(79) என்னோட சினிமா லெவல்

கார்த்திக், சுலக்ஷனா, கிஷ்மு சார், நான், பிரமிளா, சேது விநாயகம் உட்பட பலரும் நடித்த படம் "ராஜதந்திரம்'. இதில் முக்கிய வேஷத்தில் நடித்து விசு சார் டைரக்ட் செய்திருந்தார்.

Advertisment

எனது கல்லூரி நாட்களில் "அரங்கேற்றம்' படம் மூலம் வசீகரித்த பிரமிளாவுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு இந்தப் படத்தில் கிடைத்தது (நான் பிறந்து வளர்ந்த ஊர் திருச்சி. பிரமிளாவும் திருச்சிக்காரர்தான்). நாயகியாக நடித்த சுலக்ஷனா மிக அழகிய பெண். கேமரா முன்னாடி நின்றுவிட்டால் சுலக்ஷனாவிடமிருந்து நடிப்பு... அப்படியே ஸ்பார்க் மாதிரி வெளிப்படும். என் அப்பாவின் மேனேஜ ராகவும், எங்கள் குடும்ப நண்பராகவும் இருந்த அழகிரி மாமாவின் கேரக்டர் போன்ற ஒரு வேஷத்தில்தான் கிஷ்மு சார் நடித்திருந்தார்.

Advertisment

ஊட்டியில் நடராஜ் ஹோட்டலில் தங்கியிருந்து இந்தப் படத்தில் நடித்தோம்.

கதைப்படி... கார்த்திக்கை அடிமையாக வைத்திருப்பார் பிரமிளா. கார்த்திக்கை வீரனாக மாற்றுவார் விசு சார். இதற்காக பிரமிளாவிட மிருந்து கார்த்திக்கை கடத்துவோம். நாங்கள் முகமூடி போட்டுக்கொண்டு கடத்தும் அந்தக் காட்சி... நீளமானது. அப்போது விசு சார்... ""உங்களுக்கு என்ன தோணுதோ... அதையெல்லாம் பேசிக்கிட்டே கடத்தல் காட்சியில நடிக்கணும்'' எனச் சொன்னார்.

radharavi

"வாய்க்கு வந்தத டயலாக்கா பேசச் சொல்றாரே' என யோசித்தபடி பேசி நடித்தோம். டப்பிங்கிலும் அப்படியே பேசினோம். அதைப் பதிவுசெய்த விசு சார், அப்படியே அந்த வசனப்பதிவை திருப்பிப் போட்டு படத்தில் சேர்த்து சாதுர்யமாக பயன்படுத்தினார். (இப்போதும் நீங்கள் "ராஜதந்திரம்' படத்தில் அந்த வசனங்களை கேட்க முடியும்.)

படம் தயாரானதும் விசு சார் பிரஸ்மீட்டில் சொல்லும்போது... ""ராதாரவியிடம் ஒருமணி நேரம் பேசினால் உலகத்தையே சுற்றிவந்த மாதிரி. அவ்வளவு விஷய ஞானம் உள்ளவர்'' எனக் குறிப்பிட்டார்.

படம் வெளியாகி பெரும் வெற்றிபெற்றது.

விசு சாரை "நியாயத் தராசு' என நான் சொல்றதுக்குக் காரணம்...

கமல்ஹாசன் தூண்டுதலால் விஜயகுமார் என்னை எதிர்த்து நடிகர் சங்கத்தில் பிரச்சினை செய்தபோது... விசு சார் எனக்கு எதிர்ப்பக்கம் இருந்தாலும்கூட... "ராதாரவியை லேசா எடை போடாதீங்க'’ எனச் சொன்னார். அதேபோல... "உங்களுக்கு எதிரானவங்களை நீங்க லேசா நினைக்காதீங்க' என எனக்கு கடிதம் எழுதியதுடன்... "இணைந்து செயல்படுங்கள்' எனச் சொன்னார்.

"ராஜதந்திரம்' படப்பிடிப்பு சமயம்... பைகாரா நீர்வீழ்ச்சி அருகே... என்னிடம் ஒரு கதை சொன்னார் விசு சாரிடம் அஸோஸியேட் டைரக்டராக இருந்த கிருஷ்ணமூர்த்தி.

அது ஒரு கிராமியக் கதை. கதை எனக்குப் பிடித்திருந்தது. ஆனாலும் க்ளைமாக்ஸ் உட்பட சில இடங்களில் சில திருத்தங்களை செய்யவேண் டும் என கிருஷ்ணமூர்த்தியிடம் சொன்னேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டார் என்றாலும்... அந்தக் கதையில் நடிப்பதுபற்றி நான் கவனம் செலுத்தவில்லை.

