(29) புதிய அரசியல்

து ஒரு மாணவர் பாசறை. இந்தியாவின் எல்லாப் பகுதியிலிருந்து மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் டெல்லி போராட்டக் களம் நோக்கி குவிந்த வண்ணம் இருந்தார்கள். இவர்களை நெருங்கி அருகில் சென்று பார்த்தால், பல்வேறு சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டவர்களாக தெரிகிறார்கள். அவர்களிடம் அமைந்த தத்துவார்த்த ஆழம் என்னை திகைக்க வைக்கிறது.

என் தலைமுறையை சார்ந்த பல பேர், 1970-கள் 80-களில் இளைஞர்களாக இருந்த போது, தீவிரத்துடன் அரசியலில் பங்கெடுத்தோம். இரவு பகலென்று பாராமல் செயல்பட்டோம். அந்தக் காலத்தில் கம்யூனிஸ்டு கட்சிகளில் பல்வேறு பிரிவுகள் தோன்றிக்கொண்டேயிருந்தன. ஒவ்வொன்றுக்கும் தனித்திட்டங்களும் செயல்பாட்டு அணுகுமுறைகளும் இருந்தன. சர்வதேச அரசியலிலும் கம்யூனிஸ்டுகளுக்கு பல்வேறு தலைமைகள் இருந்தன.

ma

Advertisment

ரஷிய தலைமை, சீனத் தலைமை என்று இரண்டு தலைமைகள் உருவாயின. இதைத் தவிர ஒவ்வொரு நாடுகளின் தன்மைகளுக்கேற்ப பல கம்யூனிஸ்டு கட்சிகள் செயல்பட்டன. நக்கசல்பாரிகள் போன்ற தீவிர அமைப்புகளும் நாடுகள் தோறும் செயல்பட்டன. இது, கம்யூனிஸ்டு உலகத்தில், இரண்டாம் உலகப்பெரும் போருக்கு முந்தைய காலத்திலிருந்து வேறுபட்ட சூழல்.

அப்பொழுது ஒரு கட்சியை சார்ந்த இளைஞர்கள் மற்றொரு கட்சியை சார்ந்த இளைஞர்களைச் சந்தித்தாலே சந்தேகம் கொள்வார்கள். ஒவ்வொரு அமைப்பும் ரகசிய ஸ்தாபனங்களாக தங்களைக் கருதிக் கொண்டன. இன்று உலகமய அரசியலைக் கொண்ட கார்ப்பரேட்டுகளின் காலம். இந்த காலத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு சீனத் தலைமை, ரஷிய தலைமை என்ற தனித் தனித் தலைமைகள் இல்லை. கார்ப்பரேட் ஆதிக்கத்தை எதிர்த்து பிரச்சினைகள் அடிப்படையில் உழைக்கும் மக்களைத் திரட்டும் ஒரே அரசியல்தான், புதிய அரசியலாக பிறப்பெடுத்துள்ளது.

இந்த புதிய அரசியல், சில புதிய நிலைமைகளை உருவாக்கியுள்ளது. இன்றைப் போராட்டக் களத்தில் பல்வேறு அமைப்புகள் இருந்தாலும் அவர்களிடம் இணைந்து செயல்பட வேண்டும் என்ற கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பாடுகள் இருந்ததை என்னால் உணர முடிந்தது. இன்று அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், அனைத்திந் திய இளைஞர் மன்றம், இந்திய மாணவர் சங்கம், ஐனநாயக வாலிபர் சங்கம் போன்ற பல்வேறு புரட்சிகர மாணவர் இளைஞர் அமைப்புகள் இங்கு களத்தில் இருப்பதை நான் கவனித்தேன். இவர்களி டம் ஒன்றுபட்டு செயல்படுவதற்கான சித்தாந்தப் பூர்வமான இணக்கம் இருப்பதைப் பார்த்து, இது காலத்தின் வளர்ச்சி என்று புரிந்து கொண்டேன்.

Advertisment

இன்று அரசியலை உணர்ந்து மாணவர்கள் பங்கேற்கும் புதிய நிலைமை, போராட்டக் களத்தில் உருவாகியுள்ளது. இந்த புதிய வளர்ச்சி, பல இளைஞர்களிடம் பேசி பார்க்கும் எனக்கு தெளிவாக தெரிந்தது. இந்த புதியநிலை குறித்து இவர்களோடு சந்தித்து உரையாட ஆவல் கொண்டேன்.

