவு மழையாம். போப்பா புள்ளகுட்டியை படிக்க வை' என அறிக்கையில் எதிர்வினையாற்றியது தென்மாவட்ட இளசுகள்.
அவர் சொன்னது போலவே சனிக்கிழமை பின்னிரவு தொடங்கிய பேய்மழை திங்கட்கிழமை வரை விடாது பெய்துகொண்டி ருக்கின்றது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 24 மணி நேரத்து அளவீட்டில் 93 செ.மீ மழை பெய்துள்ளது, இது அந்த ஊரின் வருடாந்திர மழைப் பொழிவைவிட அதிகமாகும். மலைப்பகுதியான காக்காசியில் (மாஞ்சோலை) 1992-ஆம் ஆண்டு 96.5 செமீ மழை பதிவாகியுள்ளது. அதற்கடுத்தபடியாக தமிழ்நாட்டில் சமவெளியில் ஏற்பட்ட மிக அதிக கனமழைப் பொழிவு இதுதான்.
அதனைத் தாண்டி இப்பொழுதுவரை நிற்காமல் பெய்து வருகின்றது பேய்மழை. 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் தற்பொழுது 133 அடியாக உள்ளது. 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 31 ஆயிரம் கன அடி வீதம் நீர்வரத்து உள்ளது. அணையிலிருந்து 32 ஆயிரம் கன அடி வீதம் வெள்ள நீர் தாமிரபரணியில் திறந்துவிடப்பட்டுள்ளது.
தாமிரபரணியில் தண்ணீர் திறந்துவிட்டபடியால் திருநெல்வேலி டவுன், பாளையங்கோட்டை மற்றும் கோடகன் கால்வாய்ப் பகுதிகளும், மற்றொரு பகுதியான மேல்புறம் ஜங்ஷன் பகுதியில் சிந்துபூந்துறை, செல்விநகர், கைலாசபுரம், துவரை ஆபீஸ், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளும் நீரால் சூழப் பட்டுள்ளது. அதுபோக மாநகர் பகுதியி லுள்ள தாமிரபரணி கொக்கரகுளம் ஆற்றுப் பாலம், வடக்கு புறவழிச் சாலை ஆற்றுப்பாலத்தை மூழ்கடித்து வெள்ள நீர் சென்றுகொண்டிருப்பதால் பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இது இப்படியிருக்க, நெல்லை சந்திப்பு, சிந்துபூந்துறை பகுதியில் ஞாயிறு இரவு முதல் உணவில்லாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தவித்த நிலையில், படகு இருந்தால் மட்டுமே அந்தப்பகுதிக்கு செல்லமுடியும் என அங்குள்ள மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதேவேளையில் நெல்லை சந்திப்பு சுபம் மருத்துவமனைக்குள் மழை நீர் புகுந்து 30 நோயாளிகள் உட்பட 50 மருத்துவப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டி ருக்கின்றனர்.
ஞாயிறன்று நெல்லைக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வந்த நிலையில் முதற்கட்டமாக பாளையங்கோட்டை யூனியன் அலுவலகத்தில் ஆய்வினை மேற்கொண்டார். முன்னதாக நெல்லை சந்திப்பு அம்மா உணவகம் பகுதியில் முகாம் ஏற்படுத்தப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டிருந்தனர். பேய்மழையின் காரணமாக அம்மா உணவகத்தை மழைநீர் சூழ, பொதுமக்கள் வெளியேறமுடியாத நிலையில் அவர்களை வெளியேற்ற துரித நடவடிக்கை எடுத்து மீட்டார் அமைச்சர். அதுபோல் ராதாபுரம் பகுதியில் நெல்லை மாவட்ட தி.மு.க.வினர் என்கின்ற அடையாளத்துடன் ரஹ்மான் என்பவர் மக்களை மீட்டதும் குறிப்பிடத் தக்கது.
"தெரிந்தே அரசு அதிகாரிகள் நீர் வழித்தடங்களை கபளீகரம் செய்து, உச்சநீதிமன்ற தீர்ப்பை அலட்சியம் செய்து விட்டு தங்களின் சுயலாபம்"ஒன்றே குறிக்கோளாக கொண்டு செயல் பட்டு மனைக்கான அனுமதி கொடுத்து கொள்ளையடித்து சென்றுவிட்டனர். புதிய பஸ் ஸ்டான்ட் வேய்ந்தான்குளம், பாளை பஸ் ஸ்டான்ட் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் கட்டடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆற்றில் கான்கிரீட் போட்டு பார்வையாளர் கட்டடம். நீர்வழித் தடங்களில் இது தேவையா..? துளியும் எதிர்கால சிந்தனை இல்லாத படித்த அதிகார வர்க்கத்தின் கொள்ளையால் அப்பாவி மக்கள் மழைக்கு பலியாகின்றனர்'' என்கிறார் பாலபாக்கியம் நகர் நாகராசன்.
திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியே வெள்ளக்காடாகியிருப்பதுடன், பல இடங்களில் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதால், திருநெல்வேலியிலிருந்து செல்லும் அனைத்து பகல் நேர ரயில்களும் ரத்து எனவும், குருவாயூர் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் -கோவை பயணிகள் ரயில், திருச்சி இண்டர்சிட்டி என பகல் நேர ரயில்கள் ரத்து என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதேபோன்று பல்வேறு பகுதிகளிலிருந்து திருநெல்வேலி வரக்கூடிய ரயில்களும் திருநெல்வேலி மார்க்கமாக செல்லக்கூடிய ரயில்களும் ஆங்காங்கே பல்வேறு ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டது.
மக்களைக் காப்பதற்காக, அச்சத்தைப் போக்குவதற்காக தொலைதொடர்பு துறையின் டஈத எனப்படும் செயலியில் பேரிடர் மீட்புக் குழுவின் களத்தில் உள்ள அதிகாரி மற்றும் 8 பங்ஹம் ஸ்ரீர்ம்ம்ஹய்க்ங்ழ்ள் மற்றும் அந்த மீட்பு படைக் குழுவிலுள்ள தஹக்ண்ர் ர்ல்ங்ழ்ஹற்ர்ழ் ஆகியோர்களின் தனிப்பட்ட தொலைபேசி எண்கள் தொலை தொடர்புத் துறையின் டஈத-க்கு இணைக்கப்பட இருக்கின்றது. இதன் சிறப்பம்சம், எந்த ஒரு சங்ற்ஜ்ர்ழ்ந்ண்ய்ஞ் ள்ண்ம் ஆக இருந்தாலும் அந்த பகுதியில் அந்த சமயத்தில் என்ன ய்ங்ற்ஜ்ர்ழ்ந் ஹஸ்ஹண்ப்ஹக்ஷப்ங் இருக்கின்றதோ அதுவாக மாறி செயல்படத் தொடங்கும். இதன் மூலம் அரசு அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையை (சஉதஎ) அவசர காலத்தில் எளிதாக தொடர்புகொண்டு பொதுமக்களை உடனடியாக மீட்கவும் இந்த தொலைதொடர்பு தொழில்நுட்பம் உதவும். திருநெல்வேலி பாளையங்கோட்டை நாச்சியார் சூப்பர் மார்க்கெட் அருகே கனமழையின் காரணமாக சுவர் இடிந்துவிழுந்து சிவகுமார் என்பவர் உயிரிழந்தார்.
"முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை. 20 ஆயிரம் கனஅடி என்றாலே தாமிரபரணி ததும்பும். இதில் 60 ஆயிரம் கன அடி என்றால் நீங்களே புரிந்துகொள்ள வேண்டும். முன்பு எந்தளவிற்கு இங்கு தீயணைப்புப் படையினர், பேரிடர் மீட்புக் குழுவினர் எண்ணிக்கை இருந்ததோ அதே அளவு திங்கட்கிழமை இருக்கின்றது. திருநெல்வேலி மாவட்டத்திற்கு இந்த எண்ணிக்கை போதாது. பல இடங்களிலிருந்து மீட்புக் கோரி கூக்குரல் வருகிறது. ஆனால் எந்த பதிவிற்கும் பதிலளிக்க முடியாத நிலையில் தீயணைப்புப் படையினர் உள்ளது குறிப்பிடத்தக்கது'' என்கிறார் சமாதானபுரத்தினை சேர்ந்த ஒருவர்.
தூத்துக்குடி மாவட்டத்தினைப் பொறுத்து கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தாறு, விளாத்திகுளம், எட்டயபுரம், எப்போதும்வென்றான், ஓட்டப்பிடாரம், குளத்தூர், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி மற்றும் வல்லநாடு பகுதிகளில் பேய் மழை மிரட்டியது. இதில் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட கடையனோடை முழுவதும் வெள்ளக்காடானது. மழைத்தண்ணீர் சேகரமாகி வெள்ளமடத்துக்குளத்தையும், கடம்பக்குளத்தையும் நிரப்பியது. குளங்கள் முழுவதும் நிரம்பிய நிலையில் தண்ணீர் அங்குள்ள வீடுகளை கபளீகரம் செய்யத்தொடங்கியது. இது குறித்து பேரிடர் மீட்பிற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தாலும் நோ ரெஸ்பான்ஸ்.
