- சி.மகேந்திரன் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், இந்திய கம்யூனிட் கட்சி
குளிர்பிரதேசத்தில் தொடர்ந்து வாழ்ந்து பார்ப்பதில் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. குளிப்பதும், ஆடைகளைச் சலவை செய்வதும் காய வைப்பதும்கூட பிரச்சினையாகி விடுகிறது. வெப்பப் பிரதேசத்திலிருந்து அங்கு சென்றவர்களுக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவம். சுட்டெரிக்கும் கோடையில் மெல்லிய பனியனைக்கூட, உடல் பொறுத்துக்கொள்வ தில்லை. சிறிதுநேரத்தில் வியர்வையில் பனியன் நனைந்துவிடும். இதை துவைத்து உலர்த்திக் கொள்வது எளிதானது. குளிர்தேசத்தின் கூடுதல் அனுபவம் எனக்கில்லை.
ஆனால் கொடும்குளிரில் மனிதர்களுக்கு எத்தனை உடைகள் தேவை. கால் நகங் களையோ, கை விரல்களையோ கூட, திறந்து வைக்க முடியாது. குளிரில் எல்லாமும் செயலிழந்துவிடும். அது மட்டுமல்லாது குளிர்பிரதேச மக்கள் ஆடைகளைச் சிலநாட்கள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளப் பழகியிருக்கிறார்கள். தினந்தோறும் ஆடைகளைச் சலவைசெய்து அணிந்துகொள்ளும் வெப்பப் பிரதேசத்தின் பழக்கம் எனக்கு. இரண்டு நாட்கள் அணிந் திருந்த துணியை மீண்டும் என்னால் அணிய முடியவில்லை. மனதுக்குள் ஒருவித ஒவ்வாமை. இது எனக்குள் ஒரு பிரச்சினையாக இருந்துகொண்டேயிருந்தது.
குளிப்பதற்கும் துவைப்பதற்குமான உதவியைத்தான் நிஷாந்த்சிங்கிடம் கேட்டேன். அவன் என்னை போராட்டக் களத்தில் இயங்கிய விளையாட்டு வீரர்களின் உலகத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டான். போராட்டக் களத்தில் மறைந்து கிடக்கும் அரிய தகவல்களை அறிந்துகொள்ள, அது உதவியது. ஆனாலும் நான் கேட்டிருந்த உதவியை அவன் மறந்துவிடவில்லை.
அழுக்குத் துணிகள் தனிப்பைகளில் வரிசையாக நிரப்பப்பட்டிருக்கும் ஒரு பகுதிக்கு நிஷாந்த்சிங் என்னை அழைத்துச் சென்றான். ஒவ்வொன்றிலும் அந்தத் துணிப்பை உரிமை யாளர்களின் பெயர், செல்பேசி எண் எழுதப்பட்டிருந்தது. சலவை செய்துதரும் நிலையம் என்பதாக இதனைப் புரிந்துகொண்டேன். குளிர்காலத்தில் அதுவும் போராட்டக்களத்தில் துணிக்கு எவ்வளவு கட்டணம் விதித்திருப் பார்கள், இது நமக்குக் கட்டுப்படியாகுமா? என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
நிஷாந்த்சிங் என் கையிலிருந்த ஆடைகளைப் பெற்றுக்கொண்டு, நான் அணிந்திருந்த மேலாடைகளைக் கழற்றச் சொன்னான். நான் மூன்றுஅடுக்கு ஆடைகளை அணிந்திருந்தேன். இரண்டு அடுக்கு ஆடைகளைக் கழட்டிக் கொடுத்துவிட்டு ஒரு அடுக்கு ஆடைகளோடு நின்றேன். எனக்கு அருகில் இருந்த ஒருவர், இடுப்பில் ஒரு துண்டை மட்டும் கட்டியிருந்தார். மற்ற ஆடைகளை எல்லாம் கழற்றி சலவைக்குக் கொடுத்திருந்தார். அவர் குளிரைத் தாங்கிக்கொள்ளப் பழகியவர்.