நான் முதலில் ஒரு மாணவரை சந்திக்க விரும்பினேன். விவசாயிகள் போராட பஞ்சாபிலிருந்து புறப்பட்டபோது அவர்களோடு புறப் பட்டு இன்றுவரை களத்தில் இருப்பவர். அவருடைய இடத்தைக் கண்டுபிடிப்பது எனக்கு சங்கடமாக இருந்தது. நான் சென்ற வழிகளில் டிராக்டர்களில் அமைக்கப்பட்ட வீடுகள் ஒன்றோடு ஒன்று பிணைப்பைக் கொண்டுள்ளது. எல்லாம் கயிறுகளால் இணைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு கயிறாக தாண்டி செல்வது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. ஒருவாறாக அந்த இடத்தை சென்றடைந்துவிட்டேன்

நான் சென்றது மாலை நேரம். நெருப்பு மூட்டி சிலர் வட்டமாக அமர்ந்து உடலுக்கு கொஞ்சம் வெப்பமேற்றிக்கொண்டிருந்தார்கள். ஒரு நீளமான டிரக், அதன் மீது பகத்சிங் படம் அச்சிடப்பட்ட பேனர் ஒன்று கம்பீரமாக காட்சி தருகிறது. மேல் பகுதியில் குளிர் வராதவகையில் டார்பாலீன் போடப்பட்டுள்ளது. அடியில் வைக்கோல் விரிக்கப்பட்டுள்ளது. மூன்று மண்ணெண்ணெய் ஸ்டவ்வில் ரொட்டியும் அதற்கு தேவையான சப்ஜியும் செய்து கொண்டிருக்கிறார் கள் இரண்டு பெண்கள். அவர்கள் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் மிகவும் எளிமை யானதாக இருக்கிறது. அந்த சூழல் பஞ்சாப்பின் கிராமப்புற வாழ்க்கையை பிரதிபலிக்கிறது.

d

சிறிய கயிற்றுக் கட்டில். அதில் அமர்கிறேன். அந்தப்பெண்களை அணுகி அவர்களுடன் பேசிப் பார்க்கிறேன். அவர்கள் எல்லோருமே மாணவர்கள். பஞ்சாப் பல்கலைக்கழத்திலும் பஞ்சாபி பல்கலைக் கழகத்திலும் படித்துக் கொண்டிருப்பவர்கள்.

அந்த தருணத்தில்தான், நான் விக்கி மகேஸ்வரியை சந்திக்கிறேன். எனக்கு இவர் புதியவரல்ல. தமிழகத்தில் மகேஸ்வரி என்னும் பெயர், பெண்கள் வைத்துக்கொள்ளும் பெயர். அது அவரின் தாயாரின் பெயராக இருக்கக்கூடும் என்று அவரிடம் கேட்கிறேன். அது அவர் பிறந்த கிராமத்தின் பெயர் என்கிறார்.

பஞ்சாப்பில் விவசாயிகளின் போராட்டம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிய ஆரம்ப காலங்களில் கூடுதல் கொதிப்படையத் தொடங்கிய கிராமங்களில் மகேஸ்வரியும் ஒன்று, விக்கி இந்த ஊரில் விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர். பட்டமேற்படிப்பில் இரண்டு பட்டங்களை பெற்றுள்ளார். ஒன்று ஆங்கிலம், மற்றொன்று பஞ்சாபி. இரண்டும் மொழிசார்ந்த முதுகலை பட்டங்கள். இதைத்தவிர ஆசிரியர் பயிற்சிப் பட்டமும் பெற்றுள்ளார்.

போராட்டக் களத்தில் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மேலாக இப்பொழுதும் தங்கி வருகிறார். அன்றைய சந்திப்பில் விக்கியின் அனுபவத்தைக் கேட்கிறேன். சென்ற ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களில் விவசாயிகளிடம், இந்திய ஒன்றிய அரசு கொண்டுவந்த கறுப்புச் சட்டங்களுக்கு எதிராக கிராமப்புறத்தில் கிளர்ச்சி தொடங்கப்பட்டன என்றார். இந்த தருணத்தில் பல்வேறு விவசாய சங்க அமைப்புகள் ஒன்றுகூடிய கூட்டுப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தன. இவ்வாறு விவசாயிகளிடம் ஆழமான ஒற்றுமை உருவாகத் தொடங்கிய தருணத்தில் தான், மற்றொரு முன்னேற்றமும் பஞ்சாப்பில் நிகழத் தொடங்கியது.

