தொடர்ந்து பத்து வருடம் தமிழகத்தை ஆண்ட அ.தி.மு.க. அரசு கண்மூடித்தனமாக கொள்ளையடித்திருக்கிறது. அதற்காக அனைத்து சட்டரீதியான வழிமுறைகளையும் காலில் போட்டு மிதித்திருக்கிறது என ஒன்றிய அரசின் தலைமை கணக்குத் துறை (சி.ஏ.ஜி.) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2017-ஆம் ஆண்டு தமிழக அரசின் செயல்பாடுகளை இந்திய தணிக்கைத்துறை ஆராய்ந்தது. பொதுவாக அரசுத்துறையில் செலவுகளை கையாள்பவர்கள், தணிக்கை எனப்படும் வரவு-செலவு கணக்குகளை பார்வையிடும் துறைக்கு பயப்படுவார்கள். ஒவ்வொரு அரசுத் துறையிலும் தணிக்கை செய்வதற்காக என தனி அதிகாரி இருப்பார். ஒரு செலவு, வரம்பு மீறியதாக இருந்தால் அவர் எதிர்ப்புத் தெரிவிப்பார். சந்தையில் ஒரு ரூபாய்க்கு விற்கும் பொருளை பத்து ரூயாய்க்கு வாங்கியதாக அரசு அதிகாரி கணக்கு எழுதி ஒன்பது ரூபாய் கொள்ளையடித்தால், தணிக்கைத்துறை தலையிடும்; கேள்வி எழுப்பும். இது சாதாரண நடைமுறை.
2017-ஆம் ஆண்டு எடப்பாடி தலைமையில் தமிழக அரசும் அதற்கு முன்பு ஜெ. தலைமையிலான அரசும் நிறைவேற்றிய திட்டங்களிலெல்லாம் கணக்கு வழக்குகளில் ஊழல் நடந்துள்ளது என இந்திய கணக்குத் துறை கண்டுபிடித்தது. 2018-ஆம் ஆண்டு ஒரு அறிக்கையை தயார் செய்து மாநில அரசுக்கு அளித்தது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள அரசின் செயல்பாடுகளை ஆராய்ந்து இதுபோல அறிக்கைகள் தரப்படும். அதுபோல மத்திய அரசின் திட்டங்களையும் இந்தத்துறை ஆராய்ச்சி செய்யும்.
மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் இந்திய தணிக்கைத் துறை கண்டுபிடித்துச் சொன்னதுதான் இந்திய அரசியலில் பெரிதாகப் பேசப்பட்ட 2ஜி ஊழல்.
சி.ஏ.ஜி. அளிக்கும் அறிக்கை முதல்வருக்கு அனுப்பப்படும். அவர் கையெழுத்திட்ட பின் கவர்னருக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்படும். அதன்பின் தமிழக சட்டமன்ற உறுப்பினர் களுக்கு அளிக்கப்படும். அதன் அடிப்படையில் தமிழக சட்டமன்றத்தில் விவாதம் நடக்கும். இது இந்தியா முழுவதும் உள்ள நடைமுறை.
2018-ஆம் ஆண்டு வந்த இந்திய கணக்குத் துறையின் அறிக்கையை எடப்பாடி அப்படியே மூடி வைத்துவிட்டார். மூன்று வருடங்கள் கழித்து 2021-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வர் ஸ்டாலின் அந்த அறிக்கை யைத் தேடிக் கண்டுபிடித்து கையெழுத்திட்டு கவர்னருக்கு அனுப்பினார். கவர்னர் கையெழுத் திட்டு அந்த அறிக்கை வெளியானது.
தலைமை கணக்குத் துறை அந்த இரண்டு ஆண்டு கால அரசின் செயல்பாடுகளையும் ஆராய்ந்து அறிக்கை அளித்துள்ளது. அந்த அறிக்கைகளும் விரைவில் வெளிவரவுள்ளது என நடந்த விவரங்களைத் தெரிவிக்கிறார்கள் நிதித்துறை அதிகாரிகள்.
இதுபற்றிப் பேசும் அ.தி.மு.க. பிரமுகர்கள், "ஜெ. ஆட்சிக் காலம் முதல் எடப்பாடி ஆட்சியின் முதல் ஆண்டுவரை இந்த அறிக்கையைத் தோண்டியெடுத்து அனைத்துத் துறைகளிலும் ஊழல் என குறிப்பிடுகிறது. இதை எடப்பாடி எப்படி வெளியிடுவார்? எடப்பாடி ஏன் வெளியே சொல்லவில்லை என மத்திய அரசு கேள்வி கேட்கவேண்டும். மத்திய நிதியமைச்சர் நிர்மலாவும் எடப்பாடியும் சேர்ந்து நடத்திய திருவிளையாடல்தான் இந்த அறிக்கை மறைப்பு என்கிறார்கள்.
சி.ஏ.ஜி. அறிக்கையில் அமைச்சர் தங்கமணி மட்டும் ஒரு ஆண்டில் 25 ஆயிரத்து 689 கோடி ரூபாய் கணக்கில் முறையற்ற நடவடிக்கை களில் ஈடுபட்டு நஷ்டத் தை ஏற்படுத்தியுள் ளார். தமிழக மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி விநியோக திட்டத்தில் அதிக விலை கொடுத்து அவை வாங்கப்பட் டன. அதில் ஏழரை வருஷம் பொருட்களை மக்களுக்கு விநியோகிக்கவே இல்லை. அந்த வகையில் 102 கோடி ரூபாய் தேவையில்லாத செலவினத்தை தமிழக அரசின் வருவாய்த்துறை அமைச்சரான ஆர்.பி.உதயகுமார் செய்துள்ளார். டாஸ்மாக் பார்களுக்கு உரிய தொகையை அ.தி.மு.க.வின ரிடமிருந்து வசூலிக்காமல் 19 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நத்தம் விசுவநாதனின் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் கிணறு தோண்டாமலே கிணறு தோண்டி னோம் என 5 லட்சம் நிதி கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. செட்டாப்-பாக்ஸ் வாங்கியதில் 20 கோடி மீனவர்களுக்கு நிதியளிப்பதில் 100 கோடி, தேவையில்லாமல் பள்ளிப் பாடப் புத்தகங்களை அச்சிட்டதால் 23 கோடி என அனைத்திலும் ஊழல் என்கிறது சி.ஏ.ஜி. அறிக்கை.