அந்தக் கதையைத்தான் கிருஷ்ணமூர்த்தி தன் பெயரை கஸ்தூரிராஜா என மாற்றிக்கொண்டு, ராஜ்கிரணை நடிகராக்கி "என் ராசாவின் மனசிலே' என்கிற வெற்றிப்படமாக எடுத்தார்.

அந்தப் படத்தில் நான் நடிக்காமல் போனதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என்னோட சினிமா லெவல்... லெவலாவே போய்க்கொண்டி ருக்கிறது.

கே.பாலசந்தர் சாரோட "அச்சமில்லை அச்சமில்லை' படத்தில் ராஜேஷும், சரிதாவும் நடித்தனர். இதில் எனக்கும், ரவீந்தருக்கும் அடியாள் வேஷம். கே.பி. சார் படங்களில் சில முத்திரைகள் இருக்கும். இந்தப் படத்தில்... வளராத... குள்ளமான ஒரு கேரக்டருக்கு "சுதந்திரம்'’என பெயர் வைத்தி ருப்பார். படப்பிடிப்பு குற்றாலத்தில் நடந்தது. நான் சென்னையிலிருந்து கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டு செங்கோட்டை ரயில் நிலையத்தில் இறங்கினேன். என் முதல் தமிழ்ப் படமான "மன்மதலீலை'யில் எனக்கு மேக்-அப் போட்ட... கே.பி.சாரின் கம்பெனி மேக்-அப் மேன் சுந்தர மூர்த்தி அண்ணன் என்னை எதிர்பார்த்து நின்றி ருந்தார்.

""ரவி... உங்க வாசு அண்ணன் சீரியஸா இருக் குறதா போன் வந்தது. அதனால்.. கே.பி. சார் உங்கள உடனே சென்னை கிளம்பச் சொன்னார்'' என்றார்.

""சார்கிட்ட சொல்லீட்டுப் போறேன்'' எனச் சொல்லிவிட்டு அவருடன் காரில் ஹோட்டலுக்கு வந்தேன். குளித்துவிட்டு கே.பி. சாரை போய்ப் பார்த்தேன். எனக்கு அழுகை வந்தது.

""அழாதடா... எனக்கு ரொம்ப செல்லமான வன்டா வாசு'' என ஆறுதல் சொன்னார். சரிதாம்மாவும் ஆறுதல் சொன்னார். நான் சென் னைக்கு கிளம்புவதாகச் சொன்னதும்... என்னுடன் வந்தார் ரவீந்தர். காரில் சென்னை வந்தோம்.

("திருட்டு ராஜாக்கள்' படப்பிடிப்பின்போது... எனக்கும், ரவீந்தருக்கும் சின்ன சண்டை. சடாரென பாட்டிலை உடைத்து என்னை குத்த முயற்சித்தார் ரவீந்தர். அதன்பிறகு நாங்கள் நெருங்கிய நண்பர்களானோம்.)

கீழ்ப்பாக்கம் ஹாஸ்பிடலில் வாசு அண்ணன் அட்மிட் செய்யப்பட்டிருந்தார். போய்ப் பார்த்தேன்.

""ஏண்டா... ஷூட்டிங்கை கேன்ஸல் பண்ணிட்டு வந்தியா? கரெக்ட் டைமுக்கு ஷூட்டிங் போகணும்'' என எனக்கு அட்வைஸ் செய்தார் வாசு அண்ணன்.

இரண்டு நாட்கள் இருந்தேன்... ’"நீ ஷூட்டிங் கிளம்பு'’ என அண்ணன் சொன்னதும்... ஓரளவு அவர் குணமானது போல் தெரிந்ததும்... கொல்லம் எக்ஸ்பிரஸில் கிளம்பினேன்.v செங்கோட்டை ரயில் நிலையத்தில் இறங்கினேன்.

அதே ரயில். அதே ரயில்நிலையம். அதே சுந்தரமூர்த்தி அண் ணன். அதே காரணம்.

காரில் சென்னை கிளம்பினேன்.

கீழ்ப்பாக்கம் ஹாஸ் பிடல். மிகவும் சீரிய ஸாக இருந்தது வாசு அண்ணனின் உடல் நிலை. என்னால் துக் கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

என் அம்மா வாசு அண்ணன் வாயில் பால் புகட்டினார். வாசு அண்ணனின் வாயி லிருந்து ரத்தம் வெடித்து கொப்பளித்து சிதறியது. உடலை வீட்டுக்கு எடுத்து வந்தோம். வாசு அண்ணனை குழந்தை யில் இருந்து தூக்கி வளர்த்த சிவாஜி அப்பா, இரண்டு நாளும் எங்கள் வீட்டிலேயே இருந்தார்.

