"அடுத்த தலைமுறையின் கல்வி ஒரு பெரும் சிக்கலில் இருக்கிறது. ஐந்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு எத்தனை குழந்தைகளை அவர்களின் பெற்றோர் களைப் பாதிக்கப்போகிறது என்பது கடந்த மூன்று நாட்களில் ஏழு தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் 5-ஆம் வகுப்பில் சரியாகப் படிக்கவில்லை என்று என்னிடம் அழைத்து வந்ததிலிருந்து தெரிகிறது. இதை எதிர்த்து எல்லாரும் திரளாமல் ரஜினி பேச்சு பற்றியே பேசுவதைப் பார்த்தால்... வேதனை, அருவெறுப்புடன் கையறுநிலையில் கோபம்தான் வருகிறது. நாம் எவ்வளவு நீர்த்துப் போயிருக்கிறோம்'" -தமிழக அரசின் ஐந்தாம்வகுப்பு மற்றும் எட்டாம்வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்புக்கு எதிராக பிரபல மனநலமருத்துவர் ஆர்.கே. ருத்ரனின் இந்தக் கருத்து கள்தான் கல்வியாளர்கள், பெற்றோர்கள், குழந்தைகள் மத்தியில் பரவலாக விவாதிக்கப்படுகிறது.
மோடி தலைமையிலான மத்திய அரசு, நீட் தேர்வை அறிமுகப்படுத்தியபோது, முதலமைச்சர் மற்றும் அனைத்து அமைச்சர்களும் "தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வாங்கிவிடுவோம்' என சொல்லி வைத்தாற்போல சொல்லிவந்தார்கள். ஆனால், தேர்விற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் "நீட் தேர்வுக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வில்லை' என்று அந்தர்பல்டி அடித்துவிட்டனர். கடைசி நேரத்தில் மாணவர்களின் கழுத்தறுத்ததோடு மட்டுமல்லாமல், அனிதாவின் உயிரையும் காவு வாங்கிவிட்டனர். அதன் தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் உயிர்ப்பலிகள். அதேபோல், பொதுத் தேர்வு கிடையாது என்ற கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், திடீரென்று ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவித்து நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்.
இதுகுறித்து நம்மிடம் பேசும் சட்டப்பஞ்சா யத்து இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் சமூக செயற்பாட்டாளருமான ரங்கபிரசாத், ""கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 30(1)ன்படி "ஆரம்பக்கல்வி முடியும்வரை மாணவர்களுக்கு எந்தவித பொதுத்தேர்வும் நடத்தக்கூடாது' என்று தெளிவாக கூறுகிறது. தற்போது 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை மீறும் செயல்.
மேலும், 2009 கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி "எட்டாம் வகுப்புவரை எந்த மாணவரையும் ஃபெயில் ஆக்கக்கூடாது' என்ற சட்டம் 2019வரை இருந்தது. ஆனால், கடந்த வருடம் அச்சட்டப் பிரிவை மத்திய அரசு திருத்திவிட்டது. திருத்தத்தின்படி இடைநிறுத்தல் பற்றிய முடிவை மாநில அரசே எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. இதைப் பற்றி அமைச்சர் செங்கோட்டையன், "ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் ஃபெயில் செய்யமாட்டோம்' என்று கூறியுள்ளார். அதாவது, மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பில் மாணவர்களை ஃபெயில் ஆக்குவார்கள் என்பதே இதன் அர்த்தம். பள்ளிக்கு வரும் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களை விரட்டும் முடிவு இது.
2019-ல் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்ட தேசிய கல்விக் கொள்கை யில் "3, 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அமெரிக்காவில் உள்ளதுபோல சென்சஸ் எக்ஸாம் கொண்டுவர வேண்டும்' என்று குறிப்பிடப்பட் டுள்ளது. சென்சஸ் தேர்விற்கும் பொதுத்தேர்வுக் கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
உலகம் முழுவதும் 'One time pen and paper exams' என்கிற ஒருமுறை தேர்வுத் திட்டத்தை ஒழித்துக்கட்டி, Continuation and comprehensive evaluation (தொடர் மற்றும் விரிவான மதிப்பீடு) நோக்கி நகர்ந்து வருகின்றனர். ஆனால், நமது நாட்டில் One time pen and paper exams மாடலை 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் கொண்டுவருவது தவறான கல்விக்கொள்கை'' என்கிறார்.
பா.ஜ.க. நாராயணனிடம் நாம் இதுகுறித்து கேட்டபோது, ""பாடங்களை எளிமையாக கற்றுக் கொடுத்தால் எந்தத் தேர்வும் எளிதே. அதேபோல், இந்தத் தேர்வில் மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. புதிய கல்விக் கொள்கை வரைவு என்பது மாநில அரசின் விருப்பத்திற்கேற் பத்தான் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு கொண்டு செல்ல மதிப்பெண் களை வாரி வழங்கிக்கொண்டிருந்த ஆசிரியர்கள், இனி கற்பிப்பதில் உண்மையாக கவனம் செலுத்து வார்கள். காரணம், இந்த பொதுத் தேர்வின்படி விடைத்தாள்கள் வேறு இடங்களில் வேறு நபர்களால் திருத்தப்படும். இதனால் எங்களுடைய பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்திருக் கிறார்கள் என்று எந்த பள்ளி யும் தங்களுக்குத் தாங்களே மதிப்பெண்ணை வழங்கி சொல்லிக்கொள்ள முடியாது. கடந்த 30 வருடங்களாக பள்ளிக்கல்வியில் கற்பிக்கும் திறனுக்கான தரம் குறைந்துள் ளது. அதை சரி செய்வதற்குத் தான் இந்த பொதுத்தேர்வு'' என்கிறார் அவர்.