அரைமணி நேரத்தில் வாஷிங்மிஷின் மூலம் அழுக்கு நீக்கி, டிரையரில் போட்டு, அயர்ன் செய்து துணிகளைக் கொடுத்துவிட்டார்கள். இதில் எனக்கான அதிர்ச்சி என்ன வென்றால், இந்த துணிகள் அனைத்தையும் நிஷாந்த்சிங்கும், அவருடைய இரண்டு நண்பர்களும் ஒரு தேர்ந்த சலவைத் தொழிலாளியைப் போல சலவை செய்ததுதான். எனது நீண்ட வாழ்க்கைப்பயணத்தில் இவ்வாறான அனுபவம் எனக்குக் கிடைத்ததில்லை.
நிஷாந்த்சிங் சில நாட்களுக்கு முன்னர்தான் என்னுடன் நட்புகொண்டான். இன்றுதான் அவனது இரண்டு நண்பர்களும் எனக்கு அறிமுகமானார் கள். இவர்கள் இந்திய உயர் கௌரவம் பெற்ற தேசியப் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்கள். அவர்கள் மூவரும் வலுக்கட்டாயமாக என் அழுக்குத் துணிகளைப் பெற்று சலவை செய்து தருகிறார்கள் என்றால் அதற்குக் கார ணம்தான் என்ன? என்மீது கொண்ட அன்பா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா?
எனக்கு மற்றுமொரு சந்தேகம் வந்தது. இந்தச் சலவைத் தொழிலகம் இவர்களால் நடத்தப்படுகிறதா என்று. இதற்கு நிஷாந்த் சிங், "நானும் எனது நண்பர்களும் கப்படா சேவையாளர்கள்' என்று மிகத்தெளிவாக பதிலளித்தான். ரொட்டி, கப்படா, மக்கான் என்ற மூன்று இந்திச் சொற்களையும் நான் அறிந்திருக்கிறேன். "ஏழ்மையை அகற்றப்போகி றோம்' என்ற இந்த முழக்கங்கள் எல்லாத் தேர்தல் காலங்களிலும் கேட்டுக்கொண்டே யிருக்கும். தேர்தல் முடிந்தவுடன் இந்தக் குரல் காணாமல் போய்விடும். ரொட்டி என்பதற்கு உணவு என்றும், கப்படா என்பதற்கு உடை என்றும் மக்கான் என்பதற்கு தங்குவதற்கு ஒரு இடம் என்பதாக இதனை நான் புரிந்திருந்தேன்.
துணியை வெளுத்துத் தருவது சேவை. இதில் பலர் இணைந்து இந்த சேவையைச் செய்கிறார்கள். இவர்களில் சிலர் பல பட்டங் களைப் பெற்றிருக்கிறார்கள். இன்றைய, வெறுக் கத்தக்க சுயநலத்தை முன்னேற்றம் என்று போதித்து தவறான திசை வழியில் நம்மை அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறது கார்ப்ப ரேட் சுரண்டல். பக்தி இயக்கம், மதங்களைக் கடந்த மனித சேவை என்பதை ஒரு காலத்தில் கையில் எடுத்தது. "என் கடன் பணி செய்து கிடப்பதே'’ ’"அடியாருக்கும் அடியார்'’என்ற பக்தி சார்ந்த சேவைக்கோட்பாடுகள் இந்தக் காலத்தில்தான் பிறந்தன. அதிகாரம் கொடுங் கோன்மையின் உச்சத்திற்கு சென்ற மதங் கள், வீழ்ச்சியைச் சந்தித்த பத்தாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர்தான் இந்த பக்தி இயக்கம் தோன்றியது.
