(116) எதிர்நீச்சல் என் வாழ்க்கை!
என் அப்பா, என் மாமனார், என நிஜ வாழ்க்கையில் நான் பார்த்த சில அனுபவங்களை "சின்ன மாப்ள' படத்தில் எனது கேரக்டரில் சேர்த்துக்கொண்டதுபோல... என் கல்லூரி கால அனுபவங்களையும் சேர்த்துக்கொண்டேன்.
சைதாப்பேட்டையிலிருந்து பாரிமுனை செல்லும் 18-ஆம் எண் பஸ்ஸில் ஏறி ஆனந்த் தியேட்டரில் இறங்கி... அங்கிருந்து நியூ காலேஜுக்கு செல்வது வழக்கம்.
திடீரென பஸ்ஸை நிறுத்தச் சொல்லுவேன். டிரைவர் வாய்க்குள் முணுமுணுத்து திட்டுவார். நான் பஸ்ஸைச் சுற்றிவந்து டிரைவரிடம்... ஒரு கெட்டவார்த்தையைச் சொல்லி... ""இந்த வார்த்தையைச் சொல்லித்தானே என்னைத் திட்டுனீங்க?'' என்பேன். டிரைவரும் தலையாட்டுவார்.
இந்த அனுபவத்தை படத்தில் சேர்த்தேன்.
கதைப்படி பிரபு-சுகன்யா ஃபர்ஸ்ட் நைட்.
நான் நேரங்காலம் தெரியாமல் கதவைத் தட்டுவேன். பிரபுமா கதவைத் திறந்து "சாவுகிராக்கி' என வாய்க்குள் திட்டுவார்.
""மாப்ள... என்னை "சாவுகிராக்கி'னுதானே திட்டுனீங்க'' என்பேன்.
என் கல்லூரி கால குறும்புகள் கணக்கில் அடங்காதது.
காங்கிரஸ் மைதானத்தில் பொருட்காட்சி நடக்கும்.
அங்கேபோய் ஊமைபோல நடித்து கடைக்காரர்களை இம்சை செய்வேன். ஒருதடவை... தோடு, கிளிப் விற்கிற கடையில்போய்... ஊமை பாஷையில் தோடு கேட்டு செம ரகளை பண்ணிவிட்டேன். பொறுமையிழந்த கடைக்காரர்... ""ஏண்டா என் கழுத்தறுக்கிற?’’ என திட்ட... கடைக்கு வந்த ஒரு கிழவி... “"ஏம்ப்பா வாயில்லாப் புள்ளய திட்டுற?' எனக் கேட்டுவிட்டு... ""என்ன ராஜா வேணும்?'' என என்னிடம் கேட்டார்.
நான் அந்த பாட்டி அணிந்திருந்த ஒரு தோடை காட்ட... ""பக்கத்து கடையில கேளு''’ என இந்தக் கடைக்காரர் சொல்ல... அந்த பாட்டியின் காதைப்பிடித்து பக்கத்துக் கடைக்கு இழுத்துக்கொண்டே போக... பாட்டி "அடப்பாவி விடுறா... காது வலிக்குதுடா...' என கத்திவிட்டார்.
இதையெல்லாம்க

இதையெல்லாம்கூட படத்தில் சேர்க்க நினைத்தோம். ஆனால் சேர்க்க முடியவில்லை.
அப்போது நான் ஃபேஸ் ரீடிங் சம்பந்தமாக சில புத்தகங்களைப் படித்து... ஓரளவு ஃபேஸ் ரீடிங்கும் தெரிந்து வைத்திருந்தேன்.
மாம்பலத்தில் ஒரு வீட்டில் ஷூட்டிங் நடக்கும்போது... சுகன்யாவிடம்... ""உன் மனசுக்குள்ள "நம்பர் ஒன்'னா வரணும்னு ஒரு வெறி இருக்குதே'' என்று கேட்டேன். "ஆமாம்' என்றார் சுகன்யா.
""அதுக்கு நீ கடுமையா உழைக்கணும். அப்படிச் செஞ்சா, "நீ சினிமாவுல "நம்பர் ஒன்'னா வருவம்மா'’ என்றேன்.
நான் சொன்ன அட்வைஸ்களை கேட்டுக்கொண்டார் சுகன்யா.
அப்படியே அமைந்தது சுகன்யாவின் மார்க்கெட்.
அன்றிலிருந்து... இன்றுவரைக்கும் சுகன்யாவும், நானும் நல்ல நண்பர்களாக இருந்துவருகிறோம்.
"சின்ன மாப்ள' படம் வெளியாகி பெரும் வெற்றிபெற்றது.
"இந்து' ராமானுஜம் தனது விமர்சனத்தில் ""இந்தப் படத்திற்கு "சின்ன மாமனார்'னு டைட்டில் வைத்திருக்கலாம். ராதாரவிதான் இந்தப் படத்தின் ஹீரோ'' என்று குறிப்பிட்டு எழுதினார்.
போன மாதம் 15-ஆம் தேதி டைரக்டர் பி.வாசு சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி நான் போன் செய்தபோது... ""ரவி... "சின்ன மாப்ள'’மாதிரி ஒரு கேரக்டர் உனக்கு பண்ணிக்கிட்டிருக்கேன்''’ என்றார்.
