- சி.மகேந்திரன் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், இந்திய கம்யூனிட் கட்சி
அவன் என்னை மிரள வைத்துவிட்டான். அவன் கண்களில் காணப்பட்ட உற்சாகம்தான் என்னை முதலில் ஈர்த்தது. அவன் சிட்டுக் குருவியைப் போன்றவன். கண்மூடி கண் திறப்பதற்குள் எங்கு இருப்பான், எங்கு பறந்து செல்வான் என்பதை கண்டறிய முடியாது.
அவனும் அவனைச் சார்ந்த சிறுவர் கூட்டமும் ஏழைமையால் கசக்கிப் பிழியப்பட்டவர்கள் என்பது அவர்கள் அணிந்திருந்த உடையிலிருந்து தெரிந்துகொள்ள முடிந்தது. ஏழ்மையின் அடையாளம் ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒருவிதமாக இருக் கிறது. நகர்ப்புற ஏழைச் சிறுவர்களின் வாழ்க்கை, குளிர்பிரதேசத்திலும் வெப்பப் பிரதேசத்திலும் எவ்வாறு வேறுபட்டிருக்கிறது என்பதை அங்குதான் தெரிந்துகொண்டேன்.
வெப்பப் பிரதேசத்தில் சமா ளித்துக் கொள்ள முடியும். கடும் குளிர்பிரதேசங்களில் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்றிற்காகவும் ஏழை மக்கள் படும்பாடு வார்த்தை களால் விவரிக்க இயலாது. அன்றா டம் செத்து செத்துப் பிழைக்க வேண்டும். அதிலும் ஏழை, அனாதை சிறுவர்களின் நிலைமையை, நினைத்துப் பார்க்கவே உடலில் நடுக்கம் ஏற்படுகிறது.
குளிரிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ஏழைச்சிறுவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளைக் கவனிக்கிறேன். கிழிந்துபோன ஆடைகள், எங்கி ருந்தோ சேகரித்து பாதுகாப்புக் கவசங்களாக மாற்றியிருக்கிறார்கள். அவன் வித்தியாசமான ஆடைகளை அணிந்திருந்தான். அவன் மனதில் உள்ளதை நான் அறிந்து கொள்ள விரும்பினேன். அது அத்தகைய எளிதானதாக இல்லை.
அவனது இயல்புகள் ஒவ்வொன்றையும் தூரத்தில் இருந்து பார்க்கிறேன். வதைத்தெடுக்கும் கடுங்குளிரை, தனது சகவயது நண்பனைப் போல கருதிக்கொள்கிறான். அதன் தோளில் கை போட்டுக்கொண்டு ஒவ்வொரு இடமாய் சுற்றிக்கொண்டேயிருக்கிறான். ஆனால் அவனிடம் காணப்படும் துடிப்பு அவன் எங்கெங்கு இருக்கிறான் என்பதைக் காட்டிக் கொடுத்துவிடும்.
அவன், நண்பர்கள் கூட்டத்தோடு ஒவ்வொரு லங்கராகச் செல்கிறான். எல்லா உணவையும் வரிசையில் நின்று பெற்றுக்கொள்கிறான். கிண்டலும் கேலியும் மகிழ்ச்சியும் கொண்ட நண்பர்களுடன் நின்றபடியே சாப்பிடுகிறான். நான் பார்த்த நாளிலிருந்து ஓரங்கள் கிழிந்து சாயம்போன அந்த ஸ்வெட்டரைத் தான் அணிந்திருந்தான். அவனிடம் வேறு ஆடைகள் இருப்பதாகத் தெரியவில்லை. அவனிடம் கேட்பதற்கு என்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது... எப்படி கேட்பது, யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
அந்தச் சிறுவர் கூட்டம், ஒருவருடைய அன்புக்கு கட்டுப்பட்டிருந்தது. அவர் சீக்கியர் அல்ல இஸ்லாமியர்; பெயர் கறீம். லுதியானவைச் சார்ந்தவர். இவர் இழ்ர்ற்ட்ங்ழ் ஐர்ர்க் என்னும் பெயரில் லங்கர் நடத்துகிறார். அவர்மூலம் அந்தச் சிறுவனை அணுகினேன்.
