(114) இருட்டில் நுழைந்த முரட்டு உருவம்!
"அண்ணாமலை' படத்திற்காக பின்கழுத்தை சொறிந்தபடி... "கூட்டிக் கழிச்சுப் பாரு... கணக்கு சரியாவரும்' என நான் பேசும் மேனரிஸம் ரஜினி சார் உட்பட பலரையும் கவர்ந்துவிட்டது.
படப்பிடிப்பின் உணவு இடைவேளையின்போது... "ரவி எங்க இருக்கான்?' எனக் கேட்டுக்கொண்டே கே.பாலசந்தர் சார் வந்தார்.
நான் வணக்கம் தெரிவித்தேன்.
""என்னடா... ரஜினி உன்னைப்பத்தி பிரமாதமா சொல்றார். "வந்து பாருங்க... ரவியோட கெட்-அப்பையும், மேனரிஸத்தையும், டயலாக்கையும்'னு சொல்றாரே ரஜினி'' எனச் சொன்னார் கே.பி.சார்.
நான் ரஜினி சாரின் பெருந்தன்மையை நினைத்து பெருமைப்பட்டேன்.
கதைப்படி ரஜினி சார் என்கிட்ட தொடைதட்டி சவால் விடுற... படத்தின் இடைவேளைக் காட்சியை டிராலி போட்டு படமாக்கிய கேமராமேன் பி.எஸ்.பிரகாஷோட வேலைத் திறமையை இன்றளவும் நான் வியந்துகொண்டுதான் இருக்கிறேன்.
நான் ரஜினி சாரிடம்... ""படத்துல வில்லனான நான் பேசுற "கூட்டிக் கழிச்சுப் பாரு... கணக்கு சரியாவரும்' டயலாக்கை நீங்க ஒரு இடத்துல பேசினா நல்லா இருக்கும்'' எனச் சொல்லியிருந்தேன். அதை மனதில் வைத்துக்கொண்ட ரஜினி, ஏலம் முடிந்து வெளியே வருகிற காட்சியில் அதைப் பேசினார். அந்தக் காட்சிக்கான தனது வசனத்தை, தானே எழுதினார்.
"ஆம்பளைங்க போடுறது பணக்கணக்கு, பொம்பளைங்க போடுறது நாளைய கணக்கு, பையன்கள் போடுறது மனக்கணக்கு, பெண்கள் போடுறது திருமணக் கணக்கு...' இப்படி பல கணக்குகளைச் சொல்லி... "கூட்டிக் கழிச்சுப் பாரு... கணக்கு சரியாவரும்' எனப் பேசினார். இது தியேட்டரில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ரஜினி சார் மாதிரி பெரிய ஹீரோ படத்தில் ஹீரோவின் பஞ்ச் டயலாக் பிரபலமாகும். இந்தப் படத்திலும் "நான் சொன்னதையும் செய்வேன் சொல்லாததையும் செய்வேன்' என்கிற பஞ்ச் பிரபலம்... என்றாலும்... வில்லனின் டயலாக்கும் அதற்கு இணையாக பிரபலமானது.
தமிழில் என்னை "மன்மதலீலை' படம் மூலம் அறிமுகம் செய்தவர் கே.பி.சார். அதனால் "என் குருநாதர் கே.பி.சார்' என்று நான் சொல்லுவேன். ஆனால் "என் சிஷ்யர்கள்' என ரஜினி சாரையும், கமல் சாரையும் மட்டும் சொல்லும் கே.பி.சார், என்னைப்பற்றி குறிப்பிடமாட்டார்.
"அண்ணாமலை' படத்தின் வெற்றிவிழா தாஜ் ஹோட்டலில் நடந்தபோது... ""ரஜினிகாந்த், கமல்ஹாசன் மட்டுமில்லை... ராதாரவியும் எனது கண்டுபிடிப்புதான்'' எனப் பேசினார்.
என் நடிப்பில் நான் அவரை அப்படிச் சொல்ல வைத்தேன்.
இந்த காரணங்களால் என் வாழ்க்கையின் முக்கியமான படமாக "அண்ணாமலை' இருக்கிறது.
மும்பையில் ஜுகு பகுதியின் ஸ்ரீங்ய்ற்ர்ழ் ஹோட்டலில் "அண்ணாமலை' படப்பிடிப்பு நடந்தபோது...
வழக்கமான ஹோட்டலின் வேலை நேரம் முடிந்தபிறகு... அதிகாலை ஒரு மணி முதல் ஐந்து மணிவரைதான் படப்பிடிப்பு நடத்த அனுமதித்திருந்தார்கள்.
