(23) ஆயுத வியாபாரிகளின் தேச பக்தி
லிட்டில் பாய் (Little Boy). பேட் மேன் (Fat man) என்பது, இரட்டையர் இருவரின் பெயர். இந்த பெயர்கள் ஒரு வித்தியாசமான கதையை நமக்கு சொல்லுகிறது.
இந்த பெயருக்குள், நெருப்பு ஆற்றை உருவாக்கிய எரிமலையின் பேரழிவு இருக்கிறது. கோபம் கொண்டு மண்ணையும், மனிதர்களையும் தனக்குள் இழுத்துக்கொண்ட சுனாமிப் பேரலைகள் இருக்கிறது. மலை பிளந்து பலநூற்றாண்டு கால மனித நாகரிகத்தை, நொடிப்பொழுதில் தனக்குள் இழுத்துக்கொண்ட பூகம்பம் இருக்கிறது. ஆனால், இயற்கை சீற்றம் ஒன்றுக்கு விஞ்ஞானிகள் வைத்த பெயரல்ல இது. மனிதக் கூட்டத்தின் தலையில் முதலில் விழுந்த இரண்டு அணுக்குண்டுகளின் பெயர்.
வரலாற்றில் மனிதர், மானுட நாகரிகத்திற்கு செய்த மாபெரும் துரோகச் செயல்தான் அந்த நடவடிக்கை. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6-ஆம் தேதி ஜப்பானின் முக்கிய நகரங்களில் ஒன்றான நாகசாகி மீது, அந்த அணுக்குண்டு வீசப்பட்டது. ஒரு லட்சத்து 29 ஆயிரம் பேர், குண்டு வீசப்பட்ட சில மணி நேரத்துக்குள் இறந்து போனார்கள். இதுவரை பூமித்தாய் பார்த்திராத பெரும் எண்ணிக்கையிலான இந்த இறப்பைப் பற்றி குண்டு வீசியவர்கள் கவலைப்படவில்லை. அவர்களுக்கு வேறு நோக்கம் இருந்தது. இரண்டாவது குண்டு ஆகஸ்டு மாதம் 9 ஆம் தேதி, முதல் குண்டு வெடித்த மூன்றாவது நாளில் ஹிரோஷிமா என்னும் மற்றொரு ஜப்பானிய நகரத்தின் மீது போடப்பட்டது. இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரம் பேர். நாகசாகியின் மீது வீசப்பட்ட குண்டின் பெயர் லிட்டில் பாய், ஹீரோஷிமாவின் மீது வீசப்பட்ட குண்டின் பெயர் "பேட் மேன்'.
இதன்பின்னர் தொடர்ந்து பல ஆண்டுகள் குண்டு வெடிப்பு பற்றி பல்வேறு ஆய்வுகள் நடத்தப் பட்டன. இதில் ஓர் ஆய்வு, அமெரிக்க நிறுவனம் ஒன்றால் நடத்தப்பட்டது. இவர்கள் வெளியிட்ட அறிக்கையில் இன்றையக் கணக்கில் 12 கிலோ மீட்டர் பரப்பளவில் எந்த கட்டிடங்களும் இல்லை. புல்பூண்டுகள் இருந்ததற்கான அடையாளம் கூட இல்லை. அங்கு இருந்த அனைத்தும், கொடிய அணு வெப்பத்தைத் தாங்கமுடியாமல் உருகி, காற்றில் கரைந்து புகை மண்டலமாகிவிட்டன என்று இந்த ஆய்வு கூறுகிறது. கதிர் வீச்சு பல்வேறு நோய்கள் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தது. தொடந்து பல மாதங்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்துகொண்டே யிருந்தார்கள். இதில் 20 ஆயிரம் ஜப்பானிய வீரர்களும் அதே இடத்தில் சாம்பலாகிப் போயினர்.
