கொரோனா சிகிச்சையில் பெருமளவு வெற்றி பெற்று உலகத்திற்கே முன்மாதிரியாக திகழ்ந்த கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடது ஜனநாயக முன்னணி அரசும், அதன் முதல்வர் பினராயி விஜயனும், தங்கள் கவனம் முழுவதையும் கொரோனாவில் செலுத்தியதால் மீள முடியாத ஒரு இடியாப்ப சிக்கலில் சிக்கிக்கொண்டுள்ளனர் என்கிறார்கள் கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள்.

sapana

வளைகுடா நாடுகளையொட்டியுள்ள அரபிக் கடலின் ஒரு புறத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் ஐக்கிய அரபு நாடுகளும், மறுகரையை தொட்டுக்கொண்டிருக்கும் கேரளாவும் எதிர் கரையில் இருக்கும் ஐக்கிய அரபு நாடுகளும் பழங்காலம் முதலே மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கின்றன. கேரளாவில் தங்க வணிகம் மூலம் வருடத்திற்கு 900 கோடி ரூபாய் வருமானம் இந்திய அரசுக்கு கிடைத்து வந்தது. தங்க வணிகத்தில் மிகச் சிறந்தவர்களான இஸ்லாமியர்கள் வசிக்கும் மலப்புரம் பகுதியில் கொடுவால் என்கிற உட்கிராமத்தில் 52 தங்கக் கடைகள் செயல்படும் அளவிற்கு கேரளாவில் தங்க விற்பனை நடந்து வந்தது. இதன்மூலம் அதிக வரியை பெற்று வந்த மத்திய அரசின் வருமானம் திடீரென கடந்த ஒரு வருடமாக மூன்றில் ஒரு பங்காக குறைந்தது. இதற்கு ஒரு வலுவான காரணம் இருந்தது. அந்தக் காரணம்தான், கடத்தல் தங்கம்.

sapana

Advertisment

வளைகுடா நாடுகளில் இருந்து விமானங்கள் மூலமாக தங்கம் கடத்தப்பட்டு கேரளாவுக்கு வருகிறது என கண்டுபிடித்த மத்திய அரசு, வரிகட்டாமல் விற்கப்படும் இந்த தங்கத்தை கொண்டு வரும் குருவிகளை தொடர்ந்து கைது செய்து வந்தனர். ஆனாலும் கடத்தல் தொடர்ந்தது. கடந்த வாரம் சுங்கத்துறைக்கு வந்த ரகசிய தகவல் ஒன்று இந்திய அரசையே அலற வைத்தது.

“சவுதி அரேபிய மன்னருக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர் திருவனந்தபுரத்தில் உள்ள அந்த நாட்டின் தூதரகத்திற்கு ஒரு மர்மமான பொருளை கார்கோ பார்சலாக அனுப்பியிருக்கிறார். அந்த பார்சலில் மலப்புரம் பகுதியில் இந்தியாவை துண்டாடி, புதிய இஸ்லாமிய நாடாக அறிவிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் தீவிரவாதிகளுக்கு உதவக்கூடிய ஒரு பொருள் இருக்கிறது என சொல்லப்பட்ட அந்த ரகசிய தகவலைத் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட பார்சலை சம்மந்தப்பட்டவர்களுக்கு அனுப்பாமல் சுங்கத் துறை அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். ஏன் அந்த பார்சல் நிறுத்தி வைக்கப்பட்டது என சுங்கத் துறைக்கு ஏகப்பட்ட போன்கால்கள் பறந்தன. அந்த போன்கால்கள் எங்கிருந்து வந்தன என்பதை ஆராய்ந்த சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ந்து போயினர்.

அந்த போன்கால்கள் அனைத்தும் உள்துறையை கையில் வைத்திருக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகத்தில் இருந்து செய்யப்பட்டிருந்தன. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அதிகாரிகள் அந்த பார்சலை தூதரகத்தில் ஒப்படைக்கவில்லை. ஜெனீவா மாநாட்டு ஒப்பந்தத்தின்படி ஒரு தூதரகத்திற்கு வரும் பார்சலை சுங்கத்துறை அதிகாரிகள் பிரிக்கக்கூடாது. ஒவ்வொரு நாட்டு தூதரகத்திற்கும் உலகம் முழுவதும் இந்த பாதுகாப்பை ஐ.நா. தூதரகம் வழங்கியுள்ளது.