ஒரு அறையில் நானும், யூனிட்டைச் சேர்ந்த சிலரும் தூங்கிக்கொண்டிருந்தபோது... இருட்டில்... அந்த அறைக்குள்... நுழைய சிரமப்பட்டபடி ஒரு முரட்டு உருவம் நுழைந்துகொண்டே... "ஹூ இஸ் ராதாரவி?'’ எனக் கேட்க... எழுந்து லைட் போட்டோம்.
"ஐ ஆம் ராதாரவி'’ என அறிமுகப்படுத்திக்கொண்டேன்.
என் அருகில் இருந்தவர்களிடம்... "நான் தெலுங்கு படம் ஒன்றில் நடிச்சதுக்கு சம்பளம் தரல. எனக்காக அதை நடிகர் சங்கம் மூலம் பேசி வாங்கிக்கொடுத்தார் ராதாரவி' எனச் சொல்லிவிட்டு எனக்கு கை கொடுத்தார். நானும் கை கொடுத்தேன். அவரின் உள்ளங்கையில் கால்வாசிதான் என் உள்ளங்கை இருந்தது.
இருட்டு அறையில் நுழைந்து நன்றி சொன்ன அந்த முரட்டு உருவம்... பாலிவுட் நடிகர் அம்ஜத்கான்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பாலிவுட் நடிகை கல்பனா ஐயர், என்னிடம் அம்ஜத்கானுக்கு சம்பளம் கிடைக்காத விஷயத்தைச் சொன்னார். "தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அம்ஜத்கான் உறுப்பினராக சேர்ந்தால் இந்த விஷயத்தில் உதவ முடியும்' என்று சொன்னேன். அம்ஜத்தும் மெம்பரானார். அதனால் அந்த தெலுங்கு புரொடியூஸரோடு பேசி... சம்பளத் தொகை கிடைக்க ஏற்பாடு செய்தேன்.
தமிழ் சினிமாவில் பலருக்கும் நான் இந்த உதவியைச் செய்திருக்கிறேன். ஆனால் தேடி வந்து நன்றி சொன்ன அம்ஜத்கானின் பெருந்தன்மை இங்கே பலருக்கும் இல்லை.
டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் அவர்களின் யூனிட்டைச் சேர்ந்தவர்களுக்காக ரஜினி சார் செய்து தந்த படம் "பாண்டியன்'.
கன்னட நடிகர் பிரபாகர் எழுதிய கதை. கன்னடத்தில் பிரபாகர் செய்திருந்த வக்கீல் வேஷத்திற்கு என்னை புக்பண்ணச் சொன்னது ரஜினி சார்தான். இரண்டுநாள் கால்ஷீட்டில் முடிக்கக்கூடிய கெஸ்ட் ரோல்.
நான் சம்பளம் பேசியபோது... "எஸ்.பி.எம். சார் யூனிட்டுக்காக நாங்க எல்லாருமே ஃபிரீயாத்தான் நடிச்சுத் தர்றோம்' என்றார் ரஜினி சார்.
"படம் பூஜை போட்டப்பவே எஸ்.பி.எம். சார் என்னை நடிக்கக் கேட்டிருந்தால் நானும் சம்பளம் வாங்காம நடிச்சுத் தந்திருப்பேன். ஆனா... என்னை கூப்பிடத் தோணல. முக்கால்வாசி படம் எடுத்த பிறகுதான் நடிக்கக் கூப்பிட்டிருக்காங்க. அதனால எனக்கு சம்பளம் வேண்டும்' எனச் சொல்லிவிட்டேன்.
பல படங்களில் பாத்திருப்போம் நீதிமன்றக் காட்சிகளை. பெரும்பாலும் அதில் யதார்த்தம் இருக்காது. பெரிய ஆக்ஷன் ஹீரோ படங்களில்... ஹீரோவின் ஆவேசத்தை காட்டுவதற்காக... நீதிபதியின் இருக்கைக்குப் பின்னால் இருந்து... அதாவது நீதிபதியின் முதுகுக்குப் பின்னால் இருந்து கேமரா வைத்து ஷாட்ஸ் எடுப்பார்கள். நீதிமன்றத்தில் நீதிபதியின் கேபினுக்குள் போவது நீதிமன்ற அவமதிப்பாகும். இதை நான் சொல்லி... "பாண்டியன்' படத்தில் அப்படியான காட்சியை தவிர்க்கச் சொன்னேன்.
