(22) ஒருவித பொய்யுரைத்தலா?

யுத்தங்கள் பல்வேறு ரகசியங்களை உள்ளடக்கியே வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இதன் ஒரு சிறு ரகசியம் வெளிப்படுவதற்கு கால் நூற்றாண்டு, அரை நூற்றாண்டு காலம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடுகிறது. ரகசியங்கள் வெளிப்பட்டால் அது புயல்போல் புறப்பட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது. இதற்கு எத்தனையோ உதாரணங்களைக் கூறமுடியும்.

எல்லா நாடுகளின் எல்லைப் புறங்களிலும், எப்பொழுதுமே வெடிக்காத மாய வெடிகள் புதைத்து வைக்கப்படுகின்றன. இதற்குள் மாய வியாபார நடமாட்டங்கள் பதுங்கியிருக்கின்றன. உண்மையில் இவை, மரண வியாபாரம். புவிப்பரப்பில் உயிரினங்களின் அழிவைப் பற்றிக் கவலை கொள்ளாது, இது தன் மரண வியாபாரத்தைத் தொடங்கியது. உலகின் இரண்டு பெரும் போர்களை இது திட்டமிட்டு தோற்றுவித்தது. பலகோடி மக்களைக் கொன்று முடித்ததும் இந்த மரண வியாபாரம்தான். இந்த மரண வியாபாரிகள் இன்றைய பிரபஞ்சத்தைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டார்கள்.

சுதந்திரம் பெற்ற பின், இந்தியாவை, இந்த மரண வியாபாரிகள் தங்கள் வலையில் விழ வைத்து விட்டார்கள். வட்டமிட்டு பறந்து திரியும் கழுகுக் கூட்டத்தைப் போல, இவர்கள் நம் மண்ணுக்கு வந்து சேர்ந்தார்கள். இந்தியாவிற்கு எந்தக் குறையும் இல்லை. தன் சொந்த வருமானத்தில் தம் மக்களுக்கான குடிநீர், இருப்பிடம், உணவு, கல்வி, மருத்துவம், என்று தேவையானவை எல்லாவற்றையும் வழங்க முடியும். அமைதியை விரும்பும் வெண்புறாக்கள் மட்டும் நம் வான வீதிகளில் பறக்கும் நிலை மட்டும் இருந்திருக்கும். ஆனால் இந்த கழுகுக் கூட்டங் களின் வருகையால் எல்லாம் நேர் எதிராக நடக்கத் தொடங்கியது.

Advertisment

m

வெண்புறாக்களின் இறக்கைகள் மாய உலகில் சிக்கிக்கொண்டன. நெஞ்சம் துடிதுடிக்க இது எழுப்பும் அபயக்குரல் யார் காதுகளுக்கும் கேட்பதில்லை. கேட்காமல் இருப்பதற்கான வசதியை ஊடகங்கள் மூலம் முன்கூட்டியே இவர்கள் செய்துகொண்டார்கள். சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய துயரம் இதுதான்.

இந்தியா பற்றிய இவ்வாறான சிந்தனை களைக் கூர்மைப்படுத்திக்கொள்ள சிங்கு எல்லையின் விவசாயப் போராட்டம் எனக்குப் பெரிதும் உதவியது. சரக்கு லாரிகளை ஓட்டி செல்பவர்கள் பெரும் எண்ணிக்கையில் பஞ்சாப்பில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைச் சந்தித்தேன். பொதுவாக, இவர்கள் இந்திய வழித்தடங்கள் அனைத்தையும் அறிந்து வைத்திருப்பதைப் போல, இந்திய மொழிகள் அனைத்திலும் ஒருரிரு வார்த்தைகளைத் தெரிந்து வைத்திருப்பார்கள். அந்த சரக்கு லாரி ஓட்டுநர், தமிழில் சில வார்த்தைகளைப் பேசிக்காட்டினார். நான் புரிந்து கொள்வதற்கு மிகவும் சிரமப்பட்டுப் போனேன். ‘சாப்பிட்டிங்களா’ என்ற வார்த்தை யைத்தான் அவர் கேட்டிருந்தார். அந்த வார்த்தை யைப் புரிந்துகொள்ள எனக்கு 15 நிமிடங்கள் தேவைப்பட்டன.

