குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகே ரதன்பூரில் திரண்ட ஷத்ரியர் பெருந்திரள், பா,ஜ.க.வினரின் முதுகெலும்புகளில் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரும் ஏப்ரல் 19-ஆம் தேதிக்குள் ராஜ்கோட் தொகுதியில், சிட்டிங் எம்.பி.யான மோகன் குந்தாரியாவுக்குப் பதில் நிறுத்தப்பட்டிருக்கும் பர்சோத்தம் ரூபாலாவை தூக்கிவிட்டு வேறு வேட்பாளரை நிறுத்தவேண்டும். இல்லையேல் தேசம் முழுவதுமுள்ள ஷத்ரிய சமூகத்தினர் பா.ஜ.க.வைப் புறக்கணிப்பார்கள் என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஷத்ரியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த தலைவலி மார்ச் 22-ஆம் தேதி தொடங்கியது. வேட்பாளர் பர்சோத்தம் புத்தி சாலித்தனமாக பேசி தலித்துகளைக் கவருவதாக நினைத்து, “"இந்தியாவிலுள்ள ஷத்ரியர்கள் பிரிட்டிஷ் காலனி ஆட்சியின்போது, ஆட்சி அதிகாரத்துக்காகவும் பிற காரணங்களுக்காகவும் ஆங்கிலேயேருக்கு வளைந்து கொடுத்துவிட்டனர். தங்களுடைய மகள்களைக்கூட கட்டிக்கொடுத்து திருமண உறவைப் பேணினர். ஆனால் தலித் சமூகத்தினர் அப்படி வளைந்து கொடுக்க வில்லை''’என்று பேசினார்.
உடனேயே குஜராத் முழுவதும் உள்ள ஷத்ரிய சமூகத்திலிருந்து கொந்தளிப்பு எழுந்தது. ரூபாலாவை மாற்றவேண்டுமென போராட்டங்கள் நடந்தன. ஆனால் ரூபாலாவை மன்னிப்புக் கோரச் செய்து சமாளிக்கப் பார்த்தது பா.ஜ.க. ரூபாலாவும் ஒன்றுக்கு நான்கு முறை தன் பேச்சுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிப் பார்த்தார். ஆனால் ஷத்ரியர்கள் இறங்கிவரவில்லை. “"நாங்கள் அதிகமாக எதுவும் கோரவில்லை. ரூபாலாவை மாற்றிவிட்டு வேறு வேட்பாளரைப் போடுங்கள்'' என்றனர். பா.ஜ.க. அதைச் செய்யவில்லை. ஏன்?
2015-ல் ஹர்திக் படேல், பட்டிதார் சமூகத்துக்கு இடஒதுக்கீடு கோரி மிகப்பெரும் போராட்டத்தைத் மேற்கொண்டார். குஜராத்தின் மிகப்பெரும் சமூகங்களில் ஒன்றான படேல் சமூகத்தை தன் பின்னால் திரளவைத்த ஹர்திக், அடுத்த 5 வருடங்களுக்கு பா.ஜ.க.வுக்கு தலைவலியாக இருந்தார்.
ராஜ்கோட் தொகுதி வேட்பாளரான பர்சோத்தம் ரூபாலா, அதே பட்டிதார் சமூகத்தைச் சேர்ந்தவர். ஷத்ரிய சமூ கங்களின் வேண்டுகோளை ஏற்று ரூபாலாவை மாற்றி னால் தேர்தலில் பட்டிதார் சமூகம் ஒட்டுமொத்தமாக பா.ஜ.க.வை புறக்கணிக் கக்கூடும்
அதேசமயம் பட்டி தார் சமூகத்துக்கும், ஷத்ரிய சமூகங்களுக்கும் ஏற் கெனவே உரசல் இருந்த நிலையில், பர்சோத்தம் ரூபாலா விவகாரம் அதற்கு பெட்ரோல் வார்க்க, பிரச் சனை பற்றியெரியத் தொடங் கியுள்ளது. ஏற்கெனவே, ஆங்காங்கே மாவட்ட, நகர அளவில் நடந்த போராட்டங்கள் பா.ஜ.க.வின் தயக்கத்தை அடுத்து தீவிரமடைந்துள்ளன. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பீகார், உத்தரகாண்ட், மகாராஷ்டிர மாநில ஷத்ரிய சமூகத்தினர் ஒன்றிணைந்து ரூபாலாவுக்கு எதிராகக் குரல்கொடுத்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் மகாபஞ்சாயத்து நடத்தி, ரூபாலாவை மாற்றவில்லையெனில் தேர்தலில் பா.ஜ.க.வைப் புறக்கணிக்க தீர்மானம் இயற்றியுள்ளனர். அடுத்து உ.பி.யின் மீரட்டிலும் மகாபஞ்சாயத்துக்கான ஏற்பாடுகள் நடந்துவருகிறது.