காங்கிரஸ்காரரான வாசு அண்ணன் உடல் மீது தி.மு.க. கொடியைப் போர்த்தி, 12 குதிரைகள் பூட்டிய வண்டியில் அவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று இறுதி மரியாதை செய்தோம்.

"அச்சமில்லை அச்சமில்லை' படத்தில் இடம்பெறும் "கையில காசு... வாயில தோசை' பாடல் காட்சியில் கொஞ்சம் குற்றாலத்தில் எடுக்கப்பட்டது. வாசு அண்ணனுக்கு நான் காரியச் சடங்குகள் செய்ய வேண்டியிருந்ததால்... கே.பி. சார் எனக்காக... அந்தப் பாடல் காட்சியின் மீதிப் பகுதிகளை சென்னையில் அருணாசலம் ஸ்டுடியோ வில் வைத்து எடுத்தார்.

"அபிலாஷா' என்கிற தெலுங்குப் படத்தை தமிழில் ரீ-மேக் செய்ய விரும்பிய டைரக்டர் இராம.நாராயணன் சார் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராவ்கோபால் ராவ் செய்திருந்த பெரிய கேரக்டரை என்னைச் செய்யச் சொல்லி, படத்தைப் போட்டுக் காண்பித்தார். எனக்கு அந்த பெரிய கேரக் டரைவிட... இடுகாட்டு ஊழியராக... பிணத்தை தோண்டி எடுத்து திருடி விற்பவனாக வரும் ஒரு சின்ன கேரக்டர் பிடித்திருந் தது.

இராம.நாராய ணன் சார், "நீங்க விரும்பின கேரக்ட ரையே செய்ங்க' எனச் சொல்லிவிட்டார். அந்தப் பெரிய கேரக் டரில் ஜெய்சங்கரை நடிக்க வைத்தார். சத்யராஜும், நளினி யும் கதாநாயக ரோலில் நடித்தனர்.

"சட்டத்தை திருத்துங்கள்' என்கிற பெயரில் வந்த அந்தப் படம் வெற்றிப் பட மாக அமைந்தது. நான் நினைத்தது போலவே... எனது சின்ன கேரக்டர் பேசப்பட்டது. "ராதாரவி கேரக்டர் மனசில் நிற்கிறது' என பத்திரிகைகளும் பாராட்டின.

அதில் நான் பேசும் ஒரு வசனத்தை சம்பந்தப்படுத்தி... ""ராதாரவிய சுடுகாட்டுக்கு அமைச்சராக்கலாம்'' என நான் போகிற இடத்திலெல்லாம் பேச ஆரம்பித்தார்கள்.

(பி.எஸ்.வீரப்பா அவர்களின் சிரிப்பும், அதிர்ச்சியும்...)

Advertisment

----------------------

கசப்பான கார் பயணம்!

நான் நியூகாலேஜில் படித்துக்கொண்டிருந்த சமயம்... நாடகங்களிலும் நடித்து வந்தேன். செங்கற்பட்டில் "கண்ணோட்டம்' நாடகம் போட காரில் கிளம்பினேன். நாடகத்தில் எனக்கு வயதான வேஷம். ராஜேஷ் அவர்களுக்கு சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் வேஷம். பின்னாளில் "இன்றுபோய் நாளை வா' படத்தில் ராதிகாவின் தோழியாக நடித்த வி.கே.பத்மினி நாயகியாக இந்த நாடகத்தில் நடித்தார்.

""நான் ஒரு முக்கியமான வேலையா காலைல அஞ்சு மணிக்கெல்லாம் சென்னைல இருக்கணும். நாடகம் முடிஞ்சதும் உங்க கார்லயே என்னை கூட்டிட்டுப் போறீங்களா?'' என ராஜேஷ் கேட்டார். நானும் சம்மதித்தேன்.

நாடகம் முடிந்து கிளம்பினோம். நான் மது அருந்திவிட்டு காரை ஓட்டிவந்தேன். வண்டி ஒரு பள்ளத்துல இறங்குது. நான் போட்டது ஏறுது. அப்படியே ஸ்டியரிங்கில் கவிழ்ந்து வாமிட் செய்துவிட்டேன். ஆசிரியரான ராஜேஷ் சார்... பாவம் எனது வாமிட்டை சுத்தம் செய்திருக்கிறார். நான் கண் விழித்துப் பார்த்தபோது... காலை ஏழு மணிக்குமேல் ஆகிவிட்டது. அவசர வேலையாக சென்னை திரும்ப விரும்பியவர்... என்னுடனேயே காரில் விடிய விடிய உட்கார்ந்திருந்தார். பிறகு ஒருவழியாக நிதானித்து... காரை கிளப்பிக்கொண்டு சென்னை வந்து சேர்ந்தோம்.