(82)
ஹீரோவை மறந்த சினிமா உலகம்!
விஜிமா (விஜயகாந்த்) ஹீரோவாக நடித்த "எங்க முதலாளி" படத்தில் நான் நல்லவனாகவும், சுந்தர்ராஜன் வில்லனாகவும் நடித்தோம்.
என் சொத்துக்களை அபகரிக்க எனது கையெழுத்தை சுந்தர்ராஜன் போடுவார் ஒரு காட்சியில். நல்லவனான நான் க்ளைமாக்ஸில்... சுந்தர்ராஜன் கையெழுத்தைப் போடுவேன். அவர் அதிர்ச்சியாவார். உடனே நான் அந்த இடத்தில் ஸ்கிரிப்ட்டில் இல்லாத என் சொந்த டயலாக்கை... "நீ பஞ்சத்துக்கு வில்லன்... நான் பரம்பரை வில்லன்'’ எனப் பேசினேன்..
எந்த டைரக்டரிடமும் அஸிஸ்டெண்ட்டாக பணியாற்றாமல்... டைரக்டரானவர் ஆர்.சுந்தர்ராஜன். அவரின் முதல் படமான "பயணங்கள் முடிவதில்லை' படப்பிடிப்பின்போது... அவருக்கு டைரக்டர் சிறுமுகை ரவி உதவி செய்தார். எங்கள் நட்பு வட்டத்திலும் சேர்ந்தார் சுந்தர்ராஜன். அவர் இரண்டு’ வீட்டுக்காரர். இரண்டு வீட்டு விசேஷங்களுக்கும் போயிருக்கிறேன். அவர் நடிக்கத் தொடங்கியதும்... நடிகர் சங்கத்தில் அவரை உறுப்பினராக்கி, கமிட்டி மெம்பராகவும் ஆக்கினேன்.
நடிகர் சங்கத் தலைவராக விஜிமா இருந்த சமயம்... விஜிமா மீது இருந்த கோபத்தில் நடிகர் சங்க கமிட்டி உறுப்பினர் பதவியிலிருந்து வெளியேறினார். விஜிமா மீது இருந்த வருத்தத்தை என்மீது காட்டினார்.
சுந்தர்ராஜன் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு
இராம.நாராயணன் சார் இயக்கிய படம் "வாய்ப்பந்தல்'.
கதைப்படி ஹீரோ மோகன் ஏழை. பணக்கார கதாநாயகியை திருமணம் செய்வதற்காக... மோகனும் பணக்கார வீட்டுப் பிள்ளையாக நாடகமாடுவார். மோகனுக்கு உதவுவதற்காக குடுகுடுப்பைக்காரரான எஸ்.எஸ்.சந்திரன், கழைக்கூத்தாடியான வனிதா, நாடக நடிகையான காந்திமதி அக்கா, சாராயம் காய்ச்சுகிற நான்... எல்லோரும் பணக்கார வேஷம் போட்டுக்கொண்டு... மோகனின் குடும்பத்தாராக நடிப்போம்.
"பாகப்பிரிவினை' படத்தில் என் அப்பாவின் என்ட்ரி காட்சி போலவே... இந்தப் படத்தில் நான் என்ட்ரி கொடுப்பேன். என் அப்பாவின் போட்டோவைப் பார்த்து... "குருநாதா... உன் குரலைக்கொடுத்து என்னைக் காப்பாத்து' என வேண்டிக்கொள்வேன்.
மோகனை வில்லன் கடத்திப் போய்விடுவார். நான் வில்லனுடன் சண்டைபோட்டு மோகனை மீட்க வேண்டும்.
இந்தக் காட்சியை வீனஸ் ஸ்டுடியோவில் எடுக்க ஏற்பாடானது.
ஷூட்டிங் தொடங்கவிருந்த நேரத்தில்... டைரக்டர் இராம.நாராயணன் சாரிடம் மோகன் ""ஏதோ சொல்லிவிட்டுப் போக... அவர் என்னிடம்...’"மோகன் ஒரு விஷயம் சொன்னார். ‘ராதாரவி என்னை வில்லன் ஆட்கள்ட்டருந்து சண்டைபோட்டு காப்பாத்துற மாதிரி இருந்தா... ஆடியன்ஸ் மத்தியில அவர் ஹீரோவாயிடுவார் சார். வேறமாதிரி காட்சிய மாத்துங்க'னு சொல்றார். அதனால நான் உங்க கேரக்டரை வில்லனா மாத்துறேன்'' என்றார்.
