- சி.மகேந்திரன் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், இந்திய கம்யூனிட் கட்சி
விவசாயிகளின் டெல்லி எல்லைகள், புதிய நெருக்கடிகளைச் சந்திக்கத் தொடங்கியிருந்த சூழல்.
பசித்த வயிற்றோடு குளிர் பிரதேசத்தில் வாழுதல் கொடுமையிலும் கொடுமை. ஒருவேளை உணவு இல்லாவிட்டால் பசியின் கொடுமை வயிற்றில் தெரியாது. கை, கால் நரம்புகள் சுண்டி இழுக்கத் தொடங்கி கடுமையான வலி ஏற்பட்டுவிடும். அந்த வலியை எவராலும் தாங்கிக்கொள்ள இயலாது.
இதனால் குளிர் சூழ்ந்த போராட்டக்களத்தில் யாருமே பசியோடு இருக்கக் கூடாது என்பது லங்கரின் நோக்கம். பசியின் வேதனை எப்படியிருக்கும் என்பதை அறிவுப்பூர்வமாகக் கணக்கிட்டு பட்டினி போட்டு, அடங்கவைத்து மக்களை அங்கிருந்து அகற்றவேண்டும் என்பது மோடியின் ரகசியத் திட்டம். பட்டினி போட்டால் எல்லாம் அடங்கிவிடும் என்பது மனிதன் கண்டுபிடித்த தந்திரங்களிலேயே மோசமானது.
எனவே, உணவைப் பறித்தால் போராட்டம் நின்றுவிடும் என்ற திட்டம் வகுக்கப் பட்டது. இதற்காக மூவர் கூட்டணி ஒன்றும் உருவாக்கப்பட்டது. மத்திய உளவுத் துறை, மத்திய அரசால் செயல்படுத்தப்படும் டெல்லி போலீஸ், ஹரியானா போலீஸ் ஆகிய மூவர் கூட்டணி இந்த ரகசியத் திட்டத்தைத் தயாரித்து வைத்திருந்தது.
லங்கர் செயல்பாட்டை நிறுத்துவதுதான் அவர்களின் முதல் நோக்கம். லங்கருக்கு உணவு பொருட்களை வழங்கிவந்த சிலர்மீது, வருமானவரித்துறை நடவடிக்கை எடுத்துப் பார்த்தது. மோடியை கொள்கைரீதியாக எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வருமான வரித்துறை வெறி கொண்டு பாயும் வழக்கம் இப்பொழுது வந்துவிட்டது. கருணையும் வைராக்கியமும் கொண்ட பஞ்சாப் லங்கர் நன்கொடையாளர்கள் யாருமே வருமான வரித்துறையின் மிரட்டலுக்கு அடிபணியவில்லை. அப்பொழுதுதான் ஒரு தந்திரத்தை உருவாக்கினார்கள். ஆனாலும் இது பழமையான தந்திரம்.
மன்னர் காலத்தில் பகைநாட்டைக் கைப்பற்ற முதலில் முற்றுகைப் போராட்டம் தொடுக்கப்படும். வலிமைவாய்ந்த கோட்டைக்கு எடுத்துச் செல்லப்படும் தண்ணீர், உணவுப் பொருட்கள் தடுக்கப்படும். பல மாதங்களுங்களுக்குப் பின்னர் வேறு வழியில்லாமல், பகைநாடு போரில் தோல்வி அடைந்ததாக அறிவித்து சரணடைந்துவிடும். இதே முற்றுகை விவசாயிகள் போராட்டத்திலும் பின்பற்றபட்டது.
இந்த முற்றுகை எத்தகைய மோசமானது என்பதை ஒரு பயணத்தில் நானும் உணர்ந்து கொண்டேன். அது எனக்கு ஒரு நெருக்கடியான நேரம். இரண்டு பணிகள் என்னைப் போராட்டக் களத்திலிருந்து திரும்ப வைத்தது. கொரோனாவின் தேசிய அடைப்புக்குப்பின், நேரடியாக கூடும் தேசியக்குழுக் கூட்டம், தேசிய நிர்வாகக்குழு கூட்டம் ஆகியவை ஹைதராபாத்தில் நடை பெற்றது. அதில் கலந்துகொள்ள வேண்டும். மற்றொன்று மேட்டூரை சார்ந்த மனிநேய மருத்துவர் லெட்சுமி நரசிம்மன். அரசு மருத்துவர்களின் தீவிரமான போராட்டத்தில் பங்கேற்றபோது, அவர் மாரடைப்பால் மரண முற்றார். அவரும் அவரது இணையர் பொறியாளர் அனுராதாவும் தோழமைக் குடும்பம். எனது அன்புக்கு உரியவர்கள். மருத்துவர் லெட்சுமி நரசிம்மனின் நினைவு மண்டப திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டேன்.