Advertisment

ரகசியங்களை பாதுகாக்கும் இந்த நடவடிக்கையை பயன்படுத்தி தீவிரவாதத்தை பரப்புவதற்கு அரபு நாடுகள் முயற்சி செய்கிறது என சந்தேகம் வலுத்த நிலையில்தான் கேரள அரசிடம் இருந்து வந்த போன்கால்கள் சுங்கத்துறையை அலற வைத்தது. மத்திய அரசின் உள்துறையோடு தொடர்பு கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள், அவர்களது அனுமதியுடன் அந்த பார்சலை பிரித்து பார்த்த போது பத்து கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கமும், அரபு மொழியிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட துண்டு பிரசுரங்களும் அதில் இருந்தன. அந்த பார்சலை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பெற வந்த தூதரகத்தின் முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி சரீப் என்பவரை மடக்கிப் பிடித்து தூதரக பார்சலில் தங்கமும், பிரச்சார நோட்டீஸ்களும் எப்படி வந்தது என கேள்வி கேட்டனர்.

ss

அடுத்ததாக கேரள முதல்வரின் அலுவலகத்தில் இருந்து இந்த பார்சலை விடுவிக்க சொல்லி யார் போன் செய்தார்கள் என கேள்வி எழுப்பினார்கள். அதற்கு முதல்வர் பினராயி விஜயனின், முதன்மை செயலாளராகவும், கேரள அரசின் தகவல் தொழில் நுட்ப செயலாளராகவும் இருக்கும் சிவசங்கரனும், அதே தகவல் தொழில்நுட்பத்துறையில் அதிகாரியாக வேலை செய்யும் ஸ்வப்னா சுரேஷூம்தான் போன் செய்தார்கள். அவர்கள் முதல்வர் பினராயி விஜயனின் அலுவலக பெயரை பயன்படுத்தி இந்த பார்சலை வெளியே கொண்டு வர முயற்சி செய்தார்கள் என சரீப் கூறினார்.

ஒட்டுமொத்த கேரளாவின் கவனமும் தங்கம் கடத்தல், அதில் முதல்வர் அலுவலகத்திற்கு தொடர்பு என அதிரடியாக வெளியான பரபரப்பு செய்தியில் மூழ்கிப்போனது. எங்களுக்கும் தங்கக் கடத்தலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்ததோடு, இதுதொடர்பான முழுமை யான புலன் விசாரணையை கேரள அரசு மேற்கொள்ளும் என்றார்.

ஆனால் ஸ்வப்னா சுரேஷ் யார்? அவருக்கு உதவிய சிவசங்கரனுக்கு என்ன தொடர்பு? முதல்வரின் செயலாளராக இருப்பவர் முதல்வருக்கு தெரியாமல் தங்கக் கடத்தலுக்கு ஆதரவாக கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து ஏன் போன் செய்ய வேண்டும் என கேள்விகள் கேரள ஊடகங்களில் விவாதமாக்கப்பட்டன. உடனே சிவசங்கரனை முதல்வர் செயலாளர் பதவியில் இருந்தும், தகவல் தொழில்நுட்ப பதவியில் இருந்தும் நீக்கினார் பினராயி விஜயன். இந்த நீக்கம் முதல்வர் அலவலகத்திற்கும் தங்ககடத்தலுக்கும் தொடர்பு என்கிற செய்தியை உறுதிப்படுத்தியது.

ssயார் இந்த ஸ்வப்னா சுரேஷ்? என ஆராயத் தொடங்கினார்கள். ஸ்வப்னா சுரேஷ் தமிழகமும் கேரளாவும் சந்திக்கும் நெய்யாற்றின் கரை என்கிற பகுதியைச் சேர்ந்தவர். தமிழும் மலையாளமும் கலந்து பேசும் குடும்பத்தில் பிறந்த இவரது தந்தை ஐக்கிய அரபு குடியரசின் அரச குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த மலையாளியான கே.சி.வேணுகோபால் இவரது குடும்ப நண்பர். அரேபியாவில் பிறந்த ஸ்வப்னா சுரேஷ், வேணுகோபால் மூலம் துபாயில் ஏர் இந்தியாவில் பணிக்கு சேர்ந்தார். அதன்பிறகு திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் அதிகாரியானார்.

அப்பொழுது சிவகங்கரன் மற்றும் கேரள மாநில சபாநாயகர் ஸ்ரீ ராமகிருஷ்ணன் மற்றும் கேரளாவில் சக்தி வாய்ந்த அமைச்சராக இருந்தும் கொடியேறி பாலகிருஷ்ணன் ஆகியோர் அறிமுகமாகிறார்கள். ஒரு கட்டத்தில் இவரும் இவருக்கு நெருக்கமான சந்தீப் நாயரும் இணைந்து ஒரு பெரிய கார் ஷோரூமை தொடங்குகிறார்கள். அந்த விழாவில் சபாநாயகர் கலந்து கொள்கிறார். சிவசங்கரன் மூலம் முதல்வர் கலந்துகொள்ளும் விழாக்களில் தலைகாட்டுகிறார் ஸ்வப்னா சுரேஷ்.

தன்னுடைய வசீகரத்தால் அனைவரையும் வளைத்துப்போட்டு அதிகார மட்டங்களில் பயணிக்கும் ஸ்வப்னா சுரேஷின் அழகில் மயங்கிய சிவசங்கரன், அவரது வலையில் விழுந்து விடுகிறார். தூதரகத்தில் நடைபெற்ற சில முறைகேடுகள் காரணமாக ஸ்வப்னா சுரேஷ், பி.ஆர்.ஓ.வான சரீப்பையும் வேலையை விட்டு தூதரகம் நீக்கி விடுகிறது. அந்த முறைகேடு புகாரில் முக்கிய மானது தூதரகத்தின் பெயரில் தங்கக் கடத்தல் நடத்தி அதை சந்தீப் நாயர் மூலம் ஸ்வப்னா விற்றார் என்பதுதான்.

