"அரசாணை வெளியிட்டு 3 வாரங்களுக்குமேல் ஆகிவிட்டது. இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை'’என சலித்துக்கொண் டார், அந்தக் காவல்துறை நண்பர்.
அவர் குறிப்பிட்டது, ‘"காவலர்கள் தங்கள் உடல் நலனைக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற் காகவும், இரண்டாம் நிலை காவ லர் முதல் தலைமைக் காவலர் வரையிலான காவலர்களுக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்கப்படும்'’ என்று கடந்த 3-ஆம் தேதி வெளியிட்ட அரசாணையைத்தான்.
சட்டமன்றத்தில் கடந்த 13-9-2021 அன்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த போது முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வெளியிட்ட அறிவிப்புதான், ‘காவலர்களுக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு’ என்ற அரசாணை யாகப் பிறப்பிக்கப்பட்டது.
அந்த உத்தரவில், "வாரத் தில் ஒருநாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை, தவிர்க்கமுடியாமல் காவலர்கள் பணிபுரிய நேர்ந்தால்... அந்த நாளுக்குரிய ஊதியம் தனியாக வழங்கப்படும். வார விடுமுறை என்பது, அந்தந்த காவல்நிலைய பணிச்சூழலைப் பொறுத்து எடுத்துக்கொள்ள வேண்டியது. அந்த வாரத்தில் விடுப்பு எடுக்கும் காவலரின் பெயர்கள் காவல் நிலைய தகவல் பலகையில் குறிப் பிடப்பட வேண்டும். இது, மாற்றுக் காவலரை பணியில் அமர்த்துவதற்கு ஏதுவாக இருக்கும். டி.ஜி.பி. இதற்கான உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும்..'’என குறிப்பிடப்பட்டிருந்தது.
"விருதுநகர் மாவட்டத்தில் இந்த அரசு உத்தரவை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை'’என்று குமுறலாகச் சொன்ன அந்தக் காவலர், "இந்த மாவட்டத்துல வார லீவு கேட்டா, ஏதாச்சும் முக்கியமா இருந்தா போங்கன்னு வெறுப்பா பேசுறாங்க. இங்கே ஆள் இல்லன்னு மறுத்துப் பேசுறாங்க. ஆனா... டி.ஜி.பி. ஆபீஸுக்கு எல்லாரும் வார லீவு எடுத்துக்கிறாங்கன்னு மெயில்ல லிஸ்ட் அனுப்பிருக்காங்க. சென்னைல இது நடைமுறைக்கு வந்திருக்கு. மதுரைலயும், கோயம் புத்தூர்லயும் லீவு கொடுக்கிறாங்க. சிட்டி போலீஸுக்கு மட்டும் வார ஓய்வு கொடுக்கிற மாதிரி தெரியுது''’என்று நொந்து கொண்டார்.
விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மனோ கரை தொடர்புகொண்டோம்.
"தெனைக்கும் நாங்க லீவு கொடுக்கிறோம். அந்தந்த சப்-டிவிஷன்ல யார், யாருக்கு வார ஓய்வுங்கிறத எல்லாம் பார்த்துப் பார்த்து கொடுத்துக் கிட்டிருக்கோம். பந்தோபஸ்து மாதிரி ஏதாவது இருந்தா, அடுத்து வரக்கூடியதுல சேர்த்து கொடுத்திடறாங்க. எங்கேயாவது ஏதாவது விட்டுப் போயிருந்தாக்கூட ஸ்ட்ரிக்ட்டா கொடுக்கச் சொல்லிருக்கோம். ஏதாவது ஒரு இடத்துல, பந்தோபஸ்து அதிகமா இருக்கிற இடத்துல, லீவு கொடுத்திருக்கமாட்டாங்க. ஆனா, அடுத்த நாள் கொடுத்திருப்பாங்க. அவசியமா, வாரத்துக்கு ஒருநாள் கண்டிப்பா காவலர்களுக்கு ஓய்வு கொடுக்கிறோம். லீவு கொடுத்த மாதிரி பொய்க் கணக் கெல்லாம் எழுதுறதில்ல''’என்றார்.
மாநில அளவில் காவல்துறையினரின் பொதுவான ஆதங்கம் இதுதான்...
"அனைத்து காவலர்களுக்கும் அரசு ஆணைப்படி அனைத்து மாவட்டங்களிலும் வார ஓய்வு வழங்கப்படுவ தில்லை. விடுமுறை விபரம் எனப் பெயரளவில் நோட்டீஸ் போர்டில் ஒட்டுகிறார்கள். வார ஓய்வு நாளிலும் பணி செய்ய வேண்டியதிருக்கிறது. ஜி.ஓ.படி லீவு கேட்டால், சம்பந்தப்பட்ட காவலர் குறி வைக்கப்படும் நிலையும் உள்ளது. காவலர் ஒருவருக்கு வார ஓய்வு தருவதாக இருந்தால், அன்றிரவு விடியவிடிய வேலை வாங்கிவிட்டு, மறுநாள் காலையி லிருந்து வார ஓய்வு எடுக்கச் சொல்லும் அவலம் இருக்கிறது. இதுதான் வார ஓய்வு? ஜி.ஓ. வெளியிட்ட பிறகும், ஒருநாள் கூட வார ஓய்வில் செல்லாத காவலர்கள் பல்லாயிரம் பேர் இருக்கின்றனர். வார ஓய்வு என்றால், எத்தனை மணியிலிருந்து எத்தனை மணிவரை என்றும், மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டிய நேரம் குறித்தும், அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரி வரைமுறைப்படுத்த வேண்டும். கொடுமை என்னவென்றால்... சில எழுத்தர்களுக்கும், சில அலுவலகப் பணியாளர்களுக்கும், சில அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கு வார ஓய்வு அறிவித்தது பிடிக்கவே இல்லை. அதிகாரிகளே முறைப்படுத்தி, வார ஓய்வில் காவலர்களை அனுப்பிவிட வேண்டும். காவலர்களே சென்று வார ஓய்வு கேட்கும்போது, அதிகாரிகளிடமிருந்து தேவையற்ற முரணான பேச்சுகளை கேட்க நேரிடுகிறது.
வார ஓய்வு விபரங்களை தகவல் பலகையில் ஒட்டத் தவறும்போது, துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். காவலர்களுக்கு சரியான முறையில் வார ஓய்வு வழங்கப்படுகிறதா என்பதை உயரதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். வார ஓய்வு தராமல், வார ஓய்வு அளிக்கப்பட்டதாக கணக்கு காண்பிக்கும் அதிகாரிகளுக்கு மெமோ கொடுக்க வேண்டும்.
பொதுமக்கள், உறவினர்கள், நண்பர்களின் பார்வையில் வாரத்திற்கு ஒருநாள் காவலர்களுக்கு விடுமுறை என்பது போலாகிவிட்டது. இதனை, நல்லமுறையில் செயல்படுத்தவில்லை என்பதே உண்மை.''”