திடீரென்று ஒரு யோசனை எனக்கு வந்தது. இதை அவரிடம் கேட்டுப் பார்க்கலாமா? என்ற எண்ணம் இதையொட்டி எழுந்தது. "இந்திய- பாகிஸ்தான் எல்லை ஓரங்களில் நீங்கள் பயணம் செய்தது உண்டா?'' என்று அவரை கேட்கத் தொடங்கினேன். தனி உற்சாகம் அவர் கண்களில் தெரிந்தது. வெள்ளையும் கறுப்பும் கலந்த அவர் தாடியை ஒட்டிய உதடுகள் இரண்டும், ஒருவித இன்பம் சுமந்த புன்னகையை வெளிப்படுத்தின.

"பஞ்சாப் மாநிலத்தின் நான்கு மாவட் டங்களான குருதாஸ்பூர், அமிர்சரஸ், டாராடரன், பெரோஷ்பூர் ஆகியவை பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளன'' என்றார். "இதன் நீளம் மொத்தம் 553 கிலோ மீட்டர்'' என்றார். அதன் நிலவியல் அடிப்படைகள் ஒவ்வொன்றையும் சுவைபட விளக்கத் தொடங்கினார். அவர் சொன்ன தகவல்கள் எனக்குப் போதவில்லை என்று அவராக முடிவு செய்திருக்கவேண்டும். மீண்டும் மேலதிகத் தகவல்களை விரிவுபடுத்திச் சொன்னார்.

பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் என்று இவரால் பல்வேறு விபரங்களைக் கூற முடிந்தது. பரிட்காட், மோகா முக்கிஸ்தர் ஆகிய பகுதிகளில் சிலகாலம் தங்கியிருந்ததாகக் கூறினார். இவர் கூறிய தகவல்களில் ஒரு நாடோடியைப் போல எல்லைப்புறங்களில் சுற்றி அலைந்த கதை தெரிந்தது. எத்தனைமுறை மலைகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள், மணல் பரப்புக்கள் என்று இவருடைய நீண்ட டிரக்குகள் பளுவைச் சுமந்து பயணம் செய்திருக்கும். அவரை ஆர்வத்தோடு அண்ணாந்து பார்த்தேன். எல்லையோரங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தை அவர் தூண்டுதல் செய்துவிட்டார்.

தமிழக மக்களுக்கு பஞ்சாப், காஷ்மீர் ஆகியவை மிகவும் வித்தியாசமான பிரதேசங்கள். எனது சிறு வயதில் போர்க்களத்துக்கு சென்று திரும்பும் ராணுவ வீரர்களின் மூலமாகத்தான், காஷ்மீர் பஞ்சாப் கதைகள் கிராமப்புற மக்களுக்கு வந்துசேரும். டெல்லியை ஒட்டி விவசாயிகளின் போராட்டக் களத்தில், இரண்டு காஷ்மீரும், இரண்டு பஞ்சாப் மாநிலமும் இருப்பதை அறிந்து கொண்டேன்.

இந்தியா, பாகிஸ்தான் பிரிக்கப்பட்டு எல்லைக்கோடுகள் கிழிக்கப்பட்ட பின்னர், ஒன்றாக இருந்த காஷ்மீர் உடைக்கப்பட்டு, ஒன்று இந்தியாவின் ஆட்சியிலும், மற்றொன்று பாகிஸ்தான் வரைப்படத்திலும் இடம்பெற்றது. இதைப்போலவே பஞ்சாப் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒன்று இந்திய மாநிலமாகவும் மற்றொன்று பாகிஸ்தான் மாநிலமாகவும் விளங்குகிறது. இதைப் புரிந்து கொண்ட எனக்கு இதில் வடக்கு எது? தெற்கு எது என்று புரியவில்லை. இதை பலரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

எல்லைக் கோட்டின் வடக்குப் பகுதியில்தான், இந்திய காஷ்மீரும் -பாகிஸ்தான் காஷ்மீரும் இருக்கிறது. கிழக்குப் பகுதியில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலமும், பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலமும் இருக்கிறது. இதைப்போல எல்லைக்கோட்டின் தெற்குப் பகுதியில் இந்திய எல்லையில் குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும், பாகிஸ்தான் பகுதியில் சிந்து மகாணமும் அமைந்திருக்கின்றன. இது எல்லைப்புற புவியியல் சார்ந்த அறிவு மட்டும்தான். ஆனால் இதன் அரசியல்?

