(32) அவிழ்க்க முடியாத முடிச்சுகள்

போராட்டக் களத்தில் அந்த வகையான புகைப்படங்களும் ஓவியங்களும் என்னைக் கைப்பிடித்து எங்கெல்லாமோ அழைத்துச் சென்றுகொண்டிருந்தன. சுதந்திரத்தின் தகிப்பு விரிந்த பரப்பைக் கொண்டது. ஒவ்வொருவருடைய மனதிலும் புயல் காற்றென எழுந்துவிட்ட சுதந்திரத்தின் வெப்பம் எவ்வாறான மாற்றங்களை நிகழ்த்தின என்ற பெருங்கதையாடல் ஒன்றை அது என்னிடம் உருவாக்கி இருந்தது.

இப்பொழுது டெல்லியில் நடைபெறும் போராட்டக் களம், இந்திய விடுதலைப் போராட்டத்தோடு ஒரு தனிப் பாதையை அமைத்துக் கொண்டுள்ளது என்பதை இதன்மூலம் என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. புகைப்படங்கள், கோட்டோவியங்கள், பல வண்ணங்களைக் குழைத்து எழுதிய காட்சி ஓவியங்கள் என்று இவை பலதரப்பட்டவை. இவை அனைத்தும் சுதந்திரப் போராட்டத்தில் பதிவுசெய்யப்படாமல் மறுக்கப்பட்ட விவசாயிகளின் பங்களிப்பை பற்றியவை.

nn

Advertisment

இந்திய விடுதலைப் போராட்டத்தை, அடிப்படையில் விவசாயிகளின் விடுதலைப் போராட்டம் என்று தான் கருத வேண்டும். காந்தியடிகளின் வருகை இந்திய விடுதலை போரை தீவிரப்படுத்தியது என்றால், அதற்கு விவசாயிகளிடம் ஏற்பட்ட கொந்தளிப்பு காந்தி யடிகளுக்கு புதிய வாசலை திறந்து வைத்தது என்பது தான் காரணமாக இருக்க முடியும். காந்தியடிகளின் சுதந்திரப் போராட்ட வருகையும், இந்திய விவசாயிகள் பிரிட்டிஷை எதிர்த்து நடத்திய கலகங்களும் ஒரே காலத்தில் நிகழ்ந்தன. இது இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முழுமையாக சொல்லப்படவில்லை. ஆனால் இவை காட்சிகளாக இன்றைய இளைய சமூதாயத்தால் போராட்டக் களத்தில் வைக்கப்பட்டிருப்பது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

பீகார் மாநிலத்தில் சம்பரான் என்னுமிடத்தில் விவசாயிகளுக்கான போராட் டத்தில் காந்தியடிகள் பங்கெடுத்தார். 1918 -1919 ஆம் ஆண்டுகளில் இந்த போராட்டம் நடைபெற்றது. மூலிகை சாயங்களுக்கும், செயற்கை சாயங்களுக்கும் அடிப்படையான வேறுபாடுகள் உண்டு. தொழிற்புரட்சிக்கு பிந்தைய காலங்களில் ஐரோப்பியர்கள் செயற்கை சாயத்தைக் கூடுதலாகப் பயன்படுத்தினர். துணி வியாபாரம் உலக வியாபாரமாக மாற்றம் அடைந்தபோது, செயற்கை சாயங்களை மிக கூடுதலாகப் பயன்படுத்தியவர்கள் ஐரோப்பியர்கள்.

மூலிகை நிறத்தை பயன்படுத்துதல் இந்தியாவின் தொன்மையான கலை. இதில் உலகில் பல நாடுகளுக்கு நாம் முன்னோடிகள். புதுக்கோட்டை சித்தன்னவாசல் ஓவியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள நிறங்களைப் பற்றி ஆய்வுகள் இன்று உலக அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்தியாவில் இயற்கை நிறங்களின் முக்கியத்துவத்தை ஆங்கிலேயே முதலாளிகள் ஒரு கட்டத்தில் உணரத் தொடங்கினர். பாம்புக்கடி, ஒவ்வாமை, தோல் நோய், போன்றவற்றிற்கு பயன்படுத்திய அவுரியை, இந்தியாவில் இயற்கை சாயமாக பயன்படுத்திவந்ததை கண்டறிந்த இவர்கள் இதுவரை பார்த்திராத ஒருவித ஊதா நிறத்தை போன்ற ஒன்று இதில் இருந்ததைக் கண்டு அதிர்ந்துபோனார்கள்.

