(110) அசரடித்த "ஆண்டவப் பெருமாள்!'

நியூ காலேஜ் புரொபஸர் ரஃபி சார், நியூ காலேஜில் படிக்கும்போது... நான் அவரின் மாணவன்.

டைரக்டர் பி.வாசு சாரிடம் உதவி இயக்குநராக சினிமா பயிற்சி பெற்று... "ராசாத்தி வரும் நாள்' படத்தை இயக்கினார்.

நடிகை கஸ்தூரிக்கு இது முதல்படம். நானும் இந்தப் படத்தில் நடித்தேன்.

Advertisment

கஸ்தூரி நல்ல வசதியான வீட்டுப் பெண்தான். கஸ்தூரியின் அம்மா வக்கீல். எனக்கு அவருடன் நல்ல பரிட்சயம் உண்டு.

படப்பிடிப்பின்போது ஒருமுறை... ""ஏம்மா சினிமாவுக்கு மகளை கொண்டு வந்துட்டீங்க?'' எனக் கேட்டேன்.

""அவ விருப்பப்படுறா. ஆசைக்கு ஒரு படம் நடிச்சுப் பார்க்கட்டும். அப்புறம் சினிமால விட்டுடலாம்'' என்றார்.

Advertisment

""ஒருதடவ மேக்-அப் போட்டாச்சுன்னா... அதுமேலயே பைத்தியமாக்கிடும். ஒரு படத்தோடவெல்லாம் விலகிப் போக முடியாது'' என்றேன்.

நான் சொன்ன மாதிரியே... இப்போதும் சினிமாவில்தான் இருக்கிறார் கஸ்தூரி. சமீபத்தில்கூட ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார்.

கஸ்தூரி ரொம்ப அறிவானவர்.

நாசா குறித்தும் பேசுவார், ராக்கெட் லாஞ்சிங் குறித்தும் பேசுவார்... உலக அரசியலும் பேசுவார். இப்படி எல்லாத் துறை குறித்த அறிவும் உண்டு.

திறமை இருந்தும் இன்னும் பெரிய அளவில் கஸ்தூரி சினிமாவில் ஹிட்டடிக்க முடியாமல் போனதற்கு காரணம்... ரொம்ப அறிவோடு இருப்பதுதான்.

சென்னை துறைமுகம் பின்னணியில் உருவான படம் "அமரன்'.

பார்ட்னர் கார்த்திக், நான் உட்பட பலரும் நடித்தோம். இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போதுதான் எனக்கு துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த செல்வராஜ் அப்பாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. செல்வராஜ் அப்பாவின் மகன் தங்கப்பாண்டியன் அண்ணன் இன்றளவும் என் நெருங்கிய நண்பராக இருக்கிறார்.

"மலர் மருத்துவமனை' டாக்டர் ராமமூர்த்தி அவர்களும், தங்கப்பாண்டியன் அண்ணனும் "அமரன்' படத்தில் நடித்தார்கள்.

பார்ட்னர் கார்த்திக் இந்தப் படத்தில் "வெத்தல போட்ட ஷோக்குல' என்கிற பாடலையும், இன்னொரு பாடலையும் பாடியிருந்தார். அதனால்... "அமரன்' ஆடியோ விற்பனை ரெக்கார்ட் படைத்தது.

டைரக்டர் கே.ராஜேஷ்வர் என்னிடம் "அமரன்' கதையைச் சொல்லும்போது.... ""இது ராயபுரம் பின்னணியில் நிகழ்கிற கதை. நீங்க பெரிய டான். முதல்ல கார்த்திக்க நீங்க தாக்குறீங்க. அடுத்து அவர் உங்களை பழிவாங்குறார். உங்க கேரக்டர் பெயர் "ஆண்டவப் பெருமாள்'. உங்க கண்ல ஒரு கொலைவெறி தெரியணும்'' எனச் சொன்னதுடன்... எனக்காக சம்பள விஷயத்தில் மிகவும் கறாராக பேசிவிட்டுப் போனார்.

radharavi

ஆண்டவப் பெருமாள் கேரக்டரையே சிந்திச்சுக்கிட்டே இருந்தேன். என் மனசுல அதுக்கு உருவகமும் கொடுத்தேன்.

