- சி.மகேந்திரன் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், இந்திய கம்யூனிட் கட்சி

வெயில், குளிர் இரண்டையும் மனிதரின் பகைவன் என்பதா? நண்பன் என்பதா? வெப்ப மண்டல மக்களுக்கு குளிர் மீது ஒருவிதமான பயம். குளிர் பிரதேச மக்களுக்கு வெப்பத்தின் மீது ஒருவிதமான பயம். நான் டெல்லி போராட் டக் களத்திற்குச் சென்ற காலம் ஒரு குளிர்மிகுந்த காலம். அந்த கடுங்குளிர் நம்மை ஏதாவது செய்து விடுமா? என்ற பயம் எனக்குள் இருந்து கொண்டேயிருந்தது, இதற்குரிய காரணங்களும் இருக்கத்தான் செய்தன.

விவசாயிகள் போராட்டக் களம் அமைத்து, சிங்கு, காஜ்பூர், டிகிரி ஆகிய மூன்று இடங்களிலும் தங்கத் தொடங்கிய பின்னர், ஒரு பட்டியல் தொடர்ந்து பத்திரிகைகளில் வந்துகொண்டே இருந்தது. அந்தப் பட்டியலைப் படித்துப் பார்த்தவர்கள் பதறிப்போனார்கள். அது ஒரு மரணப் பட்டியல். குளிரின் நடுக்கத்துடனேயே இறந்துபோன உடல்கள் ஊடகங்களில் காட்டப்பட்டன. இதன் பின்னர்தான் குளிரின் கொடுமை பற்றிய தகவல்கள் ஒவ்வொன்றும் நம்மைப் பதற வைத்தது.

mm

Advertisment

மோடி அரசு இதைப்பற்றி கவலை எதுவும் பட்டுக்கொள்ளவில்லை. ஏமாற்றி அழைத்து வந்து போராட்டக்காரர்கள் கொன்றுவிட்டதாகக் குற்றம்சாட்டியது. போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் கீழ்த்தரமான வேலை இது என்பதை எல்லோரும் புரிந்துகொண்டார்கள். பல மாதங்கள் ஒரே இடத்தில் தங்கியிருந்து போராடும் மக்களிடம் இது பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. அவர்களிடமிருந்து கண்டனங்கள் வலிமையுடன் பிறந்தன. இந்த எதிர்ப்பு இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் எழுந்தது. மரணங்களை தடுக்க வேண்டும் என்ற மனிதாபிமான வேண்டுகோள் எல்லா நாடுகளிடமிருந்தும் வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது.

என்ன நடந்தாலும் குரூரமிக்க சர்வவதிகார ஆட்சியாளர்கள், மக்களின் இழப்பைப் பற்றிக் கவலை கொள்வதில்லை. இறுதிவரை அதிகாரத்தையும் சுயநலத்தையும் காப்பாற்றிக்கொள்ளவே முயற்சி செய்கிறார்கள். டெல்லியை சுற்றிய போராட்டக் களத்தில் மக்களின் இழப்பு மிகவும் அதிகம். அதிலும் உயிர் இழப்புகள் மிகமிக அதிகம். மோடியின் அரசு இதைப்பற்றிக் கவலைப்படவில்லை.

இதேநேரத்தில் போராட்டத்திற்கு வந்தவர்கள் கடும்குளிரில் செத்துப்போகும் கொடுமையும் நீடித்துக்கொண்டிருந்தது. எந்த ஆதரவும் இல்லாத வெட்ட வெளியில் குளிர் மரணங்கள் பெரு எண்ணிக்கையில் நடந்து கொண்டேயிருந்தன. இந்த மரணங்களுக்குப் பின்னர்தான் போராட்டக்காரர்கள் அரசையும் அரசாங்கத்தையும் நம்புவதில்லை. போராட்டங் கள் தொடர்ந்து நடத்துவது என்ற முடிவுக்கு வந்திருந்தார்கள்.