h

இதைப் பெரியஅளவில் பயன்படுத்த ஆங்கிலேயரின் வியாபாரபுத்தி குரூரமான குறுக்கு வழிகளை கண்டுபிடித்தது. அப்படி கண்டுபிடித்த திட்டம்தான் அவுரிச்செடியை இந்திய விவசாயிகள் பயிரிடும் திட்டம். ஆனால் இந்த காலத்தில் பஞ்சத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மரணமடைந்துகொண்டிருந்தார்கள். விவசாயிகள் மறுத்தும் உணவு தானியங்கள் பயிரிட வேண்டிய நிலங்களில் அவுரி செடிகளைப் பயிரிட அரசு அதிகாரம் செய்தது.

அரசாங்கத்திற்கு பயந்து பலர் அவுரி செடிகளை பயிரிட்டனர். ஆனால் அவுரிச் செடியை கொள்முதல் செய்வதில் பல்வேறு மோசடிகளை ஆங்கில வியாபாரிகள் செய்யத் தொடங்கினர். இது புதிய நெருக்கடியைத் தோற்றுவித்தது. இதனால் விவசாயிகள் பெரிதும் கோபம் அடைந்தார்கள். இந்த நிலையில் தான் காந்தியடிகள் போராட் டத்தைத் தொடங்கினார். முதலில் வரிகொடா இயக்கமாக மாறியது.

இதன் பின்னர், விவசாயிகளின் கொதிப்பு, ஒத்துழையாமை இயக்ககத்தில் கொழுந்து விட்டு எரிந்தது. 1922 ஆம் அண்டில் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டது.

சௌரி சௌரா உத்திரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகில் உள்ள ஒரு சிறிய நகரம். இங்கு தொடங்கிய போராட்டத்தில் பொதுமக்கள் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இதை பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில் மக்கள், காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர். அங்கிருந்த போலீசார் 22 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

இதை சுதந்திரப் போராட்டத்தையே ஒடுக்கும் அடக்குமுறையாக பிரிட்டிஷார் மாற்றிக் கொண்டனர். முன்னணியில் செயல்பட்டவர்களில் பலருக்கும் காவல்நிலைய தீ வைப்புக்கும் சம்பந்தமே இல்லை. அவர்கள் அனைவரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு 228 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் விசாரணை கைதியாக இருந்த நிலையிலேயே 6 பேர் சித்ரவதை செய்து கொல்லப்பட்டனர். நீதி மன்றத்தில் வழக்கு நடந்து, 172 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. உலகமே இந்த தீர்ப்பைப் பார்த்து அதிர்ச்சி யடைந்து நின்றது.

அப்பொழுது தான் பிரிட்டிஷ் நாடாளு மன்றத்தில் ஒரு விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் எத்தனை பேர் இறந்தார்கள்? அதில் எத்தனை பேர் ஆங்கிலேயர்? எத்தனை பேர் தூக்கிலிடப்பட்டவர்கள்? என்பதில் எல்லாம் அவர்கள் அதிகம் கவலைப்பட்டுக் கொள்ளவில்லை. இந்திய மக்கள் வரியின் மூலம் செலுத்தும் வருமானம் பெரிய அளவில் குறைந்தது என்பதை விவாதித்து கொண்டிருந்தாகக் கூறப்படுகிறது. இதுதான் அன்றைய பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் நிலை.

எத்தனை ஆண்டுகள் கடந்து விட்டன. எல்லோரும் இதை மறந்துவிட்டார்கள். சுதந்திரப் போராட்டத்தில் நடந்த இந்த முக்கிய நிகழ்ச்சி களைப் போராட்டக் களம் மறக்கவில்லை. இது அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. போராட்ட வரலாறு மீண்டும் புதிதாய் பிறப் பெடுப்பதாக நான் புரிந்துகொண்டேன். சுதந்திரப் போராட்டத்தின் இந்த தாக்கம் இன்றைய விவசாயப் போராட்டத்திற்கான ஊக்கசக்தியாக மாறியுள்ளதுதான் இன்றைய எதார்த்தம்.