என்னோட தங்கை ரதிகலா பெண்களுக்கான பியூட்டி பார்லர் நடத்தி வந்தார் அப்போது. (பிரபலங்கள் வீட்டுப் பெண்கள் இங்குவந்து அழகுபடுத்திக்கொள்வார்கள். சகோதரி கனிமொழியும் இங்கு வருவார். இதன் மூலம் என் தங்கையும், கனிமொழியும் தோழிகளானார்கள்)

பியூட்டி பார்லருக்கு யாரும் வராத நேரத்தில் நான் சென்று... மொட்டையடித்து... சில நாட்கள் ஆனது போன்ற அளவுக்கு என் தலைமுடியை வெட்டிக்கொண்டேன்.

நாலைந்து முறை என் தலைமுடிக்கு பிளீச் செய்யச் சொன்னேன் தங்கையிடம்.

பிளீச் செய்வதால் தலை மொத்தமும் சூடாகும். நாலைந்துமுறை செய்ததால் தலை கொதித்தது. ஆனாலும் கேரக்டரின் தோற்றம் வித்தியாசமாக வருவதற்காக அதை பொறுத்துக்கொண்டேன்.

பல் டாக்டர் ஜெயக்குமாரிடம் சொல்லி.. எடுப்பாக இரட்டை பற்கள் செய்து மாட்டச் சொன்னேன்.

துபாயில் பெரும்பாலான முஸ்லிம் ஆண்கள்.. தங்களின் கண்ணுக்கு கீழே ஒருவித மை பூசுவார்கள். அதுபோல மை பூசிக்கொண்டேன். வேஷ்டி, சட்டை அணிந்து, சட்டைக்குமேல் மார்வாடிகள் அணிவதுபோன்ற ஒரு கோட் அணிந்துகொண்டேன்.

இப்படி... "ஆண்டவப் பெருமாள்' ஆவதற்கு நான் பட்ட கஷ்டம் எனக்கும், என் தங்கைக்கும் மட்டுமே தெரியும்.

கஷ்டப்பட்டால் பலன் கிடைத்தாக வேண்டுமே...

கிடைத்தது.

முதல்நாள் படப்பிடிப்பிற்காக... துறைமுகம் சென்றேன்.

வழக்கமாக 12 ஆம் எண் கேட் வழியாகத்தான் உள்ளே செல்லவேண்டும். ஆனால் அன்று ஏதோ காரணமாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார்... ""சேட்டு... தீவுத்திடலை சுத்தி வந்து அந்த கேட் வழியா போங்க'' என்றனர்.

நான் கார் டிரைவரிடம்... ""என்னை சேட்டுனே நினைச்சிட்டாங்க. இது கெட்-அப்புக்கு கிடைத்த சக்ஸஸ்'' என்றேன்.

ஷூட்டிங் ஸ்பாட்டிற்குள் நுழைந்ததும் பார்ட்னர் கார்த்திக்கை பார்த்து... "வணக்கம்' என கையெடுத்து கும்பிட்டேன்.

ஏதோ வேலை விஷயமாக ஹார்பருக்குள் வந்தவர்போல என நினைத்து... பதில் வணக்கம் சொன்னவர்... சடாரென திரும்பி... "பார்ட்னர்... நீங்களா?' என கத்தினார் ஆச்சரியத்தில்.

அப்போது அங்கு வந்த டைரக்டர் கே.ராஜேஷ்வர்... ""என்னங்க... டைம் ஆகிட்டே இருக்கு. ராதாரவி இன்னும் வரக்காணோம்'' என திட்டினார். உடனே பார்ட்னர்... ""இதோ... ஆண்டவப் பெருமாள்'' என்று சொன்னதும்தான் என்னை ராஜேஷ்வர் கண்டுபிடித்தார்.

"என் கற்பனைக்கு உயிர் கொடுத்திட்டீங்க... நான் நினைச்சதைவிட பிரமாதமா இருக்கு இந்த தோற்றம்' எனச் சொல்லி கைகொடுத்தவர்... “""உங்க சம்பளத்த அடிச்சிப்பிடிச்சி பேசினேன். அக்ரிமெண்ட்டுல உங்களுக்கு என்ன சம்பளம் இருக்கோ... அதை டபுளா தர்றேன்'' என்றார்.

அந்தளவு... சினிமா வட்டாரத்திலும், ரசிகர்களிடத்திலும் பெரும் வரவேற்பு பெற்றது "அமரன்' படத்தின் "ஆண்டவப் பெருமாள்' கேரக்டர்.

