(109) எம்.ஜி.ஆர். பிரியன், சிவாஜி ரசிகன்!

பிரபுமா, குஷ்பு, சுலக்ஷனா, மனோரமா அம்மா, நான் உட்பட பலரும் நடித்து, பி.வாசு சார் இயக்கத்தில், கே.பி.பிலிம்ஸ் பாலு தயாரிப்பில் "சின்னத்தம்பி'’படம் உருவானது.

திரையுலக பிரபலங்களுக்காகவும், படத்தில் பணியாற்றியவர்களுக்காகவும் படம் போட்டுக் காட்டப்பட்டது.

படம் பார்த்த கமல்... “""பி.வாசு, டைரக்டர் ஸ்ரீதர்கிட்ட அஸிஸ்டெண்ட் டைரக்டரா இருந்தவர். அதனாலதான் ஸ்ரீதர் ஸ்டைல்ல க்ளைமாக்ஸில ஸாங் வச்சிருக்கார். பழைய ஸ்டைல்...''’என பிரபுமாவிடம் கமல் சார் சொன்னதாகவும் இந்த கமெண்ட்டால் பி.வாசு அப்செட் ஆனதாகவும் நான் கேள்விப்பட்டேன்.

Advertisment

இன்னொரு காட்சியில்... டைரக்டரும் நடிகருமான பிரதாப்போத்தன், டைரக்டர் கே.ராஜேஷ்வர் உள்ளிட்டவர்கள் படம் பார்த்தனர்.

படம் ஓடிக்கொண்டிருக்க... படம் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அமைதியாக படம் பார்த்துக்கொண்டிருக்க... "தாலின்னா என்னானு பிரபுவுக்கு தெரியாதாம்...?'’என சத்தமாக ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தைகளை உதிர்த்து... பலமாக சிரித்தனர்.

இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisment

பல ஏரியா விநியோக உரிமை விற்பனை செய்யப்பட்டிருந்தாலும்... சில ஏரியா விநியோகஸ்தர்களுக்காக மைலாப்பூர் மேனா தியேட்டரில் படம் போட ஏற்பாடு செய்யப்பட்டது.

திருச்சி, தஞ்சை ஏரியாவின் பிரபல விநியோகஸ்தரும், அரசியல்வாதியுமான அடைக்கலராஜ் அவர்கள் வந்து படம் பார்த்தார்.

இடைவேளை விடப்பட்டதும் தன்னுடன் வந்தவர்களை அழைத்துக்கொண்டு தியேட்டரை விட்டு வெளியேறினார்.

பி.வாசு உட்பட எங்களுக்கு இது மிக அதிர்ச்சியாக இருந்தது.

"அடைக்கலராஜ் "சின்னத்தம்பி'’படம் பார்க்கும்போது இன்டர்வெல்லயே எந்திரிச்சு போயிட்டாராம்ல'’என யாரோ ஒருத்தர் போன் பண்ணினாலும்... அடுத்த நிமிஷமே சினிமா வர்த்தக வட்டாரங்களில் இந்தத் தகவல் தீயாகப் பரவி... தமிழகம் முழுக்க படம் வியாபாரம் ஆகாது; வாங்கியவர்களும் "வேண்டாம்'’என்றுகூடச் சொல்வார்கள்.

ஏனென்றால்... அடைக்கலராஜ் ஒரு படத்தின் வெற்றியை மிகத்துல்லியமாக... விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்களைப்போல... கணிக்கக்கூடியவர்.

சிறிது நேரத்திலேயே... தியேட்டருக்கு போன் வந்தது.

திருச்சி-தஞ்சாவூர் ஏரியாவின் "சின்னத்தம்பி'’பட உரிமையை வாங்கியிருந்த விநியோகஸ்தர்... படப்பெட்டியை எடுத்துச் செல்வதற்காக மாரீஸ் ஹோட்டலில் தங்கியிருந்தார். அவர்தான் போன் செய்தார்...

""அடைக்கலராஜ் வந்தாரு. படம் பிரமாதமா இருக்கு... டி.டி.ஏரியாவ நீங்க என்ன விலைக்கு வாங்கினீங்களோ... அதை டபுள் மடங்கா தரேன். படத்தை எனக்குக் குடுத்திடுங்கனு கேட்டார். நானும் சரினு சொல்லீட்டேன். உங்களால போட்ட முதலுக்கு அப்படியே இன்னொரு மடங்கு லாபம் கைமேல எனக்கு கிடைச்சிருச்சு''’என்றார்.

பி.வாசு உட்பட... எல்லாருக்கும் இந்தச் செய்தி உற்சாகத்தைத் தந்தது.

