(17) காமராஜர் காலம் ஞாபகத்திற்கு வருகிறது
அவள், அவனது தலையை வருடிக்கொடுத்தாள். அவனது முகத்தில் இனம் தெரியாத மகிழ்ச்சி. அவன் லேசாக சிணுங்கினான். அருகில் மற்றொரு உருவம். அதன் முகம் வாடிப் போயிருக்கிறது. அவள் அதைக் கவனித்துவிட்டாள். அது ஒரு பெண் குழந்தை. நகர்ந்து சென்று அவள் தலையையும் தொட்டு வருடிக் கொடுத்தாள். அது ஆண், பெண் குழந்தைகளைக் கொண்ட ஒரு வித்தியாசமான உலகம். அவளைச் சுற்றி அமர்ந்திருந்த அந்தக் குழந்தைகளின் எண்ணிக்கை மொத்தம் பத்து. இவ்வாறான பல்வேறு மாற்று உலகங்களை நான் போராட்டக் களத்தில் பார்த்தேன். அன்பை அடிப்படையாகக் கொண்டு உயர்ந்த நோக்கங்களுடன் அந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இன்றைய கார்ப்பரேட் உலக மயத்தில் மிகமோசமாக வஞ்சிக்கப் படுகிறவர்கள் குழந்தைகள்தான். பெரும்பாலானவர்கள் எங்கு பிறந் தார்கள், எங்கு வாழுகிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது. இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் இடம் பெறாத குழந்தைகள் எத் தனை சதவீதம் என்பது யாருக்குமே தெரியாது. அடித்தட்டுக் குழந்தைளுக்கு இந்த நாட்டில் என்னதான் பாதுகாப்பு இருக்கிறது? சமுதாயத்தின் மனஅழுக்குகள் அனைத்தையும் இந்த ஆதரவற்ற குழந்தைகள்தான் சுமந்து திரிகிறார்கள். குழந்தைகளின் அகஅழுக்கையும் புறஅழுக்கையும் கழுவி, சுத்தம்செய்யும் கடமையைக் நமது பொதுக்கல்வி முறைதான் செய்யவேண்டும். இந்தக் கடமையை இன்றைய கல்விமுறை செய்வதில்லை. குழந்தைகளை சமுதாயத்தின் கழிசடைப் பகுதியில் தூக்கி எறிந்துவிட்டது.
இது ஒரு முக்கியமான இந்தியப் பிரச்சினை. இதனைத் தீர்ப்பதற்கு எத்தனையோ மாற்று முயற்சிகளை முன்வைத்து பலர் தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள். எதையும் வெற்றி பெற ஆதிக்கச் சக்திகள் அனுமதிப்பதில்லை. ஆனால் போராட்டக் களத்தில் இதை எதிர்கொள்ளும் விதம் வேறுபட்டிருக்கிறது. போராட்டச் சூழல் தான் சமூக மாற்றத்திற்கான மாற்றுக்கருத்துக்களை பெற்றெடுப் பதில் தீவிர செயல்பாட்டில் இருக்கிறது என்பதை, நான் அங்குதான் தெரிந்து கொண்டேன்.
இங்கு பல்வேறு டெண்டுகள் அமைத்து அதில் பல இளைஞர்கள் களப் பணியாற்றுகிறார்கள். இவர் களில் பலரோடு எனக்கு நட்பு உண்டு. பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறேன். ஒவ்வொன்றி லும் புதிய புதிய பார்வைகள், அணுகுமுறைகள் அவர் களிடம் தெரிகிறது. சிந்தனைத் திறனும், மிகுந்த அர்ப் பணிப்பும்கொண்ட இளைய சமூகம் என்பது என் மதிப் பீடு. வெள்ளையரை எதிர்ப்பதற்கு அன்று காந்தியடி கள், "இளைஞர்கள் வேண்டும்' என்றார். இன்று இளைஞர்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கிறார்கள். அவர்கள் காந்தியடிகள் கூறியதைப்போல சேவையை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றார்கள்.