Advertisment

இந்த தருணத்தில் ஸ்ரீர்ப்க் ஜ்ஹஸ்ங் என்னும் குளிரின் கொடுமையைப் பற்றிய அறிந்து கொள்ள முயன்றேன். இதற்கென்று சில கட்டுரைகளையும் புத்தகங்களையும் வாசித்துப் பார்த்தேன். பூமிக் கோட்டின் வெப்ப மண்டலத்திற்கு மிக அருகாமையில் பிறந்து வளர்ந்த எனக்கு, இந்த வாசிப்பு, புதிய பார்வை ஒன்றை வழங்கியது.

மனிதர் சந்தித்த நெருக்கடிகளில் ட்ங்ஹற் ஜ்ஹஸ்ங், ஸ்ரீர்ப்க் ஜ்ஹஸ்ங் ஆகிய இரண்டும் முக்கியமானவை. ஆரம்ப காலங்களிலிருந்து மனிதக் கூட்டம் இந்த இரண்டு அபாயங்களிலும் பெரும் எண்ணிக்கை யில் இறந்திருக்க வேண்டும். கடும் குளிர், கடும் வெப்பம் ஆகியவற்றிற்கும் புவிச்சூழல் மாற்றங் களுக்கும் இடையில் மிக நெருக்கமான தொடர் பும் இருக்கிறது. ஒரு இடத்தில் ஏற்படும் பாதிப்பு புவியின் பொதுப் பாதிப்பாகவே மாறிவிடுகிறது. இதன் காரணம் கருதிதான் புவிச்சூழலில் எந்த கேடும் நிகழ்ந்துவிடக்கூடாது என்று சூழலிய லாளர்கள் எச்சரிக்கை செய்துகொண்டே இருக்கிறார்கள்.

டெல்லியும், டெல்லியைச் சுற்றிய பகுதி களும் வித்தியாசமானவை. சூரியப் பெருவெளியில் ஒன்றன் இருப்பிடம், எங்கு அமைந்துள்ளது என்பதைப் பொறுத்தே அதன் தட்ப வெப்ப நிலை அமைகிறது. இதில் சாய்வு நிலையிலிருக்கும் பூமிப்பந்தின் பூமத்திய ரேகை முக்கியமானது. டெல்லி இருப்பிடம், பூமிப்பந்தின் பூமத்திய ரேகையிலிருந்து ஒதுங்கியிருக்கிறது.

இதைத்தவிர டெல்லியின் நிலவியலுக்குச் சொந்தமான தட்பவெப்ப நிலை என்று எதுவுமே இல்லை. இதன் தட்பவெப்ப நிலை, இமயமலை யையும், அதைப்போல தார் பாலைவனத்தையும் சார்ந்திருக்கிறது. இமயமலை ஐம்பது மலை சிகரங்களைக் கொண்ட விரிந்த நிலப்பரப்பு. கடல் மட்டத்திலிருந்து 23 ஆயிரத்து 600 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதைப்போலவே இரண்டு லட்சம் சதுரப் பரப்பளவைக் கொண்டது தார் பாலைவனம். இது இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு நாடு களிலும் விரிந்து கிடக்கிறது. ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், அரியானா ஆகிய நான்கு மாநிலங்கள் தார் பாலைவனத்தின் எல்லையில் இருக்கின்றன.

இமய மலை, தார் பாலைவனம் இரண்டின் பிணையக் கைதிதான் டெல்லியும், டெல்லியை சுற்றிய மாநிலங்களும் என்கிறார்கள். இதனால் எதிர் பாராத தட்வெட்பநிலை . இங்கு எங்கு, எப்படி ஏற்படுகிறது என்று யாருக்கும் தெரிவதில்லை. இதனால் தாங்கிக்கொள்ள முடியாத வெப்பநிலைக் கும் குளிர் நிலைக்கும் டெல்லி இலக்காகி விடுகிறது.