இதில் எடப்பாடியின் நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை, வேலுமணியின் உள்ளாட்சித்துறை, ஓ.பி.எஸ்.ஸின் வீட்டு வசதித்துறை ஆகிய துறைகளில் முறைகேடுகள் சிறிதளவே இடம்பெற்றுள்ளன. ஜெ.வின் ஆட்சிக் காலத்திலிருந்தே மின்துறை அமைச்ச ராகவுள்ள தங்கமணியின் துறையில் நடந்த முறைகேடுகளே 90 சதவிகிதம் இடம் பெற்றுள் ளன. இதுபற்றி விளக்கமளித்துள்ள தங்கமணி, "தமிழகத்தில் விவசாயிகளுக்கும் குடிசைகளுக் கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு மின்சாரம் வழங்குவதுதான் முக்கி யம். அதற்காக அதிக விலை கொடுத்து மின் சாரம் வாங்குவது தவறில்லை'' என விளக்கமளித் துள்ளார். அப்படியென்றால், இந்த அறிக்கையை முந்தைய அ.தி.மு.க. அரசு மறைத்தது ஏன் என்பதற்கு, அவரிடம் பதில் இல்லை.
இதுபற்றி நம்மிடம் பேசிய மின்வாரிய அதிகாரிகள், "1991-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு, அரசுத் துறையில் உற்பத்தி செய்ய உதவி செய்ய மாட்டோம்' என அறிவித்துவிட்டது. அதன்பிறகு தனியாரிடம் மின்சாரம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. 2011-ஆம் ஆண்டு ஊழல் ஆரம்பித்துவிட்டது. சட்டபூர்வத்திற்கு எதிராக ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. 5 வருடம் 1000 மெகா வாட் மின்சார டெண்டர் கோரப்பட்டது. டெண்டரில் கலந்துகொண்ட அனைத்து சப்ளையர்களிடமிருந்து 3300 மெகாவாட் 15 வருடங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இத்தனைக்கும் மின்சார ரெகுலேட்டர், வாரியம் கேள்வி கேட்டபோது 20,000 மெகாவாட் தினமும் பற்றாக்குறை ஏற்படும் என்றது. இன்றுவரை அந்த அளவுக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை. இதில் 1200 மெகாவாட் தமிழகத்தில் இருந்துதான் வாங்கப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தின்படி மின்சாரத்தை வாங்கினாலும் வாங்காவிட்டாலும் பணம் கொடுக்கவேண்டும். யூனிட்டுக்கு 2 ரூ கட்டாயம் கொடுக்கவேண்டும். 2014-ல் 6000 கோடி, 2018-ல் 4,000 கோடி என அந்த நிறுவனத்துக்கு கொடுக்கவேண்டும். தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 2,500 மெகாவாட் உற்பத்தி தமிழகத்திலேயே வந்துவிட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.3.50 என இருந்த மார்க்கெட் நிலைக்கு மாறாக 5 ரூபாய், 6 ரூபாய் என ஒப்பந்தம் போட்டு கொள்ளை யடித்தார்கள். இதில் அதானியின் மின் நிறுவனத்திடம் மின்சாரம் வாங்காமலே சூரிய ஒளி மின்சாரம் யூனிட் 7 ரூபாய் என 25 வருடங்களுக்கு ஒப்பந்தம் போட்டார்கள். அன்று இந்தியாவில் 4 ரூபாய் என சூரிய மின்சாரம் கிடைக்கும் நிலையில் டெண்டர் இல்லாமல் ஜெ. 2014-ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளிவந்தபோது போட்டார்கள்.
இன்று சூரியஒளி மின்சாரம் 2 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால் 7 ரூபாய்க்கு அதானியிடம் தமிழக மின்சார வாரியம் வாங்கியிருக்கிறது. இன்றுவரை அதானி சூரிய மின்சாரத்தை முறையாகத் தரவில்லை. ஆனால் அதானிக்கு ஒப்பந்தம் போட்ட காரணத்தினாலேயே நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் தமிழக மின்வாரியம் கொடுத்துக்கொண்டிருக்கிறது என இந்திய தலைமைக் கணக்கு தணிக்கை அறிக்கை குறிப்பிடுகிறது.
இப்படி லட்சக்கணக்கான கோடிகள் ஊழல், ஜெ. ஆட்சிக் காலத்திலிருந்து நடந்து வருகிறது. இந்த அறிக்கைப்படி ஊழல் செய்துள்ள அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை தலைவரான கந்தசாமி ஐ.பி.எஸ்.ஸும், முதல்வர் ஸ்டாலினும் பேசியுள்ளனர். அதன்படி... தங்கமணி, வேலு மணி, ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் போன்ற அமைச்சர்களின் ஊழல்கள் முதலில் தோண்டப்படுகிறது. அடுத்தடுத்த சி.ஏ.ஜி. அறிக்கைகள் வெளிவரும்போது எடப்பாடி, ஓ.பி.எஸ். போன்ற முக்கியமானவர்களின் ஊழல்கள் தோண்டப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.