மேட்டூரில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கும் டெல்லிப் போராட்டக் களத்திற்கும் இடையில் அமைந்தவை... மறக்க முடியாத நிகழ்ச்சியாக எனக்கு இது அமைந்துவிட்டது. மருத்துவர் லெட்சுமி நரசிம்மன் மணிமண்டப திறப்பு நிகழ்வில் ஒரு குறிப்பிடத்தக்க அளவில் மருத்துவர்கள் வந்திருந்தார்கள். அத்தனைபேரும் அர்ப்பணிப்புமிக்க மருத்துவர்கள். மருத்துவத் துறையில் கார்ப்பரேட் கொள்ளையர்களால் அடையும் மன வேதனைக்கு நடுவில், ஏழை மக்களின் மீது நம்பிக்கை கொண்ட இத்தனை மருத்துவர்களா? என்ற எண்ணம் எனக்கு தோன்ற தொடங்கியது. அப்பொழுது தான் எதிர்பாராமல் அந்த நிகழ்வு நடைபெற்றது.
மறைந்த டாக்டருக்கான தியாக தீபத்தை மருத்துவர்கள் கையில் ஏந்தி வந்து நினை விடத்தில் தந்தார்கள். தீபத்தில் தீயின் ஜுவாலை கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்தது. தீபத்தைக் கொடுத்த டாக்டர், மறைந்த டாக்டர் லெட்சுமி நரசிம்மனை நினைத்திருக்க வேண்டும். அவர் உணர்ச்சி வயப்பட்டார். கண்கள் கலங்கத் தொடங்கி உடல் குலுங்க ஆரம்பித்தது. தோழர்கள் கொளத்தூர் மணி, பாலபாரதி, நான் ஆகிய மூவரும் தியாக தீபத்தை வாங்கினோம். தீபம் எரிய ஊற்றப்பட்டிருந்த கொதிநிலைலிருந்த எண்ணெய் என் கையிலும், பாலபாரதியின் கையிலும் கொட்டி விட்டது. என் கையில் கொஞ்சம் கூடுதலாகவே கொட்டிவிட்டது. உடன் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கத் தொடங்கி விட்டார்கள்.
ஆனாலும் எரிச்சலும் வலியுமாக இரண்டு நாட்கள் தொடர்ந்தன. உடனே டெல்லி செல்வதா? அல்லது வேண்டாமா? என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது. போராட்டக்களம் என்னை விடுவதாக இல்லை. இறுதியில் அது என்னை வெற்றிகொண்டு விட்டது. விமானம் பிடித்து அவசரமாக சிங்கு எல்லைக்கு சென்றுவிட்டேன். அப்பொழுது சிங்கு எல்லை மூடப்பட்டிருந்தது. அரசு விவசாயிகளுக்கு எதிராக முற்றுகைப் போராட்டத்தில் இருந்தது..
தீக்காயத்தில் கொப் பளம் வந்து புண்ணாகி விட்டது. கை வீங்கி வலி அதிகரித்தது. தொடர்ந்து மிகுந்து பொறுப்போடு மருத்துவர் ராஜன் காலை, மாலை இரண்டுவேளையும் செல்பேசி மூலம் ஆலோசனை வழங்கிக் கொண்டே இருந்தார். அப்பொழுது அவர் சொன்னார். குளிர்காலத்தில், குளிர்பிரதேசத்தில் காயங்கள் குணம் பெறுவது எளிதானது இல்லை என்று.