அந்தளவிற்கு அந்த கேரக்டர் பரவலாக ரசிக்கப்பட்டது.
ராஜ்கபூர் டைரக்ஷனில் "உத்தம ராசா' படத்தில் நடித்தேன். இதில் ஷாட் ஹேர் ஸ்டைலுடன் ஒத்தக்கை வில்லனாக நடித்தேன். இதில் என்னை உயிரோடு புதைக்கிற காட்சி எடுத்தபோது ரிஸ்க் எடுத்து நடித்தேன். காதிலும், மூக்கிலும் பஞ்சு வைத்து அடைத்துக்கொண்டு நடித்தேன். டைரக்டர் ராஜ்கபூர், நடிகராக மாறினார். இப்போது சுந்தர்.சி.யின் நம்பிக்கைக்குரியவராக ஆகி சின்னத்திரை சீரியல் இயக்கி வருகிறார். எல்லோரிடமும் கற்றுக்கொள்ள ஏதோ ஒன்று கிடைக்கும். ஒரு மனிதன் ஏதோ ஒரு உழைப்பை செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பதை ராஜ்கபூரிடம் பார்த்தேன்.
"உத்தம ராசா' படத்தை தயாரித்த கே.பி. பிலிம்ஸ் பாலு நட்புக்கு இலக்கணமானவர். தமிழ் சினிமாவில் கே.பி. பிலிம்ஸ் பாலு, லட்சுமி மூவி மேக்கர்ஸ் முரளிதரன்... இவர்கள் இருவருடைய அட்வான்ஸ் பணமும் பெரும்பாலான ஹீரோக்களிடம் இருந்தது. அவர்களை வைத்து படம் எடுக்கிறார்களோ... இல்லையோ... அவர்களின் அட்வான்ஸ் அந்தச் சமயம் எல்லா ஹீரோக்களிடமும் இருந்தது.
"குலபதி' மலையாளப் படத்தில் ஜோஷ் இயக்கத்தில் நடித்தேன். "அமரன்' படத்தில் நான் போட்டிருந்த கெட்-அப் சாயலில் இந்தப் படத்திலும் நடிக்கச் சொன்னார்கள்.
சோரனூரில் ஷூட்டிங் நடந்தபோது... "ராதாரவியோட கெட்-அப்பை பார்க்கிறதுக்காக வந்திருக்கேன்' எனச் சொல்லி... வந்து பார்த்துவிட்டுப் போனார் நடிகர் திலகன் சார். நான் இந்தப் படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன். ஒருவேளை நான் நினைத்த மாதிரி இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தால்... ஒருவேளை நான் மலையாளத்திலேயே செட்டிலாகியிருந்திருப்பேன்.
அன்புச் சகோதரர் சுரேஷ்மேனன், திருமதி ரேவதி சுரேஷ்மேனன் நடித்த படம் "புதிய முகம்'. இதில் நானும் ரவிச்சந்திரன் சாரும், சகோதரர் வினீத்தும் நடித்திருந்தோம்.
படத்தின் முதல்பாதியில் வினீத்தும், இரண்டாம் பாதியில்... வினீத் முகத்தை மாற்றிக்கொண்டு சுரேஷ்மேனனாகிவிடுவது போலவும் கதை.
படத்தை இயக்கி நடித்த சுரேஷ்மேனனிடம்... ""சார்... ஆபரேஷன் மூலம் முகம் மாறும். உயரம் எப்படி மாறும்?'' எனக் கேட்டேன். அவர் பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டார். ஆனால் பத்திரிகைகள் விமரிசனத்தில் இந்த கேள்வி எழுப்பப்பட்டது.
இருந்தாலும் லாஜிக்கை மீறி இந்தப்படம் நூறு நாட்கள் ஓடியது.
இந்தப் படம் தயாரானபோது... திருமதி ரேவதி தயாரிப்பில் "கூத்தாடி' என்கிற சீரியலை 13 எபிஸோடுகள் இயக்கும் வாய்ப்பையும் எனக்குத் தந்தார் ரேவதி.
அப்போது பார்த்த வினீத்தை "சந்திரமுகி' படத்தில் பார்த்தபோதும்... உடலமைப்பு மாறாமல் அப்படியே இருந்தார். பத்மினி அம்மாவின் உறவினரான சகோதரர் வினீத் பல திறமைகள் கொண்ட நடிகர்.