""சார்... நான் வில்லனா நடிக்கிறவன்தான். அதுல எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல. ஆனா... ஒரு கேரக்டரை குடுத்திட்டு... சில ஸீன்களும் எடுத்தபின்னாடி... என் கேரக்டரை மாத்துனா எப்படி சார்? கன்னடத்துலருந்து நடிக்க வந்த ஒரு நடிகர் ராதாரவியை வேணாம்கிறதா? அதை நீங்களும் என்கிட்ட சொல்றதா? வேணாம் சார். இந்தப் படத்துல நான் தொடர்ந்து நடிக்கவிரும்பல'' எனச் சொல்லிவிட்டு... கேரக்டருக்காக ஒட்டியிருந்த மீசையை பிய்த்து மேக்-அப் மேனிடம் கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டேன்.
""டேய்... ரவி... சினிமாவுல முன்ன அடிக்கிற காத்துல எச்சில் இல கூட கோபுரத்துல போய் ஒட்டிக்கும். பின்ன அடிக்கிற காத்துல கீழ விழும். இதுதான் யதார்த்தம்'' என என் அப்பா அடிக்கடி என்னிடம் சொல்லியிருக்கிறார்.
அதை மெய்ப்பிக்கிற மாதிரியான அனுபவங்களைக் கண்டிருக்கிறேன்.
பாரதிராஜா சார் இயக்கிய "பொம்மலாட்டம்' படத்தில் அர்ஜூன் சாருக்கு சம்பளம் செட்டில்மெண்ட் செய்யப்படவில்லை. அர்ஜூன் சார் நடிகர் சங்கத்திற்கு கடிதம் கொடுத்துவிட்டார். அவருடைய சம்பளத்தை கிளியர் பண்ணினால்தான் படம் ரிலீஸ் ஆகும் என்கிற நிலமை.
இந்தப் பஞ்சாயத்தைப் பேசிமுடிப்பதற்காக ஏவி.எம்.ஸ்டுடியோவில் ஒரு படப்பிடிப்பில் இருந்த அர்ஜூன் சாரைப் பார்க்கப் போனேன்.
அந்தப் பெரிய ஃப்ளோரின் மெயின்டோர் மூடப்பட்டு... யூனிட் சம்பந்தப்பட்டவர்கள் சென்று வருவதற்கான சிறிய கேட் திறக்கப்பட்டு... அங்கே ஃப்ளோர் இன்சார்ஜ் இருந்தார்.
என்னைப் பார்த்ததும்... "வணக்கம் தலைவரே...' என்றபடி என்னை உள்ளே அனுப்பினார் இன்சார்ஜ்.
நான் உள்ளே போய்க் கொண்டிருக்கிறேன்.
""அதெல்லாம்... யாரையும் உள்ளவிட முடியாது சார்'' என இன்சார்ஜின் குரல் சத்தமாக எனக்குக் கேட்க... நான் திரும்பிப் பார்த்தேன்.
அந்த நடிகர் உள்ளே வர முயற்சிக்க... ஃப்ளோர் இன்சார்ஜ் தடுத்துக்கொண்டிருக்கிறார்.
உடனே நான் திரும்பி வந்து... "அவரை உள்ளே அனுப்புங்க' என்றதும்... அந்த நடிகரை உள்ளே அனுமதித்தார்.
நான் அர்ஜூன் சாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன். "பொம்மலாட்டம்' படத்தில் தனக்கு வரவேண்டிய பெரிய சம்பளத்தை விட்டுக்கொடுத்தார். அதனால்... படம் வெளியாக நீடித்த தடை நீங்கியது.
நான் கிளம்பியதும்... அர்ஜூன் சாரிடம் ஒரு உதவிகேட்டு வந்திருந்த அந்த நடிகர் அவரிடம் பேசச் சென்றார்.
நான் வெளியே வரும்போது ஃப்ளோர் இன்சார்ஜிடம்... "அவரை ஏன் உள்ள விடல? அவர் யார்னு தெரியுமா? நடிகர் மோகன்' என்றேன்.
""சாரி தலைவரே... எனக்குத் தெரியாது'' என்றார்.
"வாய்ப்பந்தல்' படப்பிடிப்பின்போது நடந்த சம்பவம் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது.
இராம.நாராயணன் சார் இயக்கத்தில் கார்த்திக், அம்பிகா, நான், வனிதா நடித்த படம் "பேய்வீடு'.
ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நான் போனபோது... அந்தப் படத்தின் உதவி இயக்குநர்களில் ஒருவர்... நீட்டாக ட்ரெஸ் பண்ணி... இரண்டு பூங்கொத்துகளை இரண்டு கன்னங்களிலும் வைத்துக்கொண்டு போஸ் கொடுக்க... விதவிதமாக போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார் ஸ்டில் போட்டோகிராபர் நேஷனல் செல்லையா.
இதைப் பார்த்த நான் அந்த உதவி இயக்குநரிடம் ""என்ன குமரேசா... ஹீரோவா நடிக்கப் போறியா?'' என்று கேட்டேன்.
மென்மையாக சிரித்தார் குமரேசன்.
முக லட்சணமாக இருந்த அந்த குமரேசன்தான்... ராமராஜன்.
இந்தப் படத்தில் அம்பிகா எனக்கு ஜோடி. என்னால் காதலாக பார்த்து நடிப்பது என்பது சிரமமாக இருந்தது.
என் அந்தஸ்தை உயர்த்திய படம் "அந்தஸ்து'. சின்னப்பா தேவர் அவர்களின் மருமகன் தியாகராஜன் சார் இயக்கத்தில், தேவரின் மகன் தண்டபாணி அண்ணன் தயாரித்த படம். நண்பர் முரளியும், இளவரசியும் நாயகன்- நாயகியாக நடித்தனர்.
தண்டபாணி அண்ணனும், நானும் "பங்காளி' என்றுதான் அழைத்துக்கொள்வோம்.
என் அம்மா வாங்கிய எம்.எஸ்.எம். 8679 எண்ணுள்ள காரை பயன்படுத்தி வந்த நான்... என் சொந்த சம்பாத்தியத்தில் ஒரு கார் வாங்க விரும்பி... "பங்காளி... மார்வாடி மூலமா ஒரு பியட் கார் வாங்கணும். இருபத்தஞ்சாயிரம் தேவைப்படுது' என்றேன்.
(மார்வாடிகள் வார்த்தைச் சுத்தம் உள்ளவர்கள். வங்கிகள் ஏமாற்றினாலும் மார்வாடிகள் ஏமாற்றமாட்டார்கள் என்பது என் அனுபவம்.)
அலுவலகத்திற்கு வரச் சொன்னார். போனேன்.
தேவர் கம்பெனி ஆபீஸுக்கு போவதென்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆபீஸ் முழுக்க... அவர்களின் கம்பெனி படங்களில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், என் அப்பாவும் அணிந்து நடித்த உடைகளை பத்திரப்படுத்தி வைத்திருப்பார்கள். அதைப் பார்ப்பதே பரவசமாக இருக்கும்.
"இந்தாங்க பங்காளி தயிர் சாதம்' என நியூஸ் பேப்பரில் சுற்றப்பட்ட ஒரு பொட்டலத்தை என்னிடம் கொடுத்தார் தண்டபாணி அண்ணன்.
(தேவர் அவர்கள் காலத்திலிருந்தே... இப்படி காகித பொட்டலத்தில் பணத்தைச் சுற்றித் தருவதும்... அப்படித் தரும்போது "தயிர் சாதம்' என பணப் பொட்டலத்தைக் குறிப்பிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.)
அந்தப் பொட்டலத்தில் நான் கேட்ட 25 ஆயிரம் ரூபாய் இருந்தது. அதை முன்பணமாகக் கொடுத்து, டி.எம்.இ. 1958 எண்ணுள்ள பத்மினி பியட் கார் வாங்கினேன்.
என் உழைப்பால் வாங்கிய முதல் கார். என் அந்தஸ்து உயரத் தொடங்கியது...
(என்னைத் தாக்க திட்டமிட்ட அ.தி.மு.க.வினர்; என்னைக் காப்பாற்றியதும் அ.தி.மு.க.வினர்)
படக்குறிப்பு:
என் தங்கை ரதிகலாவின் திருமணத்துக்கு வெளியூரிலிருந்து வருகிறவர்களை தங்க வைக்கும் பொறுப்பை என் அப்பா என்னிடம் ஒப்படைத்தார். நடிகர் தங்கவேலு அப்பா தன் வீட்டில் எங்கள் உறவினர்களை தங்க வைக்க இடம் கொடுத்தார். அப்போது நான் தங்கவேலு அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்தபோது எடுத்த படம்.
\