இந்த எல்லைப் பகுதி, இன்று உலக அரசியலில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. சர்வதேச அளவில் கூடுதல் பதட்டத்தையும் மோதல்களையும் கொண்ட பகுதி என்று இது கணிக்கப்பட்டுள்ளது. இந்திய பாகிஸ்தான் எல்லையின் மொத்த நீளம் 3,323 கிலோ மீட்டர். பாகிஸ்தான், இந்திய பிரிவினைதான் இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கிய பிரச்சனை. 1947-ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு எல்லைக்கோடு உருவாக்கப்பட்டது. இதற்கு Radcliffe line (https://en.wikipedia.org/wiki/Radcliffe_line) என்று பெயரிடப்பட்டது. இது 1972-ஆம் ஆண்டில் சிம்லா ஒப்பந்தத்தின் மூலம் இதில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டது.

அந்த டிரக் ஓட்டுநரிடம், "பாகிஸ்தான் மக்களை அறிவீர்களா?'' என்றேன். அவர் மகிழ்ச்சி பொங்க, "என் உறவினர்களில் பலர் அங்கே இருக் கிறார்கள்'' என்றார். "அந்த மக்களோடு உங்களுக்கு ஏதாவது பகை உண்டா?'' என்றேன். "இல்லை'' என்றார். "பின் ஏன் எல்லைப் பாதுகாப்பு என்ற பெயரில் இத்தனை செலவு'' என்றேன். அவர் "தெரியவில்லை'' என்றார். அப்பாவி இந்திய மக்களை வைத்து நடத்தப்படும் சூதாட்டத்தை நினைத்துப் பார்க்கிறேன்.

இந்தியாவில் பல்வேறு கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் ஆட்சிக்கு வந்தன. கொள்கைகளில் பலத்த வேறுபாடுகள் இருப்பதாக தேர்தலுக்குமுன் அறிவிக்கிறார்கள். ஆனாலும் ஆட்சிக்கு வந்தபின்னர் அவசரம் அவசரமாக போர்க்கருவிகள் பெரும் விலை கொடுத்து வாங்கும் பேரத்தில் ஈடுபடுவதில் ஒரே கொள்கையையே கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் எத்தனையோ ஊழல்கள் நடந்துள்ளன. இதில் மிகப்பெரிய ஊழல்கள் ராணுவ கருவிகளை வாங்குவதில்தான் நடந் துள்ளன. ஒரு ராணுவ உயர்அதிகாரியை சந்தித்தபோது, அவர் கூறினார். ராணுவத்தின் உயர்மட்டத்தில் செய்யும் ஊழலை யாராலும் கண்டுபிடிக்க இயலாது என்று. மிகவும் குறைவாக வெளிப்பட்ட ஊழலே இத்தகைய பெரும்தொகை என்றால், மொத்த ராணுவ ஊழல் எவ்வளவு தொகை இருக்கும் என்று நான் யோசித்தபோது, எனக்கு தலை சுற்ற ஆரம்பித்தது.

இதன்படி, விவசாயிகளின் குளிர் நிறைந்த டெல்லியைச் சுற்றிய போராட்டக்களத்தில், எல்லைப் பிரச்சினை என்று காலமெல்லாம் பேசிக்கொண்டிருப்பது ஒருவித பொய்யுரைத்தலா என்ற சந்தேகம் என் மனதில் ஆழமாக வேரூன்றி முளைவிட ஆரம்பித்தது.

(புரட்சிப் பயணம் தொடரும்)