மீண்டும் குழந்தைகளை கவனிக்கிறேன். அவர்களை ஏழ்மை சிதைத்திருப்பது தெரிகிறது. ஓரிரு குழந்தைகள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருக்கிறார் கள். சில குழந்தைகளைத் தவிர, பெரும்பாலானவர்கள் உடல் ஆரோக்கியமற்று இருக்கிறார்கள். இந்தக் குழந் தைகளை எவ்வாறு இங்கு கொண்டுவந்து சேர்த்தார் கள் என்பதைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
குழந்தைகளோடு அன்பு கொண்ட அந்தப் பெண்ணை எல்லோரும் "தீதி' என்றே அழைக்கிறார்கள். "தீதி' என்றால் என்ன என்று கேட்கிறேன். "அக்கா' என்கிறார்கள். நான் தீதியிடம் நட்புணர்வுடன் சில கேள்விகளை முன்வைக்கிறேன். தீதி, பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி. இவரும் இவரது ஐந்து நண்பர்களும் இந்த பணிகளைக் கடந்த ஒருமாதமாக செய்துவருவதாகக் கூறுகிறார். அவருக்கு வயது 23 இருக்கலாம்.
போராட்டக் களத்தில் பங்கேற்கும் விருப்பம் எப்படி வந்தது என்று கேட்டேன். அக்டோபர், நவம்பர் மாதங்களில் பஞ்சாப் விவசாயிகளின் போராட்டத்தால் கல்விக் கூடங்களும் கொந்தளித்தன. இந்தப் போராட்டத்தில் நாங்கள் பங்கேற்கத் தொடங்கினோம். இது முதல் உத்வேகம். இரண்டாவது, விவசாயிகள் குளிரில் டெல்லியைச் சுற்றி அமர்ந்து பெரும் சிரமங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை உணர்ந்து சிங்கு எல்லைக்கு வந்தோம். "இங்கு வந்தபோதுதான் எங்களுக்கு சில மாற்றுச் சிந்தனைகள் தோன்றியது' என்றார் அந்த மாணவி.
குந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் அந்த டெண்டை உற்றுக் கவனிக்கிறேன். கையில் கோலூன்றி காந்தியடிகள் நடந்துவரும் படம் இருக்கிறது. மற்றொரு படம். அதில் கால், கைகளில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட பகத்சிங் காணப்படுகிறார். விவசாயப் போராட்ட படங்கள் சிலவும், சுற்றுச் சூழல் சிந்தனை குறித்த சிலபடங்களும் அங்கொன் றும் இங்கொன்றுமாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் 'சர் எஹழ்ம்ங்ழ் சர் ச்ர்ர்க்' என்ற வாசகம் எல்லா இடங்களிலும் நீக்கமற எழுதி வைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் அந்த மாணவியுடன் எனது உரையாடல் தொடர்கிறது. போராட்டத்திற்கு எங்கள் பங்களிப்பாக ஏதாவது இருக்கவேண் டும் என்று விரும்பினோம். கல்வி மறுக்கப்பட்ட குடிசைவாழ் குழந்தைகளின் கல்விக்குத் திட்டமிடலாம் என்று எனது நண்பர்கள் சொன்னார்கள். இதை செயல்படுத்தத் தொடங்கிய பின்னர்தான், இதிலுள்ள நெருக்கடிகள் என்ன என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது.
மேடு, பள்ளங்களுக்குள் பல வீடுகளைத் தேடியலைந்தோம். குழந்தைகளைக் கண்டு பிடிக்க பெரும்பாடுபட்டோம். யாருமே கிடைக்கவில்லை. பின்னர் ஒரு யோசனை வந்தது. போராட்டக் களங்களில் நிறைய லங்கர்கள் இருக்கின்றன. இதில் பல வறுமையில் சிக்கிய குடிசைவாழ் பெண்கள் ஊதியத்திற் காகப் பணியில் இருக்கிறார்கள். அவர்களை அணுகினோம். அதன்மூலம் குடிசைப்பகுதியின் தொடர்பு கிடைத்தது. அதிலிருந்து குழந்தை களை இங்கு கொண்டுவந்து சேர்த்தோம்'' என்றார்.
எனக்கு, காமராஜர் காலம் ஞாபகத்திற்கு வந்தது. கல்விக்காக அவர் எடுத்த பல்வேறு முயற்சிகள், ஒரு மாபெரும் இயக்கமாகவே தமிழகத்தில் உருப்பெற்றது. நான் ஆரம்ப பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது, மாணவர்களை தேடிப்பிடித்து பள்ளியில் கொண்டுவந்து சேர்க்கும் கட்டாயக் கற்பித்தல் கிராமப்புறத்தில் ஓர் இயக்கமாகவே இயங்கியது. பகல் நேரத்தில் பள்ளிகளில் மாணவர்களுக்குப் பாடம் நடத்தப்படுவதைப் போல இரவு நேரங்களில் முதியோர் பள்ளியும் நடைபெறும்.