இந்தப் பக்தி இயக்கத்தில் பசிப்பிணி அகற்றுதல், உடலை மறைக்க ஒரு ஆடை தேவை என்பதை உணருதல், ஒண்ட ஒரு குடிசை வேண்டும் என்பதை வலியுறுத்தும் சேவைகள் பிறந்தன. அந்த பக்தி இயக்கத்தில் புரட்சிகரப் பண்புகளுடன் பிறந்ததுதான் சீக்கிய மதம். இந்தப் புரிதலோடு நிஷாந்த்சிங்கையும் இவ்வாறு சேவைசெய்யும் இளைஞர்களையும் பார்க்கிறேன். பரவசத்தால் என் கண்கள் மலர்ச்சியடைவதை என்னாலேயே உணர்ந்துகொள்ள முடிகிறது. எதிர்பார்ப்புகளற்ற மனித சேவைக்கு எதை இணையாகச் சொல்ல முடியும்? டெல்லி விவசாயிகளின் போராட்ட வெற்றிக்கு பிரம்மாண்டமான மனித சேவை அடிப்படையாக இருக்கிறது என்பதை நான் அறிந்து கொண்டபோது, ஏதோ ஒன்றை புதிதாக நான் கண்டுபிடித்துவிட்டதைப் போன்ற உணர்வைப் பெற்றுக்கொண்டேன். அருவெறுப்பும் ஏமாற்றுத் தனங்களும் நிறைந்த நுகர்வுக் கலாச்சாரத்திலிருந்து விடுபட்டு, மானுட சேவையை அடிப்படையாகக் கொண்ட ஒரு புரட்சிகர உலகத்தில் வாழ்வதைப் போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.
உணவு கிடைக்காதவர்களுக்கு உணவு தரும் சேவையைப் போன்று, ஆடைகளைத் தூய்மை செய்துகொள்ள முடியாதவர்களுக்கு ஆடையைச் சலவை செய்துதரும் சேவையைப் போன்று வேறு சேவைகளும் என் கண்ணில் பட்டன. அவை ஒவ்வொன்றையும் ஆழமாக கவனிக்கத் தொடங்கினேன். நான் அவசர அவசரமாக டெல்லியின் போராட்டக்களத்திற்கு வந்தபோது, முதலில் யோசித்த ஒன்று, டெல்லி குளிருக்கான ஆடைகள் பற்றித்தான்.
ஆறு ஆண்டுகளுக்கு முன் நார்வே நாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. வடதுருவப் பயணம் என்பதால் விலையுயர்ந்த குளிராடை ஒன்றை அப்பொழுது விலைக்கு வாங்கினேன். அதை டெல்லி குளிருக்கு எடுத்துச்செல்ல பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அது அலங்கோலமாகக் காட்சி தந்தது. அதன் தையல் அனைத்தும் பிரிந்துபோயிருந்தது. வேறு வழியில்லாமல் அதை டெல்லிக்கு எடுத்துச் சென்று அணிந்துகொண்டிருந்தேன். ஒரு நண்பர் என்னைப் பரிதாப மாகப் பார்த்தார். அவர் என்ன நினைத்தார் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு இடத்தைக் காட்டி அங்கு செல்லுமாறு கூறினார். நான் அந்த இடத்திற்குச் சென்றேன்.
வேறு யாரையும் ஏறெடுத்தும் பார்க்காது ஒருவர், "கருமமே கண்'’ என்று தனது தையல் பணியில் ஈடுபட்டிருந்தார். அது ஒரு டெண்டு மூலம் அமைக்கப்பட்ட தையல்கூடம். பல வண்ணங்களில் சீக்கியர் அணியும் தலைப்பாகையின் துணிகள் கூடாரம் முழுவதும் நிறைந்து கிடந்தன. அவர் ஒரு தலைப் பாகைத் துணியின் ஓரங்களை மடக்கித் தைத்துக்கொண்டிருந் தார். தையல் பிரிந்து பரிதாபமாகக் காணப்பட்ட எனது ஓவர் கோட்டைக் கொடுத்தேன். தலைநிமிர்ந்து பார்க்கவில்லை. ஆனால் வேறு இருவர் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒருவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றவர் பகத்சிங். இருவரும் அந்த தையல்கூடத்தில் அனைவருக்கும் தெரியுமாறு வைக்கப்பட்டிருந்தார்கள். அவரிடம் சில கேள்விகளை நான் கேட்டேன். அது அர்ப்பணிப்பு பற்றிய, மற்றொரு கதையை எனக்குச் சொல்லியது.
(புரட்சிப் பயணம் தொடரும்)