அந்தச் சிறுவனின் பெயர் ஹரிராம். சிங்கு எல்லையில் தொடங்கி, போராட்டம் நடைபெறும் கடைசி பகுதியான குண்டலி எல்லையின் ஓரத்தில் அமைந்த ஏழைகளின் தெருவோர குடியிருப்பில், சாக்கடை நீர் சார்ந்த அவனது குடிசையை எனக்குக் காட்டினான். தாய், தந்தை இல்லை. பாட்டியுடன் இருக்கிறான். இந்தத் தகவல்களை அறிந்த பின்னர் அவனைச் சுற்றியே எனது சிந்தனை வட்டமடித்துக்கொண்டிருந்தது.
போராட்டத்தைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன என்று அவனிடம் கேட்டேன். போராட்டம் பிடித்திருக்கிறது என்பதை அவனும் அவனது நண்பர்களும் கூச்சல் போட்டுச் சொன்னார்கள். ஹரிராமுக்கும் அவனது நண்பர்களுக்கும் இது ஒரு புதுவாழ்க்கை. பழைய வாழ்க்கை என்பது அவர்களுக்கு மறுக்கப்பட்ட வாழ்க்கை. அதில் இவர்கள் சமூகவிரோதிகளால் மிகஎளிதாகப் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய சீரழிந்த வாழ்க்கை. ஆனால் போராட்ட வாழ்க்கை வித்தியாசமானது.
விதவிதமான மனிதர்களைப் பார்க்கிறார்கள். விதவிதமான பாடல்களைக் கேட்க முடிகிறது. எங்கு பார்த்தாலும் போராட்ட முழக்கங்கள் கேட்டுக் கொண்டேயிருக்கின்றன. இத்தனை காலமாக இவர்களை பயமுறுத்தி விரட்டிக்கொண்டிருந்த போலீஸ், இந்த விவசாயிகளின் போராட்ட எல்லைக்குள்ளேயே இல்லை. முள்கம்பி போட்டு, முள்கம்பிக்கு வெளியேதான் அவர்கள் நிற்கிறார்கள். ஹரிராம் உள்ளிருந்து அவர்களை ஏளனச் சிரிப்புடன் பார்க்கிறான். ஆனாலும் அந்தக் கேள்வி எனக்கு முக்கியமானதாகத் தோன்றுகிறது. அந்தக் கேள்வியை இப்பொழுதுதான் கேட்கப்போகிறேன். ""போராட்டம் முடிந்து விவசாயிகள் திரும்பிச் செல்வதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்'' என்று கேட்டேன். இந்தக் கேள்விக்கான பதிலை அவனுக்கு தெளிவாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் கேள்வி அவனுக்குப் புரிந்திருக்கிறது.
ஹரிராம் மௌனமானான். இத்தனை நேரம் அவனிடமிருந்த துடிப்பு எங்கே சென்றது என்று தெரியவில்லை. கண்களும் உதடுகளும் துடித்தன. "போக வேண்டாம்' என்றான். அவனது சொற்களிலிருந்த உணர்வு என்னை ஒரு நிமிடம் திகைக்க வைத்துவிட்டது. இதில் இலவசமாக உணவைக் கொடுக்கிறார்கள் என்பது மட்டும் அல்ல.
ஹரிராமையும் லங்கர் செயல்பாட்டையும் இணைத்துப் பார்க்கிறேன். சாலை ஓரங்களில் கேட்பாரற்று சுற்றித்திரிந்த குழந்தைகளை அழைத்து தேவையான உணவை அவரவருக்கு உரிய கௌரவத்துடன் கொடுக்கின்றன. பழைய உலகம் இவர் களைப் பிச்சைக்காரர்களாக நடத்தியது. புதிய கௌ ரவம் புதிய சிந்தனையை அவனுக்குள் புதிய வாழ்க்கை முறையைத் தோற்றுவித்திருக்க வேண் டும். அது அவன் உணர்வுகளில் வெளிப்படுகிறது.