எனக்கு இரண்டு வேதனைகள். தீக்காயங்கள் தரும் எரிச்சல் ஒரு வேதனை என்றால் சிங்கு எல்லை மூடப்பட்டு முற்றுகை மற்றொரு வேதனை. விவசாயி களின் போராட்டக் களத்திற்கு நான் செல்ல வேண்டும். அதிக எண்ணிக்கையில் லங்கருக்கு உணவுப் பொருட்களை ஏற்றிய வாகனங்கள் வழிக்காக காத்து நிற்கின்றன. யாருக்கும் போராட்டக் களத்தில் நுழைய அனுமதி இல்லை. அனைவரையும் காவல்துறையும் துணை ராணுவப்படையும் திருப்பி அனுப்பிக் கொண்டிருக் கிறது. குளிர் கூடிக் கொண்டி ருக்கிறது. குளிரில் மக்கள் வயிற்றுப் பசிக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்ற கவலை என்னைக் கவ்விக் கொண்டது.
அப்பொழுது போராட்டக் களத்திலிருந்து ஒரு அழைப்பு. பஞ்சாப்பை சார்ந்த எனது இயக்கத் தோழர் ஒருவர் செல்பேசியில் அழைத்திருந்தார். இடது பக்கத்தில் இரண்டு பர்லாங்க் தூரத்தில் ஒரு மரத்தடியில், ஆட்டோ நிற்கிறதா என்றார். ஆம் என்றேன். அங்கு செல்லுங்கள் என்றார். சென்றேன். ஆட்டோவில் ஏறியவுடன் மேடு பள்ளங்கள் நிறைந்த பாதையில் வந்து சேர்ந்தது.
அங்கு வரிசையாக வாகனங்கள். எல்லாம் லங்கருக்கு தேவையான உணவுப் பொருட்களை சுமந்து குலுங்கிக் குலுங்கி சென்றுகொண்டிருக்கின்றன. வாகனஓட்டிகளின் முகத்தில் தனி மகிழ்ச்சி. ராணுவம், போலீஸ் ஆகியவற்றின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு தனிப்பாதையை கண்டுபிடித்து போராட்டக் களத்திற்குச் செல்லும் மகிழ்ச்சியாக அது இருக்கலாம். எனக்கு தீக்காயத்தால் ஏற்பட்ட வலி திடீரென நின்றுபோனதைப் போல ஒரு உணர்வு. மனதுக்குள் தனி உற்சாகம். ராணுவம், போலீஸ் ஆணவத்துடன் ஒரு பாதை யைத்தான் அடைத்தது... மக்கள் நூறு பாதையை திறந்துவிட்டார்கள். இதுதான் மக்கள் ஒன்று திரளும்போது ஏற்படும் வலிமை.
கொடிய அடக்குமுறையையும், முற்றுகையையும் ஆட்சி யாளர்கள் எப்படித்தான் உருவாக்கி னாலும் அதனை போர்க்குணம் கொண்ட மக்கள் மிகுந்த லாவகத் தோடு எதிர் கொண்டுவிடுகிறார் கள். தாங்கிக்கொள்ள முடியாத அடக்குமுறைகளை எதிர்த்து நடக்கும் மக்கள் போராட்டத்தை அநீதியான முறைகளில் அழித் தொழிக்க எத்தனையோ முயற்சிகள் ஆளும் வர்க்கத்தால் கடந்த காலத்தில் எடுக்கப்பட்டது. போராட்டங்களை ஒடுக்க முடிந்ததா? என்று எனக்குள் கேள்வி கேட்டுப் பார்க்கிறேன். மனம் இல்லை என்று பதிலளிக்கிறது. கடந்த காலத்தில் நான் நடந்து வந்த பாதையைப் பற்றி யோசிக்கிறேன். எனக்குள் ஒருவிதமான பெருமிதம்.
ஆட்டோ 30 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் சுற்றி வந்து, போராட்டக் களத்திற்கு வந்து சேர்ந்துவிட்டது. மோடியின் சதிகளை முறியடித்து, அனைவருக்கும் உணவு அளித்துக் கொண்டிருக்கின்றன லங்கர்கள்.
போராட்டக் களத்தில் உணவு வழங்கும் லங்கரை மட்டுமே எல்லோரும் அறிந்திருக்கிறோம். மானுட மேன்மையின் அடையாளமாக மற்ற லங்கர்களும் அங்கு இருக்கின்றன. அதை அறிந்து கொள்வதும் அவசியமாகும்.
(புரட்சிப் பயணம் தொடரும்)