பிழைக்கவரும் எளிய, மொழி தெரியாத இளைஞர்களிடம் ரயிலில் கொள்ளையடிப்பது அதிகரித்துள்ளது. கடந்த வாரம் அதிகாலை 3.05 மணிக்கு ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து புறப்பட்டது.
இதிலிருந்த பொதுப்பெட்டியில், வடமாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கோவை, திருப்பூர் நகரங்களுக்கு வேலைக்காக பயணம் செய்தனர். அவ்வண்டியில் வடஇந்திய இளைஞர்களுக்கு நடந்த கொடுமையை நம்மிடம் பகிர்ந்துகொண் டார் அரக்கோணத்தை சேர்ந்த சமூகஆர்வலர் ஒருவர்.
"சென்னை சென்ட்ரலில் பின்பக்க பொதுப்பெட்டியில் திடீரென 5 மூன்றாம் பாலினத்தவர்கள் ஏறினார்கள். யாசகம் கேட்டபடி வந்தவர்கள், வடஇந்திய இளை ஞர்களைப் பார்த்ததும், ஒவ்வொருவரையும் சுற்றி ஐந்து பேரும் நின்றுகொண்டு அவர்களின் சட்டை பாக்கெட், பேன்ட் பாக்கெட்களில் கையை விட்டு அப்படியே பணத்தை எடுத்து புடவையைத் தூக்கி உள்ளே போட்டார்கள். ஒரு வடமாநில இளைஞரோ, எங்கிட்ட சாப்பாட்டுக்குக்கூட பணமில்லைன்னு அழுததால், 3 நூறு ரூபாய் நோட்டுக்களை மட்டும் அவனது காலின் கீழே போட்டு எடுத்துக்கடா என்று அவனது பணத்தையே அவனுக்கு பிச்சைபோல் போட்டார்கள். அந்த இளைஞனோ, "வேலைக்கு திருப்பூர் போறேன், 300 ரூபாய வச்சிக்கிட்டு வேலை கிடைக்கற வரைக்கும் எப்படி சாப்பிடுவேன்'னு இந்தியில் சொல்லி அழுதான்.
இன்னொரு இளைஞனின் பாக்கெட்டில் பணம் அதிகம் வைத்திருக்கிறானென்று அவனை பாத்ரூமுக்குள் தள்ளிச்சென்று மூன்று பேர் கதவைச் சாத்திக்கொள்ள, பார்க்கவே அதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் டார்கெட் செய்தது முழுக்க மொழி தெரியாத வட மாநில இளைஞர்களைத்தான். திருவள்ளூர் ரயில் நிலையத்தில் அதிகாலை 4.05 மணிக்கு ரயில் ஸ்லோவானதும் நிற்கு முன்பே இறங்கி ஓடிப்போய்ட்டாங்க. வாட்டசாட்டமாக யிருந்த அந்த ஐந்து பேரையும் தட்டிக்கேட்க அனைவருக்கும் பயம். பெட்டியின் கடைசியிலிருந்த என்னால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. பிழைப்புக்காக வரும் வடமாநில இளைஞர்களிடம் இப்படி மிரட்டிப் பிடுங்குவது சரியில்லை'' என வேதனைப்பட்டார்.
பொதுப்பெட்டிகளில் பயணிக்கும் வடஇந்திய இளைஞர்கள் பெரும்பாலும் டிக்கெட் இல்லாமல் பயணிப்பதால், ரயில்வே போலீசாரிடம் புகாரளிக்கத் தயங்குவார்கள் என்கிறார்கள்.
அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் நைனா.மாசிலாமணி யிடம் பேசியபோது, "இதுபோன்ற பிரச்சனைகள் அடிக்கடி ஏற்பட்டு நான் புகார் தெரிவித்தபோது உடனடியாக ரெய்டு செய்து தவறு செய்த மூன்றாம் பாலினத்தவர்களை கைது செய்ததால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கவில்லை. தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. மூன்றாம் பாலினத்தவர் மீதான நமது பரிதாபம், இதுபோன்ற செயல்களைச் செய்வதற்கு வழிகோலுகிறது. இரவு நேரப் பயணங்களில்தான் இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. தெற்கு ரயில்வே பாதுகாப்புத்துறை அலுவலரிடம் முறையிட்டபோது, எங்களிடம் ஆட்கள் குறைவாக இருக்கிறார்கள் எனக் காரணம் சொன்னார். அவர்களின் இயலாமை, பொறுப்பற்ற தன்மையால்தான் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன'' என்றார்.