வாழ்வாதாரங்களை இழந்து நிர்க்கதியாக வீதியில் நிற்கும் மக்களிடமே அரசு அரசியல் செய்கிறது. புயல் தாக்கி 35 நாட்களுக்கு மேலாகியும் பாரபட்சம் பார்த்து நிவாரணம் கொடுக்க ஆளுங்கட்சியினர் திட்டமிடுவதை எதிர்த்து "எல்லோருக்கும் நிவாரணம் கொடு' என்ற போராட்டம் டெல்டா மாவட்டங்களின் அனைத்து கிராமங்களுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் போராடும் மக்கள் மீது வழக்கு தொடுக்கும்படி வருவாய்த்துறை அதிகாரிகளையும் அரசு ஏவி விட்டுள்ளது.

gaja"கூரை வீடு, ஓட்டு வீடுகளுக்கு நிவாரணம் இல்லை. மாடிவீடுகளுக்கு தலா 3 டோக்கன்' என்று ஆளுங்கட்சியினரின் அராஜகம் அத்துமீறியிருக்கிறது. பாதிப்பு விவரமே இன்னும் முழுமையாக கணக்கெடுக்கவில்லை. மரங்களைக் கணக்கெடுக்காததால் இன்னும் நிலத்திலேயே கிடக்கின்றன. இந்நிலையில்தான் அரசின் பாரபட்சமான போக்கும் வழக்கைக் காட்டி அச்சுறுத்தும் போக்கும் மக்களை சினங்கொள்ள செய்திருக்கின்றன.

புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் தினமும் 300 கிராமங்களில் நிவாரணம் கேட்டு மக்கள் போராடுகின்றனர். குன்றாண்டார்கோயில் அருகே அண்டக்குளத்தில் பாதிப்பேருக்கு நிவாரணம் கொடுத்த வி.ஏ.ஓ., மீதிப்பேருக்கு "நிவாரணத் தொகை வந்தால் தருகிறோம்' என்று கூறியதால் மக்கள் சாலைக்கு வந்து போராடினார்கள். இதையடுத்து, டோக்கன் கொடுத்த அதே வி.ஏ.ஓ. போராடியவர்களில் டாஸ்மாக் ஊழியர் உட்பட 7 பேர் மீது புகார் கொடுத்து வழக்கு பதிவாகியிருக்கிறது.

அறந்தாங்கி அருகே எரிச்சி கிராமத்தில் போராடிய மக்கள்... மெய்யநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் சாலையில் சமையல் செய்கிற நிலைக்கு போனபிறகு, 4 மணி நேரம் கழித்து அறந்தாங்கி கோட்டாட்சியர் வந்தார். "நிவாரணம் முழுமையாக வந்ததும் கொடுங்கள்' என்ற மக்கள் கோரிக்கையை அவர் ஏற்கவில்லை. இதையடுத்து கோஷமிட்டார்கள். உடனே, போராடியவர்களை "கிறுக்குக் கூட்டம்' என்று சொல்லிவிட்டு சென்ற கோட்டாட்சியர், இப்போது போராட்டக்காரர்கள் மீது வழக்குபதிவு செய்ய முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

Advertisment

gaja

டிச. 10-ந் தேதி அரயப்பட்டி கிராமத்தில் கீழே தொங்கிய மின்கம்பியில் பாய்ந்த மின்சாரம் தாக்கி சுசீலா, சக்திவேல் என இருவர் மரணம் அடைந்தனர். அவர்களுக்கு புயல் நிவாரணம் ரூ 10 லட்சம் வேண்டும் என்று மெய்யநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் 8 மணி நேரம் போராடிய பிறகு அதிகாரிகள் சரியென தலையசைத்தனர். ஆனால், எம்.எல்.ஏ. உள்பட 200 பேர் மீது பின்னர் வழக்கு பதிவுசெய்ய புகார் எழுதினார்கள். அந்த புகாரில் கையெழுத்துப் போட மறுத்த வெண்ணாவல்குடி சரக வருவாய் ஆய்வாளர் விஜயராணியை இடமாறுதல் செய்தனர். பிறகு, ஆலங்குடி தாசில்தார் ரெத்தினாவதியிடம் கையெழுத்து வாங்கினார்கள். இவரை ஏற்கெனவே இடமாறுதல் செய்ய முயன்று நக்கீரனின் பல்வேறு இதழ்களில் செய்தியானதால் தடுக்கப்பட்டது.

