இயக்குநர் சீனுராம சாமி, நடிகர் விஜய்சேதுபதி இணைந்து உருவாகியிருக் கும் நான்காவது படம் "மாமனிதன்'. இளைய ராஜா- யுவன்சங்கர் ராஜா கூட்டணியில் இசை என்ற எதிர்பார்ப்பு வேறு. இளையராஜா இசை என்பதாலேயே பண்ணை புரத்தில் வைத்து படம் எடுத்துவிட்டார்களோ.
நட்பைத் தவிர பெரிய உறவுகள் இல்லாத நிலையில், தனக்கென வரும் வாழ்க்கைத் துணைக் காக வீட்டைக் கட்டிவைத்து, அதை பிறருக்காக வாடகைக்குக் கூட விடாமல் பேணிக் காக்கும், ஊரில் பலரும் விரும்பும் நபராக வாழ்வதால் மாமனிதனா?
தன் மகள் திருமணத்துக்காக கஷ்டப்பட்டு பணம் சேர்த்து வாங்கிய நகையை, ஆட்டோவில் விட்டுச்செல்லும் பெரியவரின் வீட்டு முகவரியைத் தேடிச்சென்று அவரிடம் ஒப்படைப்பதால் மாமனிதனா?
வாழ்க்கை இக்கட்டில் சென்று சிக்கிக் கொள்ள, தனது பிள்ளைகளையும், மனைவியையும் துணையில்லாமல் விட்டுச் சென்று, இன்னொரு ஊரில் கூலிக்கு வேலைபார்க்க வேண்டிவரும் நிலையிலும், தன் மகள் வயதிருக்கும் பெண்ணை விடலைப் பையன் கள் கேலி செய்யும் போது, அறியாத ஊரில் எதற்கு வம்பு என விட்டுச்செல்லா மல், அவர்களைத் தட்டிக் கேட்பதால் மாமனிதனா?
போலீஸ் தேடிவந்து விடக்கூடும் என்பதால் மனைவிக்கும், பிள்ளை களுக்கும்கூட தன் இருப்பிடத்தைச் சொல்லாமல் மறைக்கும் நாயகன், சென்ற இடத்தில் கிடைக்கும் சம்பளத்தை மிச்சம்பிடித்து குடும்பத்துக்கு நண்பன் மூலம் கொடுத்து உதவுகிறான். மனைவி, பிள்ளை கள் தன்னைத் தவறாக நினைக்கக்கூடும் என்ற போதும், யாரோ ஒருவர் உதவியால் படிக்கிறோம் என்ற அக்கறையிருந்தால்தான் மகன் படிப்பான் என, தான் உதவுவதை வெளிக்காட்டாமலிருக்கும் மன தைரியத்தால் அவன் மாமனிதனா?
காசியில், மடமொன்றில் பணியில் சேர்ந்த நிலையில், அங்கிருப்பவர்கள் அவனைச் சந்தேகப்படும்போது, "அப்பன் தோத்த ஊர்ல பிள்ளைங்க ஜெயிக்கிறது கஷ்டம்' என்று சொல்லி பணத்தோடு புண்ணியத்தையும் சேர்க்க வந்திருப்பதாக விளக்கமளிப்பதால் மாமனிதனா?
தன் பெயர் கெட்டு, குடும்பத்தைப் பிரிந்து வாழ்வின் நரகமனைத்தையும் அனுபவிக்கக் காரணமானவனை, இக்கட்டான நிலையில் காசியில் சந்திக்கும்போதும் அவனை மன்னிக்கக்கூடிய அளவுக்கு மகத்தான மன விரிவைக் கொண்டி ருப்பதால் அவன் மாமனிதனா என்ற கேள்விகளை எழுப்புகிறார் இயக்குநர்
நாம்தான் படிக்காத தற்குறி ஆகிவிட்டோம்… நம் பிள்ளைகள் தனியார் பள்ளியில் படித்து, சிறப் பாக ஆங்கிலம் பேசி வாழ்க்கையில் உயர்நிலையை அடையவேண்டுமெனத் தனக்குச் சம்பந்தமில்லாத நிலம் விற்றுத் தரும் தரகராக மாறி ஏமாறும் தருணம் சற்றே மகாநதியை நினைவூட்டுகிறது. இரண்டு ராஜாக்களிருந்தும் பாடல்கள் பெரிதாகத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
காணாமல் போயிருந்த கஞ்சா கருப்பு, இந்தப் படத்தில் மீண்டும் தலைகாட்டியிருக் கிறார். ஒளிப்பதிவாளர் செல்வகுமாரின் கேமரா பண்ணைப்புரம், கேரளா, காசியின் அழகை அள்ளி வழங்க முயற்சித்திருக்கிறது.
நெஞ்சைத் தொடும் கதையொன்றை எடுத்துக்கொண்டு ரசிகர்களின் இதயத்தைத் தொட முயற்சிசெய்து அதில் பெருமளவும் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் சீனுராமசாமி.
-மணி