லங்கர் எல்லா மனிதர்களையும் ஈர்த்துவிடு கிறது. கூட்டு வாழ்க்கையின் உயர்நிலை கம்யூன் வாழ்க்கை என்று கூறப்படுகிறது. லங்கரின் செயல் பாட்டை கம்யூன் செயல்பாடு என்று சொல்லத் தோன்றுகிறது. கம்யூனிஸ்டுகள் ஆரம்ப காலங்களில் வாழ்ந்தது கம்யூன் வாழ்க்கை. ஒரே இடத்தில் தங்கி பணிகளைப் பகிர்ந்துகொண்டு உண்டு, உறங்கி வாழும் அந்த வாழ்க்கை சமத்துவம் நிறைந்த தனித் துவமானது. இது பற்றி எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதுகிறார். இளமைக்காலத்தில் இவர் கம்யூனில் வாழ்ந்தவர். “கம்யூனில் சமத்துவம் எப்படி இருந்தது என்றால், நான் அப்பொழுது மற்றவர்களால் ஆபீஸ்பாய் என்று அழைக்கப்படும் உதவியாளனாக பணியில் சேர்ந்திருந்தேன். ஆனால் கம்யூனில் நான் தோழர் ஜெயகாந்தன். ஜீவா மாபெரும் தலைவர். அவரும் கம்யூன் உறுப்பினர். நானும் கம்யூன் உறுப்பினர். ஜீவாவுக்கும் ஊதியம் 12.50 காசுகள். எனக்கும் ஊதியம் 12.50 காசுகள் என்று எழுதியுள்ளார். இந்த சமத்துவ சாயல் கொண்டதாகவே லங்கர் வாழ்க்கை எனக்குத் தெரிந்தது.
லங்கர் பஞ்சாபிய கிராமிய கூட்டுவாழ்க் கையின் சிறப்பை நமக்கு உணர்த்துகிறது. காய்கறிகளை நறுக்கித் தருவதிலிருந்து, சாப் பாத்தி மாவு பிசைவதி லிருந்து ஆண்களும் பெண்களுமாக கூட் டாக பணி செய்கிறார் கள். நமது சமூகத்தைப் போல ஆண்கள் சமை யல் செய்வதிலிருந்து ஒதுங்கிக் கொள்வதில்லை. பஞ்சாபிய ஆண்கள் ஒவ்வொருவரும் சமையலில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதிகம் பேருக்கு சமைப்பது என்பது மிகவும் கடினமானது. இதை மிகவும் எளிதாகச் செய்துவிடுகிறார்கள். இதற்கு குருத்துவாராக்களில் லங்கர் சேவையில் ஈடுபடுவதில் கிடைத்த பயிற்சி காரணம் என்கிறார்கள். குழந்தைப் பருவம் முதலே மற்றவர்களுக்கு உணவளித்து மகிழ்ச்சியைப் பெறும் மனநிலையை அவர்களது பண்பாடு அவர்களுக்கு உருவாக்கித் தந்திருக்கிறது. விவசாயிகளின் போராட்டக்களம், பசியற்ற பூமியாக மாறுவதற்கு இந்த லங்கரைத் தவிர வேறு எதுவுமே காரணமாக அமையவில்லை.
லங்கர் சேவை சமைப்பதோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. டிராக்டர்களும் வேன்களும் விடிய விடிய போராட்டக்களத்திற்கு வந்துகொண்டேயிருக்கிறது. பஞ்சாப்பின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் பொருள்களைக் கொண்டுவந்து குவிக்கிறார்கள். பால், காய்கறிகள், பழங்கள் மளிகைப் பொருட்கள் என்று வந்துகொண்டேயிருக்கின்றன. லங்கருக்கு எவ்வாறு பொருட்கள் வந்து சேருகின்றன என்று கேட்டபோது, ஒருவர் என்னை ஒரு இடத்திற்கு அழைத்து சென்றார். அங்கு சில மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இவை எல்லாம் ரேஷன் கடை வழங்கும் கோதுமை. கடைகளில் இதைப் பெற்ற மக்கள், தங்கள் ரேஷனில் ஒரு பகுதியை போராட்டக் களத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள். "ஏழை மக்கள் இந்த போராட்டத்திற் ஆதரவு தருகிறார்களா? அல்லது போராட்டம் பணக்கார விவசாயி களால் நடத்தப்படுகிறதா?' என்ற கேள்விக்கான பதில் இதில் அடங்கியிருக்கிறது.
லங்கர், போராட்டக்காரர் களுக்கு மணிமேகலையின் அமுதசுரபியாய் நின்று உணவு வழங்கிக் கொண்டிருக்கிறது. அண்மைக்காலத்தில் அந்த லங்கர் புதிய நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறது. இதுவும் விவசாயப் போராட்டத்தின் முக்கியப் பகுதியாகும்.
(புரட்சிப் பயணம் தொடரும்)