(21) ராம்புரா கிராமத்தின் போர்க்குணம்!
ராம்புரா என்பது அந்த கிராமத்தின் பெயர். டெல்லியின் போராட்டக் களமான சிங்கு எல்லையிலிருந்து, சுமார் 450 கிலோ மீட்டர் தூரத்தில் அது இருந்தது. விவசாயிகளின் போராட்டக் களத்தில்தான் அந்தக் கிராமம் பற்றிய தகவல் எனக்குக் கிடைத்தது. ஒவ்வொன்று மிகவும் ஆர்வம் தரக்கூடியதாக இருந்தது. கிராமத்தின் கதைகளைக் கேட்கும்போது பாலைவன மணலும் ஒட்டகங்களும் நிறைந்த ஒரு சிறு கிராமம், மனதுக்குள் தோன்றித் தோன்றி மறைந்துகொண்டே இருந்தது.
பொதுவாக எல்லைப்புறம் என்றாலே உடலுக்குள் பதட்டம் வந்துவிடுகிறது. எல்லைப்புறத்தை நினைக்கும்போதெல்லாம், வெடிச்சத்தம் மனதுக்குள் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. சிறுவயதில் எல்லைப்புறத்தில் நடக்கும் வானொலி செய்திக்காக காத்துக்கிடந்த காலங்கள் இருந்தன. ஊராட்சிமன்றத்தின் ஒரே ஒரு வானொலிப் பெட்டியைத் தவிர, அப்பொழுது வேறு யாரிடமும் வானொலிப்பெட்டி இருந்ததில்லை. இதன் பின்னர் எல்லைப்புறங்களைப் பற்றி அறிந்துகொள்ள எத்தனையோ வசதிகள். இன்று கைபேசி மூலம் அனைத்தையும் தெரிந்துகொள்ள முடிகிறது. ஒவ்வொரு பருவத்திலும் தேசபக்தி என்று, என் மனதில் எல்லலைப்புறம் குறித்த தகவல்கள் ஏராளமாய்ப் பதிந்து கிடக்கின்றன.
அரசியல் வாழ்க்கை ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு மனநிலையை எனக்குள் உருவாக்கிக் கொண்டேயிருந்தது. காலம் செல்லச் செல்ல எல்லைப்புறங்களில் ஏதேதோ நடக்கிறது. இவை எல்லாம் மாயத் தோற்றங்களா என்ற சந்தேகம் எனக்குள் வரத்தொடங்கியது. உலகில் யுத்தமும் மோதல்களும் அத்தியாவசியமா என்று யோசித்துப் பார்க்கும் போது, இவை எல்லாம் தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது.
மிருக வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, மனித சமுதாயம் உருவானது வளர்ச்சிதான் என்ற போதிலும் அதில், ஆதிக்க சக்திகள் குடியேறி, சுரண்டலை வளர்க்கத் தொடங்கியபோது, மோதல்களும் பின்னர் போரும் வெடிக்கத் தொடங்கின. ஆதிக்கச் சுரண்டலின் காரணமாக உருவான போர்களால் மனிதர் அழிந்ததைவிட வேறு எதிலும் மனித இனம் கூடுதலாக அழிந்துவிடவில்லை. போரினால் எத்தனை கோடி மக்கள் இறந்துபோயிருக்கிறார்கள். ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள நாகரிக மனிதர் கண்டறிந்த ஆயுதங்கள் அநாகரிகமானவை. அணுக்குண்டு களைவிட அநாகரிகமான வேறு ஆயுதங்கள் வேறு ஏதாவது உண்டா? மனிதரை மனிதர் கொல்லு வதற்கு எத்தனை குரூரமான போர்க்கருவிகள். மனிதர் மிருகமாக இருந்தபோது இல்லாத தீமை செய்யும் குணம், போர்புரியத் தொடங்கியதற்கு பின்னர் மனிதரிடம் பரவத் தொடங்கியது.
போராட்டம் தீவிரம் அடைந்துகொண்டிருந்த ஒரு காலை நேரத்தில், பஞ்சாப் மாநிலம் புரோஸ்பூர் மாவட்டம், ராம்புரா என்னும் கிராமத்தைப் பற்றிய தகவல்கள் எனக்கு கிடைத்தன. இந்தியாவின் எல்லைப்புற கிராமம் ஒன்றின் அரசியல் நிலைமையை எடுத்துச் சொல்வதாக இந்த தகவல்கள் அமைந்தது.