டெல்லி போராட்டத்திற்குப் புறப்பட்ட காலம், கொரோனா உச்சத்தில் இருந்த காலம். அப்பொழுது நிகழ்ந்தவற்றை எல்லாம் யோசித்துப் பார்க்கிறேன் ஆண்டும் முழுவதும் கொரோனா அச்சத்தை ஊடகங்கள் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தன. வெளியில் செல்ல தடை. யாரையும் சந்திக்கத் தடை. ஒரே குழப்பமாக இருந்தது. சில நேரங்களில் கொரோனா என்ற ஒன்று உண்மை யில் இருக்கிறதா என்ற சந்தேகம்கூட வந்து விட்டது. இந்த சந்தேகத்தை என்னால் எளிதில் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனாலும் எனக்கு நெருங்கிய சிலர் இறந்து போயிருந்தார்கள். நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். அந்த தருணத்தில்தான் அந்த நிகழ்வு.

வழக்கம்போல் சுறுசுறுப்புடன் ஓடிக் கொண்டிருந்த எனக்கு உடலில் வலியெடுக்கத் தொடங்கியது. இது எனக்கு வித்தியாசமான வலியாகத் தோன்றியது. பின்னர் காய்ச்சல் தெரிந்தது. சோதனையில் கொரோனா தொற்று இருப்பதாகத் தெரிவித்தார்கள். சென்னை கிண்டியில் அமைந்த கிங் ஆய்வக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டேன். அப்பொழுது டெல்லி விவசாயிகளின் போராட்டம் தீவிரத்தில் இருந்தது.

சமூக வலைத்தளங்களில் செய்திகள் குவிந்தன. என்னால் நம்பமுடியாத பல்வேறு செய்திகள் ராணுவத் தோடும் காவல்துறையோடும் அவர்கள் நடத்திய போராட்டங்கள், காட்சிக் கோப்புகளாகப் பார்க்கக்கூடிய தாக எனக்குக் கிடைத்தது. ஒவ்வொன்றாகப் பார்த்தேன். அந்த வீரம்செறிந்த போராட்டம் என்னை ஈர்த்தது. மார்த்தா ஹொர்னேகர் என்னும் லத்தீன் அமெரிக்க அரசியல் போராளி எழுதிய "21-ஆம் நூற்றாண்டின் சோசலிசம்' என்னும் நூலை முன்னரே பலமுறை வாசித்தவன். கார்ப்பரேட் உலகமயப் பின்னணியில் அதில் குறிப்பிட்டவை என்னை ஈர்த்தது. டெல்லிப் போராட் டத்தையும் இந்த லத்தீன் அமெரிக்கப் பின்னணியையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது, போராட்டக்களத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் கூடிக்கொண்டிருந்தது. ஒருமாத காலம் வீட்டில் தங்கியிருந்தேன். ஆனாலும் டெல்லியை நோக்கிப் பயணத்தைத் தொடங்க கால்கள் பரபரத்துக் கொண்டிருந்தன.

குடும்பத்தினர் என் பயணத்திற்கு அனுமதி அளிக்கமாட்டார்கள் என்பதை நான் அறிவேன். கொரோனா தாக்குதலால் வீட்டில் அனைவரும் பயந்துபோயிருந்தார்கள். ஆனால் நான் இவர்களிடம் என்ன சமாதானம் சொல்லித் தப்பித்துச் செல்வது என்பதையே யோசித்துக்கொண்டிருந்தேன். மகன் புகழுடன் இது குறித்துப் பேசினேன். சொன்னவுடன் புகழுக்கு கோபம் வந்துவிட்டது. நான் கொரோனா மருத்துவமனையில் இருந்தபோது என்னைவிட அதிக சிரமங்களை சந்தித்தது புகழ்தான். புகழின் கோபத்திற்கு நான் அமைதியானேனே தவிர பயணத்தை நிறுத்துவதாக முடிவெடுக்கவில்லை.

விமானநிலையத்திற்குச் செல்லும்முன், "உங்களை யாராலும் திருத்த முடியாது' என்று சொல்லி அத்துடன் நிறுத்திக்கொண்டார் புகழ். அவர் அம்மாவிடமிருந்து அடிக்கடி வெளிப்படும் வார்த்தைதான் இது.

சென்னையிலிருந்து நான் புறப்பட்டபோது எனக்குள் ஒரு பயம் இருந்துகொண்டே இருந்தது. அந்த பயம் என்னிடம் நட்பு பாராட்டி என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டது. இது முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக எனக்கு இருந்தது.

(புரட்சிப் பயணம் தொடரும்)