"" "ஆண்டவப் பெருமாள்' போலவே "தளபதி' படத்துல ஒரு கேரக்டர் செய்யணும்'' என மணிரத்னம் சார்பில் கேட்டனர். "அமரன்' படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது கேட்டதால்... "தளபதி'யில் நான் செய்யவில்லை.

கோதரர் பார்த்திபனை நான் "வாங்க நாயுடு' என்றுதான் சொல்வேன்.

அவரின் சொந்தப்படம் "சுகமான சுமைகள்'. கதைக்கேற்ற டைட்டில் கொண்ட படம். இதில் எனக்கு மிக அருமையான கேரக்டரை உருவாக்கியிருந்தார். 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் அவருக்கு நடித்துக்கொடுத்தேன்.

பார்த்திபன் மீது படத்தயாரிப்பாளர்கள் சிலர் புகார் கொடுப்பார்கள். கால்ஷீட், ஷூட்டிங் சம்பந்தமான புகார்கள். அதை நடிகர் சங்கத்திற்கு ஃபார்வேர்ட் செய்யும் தயாரிப்பாளர் சங்கம்.

பார்த்திபனின் திறமை மீது மதிப்பு எனக்கு. அதனால் அந்தப் புகார்கள் பெரிதாகாமல் செய்வேன்.

""என்ன நாயுடு... உங்க மேல நிறைய கம்ப்ளைண்ட் வந்திருக்கு. ஆனாலும் அத நான் கண் திறந்து பார்க்கிறதில்ல'' என பார்த்திபனிடம் சொல்லியிருக்கிறேன்.

நான் நடிகர் பார்த்திபனைவிட, டைரக்டர் பார்த்திபனை மிகவும் ரசிப்பேன். அப்ஸர்வேஷன் நாலெட்ஜ் உள்ள மனிதர் அவர்.

("செம்பருத்தி' படப்பிடிப்பில் பானுமதி அம்மாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆர்.கே.செல்வமணி)

ஜுங்கா டான்

நான் லயோலா காலேஜில் பி.யூ.சி. படித்துவிட்டு, நியூ காலேஜில் பி.ஏ. படித்து வந்த சமயம்...

நானும், எனது நண்பர் நசர் இக்பாலும், நண்பர்களைப் பார்ப்பதற்காக லயோலா காலேஜுக்கு சென்றோம். அங்கே ஒரு தகராறு ஆகிவிட்டது. இதில் அடிபட்ட ஒருவர்... அடியாட்கள் கும்பலைக் கூட்டிவந்துவிட்டார். எனக்கு சரியான அடி. நான் எங்க எம்.ஆர்.ஆர்.வாசு அண்ணனிடம் சொன்னேன். அப்போது... ‘மந்தைவெளி சுந்தரம்’ என்றால் தெரியாதவர்களே கிடையாது. சுந்தரம் அண்ணனிடம் வாசு அண்ணன் விஷயத்தைச் சொல்ல... என்னை அடித்தவர்கள் வேப்பேரி டவுட்டன் பகுதி ஆட்கள் என்பதைத் தெரிந்துகொண்ட சுந்தரம் அண்ணன், அடுத்த அரைமணி நேரத்தில்... என்னை அடித்த இரண்டு பேர்களை தூக்கிவரச் செய்துவிட்டார்.

"அடிச்சது இவங்கதானா?' என சுந்தரம் அண்ணன் கேட்க... நானும் "ஆமாம்' என அடையாளம் காட்டினேன்.

""ஏண்டா... எங்கவீட்டுப் பிள்ளைய அடிப்பீங்களா?'' என சுந்தரம் அண்ணன் அரட்ட... அவர்கள் இருவரும் ""தெரியாம நடந்துபோச்சு'' என என்னிடம் மன்னிப்புக் கேட்டனர்.

சமீபத்தில் வெளியான தம்பி விஜய்சேதுபதியோட "ஜூங்கா' படத்தில் முன்னாள் டான் வேஷம் செய்தேன்.

இந்த கேரக்டருக்காக ‘காட்ஃபாதர்’"மர்லன் பிராண்டோ' போல கெட்அப்பையும், "பணக்காரன்' படத்துல ரஜினி சார் போட்டிருந்த கிழிந்த கோட் போன்ற உடையையும் போட்டுக்கொண்டு... மனதில் மந்தைவெளி சுந்தரம் அண்ணனை நினைத்துக்கொண்டு... அந்த கேரக்டரை செய்தேன்.