குருசரண்சிங் தஞ்சு, வயது 46. இவர் ராம்புரா மாவட்டத்தைச் சார்ந்தவர். ராம்புரா எல்லையோர கிராமம். இந்த கிராமம் குறித்த தகவல்களை குருசரண்சிங் தஞ்சு எடுத்துச் சொன்ன போது, நான் ஒரு நிமிடம் மௌனமானேன். நான் இதுநாள் வரையில் கற்பனையில் மட்டும் பார்த்து வந்த இந்தியாவின் எல்லைப்புற கிராமத்தைச் சார்ந்தவரைப் பார்க்கிறோம் என்ற அதிர்ச்சியில் ஏற்பட்ட மௌனம் அது.
திடீரென்று எல்லைப்புறம் பற்றிய சிந்தனையை ஒருவாறு நிறுத்தி வைத்துவிட்டு, போராட்டம் பற்றிய விவரங்களை அவரிடமிருந்து திரட்டுகிறேன். இந்தியாவின் பதட்டம்மிக்க ஒரு ஒதுக்குப்புறத்திலிருந்து போராட்டத்தில் பங்கேற்க வந்திருக்கிறார்கள் என்பதே முதலில் ஆச்சரியத்தை தந்தது. இதன்மூலம் போராட்டம் முழு பஞ்சாப் மக்களையும் ஒருங்கிணைத்துள்ளது என்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. இது எனக்கு ஒருவிதமான பிரம்மிப்பைத் தந்தது.
குருசரண்சிங் தஞ்சு தங்கள் பங்களிப்பு பற்றி பேசத் தொடங்கினார். முழு பஞ்சாப் மாநிலத்திலும் மக்கள் பிரச்சனையைப் புரிந்துகொண்டு எழுந்த போது, ராம்புரா கிராம மக்களும் பிரச்சினையைப் புரிந்துகொண்டார்கள் என்றார். இதன்பின்னர் கிராம மக்கள் மாநிலம் தழுவிய எல்லா போராட்டங்களிலும் பங்கேற்கத் தொடங்கினர். அதிகம் கல்வியறிவு இல்லாத அந்த மக்கள் தங்கள் நிலம் பறிபோகப் போகிறது என்பதை அறிந்த வுடன் பெரும்கோபத்துடன் போராட்டத்தில் பங்கேற்க முன்வந்தார்கள் என்றார் குருசரண்.
"எப்பொழுது நீங்கள் இந்தப் போராட்டக் களத்திற்கு வந்தீர்கள்'' என்று கேட்டேன். "நேற்று காலை'' என்றார். வாட்ட சாட்டமான உடல் அமைப்பு. ஒருவித கூச்ச சுபாவம் கொண்டவர். என் முகத்தைப் பார்க்காமல் பேசிக்கொண்டிருந்தார். "நீங்கள் மட்டும் தனியாகப் போராட்டத்திற்கு வந்தீர்களா?'' என்று நான் கேட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதில் என்னைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்தியது.
ராம்புரா கிராமம், கிட்டத்தட்ட ஆயிரம் பேரைக் கொண்ட ஒரு சிறிய கிராமம். "டெல்லி சலோ' போராட்டம் சென்ற ஆண்டு நவம்பரில் தொடங்கியபோது, மூன்று டிராக்டர்களில் அந்த ஊரைச் சார்ந்தவர்கள் புறப்பட்டார்கள். அவர்கள் மொத்தம் ஐம்பது பேர். "தொடர்ந்து இன்றுவரை எங்கள் கிராமத்தின் பங்களிப்பு இங்கு இருந்துவருகிறது'' என்றார்.
"அவர்கள் உணவுக்கு, செலவுக்கு என்ன செய்கிறார்கள்?'' என்று கேட்டேன். அடுத்து "இவர் கள் நிரந்தரமாக இங்கேயே தங்கியிருக்கிறார்களா? இவர்களுக்கு நிலம் இல்லையா? விவசாயம் இல்லையா?'' என்று கேட்டேன்
குரு சரண்சிங் என்னைப் பார்த்து சிரித்தார். "போராட்ட முறைகளை நீங்கள் அறிந்திருக்க வில்லையா?'' என்று கேட்டார். "இல்லை' என்று நான் சொல்லப் போகும் பதிலுக்காக காத்திராமல் அவர் பேசத் தொடங்கினார். போராட்டத்தில் பங்கேற்பவர்கள் சுழற்சி முறையில் பங்கேற்பதாக கூறினார். இதை நான் புரிந்துகொள்ளவில்லை. என்னை தெளிவுபடுத்தும் முயற்சியில் இறங்கினார்.