சினிமா பிரபலங்களின் எதிர்மறை விமர்சனங்களைத் தாண்டி... "சின்னத்தம்பி'’படம் மாபெரும் வெற்றியடைந்தது. படம் போட்ட இடமெல்லாம் பணம் கொட்டியது. இவ்வளவு பெரும்வெற்றிக்கு இளையராஜா அண்ணனின் இசையில் பாடல்கள் அற்புதமாக அமைந்ததும் மிக முக்கிய காரணம். படத்தில் பங்கேற்ற நட்சத்திரங்கள் எல்லாருமே மனசார நடிச்சாங்க.

குடியாத்தத்தில் ரமணா தியேட்டரில் "சின்னத்தம்பி'’படம் போடப்பட்டு நல்ல லாபம். அந்தப் படத்தால் கிடைத்த லாபத்தில் இன்னொரு தியேட்டரையே கட்டினார்.

அப்படி ஒரு ஹிட்டடித்தது "சின்னத்தம்பி.'

"சின்னத்தம்பி'’பாதிப்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்கு... பிரபுமாவை வைத்து ‘"செந்தமிழ் பாட்டு',’"வண்ணத்தமிழ் பாட்டு'’என அதே ஃபார்முலாவில் சில படங்களையும் எடுத்தார் பி.வாசு

""சிவாஜி சார், "சின்னத்தம்பி' படத்துல உன் நடிப்ப பாராட்டி சொல்றாருப்பா'' என பலரும் என்னிடம் சொல்ல... நான் சிவாஜி அப்பாவை போய்ப் பார்த்தேன்.

""வாடா... அண்ணன் மகனே... உன் நடிப்பு பிரமாதமா இருந்துச்சுடா''’என சிவாஜி அப்பா வாயால் எனக்கு பாராட்டு கிடைக்கக் காரணமாக இருந்தது சின்னத்தம்பி.’

தமிழ்நாட்டில் மட்டுமில்லை... பிற மாநிலங்களிலும் "சின்னத்தம்பி'’படம் செம ஹிட்டடித்தது.

"சின்னத்தம்பி'’வெளியாகி சில வருடங்களுக்குப் பிறகு... "சின்னவர்' படப்பிடிப்பிற்காக... கேரள மாநிலம் கோழிக்கோடு சென்றிருந்தேன். மகாராணி ஹோட்டலில் தங்கியிருந்தபோது...

அங்கிருந்தவர்கள்... ஹோட்டலுக்கு எதிரே இருந்த தியேட்டரை சுட்டிக்காட்டி... "சேட்டா... இந்த தியேட்டர்லதான் "சின்னத்தம்பி'’ரிலீஸாச்சு. தொடர்ச்சியா அறுபது நாட்களும் ஹவுஸ்ஃபுல்லாத்தான் ஓடிக்கிட்டிருந்துச்சு. மலையாளத்துல பெரிய ஹீரோவான... (பெயர் வேண்டாம்) ஒருத்தரோட படத்தை ரிலீஸ் பண்றதுக்காக... மக்கள் ஆதரவோட ஓடிக்கிட்டிருந்த ’"சின்னத்தம்பி'யை தூக்கிட்டாங்க. ஆனா... அந்த மலையாளப் படம் ஓடல. அதனால... மறுபடியும் "சின்னத்தம்பி'ய ரிலீஸ் செஞ்சாங்க. நூறுநாள் வரைக்கும் ஓடிச்சு'’எனச் சொன்னார்கள் என்னிடம்.

தனிப்பட்ட முறையிலும் பி.வாசு சார் எனது நல்ல நண்பர்.

என் வீடு வங்கிக் கடன் காரணமாக ஏலத்திற்கு வரவிருந்த நிலையில்... எனக்கு அவசரமாக 25 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. பி.வாசுவிடம் கேட்டேன். இரவோடு இரவாக பணத்தைக் கொடுத்து உதவிக்கரம் நீட்டினார். இதுபோல் நிறையபேருக்கு உதவி செய்திருக்கிறார் பி.வாசு.

நான் தினசரி என் அம்மா, அப்பா படங்களின் முன்னால் நின்று பிரேயர் செய்யும்போது... சிலரின் பெயர்களை மனதிற்குள் சொல்லி... அவர்களுக்கு நன்றி தெரிவிப்பேன். என் பிரேயரில் பி.வாசு அவர்களையும், கே.எஸ்.ரவிக்குமார் அவர்களையும் நினைத்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.

radharavi

பி.வாசு... தீவிரமான எம்.ஜி.ஆர்.பிரியன், தீவிரமான சிவாஜி ரசிகன்.

