(33) இந்திய பண்பாட்டின் பேரழகு
நான் டெல்லி மாநகரை பலமுறை பார்த்திருக்கிறேன். எனது முதல் பயணம் 1975 ஆம் ஆண்டில். கடந்த 45 ஆண்டுகளில் டெல்லியில் தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதுவரை டெல்லியில் பார்க்காத இடங்களை அன்று பார்க்கிறேன். ஒரு நாள் முழுவதும் ஓய்வற்ற பயணம்.
அன்று குடியரசு நாள். சுதந்திரத்திற்குபின் ஒவ்வொருவரும் தங்களை இந்த நாட்டின் குடிமக்களாக உணர்ந்துகொண்ட நாள். இந்த கொண்டாட்டம் டெல்லியை உற்சாகவெள்ளத்தில் மூழ்கடித்துவிடும். ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட்டத்தை கூடி நின்று ஆரவாரம் செய்து, மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தில் டெல்லி மக்கள் மிதந்து களிப்படைவார்கள். ஆண்டுக்கு ஆண்டு கொண்டாட்டங்களில் வேறுபாடுகள் இருந்து கொண்டே இருக்கும்.
இந்திய ஒற்றுமையின் முக்கியமான கொண்டாட்ட மையம்தான் குடியரசு நாள். ஒவ்வொரு மாநிலமும் தங்கள் பண்பாட்டை தேசத்திற்கு தெரிவிக்கும் விதத்தில் தங்கள் சிறப்பை இங்கு கொண்டு வந்து அரங்கேற்றுவார்கள். ஒருங்கிணைந்த இந்திய பண்பாட்டின் பேரழகு இது. பார்ப்பவர்களை கிறக்கமுற வைத்து விடும். அனைத்துப் பண்பாட்டையும், டெல்லி, அந்த நாளில் சந்தித்துவிடும்.
இதன் பின்னர் ராணுவ அணிவகுப்பு நடைபெறும். முப்படைகளைச் சார்ந்தவர்கள் அணிவகுப்பில் கலந்துகொள்வார்கள். படையின் முன்வரிசையில் உயர்ரக டாங்கி அணிவகுத்து செல்லும். கப்பல், விமானப்படைகளின் உயர்திறனை உலக நாடுகளுக்கு அறிவிக்கும் அணி வகுப்பாக இது அமையும். திடீரென்று வான்வெளியில் விமானங்கள் தலைகாட்டும். இதையடுத்து விண்ணில் சாகசங்கள் தொடங்கிவிடும். இந்த நிகழ்வு அனைவரையும் வேற்றுலகத்திற்கு அழைத்துச் சென்றுவிடும்.
ஆனால் அன்றைய எனது குடியரசு தினம் முற்றிலும் வேறுபட்டிருந்தது. இதுவரை டெல்லி பார்த்திராத வித்தியாசமான குடியரசு தின எழுச்சி. இது விவசாயிகளின் குடியரசு தின அணிவகுப்பு.
இந்த குடியரசு அணிவகுப்பு மூன்று இடங்களிலிருந்து புறப்பட்டது. நான் சிங்கு எல்லையிலிருந்து புறப்பட்டு அணிவகுப்பில் கலந்து கொள்வதாக முடிவு செய்திருந்தேன். என்னை தனது வாகனத்தில் ஏற்றி செல்வதாக உறுதி அளித்தவர் ஒரு பஞ்சாப் விவசாயி. பட்டதாரி இளைஞர். அவரிடம் ஒரு நவீன டிராக்டர் இருந்தது. அது சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. விவசாய சங்கக் கொடியும் தேசியக் கொடியும் இணைந்து பறந்து கொண்டிருந்தன.
நாங்கள் சிங்கு எல்லையிலிருந்து புறப்பட வேண்டும். திரும்பிய இடமெல்லாம் டிராக்டர். நான் அதிகாலை ஐந்துமணிக் கெல்லாம் அங்கு சென்று விட்டேன். சாப்பிட்டு விட்டு ஏழு மணிக்கு வந்தால் போதும் என்று அந்த நண்பர் குறிப்பிட்டார். கூட்டம் உருவாக்கிய அத்தனை நெருக்கடிகளையும் கடந்து நான் மீண்டும் 6.30 மணிக்கு வந்து பார்த்தேன். அதற்குள் டிராக்டர் புறப்பட்டு விட்டது. கடந்த பத்து நாட்களாக நான் இந்த பேரணியில் கலந்துகொள்ளும் கனவில் இருந்தேன். எனக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.