"இளைய தளபதி' என இப்போது கொண்டாடப்படும் தம்பி விஜய்யின் முதல் படம் "நாளைய தீர்ப்பு'.
பொதுவாக நடிகர்களிடம் தொலைபேசி மூலம் கேரக்டரின் அம்சத்தைச் சொல்லி, தொலைபேசி மூலமே சம்பளம் பேசி, கால்ஷீட்டும் வாங்குவது டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் சாரின் வழக்கம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக அன்று என் வீட்டுக்கு வந்திருந்தார்.
"என்ன சார் விஷயம்?'’
"என் மகனை ஹீரோவா அறிமுகப்படுத்தப்போறேன். அந்தப் படத்துல அவனுக்கு அப்பாவா நீங்க நடிக்கணும். ஹர்ஷத்மேத்தா போல கெட்-அப் உங்களுக்கு. நான் இப்போ ரொம்ப சிரமத்துல இருக்கேன். சொத்தெல்லாம் அடகு வச்சிட்டேன். சம்பள விஷயத்துல எனக்கு ஹெல்ப் பண்றமாதிரி நீங்க பண்ணித்தரணும்' என்றார்.
"சார்... நீங்க என்ன தர்றீங்களோ தாங்க. ஆனா... நீங்க... எப்பவும்போல இருக்க எஸ்.ஏ.சி.யா இருக்கணும் சார். என்னை ஆபீஸுக்கு வரச்சொல்லி நீங்க பேசீருக்கணும்' என்றேன்.
"என் பையன் பெரிய ஹீரோவாயிட்டா... உங்க கம்பெனிக்கு அவனை ஒரு படம் பண்ண வைக்கிறேன்' என்றார்.
ஆனால் அவர் சொன்னது... "காற்றினிலே வரும் கீதம்"தான்.
(படப்பிடிப்பில் தம்பி விஜய்யிடம் நான் சொன்ன ஒரு உதாரணம்... யூனிட்டே அதிர்ந்து... பிறகு விழுந்து, விழுந்து சிரித்தது.)
_________________________
என்னை டைரக்ட் பண்ண வைத்த இயக்குநர்!
"அண்ணாமலை' படத்தின் வசனகர்த்தா சண்முகசுந்தரம் அண்ணன், என்னை எனது 12 வயதிலிருந்து பார்த்துவருகிறார். எங்கள் தெருவில் "இளையபெருமாள் மெக்கானிக் செட்' இருந்தது. இங்குதான் இளையபெருமாள் அண்ணன், சண்முகசுந்தரம் அண்ணன், எங்கள் டிரைவர் தமிழன் அண்ணன், இப்போது தேனாம்பேட்டை டி.எம்.எஸ். ஆபீஸுக்குப் பின்புறம் இருக்கும் சொக்கலிங்கம் நகரின் இடத்திற்குச் சொந்தக்காரரான சொக்கலிங்கம் அண்ணன் ஆகியோர், இந்த மெக்கானிக் செட்டில்தான் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். டிரைவர் வேலை பார்த்துக்கொண்டிருந்த சண்முகசுந்தரம் அண்ணன், டைரக்டர் ஸ்ரீதரிடம் அஸிஸ்டெண்ட்டாக சேர்ந்து, அஸோஸியேட் டைரக்டராகி... பிரபல இந்திப்பட தயாரிப்பாளர் கே.சி.பொக்காடியா தயாரித்த இந்திப் படங்களுக்கு கதாசிரியராக பணிபுரிந்தார்.
ரஜினி சாரை வைத்து படம் இயக்க முயற்சித்துக்கொண்டிருந்த சண்முகசுந்தரத்தை, நான் தயாரித்த "சின்னமுத்து' படத்திற்கு டைரக்டராகப் போடச் சொன்னவர் ரஜினி சார்தான். பிறகு... ஏனோ வேண்டாம் என்றும் சொன்னார். ஆனாலும் ஏற்கனவே நான் திட்டமிட்டபடி "சின்னமுத்து' படத்தை சண்முகசுந்தரம் இயக்கினார்.
படப்பிடிப்பில்... "அண்ணே... இந்த ஸீனை நான் டைரக்ட் பண்ணட்டுமா?' என்று கேட்டால்... தாராளமாகச் செய்யச் சொல்வார். இப்போது இயக்குநர்கள் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சண்முகசுந்தரம் அண்ணன், இன்னும் உயர்வான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்பது என் எண்ணம். நன்றி மறவாத சினிமாக்காரர்களில் சண்முகசுந்தரம் அண்ணன் முக்கியமானவர்.