மழைவெள்ளத்தில் மக்கள் மட்டும் சிக்கவில்லை. கடவுள்களும் சிக்கிக்கொண்டுள்ளனர். நெல்லையப்பர் கோவிலில் மழைநீர் புகுந்துள்ளது, திருச்செந்தூர் முருகன் கோவிலையும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேற்கொண்டு நீர் புகாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது பெரிய கோயில்களின் நிலவரம். சிறிய கோவில்கள் பலவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கு, மார்கழி 1-ஆம் தேதியை முன்னிட்டு மலையேறிய பக்தர்கள், மழை வெள்ளத்தால் சிக்கித் தவித்த நிலையில், 22 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் சுமார் 200 பேர் மலையின் மேலேயே பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கனமழையில் பாதிக்கப்பட்டவர்களைத் தங்கவைக்க, நெல்லையில் மட்டும் 245 முகாம்கள் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படும் நபர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், பால், மருத்துவ வசதி களுக்குத் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
"கடந்த 1992 டிசம்பரில் ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் வெள்ளத்தில் மூழ்கியது. அதன்பின், 31 ஆண்டுகள் கடந்தும் அதிகாரிகள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை'' என்பதுதான் உண்மை என்கின்றனர் தென்மாவட்டவாசிகள்.
"சபரிமலை செல்லும் பக்தர்கள் தயவுசெய்து திருச் செந்தூர் முருகன் கோயிலுக்கு வராதீர்கள் என்று முதல்நாளிலிருந்தே சொல்லிக்கொண்டிருக்கிறேன். யாரும் இதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்கவுள்ள நிலையில்... தூத்துக்குடி மாவட்டத்துக்குள் எந்த வாகனமும் வராதீர்கள்'' என தூத்துக்குடி மாவட்ட சமூக ஆர்வலர் வேண்டிக்கொள்ளும் ஆடியோ வைரலாகியுள்ளது.
தென் மாவட்ட பெருமழைப் பொழிவு தொடர்பாக தூத்துக்குடி கலெக்டர், தனது மழை வெள்ள எச்சரிக்கை ஆடியோ பதிவில், "முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் போன்றவர்களிடம் வெள்ளப் பெருக்கு அதிகரிக்கப்போகிறது, மிகப்பெரிய ஆபத்து வரப்போகிறது என்பதைச் சொல்லி... அங்குள்ள அணைகளைத் திறக்கச் சொல்லுங்கள். சென்னையில் 400-600 மி.மீ. மழை பெய்தது. தற்போது 1000 மி.மீ. வரை பெய்யப் போகிறது. இப் போதே அணையைத் திறக்கா விட்டால் இனி பெய்யும் கன மழை பெரிய வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தும். மக்க ளுக்கு மின்சாரம் இருக்காது. சார்ஜ் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங் களில் பெரிய வெள்ளப் பெருக்கு இருக்கும். தயவு செய்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்'' என்றார்.
______________
இறுதிச்சுற்று!
வியாழனன்று கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த முதலமைச்சர் ஸ்டா லின் முதலில் ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ’"மக்களுடன் முதல்வர்'’என்ற திட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். " கடந்த இரண்டரை ஆண்டுகளில் சுமார் 49 இலட்சம் மனுக்கள் பெறப்பட்டு, அவற்றிற்கு உரிய முறையில் தீர்வு காணப்பட்டு வருகிறது. அதோடு, தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாக மாவட்டங்களுக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டு, ’கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற முன்னெடுப்பின் கீழ், மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, கள ஆய்வுகள் மேற்கொண்டு, அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் பொது மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்திட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த திட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனைவரும் ஒரே குடையின்கீழ் மக்களின் கோரிக்கைகளைப் பெற்று பதிவு செய்வார்கள். முகாம்களில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட துறைகளால் 30 தினங்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும். பொதுமக்கள் இம்முகாம்களை நல்ல முறையில் பயன்படுத்தி உரிய சேவைகளைப் பெற்றுக்கொள்ள தெரிவித்தும், துறை அலுவலர்கள் கோரிக்கைகளை அக்கறையோடு பரிசீலித்து அவர்களுக்கு சட்டப்பூர்வமாக கிடைக்கவேண்டிய உதவிகளை எவ்வித தாமதமும் இன்றி, விரைவாகவும் எளிதாகவும் உரிய முறையில் தீர்வு காணப்படும்'' என்றார்.
-நாகேந்திரன்