ஆலங்குடி தொகுதியில் புயல் பாதித்த கிராமங்களுக்கு 99.99 சதவீதம் மின் இணைப்பு கொடுத்துவிட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்து சொல்வதை எதிர்த்து எம்.எல்.ஏ.க்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தலைமையில் மக்கள் போராட்டம் நடத்தினார்கள். 20-ஆம் தேதிக்குள் பணியாளர்களை அழைத்துவந்து சரிசெய்வதாக அதிகாரிகள் கூறினார்கள். ஆனால், எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ், சி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் 10 பேர்மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துவிட்டு, தாசில்தார் ரெத்தினாவதியிடமே புகார் அளிக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறது காவல்துறை.

Advertisment

நிவாரணப் பொருளாக அரசு கொடுத்த எடப்பாடி படம்போட்ட பால்பவுடரை சாப்பிட்ட 10 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கரம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுபோனார்கள். அங்கு பணி மருத்துவர் இல்லாததால், உடையப்பன் தலைமையில் மருத்துவமனைக்கு பூட்டுப்போட்டு போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து போராடிய 7 பேர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு கைது செய்துள்ளனர்.

டிசம்பர் 20-ஆம் தேதி வல்லவாரி கிராமத்தில் உள்ள ஆறு குளங்களில் தாங்கள் கொடுத்த மனுக்கள் மிதப்பதைப் பார்த்த மக்கள் வி.ஏ.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடினர். அவர்கள் மீதும் வழக்கு பதிவுசெய்ய முயற்சி நடக்கிறது. புகார் கொடுக்க மறுக்கும் வருவாய்த்துறையினரை மிரட்டும் போக்கு தொடங்கியுள்ளது.

வருவாய்த்துறை அதிகாரிகளோ, ""நாங்க கணக்கு எடுப்போமா, இல்ல புகார் கொடுப்போமா? மனஉளைச்சலை ஏற்படுத்தி புகார் வாங்கலாமா? நாங்கள் எடுத்துக் கொடுத்த கணக்கிலேயே பாதியைக் குறைத்து நிவாரணம் வருது. அதை எப்படி நாங்க கொடுக்க முடியும்? மறுபடியும் வரும்போது தருவோம் என்று சமாளித்தாலும், ஆளுங்கட்சியினர் வாங்கும் டோக்கன்களை மாடிவீட்டுக்காரங்களுக்கு கொடுத்து அவர்கள் வந்து பொருள் வாங்கும் போது, சாலைக்கு போய் நியாயம் கேட்கிறார்கள். அவர்கள் மீது எப்படி புகார் கொடுப்பது? எங்களுக்கும் மனச்சாட்சி இருக்குதானே''’என்கிறார்கள்.

இன்னொரு பக்கம் சுயஉதவிக்குழுக்களை தனியார் நிதி நிறுவனங்கள் தினமும் நெருக்கடி கொடுத்துக் கொண்டிருப்பதால், மாவட்ட ஆட்சியர் வரை சென்று புகார் கொடுத்தனர். மாவட்ட ஆட்சியர் கணேஷ் "6 மாதம் காலநீடிப்பு செய்யச் சொல்றேன்' என்று சொன்னார். ஆனால் அடுத்தநாளே வீடுகளுக்கு தனியார் நிதிநிறுவன ஊழியர்கள் வந்து மோசமாகப் பேசுகிறார்கள். அவர்கள் மிரட்டலை எதிர்த்தே பெண்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