அமெரிக்கா அணுகுண்டு வீசியதைப் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதன்பின்னர் வெளிவந்த உண்மைகள் அதிர்ச்சி தரத்தக்கதாக இருந்தன. ஜப்பான் போர் நிறுத்தம் செய்ய தயார் என்ற தகவலை தனது உளவுத்துறையின் மூலம் அறிந்துகொண்ட அமெரிக்கா அவசர அவசரமாக அணுகுண்டை வீசியது என்கிறார்கள். பின் இதற்கு உண்மையான காரணம்தான் என்ன என்ற கேள்விக்கு பதில் கிடைத்தது, மானுடத்தை காலகாலமாக வெட்கித் தலைகுனிய வைத்த இழி செயல் பற்றிய தகவலாக அது இருந்தது. அணு குண்டின் சக்தி என்ன என்பதை பரிசோதித்துப் பார்ப்பதற்காக வீசப்பட்டதாக அறியப்படுகிறது. மானுடத்திற்கு இதைவிடவும் வேறு துரோகம், செய்ய முடியுமா? ஆதிக்க லாப வேட்டைக் கொள்ளையர்கள் எதையும் செய்யக் கூடியவர்கள் என்பதற்கு இதைவிடவும் வேறு ஆதாரம் தேவையில்லை.
அணுக்கதிர் வீச்சு மிகவும் அபாயகரமானது. இதற்குமுன்னர் இதுபற்றிய அனுபவம் உலகில் எந்த நாட்டிற்கும் இருந்ததில்லை. மண், காற்று, தாவரங்கள், இயற்கை சூழலின் உயிர் சங்கிலி என்று அனைத்திலும், கதிர் வீச்சு பதுங்கி நின்று எந்த நேரத்திலும், எந்த தீங்கையும் செய்ய பல வருடங்கள் காத்திருக்கிறது. இதை தீங்கு என்று சொல்வதை விடவும், அபாயம் என்றுதான் சொல்லவேண்டும். இந்த பேராபாயம்தான் கண்டறிய முடியாத பல்வேறு விளைவுகள் உயிர் சூழலில் ஏற்பட காரணமாகியது..
அணுக்கதிரால் பாதிக்கப்பட்டவர்களுக் கான ஆணையம் ஆற்ர்ம்ண்ஸ்ரீ இர்ம்க்ஷ ஈஹள்ன்ஹப்ற்ஹ் ஈர்ம்ம்ண்ள்ள்ண்ர்ய் (ஆஇஈஈ) ஒன்று அமைக்கப்பட்டது. மக்கள் மிகவும் அடர்த்தியாக வாழ்ந்து வந்த, நாகசாகி ஹீரோஷிமா முக்கிய பகுதி இது. 1950-ஆம் ஆண்டில் ஆய்வு தொடங்கியது. இந்த நிலப்பரப்பில் உள்ள எல்லா இடங்களி லும் கதிர் வீச்சால் பெரும் பாதிப்பு ஏற்பட் டதை இது உறுதிசெய்தது.
அதில் வேதனை தரத்தக்கது என்ன வென்றால், பரம்பரை பரம்பரையாகத் தொட ரும் மரபணுக்களையும் இது கடுமையாக பாதித்து விடுகிறது. இதன்பின்னர் தலை சிறுத்து மூளை வளர்ச்சிக் குன்றிக் குழந்தைகள் இந்த பகுதிகளில் மிகவும் அதிகமாகப் பிறந்துள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். கதிர் வீச்சு ஏற்படுத்திய மற்றொரு மோசமான விளைவு, பல வகையான புற்று நோய்களை உருவாக்கியது தான். பரவலாக இந்த பகுதியில் பலவகை புற்று நோயால் பாதிக்கப்பட்ட வர்களை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
டெல்லியில் விவசாயிகளின் போராட்டத் தில் ஈடுபட்ட எனக்கு, இந்திய எல்லைப் பிரச் சனைகளை ஒட்டி அணுகுண்டு பிரச்சினைப் பற்றியும் யோசித்துப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இரண்டாம் உலகப் பெரும் போரின் அழிவை, உலக அரசியல் தலைவர்களால் சகித்துக் கொள்ள முடிய வில்லை. உலகை சமாதான வழியில் அழைத்து செல்ல ஐக்கிய நாடுகள் சபை பெரும் முயற்சி எடுத்தது. உலக மக்கள் அனைவரும் ஒன்றுகூடி அணுஆயுதம் வேண்டாம் என்ற குரலை எழுப்பத் தொடங்கினர். இதில் இந்தியாவின் பஞ்சசீலக் கொள்கை முக்கியமானதாக உணரப்பபட்டது.