இந்தநிலையில்தான் இந்த விஷயத்தை தாங்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டிருக்கிறோம் என்பதை பா.ஜ.க.வுக்கு உணர்த்த ராஜ்கோட்டின் ரதன்பூர் அருகேயுள்ள ராமர் கோவில் அருகில் லட்சக்கணக்கில் திரண்ட ஷத்ரிய சமூகத்தினர், எந்த நிபந்தனையும் விதிக்காது பர்சோத்தம் ரூபாலாவை நீக்கவேண்டும் என மாபெரும் பேரணியை நடத்திக்காட்டியுள்ளனர்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஸ்ரீ கர்னிசேனா தேசியச் செயலாளர் மகிபால் சிங் மக்ரானா, “"எங்கள் போராட்டத்தின் முதல் பகுதி இன்று நிறைவடைகிறது. பா.ஜ.க.வின் உயர்மட்டக் குழுவினருக்கு நான் சொல்லிக்கொள்வது இதுதான். ஏப்ரல் 19-ஆம் தேதிவரை பார்ப்போம். அதற்குள் ரூபாலாவை வேட்புமனுவை வாபஸ்பெறச் செய்யவேண்டும். (அதுதான் குஜராத்தில் வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள்) இனி முடிவு பா.ஜ. கையில்''’என எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இந்தத் பேரணியில் ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஷத்ரியர்களும் கூடியிருக்கின்றனர். குஜராத்தின் சுரேந்தர் நகரைச் சேர்ந்த ருத்ரத்சிங் ரானா, “"எங்கள் பெண்களுக்கு எதிரான எந்தக் கருத்தையும் சகித்துக்கொள்ளமாட்டோம். ரூபாலாவை நீக்கவேண்டுமென்ற ஒரே ஒரு கோரிக்கை மட்டும்தான் எங்களுடையது.''’
இதே தொகுதியில் காங்கிரஸும் ஒரு பட்டிதார் சமூக வேட்பாளரைத்தான் அறிவித்திருக்கிறது. பரேஷ் தனானி குஜராத் சட்டசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும்கூட. இந்த மோதல் விவகாரம் ஒருவிதத்தில் காங்கிரஸுக்கு ஆதாயம். மற்றொருவிதத்தில் இழப்பும்கூட. விவகாரம் ஷத்ரியர் யள் பட்டிதார் என்றவிதத்தில் குஜராத்தில் மக்கள் அணிபிரிந்து, பட்டிதார் பா.ஜ.க.வுக்குப் பின்னால் நின்றால், அது காங்கிரஸுக்கே இழப்பு. ஏனெனில், குஜராத்தில் பட்டிதார் சமூகமே வலுவான தரப்பு.
ஆனால், மற்ற மாநிலங்களில் ஷத்ரியர் பா.ஜ.க.வுக்கு எதிராகத் திரளுவது பா.ஜ.க.வின் தலைமையின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. இப்படி ஒட்டுமொத்தமாக ஷத்ரியர்கள் பா.ஜ.க.வினை நிராகரிக்கும் பட்சத்தில் பல மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு இழப்பு பலமாக இருக்கும். ஆனால் பட்டிதார் சமூக வேட்பாளரை மாற்றி, அச்சமூகத்தின் கோபத்துக்கு ஆளானாலோ, குஜராத்தில் பல தொகுதிகளில் பா.ஜ.க. இழப்பைச் சந்திக்கும்.
கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலே மரணம் என்பதுபோல, பிரிவினை, துருவப்படுத்தல் உத்திகளாலே முன்னுக்குவந்த பா.ஜ.க.வுக்கு ஒரு ஜாதிய விவகாரமே இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இக்கட்டாக எழுந்துநிற்கிறது. இதை எப்படி சமாளிக்கப்போகிறது பா.ஜ.க.?