தூதரகத்தில் இருந்து நீக்கப் பட்ட ஸ்வப்னாவுக்கு மாதம் 97 ஆயிரம் ரூபாய் அளவிற்கு சம்பளம் தரும் தகவல் தொழில்நுட்பத்துறையின் உயர் பதவியில் சிவசங்கரன் நியமிக்கிறார். 10வது படிப்பை முடிக்கவில்லை என ஸ்வப்னாவின் அண்ணன் குற்றம் சாட்டுகிறார். அவருக்கு 97 ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளம் பெறக்கூடிய பதவியில் சிவசங்கரன் நியமிக்கிறார். இந்த அணிதான் தங்கக் கடத்தலில் மாட்டிக்கொண்டது என முதல்கட்ட விசாரணையில் தெரியவர ஸ்வப்னா சுரேஷும், சந்தீப் நாயரும் தலைமறைவாகிறார்கள்.

இந்தக் கடத்தல் சம்பவம் தூதரகத்துடன் தொடர்புடையது. நடந்த இடம் விமான நிலையம். எனவே எங்களுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என இந்த வழக்கின் விசாரணையை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தீவிரவாத தடுப்பு பிரிவான தேசிய புலனாய்வு ஏஜென்சியிடம் கேரளா ஒப்படைத்துவிட்டது. அவர்கள் சந்தீப் நாயர் வீட்டில் சோதனை போட்டுக்கொண்டிருக்கும்போது அவர் பெங்களூருவில் இருந்து வீட்டிற்கு போனில் பேசியுள்ளார். அந்தபோன் காலை வைத்து பெங்களூரு கொரமங்காளா பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஜூலை 11ம் தேதி இரவு கைது செய்தனர். அதே பெங்களூருவில் ஸ்வப்னாவும் சிக்கினார்.

sapana

கேரளாவுக்கும் கர்நாடகாவிற்குமான எல்லையோர சுங்கச்சாவடிகளில் இருமாநில உறவுகளிலும் உரசல் ஏற்படும் அளவிற்கான சோதனைகளும், மிகக்கடுமையான ஊரடங்கும் கடைப்பிடிக்கப்படும் நேரத்தில் கேரளாவின் தலைநகரம் திருவனந்தபுரத்தில் இருந்து கர்நாடகத் தலைநகரம் பெங்களுருவுக்கு தப்பிச்செல்ல யார் உதவினார்கள் என்ற கேள்வி எழுந்தது. கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் சமீபத்தில் ஒரு விவகாரத்தில் சிக்கிக்கொண்டார். அதிலிருந்து அவரை மீட்ப தற்கு கோடிக்கணக்கான ரூபாய் பரிமாறப்பட்டது. அது குறித்தும் கேள்விகள் எழுந்தன.

தங்கக் கடத்தலில் முதல்வருக்கும் பங்கு உண்டா, எத்தனை வருடமாக இந்தக் கடத்தல் நடக்கிறது, இது தீவிரவாதிகளுக்காக நடத்தப்பட்ட கடத்தலா என ஏகப்பட்ட கேள்விகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஸ்வப்னாவிடம் கேட்டு வருகிறார்கள். சந்தீப் நாயர் பாஜக தலைவர் ஒருவருக்கு கார் ஓட்டியாக இருந்துள்ளார். அந்த பாஜக தலைவருக்கும் கடத்தலுக்கும் என்ன தொடர்பு என ஊடகங்கள் எதிர்க்கேள்வி எழுப்பி வருகின்றன.

வெளிநாட்டு உறவுகளால் அளவுக்கதிகமாக புழங்கிய பணம், ஸ்வப்னாவின் பாலியல் வலை, பயங்கரவாதிகளுடனான தொடர்பு என கரன்சி- கவர்ச்சி-கடத்தல் விவகாரம் துருவப்படுகிறது.

மொத்தத்தில் கொரோனாவை எதிர்த்து ஒரு பலம் வாய்ந்த போர் நடத்திய கேரள இடது முன்னணி அரசும், முதல்வர் பினராயி விஜயனும் கொரோனா ஒழிப்பைத் தவிர மற்ற விசயங்களில் பலவீனமாக இருந்தார்கள் என்பதைத்தான் இந்த தங்க கடத்தல் சம்பவம் காட்டுகிறது. இதன்மூலம் மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கத்தின், புலனாய்வுத்துறையின் கழுகுப்பார்வையில் கேரள அரசு சிக்கிக்கொண்டுள்ளது.

இந்தியாவின் கடைசி கம்யூனிஸ்ட் ஆட்சி என கேரளாவை பா.ஜ.க. விமர்சனம் செய்து வந்த நிலையில், பினராயி விஜயன் அரசு கொரோனா ஒழிப்பில் பெற்றுள்ள நல்ல பெயரைக் கெடுப்பதற்கான முயற்சிகள் நடக்கிறதா என அரசியல் தெளிவுள்ள கேரள மக்கள், இந்த விவகாரத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

-தாமோதரன் பிரகாஷ்