சுதந்திரம் பெற்ற பின்னர், அணு ஆயுதம் தேவையில்லை என்று உறுதி கொண்டிருந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதே காலத்தில் இந்திய எல்லைகளைப் பாதுகாக்க அணு ஆயுதங்கள் தேவை என்ற பிரச்சாரமும் தொடங்கப்பட்டது. இந்த பிரச்சாரங்கள் கார்ப்பரேட் கம்பெனிகளால் உருவாக்கப்பட்டவை என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்.
இந்தியாவைக் காரணம் காட்டி, பாகிஸ்தானும் பாகிஸ்தானைக் காரணம் காட்டி இந்தியாவும், அணுகுண்டு வெடிப்பு சோதனைகளை நடத்தின. உண்மையாக அணு ஆயுதம் யாருக்கானது?
பாகிஸ்தான் எல்லையோரங்களிலும், இந்தியாவின் எல்லையோரங்களிலும் வாழும் எளிய மக்களின் பாதுகாப்புக்கு அணு ஆயுதங்கள் தேவையில்லை. பின் எல்லைக்கு அணு ஆயுத பாதுகாப்பு ஏன்? அணு ஆயுதம் ஒரு வியாபாரம். இந்த வியாபாரம் இல்லை என்றால் கார்ப்பரேட் நிறுவனங்களின் உயிர் நின்றுவிடும். உள்ளே நுழைந்து தேடிப் பார்த்தால், ராணுவக் கருவிகளை தயாரித்து விற்பனை செய்யும் கூட்டமைப்பின் விருப்பத்தைத் தான் இன்றைய உலகம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
போராட்டக் களம் இதை ஒட்டி மேலும் மேலும் என்னை யோசிக்க வைக்கிறது. அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை இடைவிடாத முழக்கங் கள் என் காதுகளில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. அந்த முழக்கங்களில் எத்தனையோ உணர்ச்சிக் கொந்தளிப்பு. அதில் ஒன்றில் கூட அணுஆயுதப் பெருமைகளோ இந்திய ராணுவத் தளவாடங்களின் பெருமைகளோ இல்லை. எது தேச பக்தி என்பதற்கு சரியான பார்வையை விவசாயிகளின் போராட்டம் எனக்கு தருகிறது. மண்ணையும் மக்களையும் பாதுகாத்து, விவசாயி களுக்கு எதிரான தேசவிரோதச் சட்டத்தை ரத்து செய்வதுதான், "தேசபக்தி' என்பதை தெளிவான முழக்கமாக முன்வைக்கிறது.
ஆனால் தேசபக்தி, அணுவைச் சுமந்து, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், மின்னல் வேகத்தில் பறந்து செல்லும் போர் விமானங்கள் ஆகியவற்றில் இருப்பதாக ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். அடிப்படையில் இந்திய தேச பக்தி உலக ஆயுத வியாபாரிகளுடன் இணைந்து செயல்படுகிறது. தேசபக்தி ஒரு வெட்கக்கேடான ஆயுத வியாபாரமாகிவிட்டது. ஊடகங்களில் இன்று வலியுறுத்தப்படும் தேசபக்தியில் உலக ஆயுத வியாபாரிகள் தலைமறைத்து வாழுகிறார்கள்.
இந்தியா வல்லரசு என்ற கொடியை ஏற்றி வானுயரப் பறக்கவிட்டாலும் அவை அனைத்தும் வெளித்தோற்றம்தான். உள்தோற்றத்தில் இன்றைய இந்தியா முன்வைக்கும் தேசபக்தி உலக ஆயுத வியாபாரிகளின் நலனைப் பாதுகாக்கும் தேசபக்திதான். இதன் பின்னணியை ஆராய்ந்தால், அதில் பல்வேறு பயங்கரமான தகவல்கள் அடங்கியிருக்கின்றன.
(புரட்சிப் பயணம் தொடரும்)