"எங்கள் கிராமத்திலிருந்து போராட்டத்தில் கலந்துகொள்ள ஆரம்பத்தில் ஐம்பது பேர் வந்தார் கள். வந்தவர்கள், அந்த மூன்று டிராக்டர்களையும் தங்கிக்கொள்ளும் வீடாக மாற்றிக்கொண்டார்கள். அவர்களுக்கு தேவையான கோதுமை மாவு, பால் காய்கறிகள் என்று அனைத்தையும் எங்கள் கிராம மக்களே திரட்டி அனுப்புகிறோம். இதைத் தவிர நன்கொடையும் திரட்டி அனுப்புகிறோம். இவை எல்லாவற்றிலும் சுழற்சி முறைதான் முக்கியமானது'' என்றார்.
சுழற்சி முறை என்பது இதுதான். போராட்டமும் தொய்வில்லாமல் நடக்கவேண்டும். அதைப்போலவே விவசாயப் பணிகளும் பாதிப்பில்லாமல் நடக்கவேண்டும். இந்த இரண்டையும் போராட்டக் களத்தில் பங்கேற்கும் விவசாயிகள், தங்களின் முக்கியமான கடமையாகக் கருதுகிறார்கள். போராட்டத்தின் உயிர், இதில் அடங்கியிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. பின்னர் போராட்டக் களமெங்கும் இந்த உண்மையை அறிந்துகொள்ள முயற்சி செய்தேன். போராட்டம் வீரியத்துடன் முன்னேற விவசாயத் தில் எந்தவிதமான தொய்வும் இல்லாமல் இருக்க இவர்கள் சுழற்சிமுறையைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். இந்த அர்ப்பணிப்புதான் இந்தப் போராட்டத்தை, உலக மக்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
ஆனாலும் அந்த எல்லையோர இந்திய குடிமகனிடம் நான் கேட்கவேண்டிய அந்தக் கேள்வி மட்டும் பத்திரமாக என்னிடம் இருந்தது. என்னை வெகுகாலமாக அந்தக் கேள்வி துரத்திக் கொண்டேயிருக்கிறது. உலக அரசியலிலும், இந்திய அரசியலிலும் மிகவும் முக்கியமாக இன்றும் இந்தக் கேள்வி உணரப்படுகிறது. பசி போக்கி, கல்வி, மருத்துவம் என்ற எல்லாவற்றையும் மக்களுக்கு தருவது அரசின் கடமையாகும். இதை ஏன் செய்ய முடியவில்லை என்பதற்கும் இந்தக் கேள்விக்கும் தொடர்பு இருக்கிறது.
"உலகம் முழுவதும் கூடி, யுத்தத்தை நிறுத்த முடியுமா?' என்பதுதான் அந்தக் கேள்வி. "யுத்தம் நிறுத்த முடியாதது என்றும், போரும் பகையும் மனிதரிடமிருந்து அகற்ற முடியாதவை' என்றும் சிலர் உறுதிபட கூறுகிறார்கள். ஆனாலும், யுத்தத்தை நிறுத்தமுடியும் என்ற சமாதானக் குரல் உலகம் தோன்றிய காலத்திலிருந்து ஓங்கி ஒலித்துக்கொண் டேயிருக்கிறது. யுத்தத்தை யார் விரும்புகிறார்கள், மக்களா? அல்லது அரசாங்கமா? மக்கள் யுத்தத்தை விரும்புகிறார்கள் என்றால், அதற்கு அடிப்படை யான காரணங்கள் ஏதாவது இருக்கவேண்டும்.
"இந்திய நாட்டிற்கு யுத்தம் வேண்டுமா? உங்களுக்கும் பாகிஸ்தானிய மக்களுக்கும் ஏதாவது பகை இருக்கிறதா? மோதல் ஏதாவது உண்டா?' என்று கேட்கிறேன்
குரு சரண்சிங் அளித்த பதிலில் வெளியே சொல்லமுடியாத உண்மை ஒன்று மறைந்து கிடந்ததை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
(புரட்சிப் பயணம் தொடரும்)