என் அப்பாவின் நாடகக் கம்பெனியில் வேலை செய்துகொண்டிருந்தவர் வரதன் அவர்கள்.. தன் நண்பரான "மொபட்ஸ் இண்டியா லிமிடெட்' உரிமையாளர் பாலகிருஷ்ண நாயுடு அவர்களிடம் சொல்லி, வரதனுக்கு மொபட் ஏஜென்ஸி வாங்கிக் கொடுத்தார் என் அப்பா. அதில் வரதனுக்கு நல்ல சம்பாத்தியம். பிறகு... போர்வெல் கம்பெனி தொடங்கினார். அரசாங்க காண்ட்ராக்ட் எடுத்து போர் போடும் வேலைகளையும் செய்துவந்தார். ஒருமுறை அவர் நடத்திய நாடகத்தில் ராஜாத்தி அம்மாள் நடித்தார். ராஜாத்தி அம்மாள் கலைஞர் சித்தப்பாவின் துணைவியார் ஆனபிறகு நாடகங்களில் நடிக்கவில்லை. ராஜாத்தி அம்மாள் அவர்களின் சப்போர்ட்டில் வரதனுக்கு அரசாங்க காண்ட்ராக்ட் கிடைத்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
அந்த வரதன்தான் "நல்லதம்பி' என பெயர் மாற்றிக்கொண்டு... நடிகர் சங்கத்தில் என்னை எதிர்த்து பிரச்சாரம் செய்தார். நல்லதம்பியிடம் சிக்கிக்கொண்டு அண்ணன் விஜயகுமாரும் எனக்கு எதிராக செயல்பட்டுவந்தார். நல்லதம்பியின் பின்னணியில் நண்பர் கமல்ஹாசன் அவர்கள் இருந்து எனக்கெதிராக செயல்பட்டார். என்னை எதிர்த்துப் போராடிய கமல் சார், 25 வருட போராட்டத்திற்குப் பின்தான் என்னை ஜெயிக்க முடிந்தது.
விஜிமா, சந்திரசேகர், சகோதரர் முரளி ஆகியோர் வந்து பேசியதால்... நான் விலகிக்கொண்டு விஜிமாவை தலைவராக்கினேன் நடிகர் சங்கத்திற்கு. விஜிமா அரசியல் கட்சி தொடங்கியதும், சரத்குமார் சாரை தலைவராக்கினேன்.
நல்லதம்பி இறந்தபிறகு... என்னை எதிர்க்கும் விஷயத்தில் கமல் சார் அமைதியாக இருந்தார். பிறகு சகோதரர் விஷால், கமல் சாருக்கு கிடைத்தார். கூடவே விஷாலுக்கு பணம் செலவு செய்ய ஜே.கே.ரித்தீஷும் கிடைத்தார்.
என்னை நடிகர்சங்க உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கியிருக்கிறார்கள். விஷயம் நீதிமன்றத்தில் இருக்கிறது.
இப்போது மீண்டும் டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் தேர்தலில் தலைவராக அமோக வெற்றி பெற்றிருக்கிறேன்.
நான் எதிர்நீச்சல் போட்டே பழக்கப்பட்டவன். எதிர்நீச்சல் எனக்கு இன்பமானதாக இருக்கிறது.
சிறுவயதில் திருச்சி -சங்கிலியாண்டபுரம் வீட்டில் வசித்தபோது... என் இடதுகாலில் பனை ஓலை கிழித்துவிட்டது. ரொம்ப நாட்கள் ஆறாமல் அவஸ்தைப்படுத்தியது அந்தப் புண். பிறகு... அது தழும்பாக மாறிவிட்டது.
இப்போது என்னுடைய பாஸ்போர்ட்டில் "பெர்த் மார்க்' அடையாளத்தில் அந்த தழும்புதான் சிறப்புப் பெற்றிருக்கிறது.
அதனால்தான் சொல்கிறேன்... எதிர்நீச்சலும், அதனால் ஏற்படும் வலிகளும் எனக்கு இன்பமானதுதான்.
(நடிகர் சங்கத்தில் நான்...)
அவருக்குப் பதில் இவர்!
இந்த புகைப்படம் அபூர்வமானது. "பாவ மன்னிப்பு' படத்தில் என் அப்பாவின் ஜோடியாக எம்.வி.ராஜம்மா நடித்திருந்தார். ஆனால் முதலில் நடித்தவர் கண்ணாம்பா அவர்கள். அவரால் கால்ஷீட் தேதி ஒதுக்கித்தர முடியாததால் படத்திலிருந்து விலகிக்கொண்டார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. கண்ணாம்பா அம்மாவுடன் என் அப்பா மற்றும் டி.எஸ்.பாலையா பெரியப்பா.
"பாகப்பிரிவினை' படத்தில் என் அப்பா செய்த சிங்கப்பூரான் என்கிற வேஷம் மிகப் பிரபலமானது. இந்தப் படத்தை இந்தியில் ரீ-மேக் செய்தபோது... என் அப்பாவின் கேரக்டரில் ஓம்பிரகாஷ் அவர்கள் நடிப்பதாக இருந்தது. ஆனால்... ‘"பாகப்பிரிவினை'’ படம் பார்த்துவிட்டு... ஏவி.எம். ஸ்டுடியோவில் என் அப்பாவை சந்தித்த ஓம்பிரகாஷ்... "சிங்கப்பூரான் வேஷத்துல என்னை என்னால கற்பனை செஞ்சுகூட பார்க்க முடியல. நான் நடிக்க விரும்பல''’எனச் சொல்லிவிட்டு, அப்பாவின் நடிப்பை புகழ்ந்துவிட்டுப் போனார். பிறகு பிரான் அவர்கள் நடித்தார்.