என்னை அழைத்து செல்வதாக சொன்ன அந்த பஞ்சாப் இளைஞர் மீது எனக்கு கோபம் வரவில்லை. ஆனால் மோடியின் மீது கோபம் வந்தது. குடியரசு தின டிராக்டர் பேரணியை நடைபெறாமல் தடுத்து விடுவதற்கு, இந்தியஅரசின் உளவுத் துறை பல்வேறு மட்டரகமான தந்திரங்களை உருவாக்கி வைத்திருந்ததை விவசாயிகளின் போராட்டத் தலைமை முன்கூட்டியே புரிந்து கொண்டது. அவர்கள் மதிநுட்பம் கொண்டவர்கள். சிறந்த கட்டுப்பாடுடன் எதையும் லாவகமாக எதிர்கொள்ளும் சிறப்பைக் கொண்டவர்கள். சதி அறிந்து, அவசரமாக திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே பேரணியைத் தொடங்கிவிட்டனர். நான் என்ன செய்வது என்று திகைத்துப்போய் நின்று கொண்டிருந்தேன் வரிசையாக டிராக்டர்கள் விரைந்து சென்றுகொண்டிருக்கின்றன. அதில் ஏறிச் செல்லும் விருப்பத்தில் ஒவ்வொன்றையும் நிறுத்திப் பார்க்கிறேன். அவர்களில் சிலர் என்னை பரிதாபத்துடன் பார்க்கின்றனர். அவர்களுக்கு என்னை வண்டியில் ஏற்றிச்செல்ல விருப்பம் இருந்திருக்கலாம். தர்மசங்கடமான சூழல். வண்டிகள் விரைந்து வந்து கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு நிறுத்துவதற்கு போதிய நேரம் கிடைக்காது. அப்படி மீறி நிறுத்தினால் அது விபத்தில் போய் முடிந்துவிடும்.
அப்பொழுதுதான், எனக்கு திடீரென்று அந்த எண்ணம் தோன்றியது. அது கொஞ்சம் ஆபத்தான எண்ணம்தான். இந்த வயதில் இதை நம்மால் செய்ய முடியுமா? இது தேவைதானா? என்பதையும் சிந்திக்கத் தொடங்கிவிட்டேன். இருந்தாலும் முயற்சித் துப் பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந் தேன். இது, என்னை அறியாமல் என்னிடம் இன்று வரைவாழ்ந்து வரும் இயல்பு.
அது ஒரு பழைய ரக டிராக்டர். அதன் கட்டமைப்பு நீண்டகாலம் உயிர் வாழ்ந்து விட்டதை தெரிவிக்கிறது. மற்ற டிராக்டர்களுக்கு ஈடுகொடுத்து விரைந்து செல்ல இதனால் முடியவில்லை. ஓட்டத்தில் பின்தங்கி விட்டது. அதனால் அது ஒரு ஓரத்தில் ஒதுங்கி சென்று கொண்டிருந்தது. நான் கையில் எந்தப் பொருளை யும் வைத்திருக்கவில்லை. இந்த காலத்தில் இளைஞர்களைப்போல முதுகில் சுமக்கும் ஒரு நடுத்தர பை மட்டும் வைத்திருந்தேன். அந்த டிராக்டரோடு சிறிது தூரம் சேர்ந்து ஓடினேன். அவர்களிடம் எந்த விதமான அனுமதியும் கேட்கவில்லை. எனது உடலிலுள்ள சக்தி எல்லாம் திரட்டி டிராக்டர்பின் இணைப்பு பெட்டிக்குள் ஏறிவிட்டேன். அவர்கள் பேசிய மொழி பஞ்சாபியா? இந்தியா? எனக்குப் புரியவில்லை. என்னை கடுமையான சொற்களால் பேசியிருக்க வேண்டும். நான் எதைப் பற்றியும் கவலைப்படாமல், ஒரு ஓரத்தில், பின்னால் வரும் டிராக்டர்களையும் பொது மக்களையும் பார்க்கக் கூடிய ஒரு இடத்தில் வசதியாக அமர்ந்து கொண்டேன். அதில் ஆறு பெண்களும் நான்கு ஆண்களும் இருந்தார்கள். அது எனக்கு மறக்க முடியாத ஒரு நாள் உலகமாகிப் போனது.