சுதந்திரப் போராட்டத்தின் இரண்டாவது கட்டம், அகில இந்திய விவசாயிகள் சங்கம் தோற்றம். 1936 ஆம் ஆண்டில் இது லக்னோவில் தோற்றுவிக்கப்படுகிறது. முதுபெரும் சோசலிஸ்டு தலைவர் எம்.ஜி. ரங்கா, ஜெயப்பிரகாஷ் நாராயணன், எழுத்தாளர் ராகுல் சங்கர்தியாயன். இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், இசர்டு.ஏ.அகமது போன்றவர்கள் தலைமைப் பொறுப்பேற்று செயல்பட்டு வந்துள்ளனர். ஆனால் பிற்காலத்தில் கம்யூனிஸ்டு சங்கமாக இது அறியப்படுகிறது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை இரண்டாகப் பிரிந்தபோது, 1964-க்கு பிறகு, சங்கங்களும் இரண்டாக பிரிந்து செயல்படுகின்றன. அதுல்குமார் அஞ்சான், ஹன்னன் முல்லா ஆ ஆகிய இருவரும் இந்த இரண்டு சங்கங்களுக்கும் பொதுச் செயலாளர்கள்.

இந்த சங்கம் சுதந்திரத்திற்கு பிந்தைய காலங்களில் பல்வேறு பிரச்சனைகளை கையிலெடுத்துப் போராட்டங்களை நடத்தி யுள்ளது. உழுபவனுக்கு நிலம் சொந்தமாக இருக்கவேண்டும் என்று நாடு தழுவிய போராட்டத்தை தொடங்கி, நில உச்சவரம்பு சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது.

நாடு விடுதலை பெற்றதற்குப் பின்னர், விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் பல அணைகள் கட்டப்பட்டன என்றாலும் அதற்கான கோரிக்கைகளை முன் வைத்து, பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தியது இந்த விவசாய சங்கங்கள்தான்.

பசுமைப் புரட்சி பல்வேறு நெருக்கடிகளை இந்திய விவசாயத்தில் ஏற்படுத்திவிட்டது. இரசாயன உரங்கல் இல்லாமல் விவசாயம் இல்லை என்றாகிவிட்டது. மற்றைய இயந்திரப் பயன்பாடுகள் கூடுலாகி விட்டது. விவசாயம் பொருளாதார நெருக் கடியில் சிக்கிக்கொண்டது.

இன்றைய நவீன விவசாயம், பல்வேறு சிந்தனைகளை நம்மிடம் தோற்றுவித்துள்ளது. சுற்றுச் சூழல் பாதிப்பில்லா விவசாயம், உடல் நலத்தையும் மண் நலத்தையும் பாதிக்காத விவசாயம், இரசாயன உரங்கள் இல்லாத விவசாயம், கார்ப்பரேட் கொள்ளையிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் தற்சார்பு விவசாயம் என்று பல்வேறு சிந்தனைப் போக்குகள் வளர்ந்துள்ளன.

விவசாயத் துறையில் பல்வேறு சிந்தனைப் போக்குகள் வந்துள்ளதால், பலதரப்பட்ட விவசாய சங்கங்களின் தோற்றமும் தவிர்க்கமுடியாமல் நிகழ்ந்துவிட்டது. கல்வி கற்ற புதிய தலை முறையிடமும் மண்ணையும் விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு கூடுதலாகி, சிறியதும் பெரியதுமான பல்வேறு செயல்பாட்டுக் குழுக்களும் தோற்றம் கண்டுள்ளன.

பன்மைத் தன்மை கொண்ட இவை எல்லாவற்றையும் இவ்வாறு இணைப்பது எது என்ற கேள்விக்கு சரியான பதில் இதுவரை கிடைக்கவில்லை. இப்பொழுது கிடைத்துள்ளது. அந்த பதில், இந்திய விவசாயிகளின் அவிழ்க்க முடியாத முடிச்சுகளை அவிழ்த்துவிடும் என்று நான் நம்புகிறேன்.

(புரட்சிப் பயணம் தொடரும்)