பெரும்பாலும் பெண்கள் முதியோர் பள்ளிக்கு வரமாட்டார்கள். வெட்கப்பட்டுக் கொள்வார்கள். வயதான ஆண்கள் வற்புறுத்தி அழைத்துவரப்பட்டிருப்பார்கள். தங்கள் கணவன்மார்களும் கொழுந்தன்மார்களும், அரிக்கன்விளக்கில் எழுதுவதை வாசிப்பதை சுற்றிநின்று பார்த்து வயதான பெண்கள் கிண்டல் செய்வதைப் பார்த்திருக்கிறேன். அரிக்கன் வெளிச்சம் தாண்டிய இருளில், கிண்டல் சிரிப்பொலிகள் இந்த தருணங்களில் எழுந்துகொண்டேயிருக்கும். ஆனால், அவை அனைத்தும் அரசாங்கம் பட்ஜெட்டில் பணம் ஒதுக்கி, எடுத்த முயற்சிகள்.
போராட்டக்களத்தில் நான் சந்தித்தவை... இதிலிருந்து கொஞ்சம் வேறுபட்டிருக்கிறது. இதை செயல்படுத்துபவர்கள் அரசாங்கம் சார்ந்தவர்கள் அல்ல, சுயமுயற்சியில் நம்பிக்கை கொண்ட புதிய இளைஞர் கூட்டம். கற்பித்தலில் ஏற்பட்டுள்ள சீரழிவை ஆழமாக கண்டுணர்ந்து அதற்காக பரிசோதிக்கப்பட்ட மாற்றுத் திட்டங்களை கையில் வைத்திருப்பவர்கள். கல்வியின் கழுத்தைச் சுற்றி வளைத்து நிற்கிறது விஷப்பாம்புகள். அதனிடமிருந்து கல்வியை மீட்டெடுக்க இன்று பதைபதைத்து நிற்கிறார்கள். மாற்றுத் திட்டத்தைப் போராட்டக்களத்தில் செயல்படுத்திப் பார்க்கிறார்கள். எனக்குள் மூடியிருந்த புதிய கண்கள் திறந்து பார்வை பெற்றதைப்போல உணரத் தொடங்கினேன்.
போராட்டக் களமெங்கும் பல்வேறு பள்ளிகள், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, ஹைதராபாத் முதலான பல்வேறு இடங்களிலிருந்து வந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மாணவர்கள், இளைஞர்கள். இவர்கள் எதிர்கால நம்பிக்கையின் சின்னமாக எனக்குத் தெரிகிறார்கள். கல்விக்காக இவர்கள் எடுக்கும் முயற்சிகள், அதில் அடங்கியுள்ள நுட்பங்கள் என்னை வியக்க வைக்கிறது. கல்வி மறுக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கான மாற்று உலகம் ஒன்று அங்கு உருவாக்கிக் கொண்டிருப்பது எத்தனை மகத்தான முயற்சி!
நான் ஒவ்வொரு பள்ளியாக சென்று பார்க்கிறேன். சமுதாயத்தால் அந்த பிஞ்சு கைப் பிடித்து அழைத்துச் செல்வதற்கு பொறுப்புமிக்க கைகள் தயாராக இருக்கின்றன. ஒவ்வொரு பள்ளியும் ஒருவிதமாக இருக்கிறது. எல்லா இடங்களிலும் பாடப்புத்தகங்கள் கலைந்து கிடக்கின்றன. கலர் பென்சில் குவியலாகக் கிடக்கிறது. பயமில்லாத குழந்தைகள் தாய்மடி என்று நினைத்து காகித நோட்டுகளில் ஏதேதோ கிறுக்கிக்கொண்டிருக்கிறார்கள். போராட்ட உலகம் ஒரு புது உலகத்தை உருவாக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறது. அங்குதான் அந்த புதிய சொல் எனக்கு கிடைத்தது. ஆனால் அதன் அர்த்தம் அப்பொழுது எனக்குப் புரியவில்லை
(புரட்சிப் பயணம் தொடரும்)