படப்பிடிப்பில் பி.வாசு நடிப்புச் சொல்லித் தரும்போதும்... வசனம் சொல்லித்தரும்போதும் அதில் சிவாஜி அப்பாவின் ஸ்டைல் இருக்கும்.

நான் பல படங்களில்... பல நேரங்களில்... பி.வாசு வசனம் சொல்லித்தந்த பாணியை... எந்த மாறுதலும் செய்யாமல், அப்படியே பேசியிருக்கிறேன்.

நான் வேறு டைரக்டர்களின் படங்கள் சிலவற்றில்கூட... பி.வாசு சொல்லித் தந்த பாணியில் வசனம் பேசியிருக்கிறேன்.

ஃபோர் ஃபிரேம் பிரிவ்யூ தியேட்டரில் பி.வாசுவோட "லவ் பேர்ட்ஸ்'’படம் போட்டுக் காட்டப்பட்டது.

படம் முடிந்ததும்... ரஜினி சார், பி.வாசுவை பாராட்டிக்கொண்டேயிருந்தார். நான் எதுவும் சொல்லாமல் கிளம்பினேன்.

""யோவ்... என்னய்யா...?''’என கேட்டார் பி.வாசு.

""நான் வீட்டுக்குப் போய் போன் பண்றேன்''’என்றேன்.

""நான் அப்படிச் சொன்னால்... "படம் பிடிக்கல'’என்கிற அர்த்தம் என்பது அவருக்குத் தெரியும். அவருடைய "கட்டுமரக்காரன்'’படத்திற்கும்கூட அப்படித்தான் சொன்னேன்.

"சந்திரமுகி'’படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு காரணம்... பி.வாசுவா?, ரஜினி சாரா?, சிவாஜி ஃபிலிம்ஸா?

எது எப்படியோ?

"சின்னத்தம்பி'’படத்திற்காக... பி.வாசு சார்... ஹாட்ஸ் ஆஃப் யூ..

என் சகோதரர் எம்.ஆர்.ஆர்.ரகு இயக்கத்தில் பார்ட்னர் கார்த்திக், குஷ்பு ஆகியோருடனும் நானும் நடித்த படம் "விக்னேஷ்வர்.'

இது ஹைலி டெக்னிகல் பிக்ஸர். அட்வான்ஸ் தாட். சமகாலத்தில் சரிவர புரியாது. ஆனால் ஒரு பிரமிப்பு இருக்கும். அப்படியான படம்தான் இது.

குஷ்புவை சொந்தக்குரலில் பேசவைத்தார் டைரக்டர் ரகு.

சென்னை, எழும்பூரில் இருக்கும் தாளமுத்து-நடராஜன் மாளிகையில் படப்பிடிப்பு நடத்த உதவினார் கலைஞர் சித்தப்பா.

ரகு ஒரு டிக்ஷ்னரி மாதிரி விஷயங்கள் தெரிந்தவர்... ஸ்டைலிஷான இயக்குநர்.

("அமரன்'’படம்.... ஆண்டவப்பெருமாள் அவஸ்தைகள்)

குஷ்பு குஷ்புதான்!

kushboo

"சின்னத்தம்பி'’படத்தின் டப்பிங் பணிகள் நடந்தபோது... குஷ்புவும் வருவார். அப்போது நான் குஷ்புவிடம்... ""எம்மா... இந்தப் படம் வெளிவந்த பின்னாடி... நீ எங்கேயோ போயிடுவ. தமிழ் சினிமாவுல பெரிய நடிகையாகிடுவ. நான் படம் தயாரிக்கும்போது... இப்ப நீ ‘"சின்னத்தம்பி'க்கு என்ன சம்பளம் வாங்கினியோ... அதே சம்பளத்துக்கு நடிச்சுக்குடுக்கணும்''’’ என்றேன்.

"சின்னத்தம்பி'க்குப் பிறகு ரஜினி சாருடன் "நாட்டுக்கொரு நல்லவன்', "மன்னன்', ’"அண்ணாமலை', "பாண்டியன்', கமல் சாருடன் "சிங்காரவேலன்'’என பிஸியான நடிகையாக, பெரிய சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தபோதும்... நான் கேட்டுக்கொண்டது போலவே... ’"சின்னத்தம்பி'க்கு வாங்கியது போன்ற சம்பளத்திலேயே நான் தயாரித்த "இது எங்க பூமி'’படத்திற்கு கால்ஷீட் கொடுத்தார் குஷ்பு.