இந்நிலையில் 24-ந் தேதி கீரமங்கலத்தில் சி.பி.எம். மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் "கஜா புயல் நிவாரணம் கொடு', "பெண்கள் சுயஉதவிக்குழு கடன்களை ரத்து செய்', "கல்விக்கடன் விவசாய கடன்களை ரத்து செய்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் மட்டும் சுமார் இரண்டாயிரம் பேர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாலகிருஷ்ணன்... ""பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய- மாநில அரசுகள் பச்சைத்துரோகம் செய்துகொண்டிருக்கின்றன. தமிழக முதல்வர், கஜா பாதிப்புக்கு 15 ஆயிரம் கோடி நிதி கேட்டார். மோடி திரும்பிக்கூட பார்க்கவில்லை. மோடி ஆட்சிக்கு வந்தபிறகு, ரிசர்வ்வங்கி தனது பணத்தை, தனியார் நிறுவனங்களிடம் கொடுத்து வட்டிக்கு கொடுக்க வைக்கிறது. அதுதான் நுண்கடன் நிதி நிறுவனங்கள். கஜா புயல் பாதிப்பில் குடிசைவரை இழந்து நிற்கும் பெண்களை வசூலுக்குவரும் நபர்கள் மோசமான வார்த்தைகளால் பேசுகிறார்கள். அதனால் அந்தக் கடன்களை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 2-ந் தேதி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும். இந்த சோம்பேறி அரசு எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. போராடும் மக்கள்மீது வழக்குப் போடுவதும், சிறைக்கு அனுப்புவதும், புகார் கொடுக்கச் சொல்லி அதிகாரிகளை மிரட்டுவதும் ஒரு நல்ல அரசாங்கத்திற்கு அழகா? அடுத்தடுத்து வழக்கு போட்டால் மக்கள் முடங்கிவிடுவார்கள் என்று நினைக்கவேண்டாம். நெடுவாசல் போராட்டத்தை ஆட்சியாளர்கள் மறந்துவிடவேண்டாம்''’’ என்றார்.

பல போராட்டங்களில் முன்னின்று போராடிய தி.மு.க.வின் ஆலங்குடி எம்.எல்.ஏ. மெய்யநாதன்... ""மக்கள் ஏன் போராடவருகிறார்கள். கேட்டும் கிடைக்கவில்லை என்பதால் அவர்களின் தேவைக்காகத்தான் போராட சாலைக்கு வருகிறார்கள். அப்படி வரும் மக்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் வழக்குப்போட்டு மிரட்ட நினைக்கிறது இந்த அரசு. 20-ந் தேதி ஆயிரம் மின்பணியாளர்கள் வருவார்கள் என்று உத்தரவாதம் கொடுத்தார்கள் இன்னும் வரல; முழுமையான நிவாரணம் கிடைக்கும் வரை போராட்டங்கள் ஓயாது''’என்றார்.

-இரா.பகத்சிங்

_______________________

போலீஸ் அராஜகத்தால் தற்கொலை முயற்சி!

டிசம்பர் 24-ஆம் தேதி மதியம் டீக்கடையில் டீக்குடித்துக்கொண்டிருந்த இருவரை கைது செய்தனர். இதைக் கேள்விப்பட்டு iniyanமனம் உடைந்துபோன இனியவன், "இனி வாழ்வதற்கான சாத்தியம் இல்லை... அ.தி.மு.க. அமைச்சர் ஓ.எஸ்.மணியன், உள்ளிட்ட காவல்துறையினர் இனி நம்மை சும்மா விடமாட்டார்கள்' என்கிற மனவேதனைக்கு உள்ளாகி, வயலுக்கு தெளிக்கும் கொடூரமான விஷமருந்தை வாங்கி கையில் வைத்துக்கொண்டு தனது முகநூல் பக்கத்தில் தற்கொலை செய்துகொள்ளும் காட்சியோடு சில செய்திகளையும் பதிவிடுகிறார்,

""நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு கிராமம். எங்கள் குடும்பம் விவசாய குடும்பம். கஜா புயல் பாதிப்பால் எங்க ஊரில் எல்லோரும் கஷ்டப்படுகிறோம். நிவாரணம் வேண்டும் என்று ரோட்டில் சமைத்து போராட்டம் பண்ணினோம். அப்போது எஸ்.பி. வாகனம் வந்தது. "என்ன ரோட்டுல சமைக்கிறீங்க?'ன்னு சொல்லி அடிச்சி விரட்டினார்கள். வீடு வீடாக புகுந்து கைதுபண்ணினார்கள்.

கஜா புயலுக்கு போராடியதற்காக எங்களை தேடுகிறார்கள். ஊர் ஊராக அலைகிறோம். தீவிரவாதிகளைப்போல எங்களைத் தேடுகிறார்கள். என் வாழ்க்கையே வெறுக்கும் அளவுக்கு ஆக்கிவிட்டுவிட்டார்கள். நான் சாகப்போவதால் கோழை கிடையாது. நான் சாவதால் என் ஊருக்கு நல்லது நடக்கட்டும்'' என்று சொல்லியிருக்கிறார். அந்த பதிலை பார்த்து பதறிய நாம் விசாரித்தோம். அவருக்கு சிகிச்சை அளித்து நலமாக இருப்பதாக கூறினார்.

-க.செல்வகுமார்