டிராக்டரில் இருந்தவர்களிடம் நல்ல போராட்ட அரசியலின் ஞானம் இருந்தது. உணர்வுப்பூர்வமாக ஒவ்வொருவரும் ஒரு தகவலை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். எல்லோருமே பா.ஜ.க அரசாங்கத்தின் மீது உச்சகட்ட கோபத்தில் இருந்தார்கள். அவர்கள் என்னிடம் பல்வேறு தகவல்களைக் கூறிக் கொண்டிருந்தபோது, வெளியே தீவிரமான முழக்கங்கள் கேட்டுக் கொண்டே இருந்தது, நான் வெளியே திரும்பிப் பார்க்கிறேன்.
அணிவகுப்பு நான்கு வரிசைகளில் வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொன்றிலும் உற்சாகப் பெரு வெள்ளம். என் வாழ்நாளில் எத்தனையோ அணிவகுப்புகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இது போன்றதொரு அணிவகுப்பைப் பார்த்த தில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை டிராக்டர்கள். பின்னர் இது குறித்து அறிந்து கொண்டவை மிகவும் முக்கியமானவை.
பஞ்சாப், அரியானா ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே 12 லட்சம் டிராக்டர்கள் இருப்பதாக பத்திரிகைள் எழுதின. இதில் குறைந்தது 10 லட்சம் பேரணியில் கலந்து கொண்டிருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டி ருந்தது. டெல்லி டிராக்டர் பேரணி பற்றி மற்றொரு தகவலும் வெளிவந்திருந்தது. பல மாநிலத்தைச் சார்ந்த விவசாயிகள் உ.பி மாநிலத்தின் மூலம்தான் டெல்லிக்கு வந்துசேர முடியும். இவர்கள் மீது உ.பி அரசு பெரும் அடக்குமுறையை ஏவத் தொடங் கியது. மொழியறியாது பிற மாநில விவசாயிகளின் டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உத்திரப் பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளில் கோபம் கொண்ட பொதுமக்கள் பெரும்கூட்டமாக காவல் நிலையத்தில் நுழைந்தார்கள். போலீசாரால் தடுக்க முடியவில்லை. அவர்களே விவசாயிகளை விடுதலை செய்து டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்ற தகவலும் அதில் இருந்தது. எல்லா மாநிலங்களி லிருந்தும் வந்த டிராக்டர்கள் குறைந்த பட்சம் 12 லட்சம் இருக்கும்.
டிராக்டர் ஊர்வலத்திற்கான அனுமதி டெல்லி (Ring road) சுற்றுச் சாலையில் வழங்கப்பட்டிருந்தது. காலை 7 மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை டிராக்டர் பயணம். இரண்டு பக்கங்களிலும் மக்கள் பெருவெள்ளம், திரண்டு. மலர்தூவி வரவேற்றார்கள். கூட்டம் கூட்டமாக ஓடிவந்து தண்ணீர் பாட்டில்களை வழங்கிக் கொண்டே இருந்தார்கள். உணவுக்குப் பஞ்சமே இல்லை. கை காட்டி டிராக்டரை மெதுவாக ஓடச் செய்து, வழங்கிக் கொண்டே இருந்தார்கள். நான் மீண்டும் சிங்கு எல்லையில் இறங்கும் வரை கூட்டம் இருந்துகொண்டே இருந்தது. .
நான் விடுதலைப் போராட்டத்திற்கு பின்னர் பிறந்தவன். சுதந்திரப் போராட்டத்தின் விடுதலை தினத்தை சிறு வயதில் பலமுறை கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். ஆனால் என்னை பொறுத்த வரை நான் அன்று பார்த்தது குடியரசு தின விவசாயிகளின் பேரணி அல்ல. இரண்டாவது இந்திய சுதந்திரப் போராட்ட வெற்றி விழாவுக்கான ஒத்திகை என்று மனம் நினைத்துக்கொண்டது.
(புரட்சிப் பயணம் தொடரும்)