மாணவர்களும் பள்ளிகள் கல்லூரிகளில் வேலை நிறுத்தத்தை தொடங்கினார்கள். விவசாயிகளோடு இணைந்து போராட்டக் குழுக்களில் பங்கேற்கத் தொடங்கினர். டெல்லிசலோ போராட்டம் தலைநகர் நோக்கிப் புறப்பட்டது. தந்தையரோடு சேர்ந்து மாணவர்கள் டிராக்டர்களில் ஏறி வந்தார்கள். நானும் அவர்களுடனேயே புறப்பட்டு வந்தேன் என்றார். இதில் நான் சந்தித்த ஒவ்வொன்றிலும் ஒரு அனுபவம் இருக்கிறது என்றார் விக்கி. தன் வாழ்நாளில் தனக்கு கிடைத்த ஒரு முக்கிய போராட்ட அனுபவமாக இதைக் கூறிக்கொண்டார்.

நான் விக்கியின் தங்குமிடத்தை கவனிக்கிறேன். இது ஒரு அமைப்பு சார்ந்த மாண வர்களால் நிர்வகிக்கப்படு கிறது. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து மாணவர்கள் இங்கு வந்து சேருகிறார்கள். நான் அங்கு சென்றிருந்த தருணத்தில் ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, பீகார் ஆகிய இடங்களில் இருந்து மாணவர்கள் வந்திருந்தார்கள். சிலர் ரயில் மூலமாக வந்திருந்தார்கள். சிலர் பேருந்துகளில் பல நூறு கிலோ மீட்டர்களை கடந்து வந்திருந்தார்கள்.

எல்லோர் கையிலும் தாளமிடும் டிரம் இருந்தது. தங்கள் புரட்சிகர உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் தங்கள் ஆடைகளில் புரட்சிகர வாசகங்களை எழுதியிருந்தார்கள். கூட்டத்தின் எல்லா இடங்களிலும் பகத்சிங், சேகுவேரா ஆகியோர் நீக்கமற நிறைந்து நின்றார்கள்.. இது தொடர்ந்து ஒரே இடத்தில் போராட்டத்திலிருக்கும் விவசாயிகளுக்கு எத்தகைய ஊக்க சக்தி என்பதை களத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும்.

ஒருவிதத்தில் விக்கியை ஒரு இணைப்பு பாலம் என்று சொல்லமுடியும். இவரும், இவரது அமைப்பும் செய்யும் முயற்சியில் இந்தியா முழுமையிலும் உள்ள மாணவர்கள் இங்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்குப் போராட்ட அனுபவங்களை நேரில் பெற்றுக் கொள்கிறார்கள். இது இன்றைய தலைமுறைக்கு உயர்வைத் தரக்கூடிய ஒன்று. இன்று கார்ப்பரேட்டை வலுமையுடன் எதிர்க்கும் ஐக்கிய அரசியல் தேவைப்படுகிறது. இந்த புதிய அரசியலை இந்த மாணவர்கள் இங்கு கற்றுக் கொள்கிறார்கள். இதற்கு விக்கி போன்ற பல இடதுசாரி மாணவர்கள் கடினமாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுது போராட்டக் களத்திலேயே வாழ்ந்துவரும் விக்கியை நான் சந்திக்கிறேன். டெல்லி செல்லும் போதெல்லாம் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் இந்திய பொதுச்செயலாளராக சந்தித்திருக்கிறேன். அந்தவகையில் எனக்கு அவர் நன்கு அறிமுகமானவர். இப்பொழுது நான் சந்திப்பது வேறுபட்ட விக்கியை. ஆறுமாத காலம், மாற்றங்களுக்கான இன்றைய அரசியல் என்ன என்பதை இவர் போராட்டக்களத்தி லிருந்து அறிந்துகொண்டவராக எனக்குத் தெரிகிறார்.

இதைப் போன்று மேலும் சில இளைஞர்களை களத் தில் நான் சந்தித்தேன். மனம் பெரும் மகிழ்வு கொள்கிறது.

(புரட்சிப் பயணம் தொடரும்)