""நகர்ப்புற பணக்கார மாணவர்களை மட்டுமே கருத்தில்கொண்டு கல்வித் துறை செயல்படுகிறது'' என்று குற்றஞ்சாட்டும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே. இளமாறன் நம்மிடம், ""பொதுத்தேர்வா, சாதாரண தேர்வா என்று தெரியாத குழந்தைகளிடத்தில் அப்படி ஒரு தேர்வை நடத்துவதே தவறு. கிராமப் புறங்களில் ஒடுக்கப்பட்ட ஏழை விவசாய குடும்பத்து மாணவர் களை பள்ளிக்கு அழைத்து வருவதே மிகப்பெரிய சவால். அப்படிப்பட்ட மாணவர் களிடம் பொதுத்தேர்வு என்று சொன்னால் பள்ளிக்கே வரமாட்டார்கள். அதேபோல குழந்தைகளை எந்தவிதமான சுப நிகழ்ச்சிகளுக்கோ, அவர்கள் விளையாடுவதற்கோ அல்லது வெளியில் அழைத்துச் செல்லவோ முடியாத சூழ்நிலை உருவாக காரணமாகிவிடும். எப்போதும் வீட்டில் படிக்க வேண்டும் என்கிற ஒரு அச்சத்தை குழந்தைகள் மத்தியில் உருவாக்கிவிடும். எதிர்காலத்தில் எந்தவிதமான சிந்தனையும் இல்லாத பொம்மைகளைப் போல்தான் வளருவார் கள். ஐந்தாம் வகுப்பிலேயே குழந்தைகளை புத்தகப்புழுக்களாக மாற்றுவது குழந்தைகளுக்கு எதிரான வன்முறை.
ஐந்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவர் கள் ஒரு கிலோமீட்டர் தொலைவிலும், எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் மூன்று கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள பள்ளியில் எழுத வேண்டும் என்று சொல்லி இருக்கிறது அரசாங்கம். ஆனால், ஒரு கிலோமீட்டர் தொலைவில் கிராமப்புறங்களில் எங்கே பள்ளி இருக்கிறது?'' என்று கேள்வி எழுப்புகிறார்.
பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு நம்மிடம், ""கல்வி யில் முன்னேறியிருக்கின்ற எந்த நாட்டிலும் ஐந்தாம் வகுப்பு குழந்தைக்கு பொதுத்தேர்வு என்பது இல்லை. அதேபோல், தனியார் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் கட்டணமில்லா கல்வி வழங்கப்படுகிறது. இங்கிலாந்தில் 7 சத வீதம் நடத்தும் தனியார் பள்ளிகள் வாங்கும் கட்டணத்தையே ரத்து செய்யவேண்டும் என தேர்தல் நேரத்தில் மிகப்பெரிய சர்ச்சை வெடித்திருக்கிறது.
ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதுகுறித்து வாய் திறக்காதது ஏன்? கல்வியில் மிகவும் முன்னேறி இருக்கிற பின்லாந்து நாட்டில் ஒன்பது ஆண்டுகளுக்கு தனியார் பள்ளியாக இருந்தாலும்கூட கட்டணமில்லாக் கல்விதான் வழங்கிக்கொண்டிருக்கிறது. அனைத்துப் பள்ளிகளிலும் சமமான கட்டமைப்பு வசதிகள், சமமான ஆசிரியர்கள் நியமனம் இது எதுவுமே நியமிக்கப்படாமல் சமமான கல்வி வாய்ப்பை உருவாக்காமல் அனைவருக்கும் சமமான தேர்வு என்பது எப்படி சாத்தியமாகும்?'' என்று கேள்வி எழுப்புகிறார்.
கல்வி உரிமைச் சட்டப்பிரிவு 16-வது திருத்தத்தின்படி வழக்கமான (பொது) தேர்வு என்கிறது தமிழக அரசு. ஆனால், அதே சட்டப்பிரிவு 30(1)ன்படி "எட்டாம் வகுப்பு முடியும்வரை எந்த குழந்தையும் வாரிய (போர்டு எக்ஸாம்) தேர்வில் தேர்ச்சி பெறவேண்டிய அவசியமில்லை' என்கிறது. வழக்கமான தேர்வுக்கும் வாரிய தேர்வுக்குமான வித்தியாசம் என்ன என்று தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அதேபோல், தேர்வு நடத்தவேண்டிய அவசியமில்லை என்றால் சட்டமன்றத்தில் சட்டம் இயற்றலாம். காரணம், கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது. அதையும் தமிழக அரசு செய்யவில்லை. தமிழக அரசின் கொள்கையே "இடைநிற்றல் இல்லா தேர்ச்சி. எட்டாம் வகுப்புவரை பொதுத்தேர்வு கிடையாது' என்பதுதான். ஆனால், தமிழக அரசின் கொள்கைமுடிவை தமிழக அரசே மீறும்போது நீண்ட விவாதம் நடத்தப்படவேண்டுமல்லவா?
-மனோசௌந்தர்